கையடக்கக் கணிணி அல்லது கட்டற்ற கலைக்களஞ்சியம்…

தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில், திறனாய்வாளர்களில் ஆழங்கால்பட்ட கல்வியறிவும், நுண்மான் நுழைபுலமும் கொண்ட படைப்பாளிகளை, ஆராய்ச்சியாளர்களை அவர்களது படைப்புகள் மூலமாகவும் ஆராய்ச்சியின் மூலமாகவும் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இவ்வகையில் திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியையாகவும், மிகச்சிறந்த மேடைப்பேச்சாளராகவும் இன்னிசையால் கேட்போரை மயங்கவைக்கும் குரல்வளம் கொண்டவராகவும் விளங்குபவர் முனைவர். விஜயசுந்தரி அவர்கள.;

பேராசிரியை முனைவர். விஜயசுந்தரி அவர்கள் நூல்கள் பல படைத்திருக்கிறார். தற்போது வெளிவரவிருக்கும்இலக்கியக் கீற்றுஎனும்  அவரது நூலினை வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன், மகிழ்ந்தேன்.

இந்நூல்இளங்கீரனார் பாடல்களின் சிறப்புகள்எனும் முதல் கட்டுரையில் தொடங்கிஅவதார புரு~ன்புதுக்கவிதை தொகுப்பின் காப்பியக் கூறுகள்எனும் 24ஆம் கட்டுரையோடு நிறைவடைகிறது. இக்கட்டுரைகள் இவரது பன்நூற் பயிற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. பல்வேறு கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்நூல்.

          சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம் காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியங்கள், தற்கால இலக்கியம் என ஈராயிரம் ஆண்டு வளமையுடைய இலக்கியக் கனிகளின் இன்சுவைச் சாறாக இக்கட்டுரைகளை வடித்துள்ள ஆசிரியருக்கு நம் பாராட்டுக்கள்.

          இனிய சீம்பால் திரட்டெனத் திகழும் இந்நூலினை நான் இடைவிடாது வாசித்து மகிழ்ந்தேன். காரணம் இனிப்புக் கடைக்குள் நுழைந்த இளம் சிறுவனுக்கு அத்தனை இனிப்புக்களையும் உண்ணவேண்டும் என்ற அவா ஏற்படுவதுபோல இந்நூலின் கட்டுரைகள் என்னை ஈர்த்தன. இவ்வார்த்தைகள் மிகையில்லை, உண்மை.

          இளங்கீரனார் பாடல்களின் சிறப்புகள் எனும் கட்டுரையைத் தொடங்கும்போதே அச்சங்கப்புலவரின் எழுத்துநடையையும், உள்ளக்கருத்தையும் நமக்குத் தெளிவாக்குகிறார். மேலும் அவர் பாடிய பாடல்களின் தன்மைகளை ஆராய்ந்து அதில் அத்தலைவன், தலைவியரின் நிலையைக் கூறும்போது, ‘காணுங்கால் உள்ளெழும் அன்பைக் காட்டிலும்

எண்ணுங்கால் தோன்றும் அன்பே அரிதுஎனும் இந்நூலாசிரியரின் சிந்தனைவரிகள் இவ்வரிய கட்டுரைநூலுக்கு ஒரு பதச் சோறு.

          இளங்கீரனாரின் உவமைகளின் அருமைகளைச் சொல்லும்போது பாலை நிலத்தின் வழியே செல்லுகின்ற தலைவன் இலுப்பை மரங்கள் பூத்துக் குலுங்குவதைக் காண்கிறான். அந்த மலர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு வில்லுக்குத் தேவையான அம்புகள் வைக்கும் அம்பராத்தூணி வாய்திறந்து காணப்படுவதுபோல தெரிகிறதாம் எனக் குறிப்பிடுமிடத்தைப் படிக்கும்போது இலுப்பை; பூக்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.

