வாசிக்கும்போதே உணர்கிறோம்…. சத்குருவை

உலகம் தோன்றிய நாள்முதலாக, இவ்வுலகத்தில் உயிர்கள் குறிப்பாக மனிதஉயிர்கள் தோன்றிய நாள்முதலாகப் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கின என்பது உண்மை.

          பூமியில் முதன்முதலில் தாவரங்களும் பின்னர் விலங்குகளும், பறவைகளும் அதனுடைய பரிணாம வளர்ச்சியாக மனிதஇனமும் தோன்றியிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வார்கள் கருத்து.

விலங்கு நிலையில் இருந்த மனிதன் நேராக நிமிர்ந்து நிற்கத்தொடங்கினான். இதன்பிறகுதான் வேட்டைக்காரச் சமுதாயமாகப் பின்னர்க் கால்நடைச் சமுதாயமாக அதன்பின்னர் நீர்நிலைகளை, ஆற்றங்கரைகளை ஒட்டிய வேளாண்மைச்சமுதாயமாக ஓரிடத்தில் நிலையாக வாழத்தொடங்கியது மனிதஇனம்.

          இந்நிலையில்தான் குடும்பம், சமுதாயம், அரசு என்னும் அமைப்புகள் தோன்றின. விலங்குகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடிய மனிதர்கள் பின்னர்; தங்கள் இனத்துக்குள்ளேயே இருந்து தங்களைக் காத்துக்கொள்ளப் போராடினார்கள்.

          நெருப்பும், சக்கரமும் மனிதகுல வரலாற்றின் அறிவியலுக்கான முதல் அடித்தடங்களாகத் தொடங்கின. பின்னர் அறிவியல் வளர்ந்தது, மனிதன் விண்ணையும், மண்ணையும் அடக்கி ஆளக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று அது மரணம் என்பதுதான்.

இந்த மரணம் ஏன் ஏற்படுகிறது? மரணத்திற்குப் பின் மறுவாழ்வு உண்டா? மரணமில்லாப்பெருவாழ்வு வாழமுடியுமா? என்பன போன்ற வினாக்கள் காலங்காலமாகத்தோன்ற பல்சமயச் சான்றோர்களும், தத்துவஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் இம்மரணம் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார்கள், சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

          நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்து வருகின்ற ஞானிகளுக்கெல்லாம் ஞானியாய்த் திகழ்கின்ற சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் தம் சிந்தனையால் செயலால் மனிதகுலத்தை ஒருங்கிணைக்கவும் உயர்த்தவுமாக ஓயாது இயங்கிச்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

          கோயம்புத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ~h அறக்கட்டளை உலகமக்களை ஈர்க்கும் ஆன்மீக மையப்புள்ளியாகத் திகழ்ந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.

          சத்குரு அவர்களைப் பற்றி அறிந்த நான் அவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பினையும் ஒருமுறை பெற்றேன். அப்போது நான் ஒரு வினாவை அவரிடம் எழுப்பினேன்.

இவ்வுலகத்தில் நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள், தீயவர்கள் சிலசமயம் நலமுடன் இருக்கிறார்கள், இதற்கான காரணம் என்ன குருஜி?’ என்ற என் வினாவிற்கு அவர் மெல்லியதாகச் சிரித்துக்கொண்டே,

          ‘நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிப்பது யார்? என்று தொடங்கி அவர் கொடுத்த விளக்கத்தை என்னால் மறக்க இயலாது.

          பன்மொழிப் புலமைபெற்ற சத்குரு அவர்கள்மரணம்குறித்து ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்க வடிவத்தைப் படிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றேன். உண்மையில் இதில் சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகள் ஓர் நூற்களஞ்சியத்திற்கு ஒப்பானவை. எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வடிவில் ~h அறக்கட்டளை இதனை வெளியிட்டிருப்பது போற்றுதற்குரியது. ஐநூறு பக்கங்களுக்கும் மேலான இந்நூல் தருகின்ற செய்திகளில் சில துளிகளைப் பார்க்கலாம்.

          ‘வாழ்வும் மரணமும் ஒரே மூச்சில்எனும் முதல் பாகத்தில் தொடங்கும் இந்நூல் ஐந்து அத்தியாயங்களை முதல் பாகத்திலும்,

          ‘நல்ல முறையில் இறக்கலாம்எனும் இரண்டாம் பாகத்தில் நான்கு அத்தியாயங்களையும்,

மரணத்திற்குப் பிறகு என்ன?’ எனும் மூன்றாம் பாகத்தில் இரண்டு அத்தியாயங்களை உடையதாகப் பதினோறு அத்தியாயங்களாக அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.

