உன்னையே நீ உணர்வாய்…

               புராணங்களில் வரும் அனுமன், பீமன், கடோத்கஜன் ஆகியோருக்கு இன்றும் சிறுவர்களிடமும், இளைஞர்களிடமும் தனிமரியாதை உண்டு. இன்றைக்கு சக்திமான் ஸ்பைடர்மேன், ஹீமேன் மாதிரி அக்காலத்தில் அவர்கள் இருந்தனர்.

               எல்லா மனிதர்களும் வலிமை உள்ளவர்களே. ஆனால் தன் பலத்தை அறியாததுதான் அவர்களின் குறை!

               ஒருமுறை சென்னையில் ஓர் இளைஞர் கைகளால் தொடாமல் தன் பற்களாலேயே தண்ணீர்ப் பானையைத் தூக்கி ஒரு சுற்று சுற்றிக் கீழே வைத்தார்.

               கோவையில் ஒருவர் தன் தலைமுடியில் லாரியைக் கட்டி இழுத்துக் கட்டினார்.

               சிலருக்கு மட்டும் பற்களும், தலைமுடியும் அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே எப்படி?

               அவர்கள் பற்களாலும், தலைமுடியினாலும் அவற்றை இழுப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை. மனவலிமையும், ஊக்க உணர்வும்தான் அச்செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பற்களும், தலைமுடியும் கருவிகள்தான். அவற்றை இயக்குவது மனோவலிமைதான்.

               இலங்கை மன்னனான இராவணன் சிறைவைத்திருக்கும் சீதையை ஆஞ்சநேயராகிய அனுமன் தலைமையில் வானர வீரர்கள் தேடிச் செல்கிறார்கள். இப்போது கடல்கடந்து இலங்கைக்குச் செல்லவேண்டும். பாலமோ, தரைவழியோ கிடையாது.

               யார் செல்வது? எல்லோரும் தயங்குகிறார்கள்.

               வலிமை வாய்ந்த, வாயுவாகிய காற்றின் மகனான அனுமனே தயங்கி நின்றார்.

               கூடியிருந்த அனைவரும் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள். அனுமனுக்குத் தைரியம் வரவில்லை.

               மூத்த கரடியாகிய சாம்பவன் அனுமனை நோக்கி, ‘ஏ வாயுபுத்திரனே… உன் வலிமை உனக்குத் தெரியவில்லை. நீ நினைத்தால் மலைகளைப் பெயர்க்கலாம். சூரிய மண்டலம் வரை செல்லலாம். இந்தக் கடல் உனக்கு மிகச் சிறியது. நீ அட்டாமாசித்திகளை அறிந்தவன். வல்லவன். முயற்சி செய். விசுவரூபம் எடு, ஆகாயத்தில் பற, கடலைத் தாண்டு, எழு, பற, முயற்சி செய்’ என்று சொல்லச் சொல்ல அனுமனின் உருவம் வளரத் தொடங்கியது. மிகப்பெரிய உருவத்தைப் பெற்ற அனுமன் தன் வாலினால் தரையில் அடித்து மகேந்திரகரியில் இருந்து புறப்பட்டு ஏவுகணை போல ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு கடலின்மேல் பறக்கத் தொடங்கினார்.

               அனுமனைப்போல நாமும் நமக்குள் இருக்கும் ஆற்றலை அறியாது வாழ்கிறோம்.

               நம் தந்தையோ, தாயோ, ஆசிரியரோ, நண்பர்களோ, நம் அன்புக்குரிய யாரோ ஒருவர் நம்மை நமக்கு உணர்த்தினால் நமக்குள் இருக்கும் அபாரமான ஆற்றல் வெளிப்படும்.

               சோழநாட்டில் குலோத்துங்கச் சோழ மன்னனின் அவைப்புலவராக கவிச்சக்கரவர்த்தி கம்பர் இருந்த காலம் அது. ஒளவையும் அந்நாட்டில்தான் இருந்தார்.

               கம்பரோ அரசவைக் கவிஞர். பொற்காசுகளுக்குத்தான் பாடுவார்.

               ஒளவையோ பழைய சோறு கொடுத்தாலும் பாடுவார்.

               ஒருமுறை ஒரு கிராமத்து மனிதன் ஒளவையிடம் கேட்டான், ‘ஒளவைப் பாட்டியே ஒரு சந்தேகம்’.

               ‘கேளப்பா என்ன வேண்டும்?’ என்றார் ஒளவை.

               ‘தங்களால் கம்பரைப்போல் பாட்டுப்பாட முடியுமா? தயக்கத்தோடு கேட்டான்.

               அதற்கு ஒளவையும், ‘தம்பி, இந்த உலகத்தில் எல்லோருக்கும் தனித்தனியே ஆற்றல் உண்டு. யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம்.

               இரண்டு கைகளும் இல்லாத குருவிகள் அழகிய கூடுகளைத் தம் மூக்கினால் கட்டுகின்றன.

               கரையான்களின் புற்றைப் பார். அவற்றைக் கட்டும் அவை எவ்வளவு எளிய உயிர்கள்.

               தேனீக்களின் கூட்டைப் பார். ஆயிரம் அறைகள் அங்கு உண்டு. சிலந்தி எச்சிலால் கூடுகட்டி, அதையே வலையாக்கி தன் இரையைத் தேடி, உயிர் வாழ்கிறது.

               இவை செய்யும் செயலை மனிதர்கள் செய்ய முடியுமா?