          மேலும் இக்கட்டுரையில் சங்ககாலத்துப் பழக்கவழக்கங்களை வரிசைப்படுத்திப், பொருள்தேட பிரிந்து சென்ற தலைவன், வரும் நாளை எண்ணி சுவற்றில் கோடுகளைப் போட்டு எண்ணிப்பார்க்கும் மரபு, அக்காலப் பெண்களிடம் இருந்ததை அழகாகச் சொல்லுகிறார் ஆசிரியர். துன்பத்தில் ஏற்படும் கண்ணீர்த்துளியைநூலறுந்த முத்துஎன இளங்கீரனார் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி இந்த உவமைகள் 2ஆம் நூற்றாண்டின் உவமையா? அல்லது 21ஆம் நூற்றாண்டின் உவமையாஎன மயங்க வைக்கிறார்.

          பரிபாடலில்ஒப்பனைக் கூறுதல்எனும் கட்டுரையில் அக்கால அணிகலன்களை வகைப்படுத்திக் காட்டும்போது, தோள் அணிகள், மார்பு அணிகள், காதணிகள் என்று தொடங்கி பொன்னரிமாலை, தலைமாலை, நெற்றியணி, என வகைப்படுத்திய பின்னர், பெண்கள் கூந்தலுக்கு மணமூட்டுவதும் கூந்தலில் அணிகலன்களை அணிவதும், இடையிலும் காலிலும் அதற்கேற்ற அணிகலன்களை அணிந்து கொள்வதும் இவற்றோடு பொங்கிவரும் வைகை நதியில் ஆடவரும், மகளிரும் மகிழ்ந்து நீராடுவதையும் காட்டுகிறார் நூலாசிரியர்.

          அதில் ஒரு அரிய காட்சி. நீராடிக்கொண்டிருந்த தலைவி அவள் எதிரே நீராடிக்கொண்டிருந்த பரத்தை ஒருத்தியைப் பார்த்துஐயோ இவள் அணிந்திருக்கும் அணிகலன் என் அணியாயிற்றே என் தலைவனின் அன்பளிப்போஎன்று பதற்றத்தோடு நீராடும் காட்சி படிப்போருக்கு வியப்பைத் தருகிறது.

          ‘சங்கஇலக்கியமும், பிற்கால நாடகமறு ஆக்கமும்எனும் இக்கட்டுரையில் 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட பல்வேறு செய்யுள் நாடகங்களின் மூலக்கரு, சங்கஇலக்கியங்களில் கிடைத்த முத்துக்கள்தான் எனச் சான்றாதாரங்களோடு ஆசிரியர் விளக்குவது புதிய ஆய்வுக்களமாகப் படிப்போருக்குத் தோன்றுகிறது.

சான்றாக, பாவலரேறு பாலசுந்தரம் எழுதியுள்ளபுலவர் உள்ளம்எனும் செய்யுள் நாடகம் அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த செய்தியின் அடிப்படையில் படைக்கப்பட்டது என்பதை ஒளவையின் வரிகள்கொண்டு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இதேபோல புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் சேரதாண்டவம், சொ.சிங்காரவேலனின் ஊமைக்குயில், புலவர் .பழனியின் அனிச்சஅடி, புலவர் மலைமானின் நீர்மாங்கனி, என 10க்கும் மேற்பட்ட செய்யுள் நாடகங்களைத் தேர்ந்தெடுத்து இக்கட்டுரையை அமைத்திருப்பதோடு, மேலும் ஆய்வு செய்வதற்கான களங்களையும்; பிற்கால ஆய்வாளர்களுக்குச் சுட்டிச்செல்கிறார் ஆசிரியர்.

          ‘சந்துசெய்தல்எனும் கட்டுரையில் பழங்காலத் தமிழ்ப்புலவர்கள் கவிதை எழுதுவதும், பரிசில் பெறுவதுமாக வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், போர் நிகழும் இடங்களுக்குச் சென்று அந்தப்போரை நிறுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டனர் என்பதைப் பல சான்றாதாரங்களோடு எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

இதேபோல சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டும் குறுநில மன்னர்களாகிய இனக்குழுத் தலைவர்களோடு போரிட்டுக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்ப்புலவர்களே மனஉறுதியோடு அவர்களிடத்தில் சென்று, தன் அறிவுரைகளால், தமிழ்பாக்களால் அப்போர்களைத் தடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சேர, சோழ, பாண்டியன் என்னும் மூவேந்தர்களும் நட்புக்கொண்டு ஒன்றாக இருந்தபோது, ஒளவையார் போன்ற பல புலவர்கள் அம்மன்னர்களின் ஒற்றுமையை வாழ்த்திப் பாராட்டியும் இருக்கின்றனர் என்ற செய்தியையும் இக்கட்டுரை விவரிக்கிறது.