       வாழ்வையும் மரணத்தையும் சமமாகக் கருதப் பழக வேண்டும். இதில் உயர்வு தாழ்வு இல்லை என முன்னுரையில் கூறுகின்றார் சத்குரு.

       மரணம் என்றால் என்ன? அதனுடைய அதிசயம் என்ன என்பதை மகாபாரதக் கதையில் நச்சுப்பொய்கைச் சருக்கத்தில் தருமனுக்கும், யட்சன் (வானுலகத்தான்) ஒருவனுக்கும் நடக்கும் உரையாடல் மூலமாக எளிமையாக விளக்க முற்படுகிறார் குருஜி.

       இதேபோல, கடவுள் எங்கே? என்று கேட்ட பாதிரியாரும், சிறுவர்களும் பற்றிய நிகழ்வு குருஜியின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

       பிணம் எரிகின்ற ஈமக்காட்டில் அப்பிணம் எரியும் அனுபவத்தைப் பார்த்த அனுபவம் உண்டா? என்று நம்மைப் பார்த்து வினவுகின்றார்; குருஜி. மேலும் அநேக ஞானிகள் இம்மயான பூமியில்தான் தங்கள் சிந்தனைப் புள்ளியைத் தொடங்கியிருக்க வேண்டும் என்கிறார்.

       இறந்தவர்கள் போவது எங்கே? எனும் கேள்வியைத் தன் இளமைக்காலப் பள்ளி வாழ்க்கையில் தன்னோடு படித்தசுசாரிதாஎன்னும் பெண்ணின் திடீர் மரணத்தின் மூலம் தாம் அறிந்து அதிர்ந்து போனதாகக் குறிப்பிடுகின்றார் சத்குரு.

       இறந்துபோனவர்கள் எங்கே போயிருப்பார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள சத்குரு அவர்கள் தன்னுடைய இளம் வயதில் ஒருமுறை 98 தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு (அவரது தந்தையார் ஒரு மருத்துவர்) மூன்று நாட்கள் மயக்கநிலையில் இருந்து பின் மருத்துவ உதவியால் மீண்டு வந்து, ‘இது இல்லை மரணம் அடைந்தவர்களைத் தேடிப்போகின்ற வழிஎன்பதைப் புரிந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.

       ஒரு செப்டம்பர் மாதத்தில் சாமுண்டி மலையில் ஒரு பாறையின் மேல் தனியாக அமர்ந்திருந்த சத்குரு, தான் யார் என்பதைச் சிந்தித்து அந்தப் பரவசநிலையில் தன்னை மறந்து மாலை 7.30 மணிவரை அங்கேயே இருந்ததைப் பதிவு செய்கிறார்.

       மரணம் என்பது துக்கமா? கொண்டாட்டமா? என்று ஒரு வினாவை எழுப்புகிறார். ‘ஒரு நதி எப்போதுமே இரண்டு கரைகளுக்கு நடுவில்தான் ஓடும். ஆனால் நீங்கள் வலது கரையில் நின்றுகொண்டு, நான் இடதுகரையை (மரணத்தை) விரும்பவில்லை அது மறைந்துவிட வேண்டும்என்று சொல்லுகிறீர்கள். இடது கரை மறைந்துவிட்டால் நதியும் மறைந்துவிடும,; வலது கரையும் மறைந்துபோகும். இதை மறந்து போகிறீர்கள். நாம் இறக்கக்கூடாதுஇறக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தால் இறக்காமல் இருக்க முடியுமா? என்று வேடிக்கையாகக் கேட்கிறார்.

       அமெரிக்காவில் ஓர் உணவகத்தில் சந்தித்த இரண்டு பழைய நண்பர்களின் கதையைச் சொல்லும்போது, வாழ்க்கை எப்படி நம்மைக் கடந்து போகிறது என்பதை எளிய மேற்கோளாக நம் கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.

       வாழ்க்கை நிலையற்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும், ஆனால் விழிப்பாகவும் இருக்க வேண்டும், இன்றே இறக்கவேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் அது நிகழ்ந்தாலும் எனக்குச் சரிதான் என்று முடிவோடு வாழவேண்டும் என்கிறார் சத்குரு.

