கழுகுமலையும்… எல்லோரா குகைக்கோயிலும்…

               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில் அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான் கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார்.

               என்னை அழைத்துக்கொண்டு அந்தக் மலைகுகைக்கு அருகிலிருந்த சின்னக் காட்டுக்குள் போனார். ஏதோ ஒரு மூலிகை போன்ற செடியிலிருந்து சில பச்சை இலைகளைப் பறித்து அதைக் கசக்கி என் கைகளில் அவர் தடவ, என் கை மருதாணி வைத்ததுபோலச் சிவந்து போனது. அவர் கையும் சிவப்பானது.

               ‘இந்தக் கலரு மூணு நாளைக்கு உங்க கையில இருக்கும்’ என்று அவர் பெருமையாகச் சொல்லியதோடு, இது மாதிரி ஆயிரக்கணக்கான செடிகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இவற்றின் சாறுகளை வைத்துதான் குகைக்குள் இருக்கின்ற ஓவியத்தை சமண முனிவர்கள் தீட்டியிருக்கவேண்டும் என்று அவர் எளிமையாகச் சொன்னார்.

               இப்போது எனக்கு அஜந்தா ரகசியமும் புரிந்தது, சித்தன்னவாசலுடைய ஓவியத்தன்மையும் புரிந்தது.

               எல்லோரா மலையைக் குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயிலாகும். இக்கோவில் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக அங்கிருக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பிரம்மாண்டமான சிவலிங்கமும், அதற்கு ஏற்ற நந்தியுமாக குகை குடையப்பட்டு திருவுருவங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதேமுறையில்தான் தஞ்சைப் பெரியகோவிலும் அமைந்திருந்தாலும் இதனுடைய பாணியும் அமைப்பும் உலகை வியக்க வைக்கும் தன்மையுடையன.

               எல்லோரா குகை போன்றே அதேகாலத்தில் தமிழ்நாட்டில் கழுகுமலையில் பாண்டியர் காலத்து குடைவரைக்கோயில் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. மலைஉச்சியில் இருந்து பார்த்தால் ஐஸ்கிரீம் கிண்ணத்தில் ஐஸ்கிரீம் இருப்பதுபோல, மலையின் நடுப்பகுதியில் அற்புதமான அந்தக் கழுகுமலைக் கோயில் தொடங்கப்பட்டிருப்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் இக்கோவில் பணி நிறைவு பெறவில்லை. இதேமலையின் மறுபுறத்தில் சமணச் சிற்பங்களும், கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டிரு;க்கின்றன.

               நாங்கள் எல்லோராவுக்குப் போயிருந்தபோது அங்கு ஒரு தொல்லியல் விழா நடந்து கொண்டிருந்தது. மாலைநேரத்தில் நாங்கள் அங்கு  சென்றிருந்தோம். முதலில் எங்களை உள்ளே அனுமதிக்க மறுத்தபோதும், எங்களுடைய தம்பி மகன் கணினிப் பொறியாளர் திருமிகு. ரவி அவர்களின் பெருமுயற்சியால் நுழைவுச்சீட்டு எங்களுக்குக் கிடைத்தது. இரவுநேரத்தில் ஒளி ஒலிக் காட்சியில் நாங்கள் அந்த எல்லோரா குகைகளைப் பார்த்து வியந்தோம் மகிழ்ந்தோம். அன்றைக்கு அக்கோவிலின் முன்னே மேடை அமைக்கப்பட்டு பாரம்பரிய நடனங்களும், நடத்தப்பட்டன. இனி எல்லோரா குறித்தும் சில செய்திகளைக் காண்போம்…

               வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் ‘Verul Leni’ என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாத்திற்கு 30கி.மீ.வடக்கு, வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது எல்லோரா குகைகள். உலகில் எங்கும் காணப்படாத குகைக்கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லைக் குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது.

               இந்தக் குகைகள் குடையப்பட்ட மலைகள் சாயத்ரி மலைத்தொடரைச் சேர்ந்தவை. கைலாசா கோவில் 1200ஆண்டுகள் பழமையான கோவிலாகும். தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. இதில் மேற்பகுதி மலைகள்தான் குகைகள் குடையப்பட்டுள்ளது. பல நதிகளுக்கு மூலஸ்தனம் இந்த மலைகள் என்றால் மிகையாகாது. இதில் குறிப்பாக ‘எலகங்கா’ நதி குறிப்பிடத்தகுந்தது. இதுதான் குகை எண் 29 அருகே ஒரு அழகான அருவியாக கீழே விழுகிறது. எல்லோரா சிற்பங்கள் ராஸ்டிரகூடர் மற்றும் யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

               வாழ்க்கையில் வாய்ப்பு கிடைக்கும்போது ஒருமுறையாவது அஜந்தா எல்லோராவைக் கண்டு வாருங்கள்.

               எல்லோரும் காணவேண்டியது எல்லோரா”

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.