          ‘போரைக் கைவிடுதலே வெற்றிஎன ஆலந்தூர்கிழாரும், கோவூர்க்கிழாரும் பெரும் போர்களைத் தடுத்துள்ளனர். போரில் தோற்ற திருமுடிக்காரியின் புதல்வர்களை யானைக்காலில் வைத்து மிதித்துக்கொல்ல முயன்ற, தோழன் கிள்ளிவளவனைத் தடுத்து நிறுத்தினார் கோவூர்க்கிழார். இவ்வாறு மன்னர்களையும், மக்களையும் போரின்றி வாழச்செய்த பெருமை தமிழ்ப்புலவர்களுக்கு இருந்தது என ஆசிரியர் சான்றுகளோடு சுட்டிக்காட்டுவது சிறப்பு.

          சங்ககால உணவு வகைகளையும், அதனை ஆக்குகின்ற முறைகளையும் ஆசிரியர் சான்றுகளோடு காட்சிப்படுத்தி சொல்லியிருக்கிறார். இக்காட்சி தற்காலத் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகளை நாம்கண்டு ரசிப்பதைப்போல ஆசிரியர் விவரித்திருப்பது உண்மையில் வியப்புக்குரிய ஒன்றாகும்.

சான்றாகச், ‘சோழன் கரிகால் பெருவளத்தான் தன்னை நோக்கி வரும் இரவலர்களுக்குக் கொழுத்த செம்மறியாடின் மேல்தொடையை வேகவைத்துத் தசைப்பகுதிகளை இரும்புக்கம்பிகளில் சுட்டு இறைச்சியாக்கி (டீயசடிநஙரந) வழங்கினான் என்றும், அதனை உண்டவர்கள் அதன் சூடு  குறையுமாறு வாயின் இடப்பக்கமும், வலப்பக்கமும் மாற்றி மாற்றி மென்று தின்று பசியாறினர்என ஆசிரியர் குறிப்பிடும்போது நமக்கே அந்த உணவை உண்ணவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

          பொறிக்கறி, நண்டுக்கறி, கருவாடு, இவைதவிர தானிய உணவு, கள், பழங்கள், பால் என அக்காலமக்களின் உணவுவழக்கம் இருந்ததை இக்கட்டுரையின் மூலம் அறிகிறோம்.

திருக்குறள் நீதி இலக்கியம்ஒரு பார்வைஎனும் கட்டுரையில் திருக்குறளின் வேறுபெயர்கள், திருக்குறள் காட்டும் நீதி இயல்புகள் என்பதைச் சுட்டிக்காட்டித் திருக்குறளை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் பாங்கு திரையரங்குகளில் ஒரு நுழைவுச்சீட்டில் பல படங்களைப் பார்த்த மகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது.

பிறரின் குற்றங்களைச் சுட்டிக்காட்டி திருத்தம் சொல்வது ஒருவகை. இனியவற்றைக் கூறி அவற்றைக் கைகொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துவது ஒருவகை.

இவையெல்லாம் இனியவை. இவற்றைச் செய்து பாருங்கள் என குழந்தைக்கு அமுதூட்டுவது போலஇனியவை நாற்பதுஎன்னும் நீதி இலக்கியத்தின் கருத்துக்களை, ‘வேந்தர்க்கு இனியவைஎன மன்னருக்குக் கூறுவதுபோல மக்களுக்கு விரித்துரைக்கிறார் ஆசிரியர்.

இடித்துக்கூறி இன்னாமை உணர்த்துவதைக் காட்டிலும் இனியவற்றை விளக்கி ஏற்க வைக்கும் திறனே இனியது என்பது ஆசிரியரின் இனியகருத்து.