       சந்நியாசிகளிடத்தில் ஆசீர்வாதம் கேட்கும் சிலபேர் எனக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்று கேட்கிறார்கள். இதே கேள்வியை என்னிடத்தில் கேட்டால், நான் சொல்வது இதுதான். ‘உங்களுக்கு எல்லாமே நடக்கட்டுமே. வாழ்க்கையை அனுபவிக்கத்தானே வந்திருக்கிறீர்கள்என்று கூறுவேன்.

       நாம் இருப்பதை வைத்துக்கொண்டு உயிர்வாழ்வதை தீவிரப்படுத்தவேண்டுமே தவிர எதையும் இழந்துவிட்டோம் என்பதற்காக வருந்திக் கொண்டிருக்கக்கூடாது என்பதற்கு சத்குரு சொல்லும் மும்பை கோடீஸ்வரரின் கதை வேடிக்கையான ஒன்று.

இனிஇறப்பின் இரகசியங்கள்எனும் பகுதியில் சொல்லும்போது வாழ்க்கை சோப்புநுரை குமிழ் போன்றது, அதுவே மென்மையானதுதான். இதில் யோகநிலை என்பது அதனையும் மென்மையாக்குவது என சுலபமாகப் புரியவைக்கிறார் சத்குரு.

          நாம் பிறக்கும்போதே இயல்பான சில சக்திகள் நமக்கு இருக்கின்றன. அவற்றை எப்படிப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கை அமைகிறது.

ஒரு லாரி நிறைய ஜல்லிக்கற்களை, உடைந்த செங்கற்களை ஏற்றிச்செல்லும் சிலபேர் கொளுத்தும் வெயிலில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த வண்டியில் அந்தக் கல்லிலேயே துண்டை விரித்துத் தூங்குவதை நாம் பார்த்திருப்போம். அப்படி என்றால் அவர்கள் தங்களுடைய சக்தியை தேவையான அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத்தான் அறிகிறோம். அவர்களை சுற்றுப்புறச்சூழல் துன்புறுத்துவதில்லை. படித்திருந்தும் எல்லா வசதிகள் இருந்தும் சிலநேரம் நாம்தான் தூக்கமில்லாமல் அலைகிறோம்.

          சத்குரு சொல்கிறார்என் அனுபவத்தில் ஒரு கல்பாறைகூட உயிரோட்டத்துடனும், தனக்கே உரிய சக்தியுடனும் ஞாபகங்களுடனும் இருப்பதைப் பார்க்கிறேன். அந்தக் கல் போன்றுதான் நான் உருவாக்கியிருக்கும் தியானலிங்கம். அதனைப் பார்க்கும்போது நமக்கு அதன் சக்தியும் அமைதியும் நினைவுக்கு வருகின்றன.

          வாழும்போதும் மரணத்தின்போதும் விழிப்புணர்வோடு இருங்கள் இதுவே முக்கியம் என்கிறார் சத்குரு.

இனிமரணத்தின் தரம்எனும் பகுதியில் மனிதவாழ்க்கையில் இரண்டு மனிதர்கள் ஒரு மாதிரி இருப்பதில்லை ஒரே மாதிரி இறப்பதுமில்லை. இதில்; எது நல்ல மரணம். மரணத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா? என்ற கேள்விகளை எல்லாம் கேட்டு சத்குரு விடை சொல்கிறார்.

ஈரோட்டில் தன்னைச் சந்தித்த நபர் ஒருவரைப் பற்றிச் சொல்லும்போது, தான் அவர்மீது அதிக கவனம் செலுத்தாமல் இருந்ததையும், சிலநாட்களில் அவர் இமயமலை சென்று ஒரு நதியில் மூழ்கி இறந்துபோனதையும் சொல்லி அவர், என் அருகில் இருந்தபோதே அவர் இருப்பை அவரால் எனக்கு உணர்த்தமுடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

இதேபோல, தீயசக்திகளின் தாக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? தற்கொலை குறித்த ஒரு தெளிவான பார்வை அவ்வாறு செய்பவர்களுக்கு எப்படி உதவுவது? என்பவற்றுக்கான விளக்கங்களைத் தந்து அதற்கான விடையையும் சத்குரு விவரிக்கிறார்.

இனி, ‘மரணத்தை வெல்ல முடியுமா?’ எனக் கேள்விகேட்டு, இந்தக் கேள்விக்கு சத்குரு தருகின்ற ஒரு எடுத்துக்காட்டு, ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அந்தச் சம்பவம் ஒரு மர்மக்கதைபோல நம்மைத் திகைக்க வைக்கிறது.