               வான் குருவியின் கூடு வல்லரசுக்குத் தொல்கரையான்

                தேன் சிலம்பி யாவர்க்கும் செய்யரித்தால் – யாம்  பெரிதும்

                எல்லோமே என வார்த்தை சொலவேண்டாம் காண்

                எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது”.

எனும் பாடலைப்பாடி, அரிய செயல்களை அனைவரும் செய்யலாம். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் எனக் கூறினார் ஒளவை.

               பள்ளியும், கல்லூரியும் கல்வி அறிவை வளர்க்கின்றன என்பது உண்மைதான். உலகுக்கு நீதி சொன்ன இயேசுநாதரும், நபிகள் நாயகமும், இராமகிருஷ்ண பரமஹம்சரும் பள்ளி சென்று படித்தவர்கள் இல்லை. ஆனாலும் என்றும் உலகம் போற்றும் ஞானிகள் அவர்கள். விவேகானந்தரின் வாழ்க்கையில் இருந்து ஒரு செய்தி.

               ஒருநாள் கல்கத்தாவிலிருந்து 300மைல்களுக்கு அப்பால் ஒரு கிராமத்தில், ஒரு நண்பனின் வீட்டில் தங்கியிருந்தார் விவேகானந்தர்.

               இரவுநேரம் உறங்கிக்  கொண்டிருந்த விவேகானந்தர் திடீரென எழுந்தார். உடல் வியர்த்திருந்தது. தம் நண்பரை எழுப்பினார்.

               அவரும் எழுந்து ‘என்ன நரேன் என்ன?’ என்று பதட்டத்தோடு கேட்டார்.

               ‘என் மனதுக்குள் ஏதோ பயமாக இருக்கிறது. என் அம்மாவுக்கு உடல்நலம் இல்லை போலத் தோன்றுகிறது. நான் என் அம்மாவை உடனே பார்க்க வேண்டும்’ என்றார்.

               அவர் நண்பர், ‘உடனே எப்படிப் பார்க்க முடியும். காலையில் கிளம்பினாலும் மூன்றுநாட்கள் ஆகுமே என்ன செய்வது?’

               ‘இல்லை என் அம்மாவின் இப்போதைய நிலையை நான் தெரிந்து கொள்ள வேண்டும்’ என வருத்தத்தோடு கூறினார்.

               அக்காலத்தில் தொலைபேசி இல்லை. விரைவு ரயில்கள், போக்குவரத்தும் அதிகம் இல்லை.

               நண்பர் சட்டென்று எழுந்தார். ‘சரி என்னுடன் வா’ என்று விவேகானந்தரை அந்த நள்ளிரவில் ஊரைத் தாண்டி அழைத்துச் சென்றார்.

               ஊருக்கு வெளியே ஒரு சுடுகாடு இருந்தது. அங்கே அந்த நள்ளிரவில் ஒருவருடைய உடல் சிதையில் எரிந்து கொண்டிருந்தது.

               பக்கத்தில் ஒரு பாமர மனிதன், அந்தச் சுடுகாட்டைக் காப்பவன் அமர்ந்திருந்தான்.

               அவன் தோற்றமோ, கலைந்த தலையும், அழுக்கேறிய உடையுமாக இருந்தது.

               விஷயத்தைக் கேட்டுக்கொண்ட அவன் சற்றுநேரம் கண்களை மூடிப் பேசாமல் இருந்தான். பிறகு எரிந்து கொண்டிருந்த சிதையில் இருந்து ஒரு குச்சியை எடுத்து மணலில் ஏதோ கணக்குப் போட்டான்.

               பிறகு மகிழ்ச்சியோடு விவேகானந்தரைப் பார்த்து ‘கவலைப்பட வேண்டாம். உன் தாயாருக்குத் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், நீ வெளிநாடு சென்றுவந்த பிறகும்கூட அவர்கள் நலமாக இருப்பார்கள்’ என்றான்.

               விவேகானந்தருக்கு மன ஆறுதல் கிடைத்தது. பிறகு தம் ஊருக்கு விரைந்து சென்று அம்மாவைக் கண்டார் விவேகானந்தர். அவர்களும் நலமாக இருந்தார்கள்.

               பிற்காலத்தில் சிகாகோ சென்று வெற்றி வீரராகத் திரும்பிய விவேகானந்தர் ஞானதீபம் எனும் கட்டுரைத் தொகுதியில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதிவிட்டு ஒரு கேள்வியையும் தனக்குள் கேட்டுக் கொள்கிறார்.

               ‘அன்றைக்கு இரவு சுடுகாட்டிலே அந்த கல்வி கல்லாத எளிய மனிதன் என் எதிர்காலம் குறித்துச் சொன்னானே… முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்த என் தாயின் உடல்நலம் குறித்துச் சொன்னானே… அந்த மனிதனின் ஆற்றல் என்னை இப்போதும் வியப்படையச் செய்கிறது. இந்தப் பாரததேசத்தில் ஞானிகளும் அறிஞர்களும் எங்கும் நிறைந்துள்ளனர். நாம்தான் அவர்களை அறிந்து கொள்ளவில்லை’ என முடிக்கிறார்.

               வலிமையுள்ள யானையைப் பார்க்கிறோம். தன் வலிமையை அவை உணராததால்தான் தெருவில் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது. எனவே

               உன்னை அறிந்தால்நீ உன்னை அறிந்தால்

               உலகத்தில் போராடலாம்

               உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

               தலைவணங்காமல் நீ வாழலாம்

என்று கண்ணதாசன் தன் பாடல்வரிகளில் நம் வலிமையை நமக்கு உணர்த்துகிறார்.

               தன்னை உணருதல் தலைமைக்கு அவசியம்!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.