மேலும் ~Pரடி சாய்பாபாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை  எடுத்துக்காட்டி நோயின் மூலம் தனக்கு ஏற்படவிருந்த மரணத்தை அவர் சமாதிநிலையில் நின்று வென்றுகாட்டிய நிலையை எடுத்துக்கூறுகிறார். ஆனால் இது எல்லோராலும் முடியுமா? என்று நமக்கு எண்ணத்தோன்றுகிறது.

இனிஇறந்தவர் மீளும் கதைஎன்பதை விளக்கும்போது அமெரிக்காவில் சத்குருவின் கூட்டத்தில் இருந்து எழுந்த ஒருவர், ‘உங்களால் இறந்தவரை உயிர்ப்பிக்க முடியுமா?’ என்று கேள்வி கேட்க, அதற்கு சத்குரு சொல்லும் விடை அபூர்வமானது, ஆச்சர்யமானது. அத்தோடு டெக்சாஸ் நகரில் வாழ்ந்த தம்பதியினர் ஜெருசலேமிற்குச் சென்ற கதையை அவர் கூறும்;போது நாம் வாய்விட்டுச் சிரித்துவிடுகிறோம்.

இதேபோல் தன்னை ஒரு வி~ப்பாம்பு கடித்ததையும் அப்போது தனக்கேற்பட்ட அனுபவத்தைச் சத்குரு சொல்லும்போது நம்முடைய உடம்பில் நடுக்கம் ஏற்படுகிறது.

கூடுவிட்டுக் கூடுபாயும் யுக்தி பற்றியும் சத்குரு விளக்கமாகச் சொல்கிறார். இதற்கு அவர் ஆதிசங்கரருடைய வாழ்க்கையில் இருந்தும் திருமூலருடைய வாழ்க்கையிலிருந்தும் எடுத்துக்காட்டுகளைத் தருகின்றார். சிரஞ்சீவிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

மகாசமாதி நிலை, நல்ல மரணத்திற்குத் தயாராவது எப்படி? மரண பயத்தைக் கையாள்வது எப்படி? முதுமையில் எப்படி வாழவேண்டும்? காசியில் உயிர்விடுவதில் முக்கியத்துவம் என்ன? இறக்கும்  உயிர்க்கு உதவுவது எப்படி? உடலற்ற உயிர்க்கு உதவுவது எப்படி? குறிப்பாக, இறுதிச்சடங்குகள் எதற்காக? மூதாதையர் வழிபாடு, சொர்க்கம், நரகம் பற்றிய விளக்கம், துக்கத்தைக் கையாள்வது எப்படி? மரணத்திற்குப் பிறகு என்ன? பேய்த் தொந்தரவுகள் அதற்கான தீர்வுகள், மறுபிறப்பு என்னும் புதிர், முன்ஜென்மங்களைத் தேடி என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளில் கேள்விகளைத் தொடுத்து அதற்கு விடைகளையும் மேற்கோள் கதைகள் மூலமாகச் சத்குரு எடுத்துச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.

நிறைவாக, ‘மீண்டும் வருவீர்களா சத்குரு?’ என்ற கேள்விக்கான விடையைச் சத்குரு சொல்கின்ற முறை வியப்பான ஒன்று. இந்நூலைப் படிப்பவர்களுக்கு ஞானத்தோடு வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த செய்திகளை அறிந்துகொள்ளும், அதனை உணர்ந்துகொள்ளும் உணர்வும் ஏற்படும் என்பது உண்மை.

இப்பெருநூலானது இதில் அமைந்துள்ள அத்தியாயத்திற்கேற்பச் சிறுசிறு நூல்களாக வெளியிடப்பட வேண்டும் என்பது எனது ஆசை.

மேலும் இந்நூல் குறித்த கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்படுமேயானால் சத்குரு இந்நூலில் கூறுகின்ற அரிய கருத்துக்கள் எளியோரையும் சென்றடையும் என்பது உண்மை.

நூலை வாசிக்கத் தொடங்கி முடிக்கும் வரை சத்குரு நம்மோடு இருப்பதைப் போன்ற ஒரு உணர்வே ஏற்படுகிறது என்றால் அதுவே அவரின் ஆன்மீக ஆற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

சுவைபட எளிமையாய் மொழிபெயர்த்துத் தந்த மொழிபெயர்ப்பாளருக்கும் நம் பாராட்டுகள்.

இந்நூல் மூலம் மீண்டும் சத்குருவை சந்தித்த மகிழ்வோடு….

அன்புடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.