இந்நூலின் ஒருபகுதியில் காப்பிய இலக்கியங்களைக் கையில் எடுக்கும் நூலாசிரியர், கண்ணகி என்னும் கட்டுரையில் அவளின் பாத்திரப் படைப்பினைப் பகுத்தாராய்வதோடு கண்ணகியின் பொறுமையே அவளுக்குப் பெருமை சேர்த்தது என முடிக்கிறார்.

சீவகசிந்தாமணியின் நகர அமைப்புஎனும் கட்டுரையில் சச்சந்தன் ஆட்சிசெய்த ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தின் இயற்கை அரண்கள், அகழிகள், மதில்கள், உள்நகர், புறநகர், சேரி, அங்காடித்தெரு, கோழிப்போர் நிகழும் இடம், உணவகங்கள் எனத் தற்கால புPளு (புடழடியட Pழளவைழைniபெ ளுலளவநஅ) முறையில் ஆசிரியர் பருந்துப் பார்வையால் படம்பிடித்துக் காட்டியிருக்கும் பாங்கு உற்று நோக்கத் தக்கது.

இவைதவிரபதினொன்றாம் திருமுறையில்; திருமுறையில் சமுதாயம்’, ‘உண்மைவிளக்கம் உணர்த்தும்நடராஜர் நடனத் தத்துவம் திருநீற்றின் பெருமையைக்கூறும்மந்திரமாவது நீறு’, திருவாய்மொழியில்ஆசிரியர் மாணவர் இலக்கணம்’, திருவரங்கக் கோவிலின் மார்கழித் திருவிழாக்களை விவரிக்கும்திவ்யப்பிரபந்தமும் திருஅத்யயனத் திருநாளும்’, திருவானைக்கால் அகிலேண்டேஸ்வரி மாலையில்சக்திவழிபாட்டுக் கூறுகள்’, ‘பாரதிதாசன் கடிதங்களின் மொழிநடைஎன தமிழ் இலக்கிய வரலாற்றை கால வரிசைப்படுத்தி திறனாய்வு செய்கிறார் இந்நூலாசிரியர்.

மேலும் தற்காலக்காட்சி இலக்கியமாகக் கருதப்படும் திரைத்துறையிலும் தன் பார்வையைச் செலுத்திஜெகம் புகழ் சித்திரக்காரனின் திரைத்தமிழ்என டாக்டர்.கலைஞர் அவர்களின் இன்தமிழ் இலக்கியச் சுவையுடைய வசனங்களால் வெற்றிபெற்ற திரைப்படங்களின் வெற்றிக்கான கூறுகளையும் ஆராய்கிறார்.

நிறைவாக 24ஆம் கட்டுரையானஅவதார புருஷன்புதுக்கவிதைத் தொகுப்பில் காப்பியக்கூறுகள் எனும் கட்டுரையில் ஐந்து தலைமுறைகளைக் கண்ட வாலிபக் கவிஞர் வாலியின் தற்கால இராமாயணமான அவதார புருஷனையும் அலசி ஆராய்கிறார் முனைவர். விஜயசுந்தரி.

குறிப்பாக வாலி அவர்கள் அவையடக்கம் கூறுமிடத்தில் தன்னையும் கம்பனையும் பற்றிக் கூறும்போது

                    “பாரிஜாதப்

                    பூவிற்குஒரு

                    காகிதப் பூவின்

 கைகூப்பு

என்றும் பரசுராமனைப் பற்றிக் குறிப்பிடும்போது

          “ஐம்பொறி அளித்தத்

          தீப்பொறி

          கோடரி சுமந்துகோபம்

கொப்புளிக்க உலாவந்த

கோளரி

 எனக் கவிஞர் வாலியின் சொற்சிலம்பங்களை நம் கண்முன்னே திரையிட்டு இந்நூலினை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

இந்நூல் தமிழ் இலக்கியங்களில் ஆய்ந்துத் தோய்ந்த ஆசிரியரின் அறிவின் வெளிப்பாடு. இவரது மேடைப்பேச்சைப் போலவே மேடைகளில் இவர்பாடும் இன்னிசைப் பாடல்களைப்போலவேஇலக்கியக்கீற்றுஎன்னும் இந்நூலும் இனிமை பயக்கும் சொற்சித்திரமாக நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

தேர்ந்த ஓவியக்காரன் தான் கூட்டிய வண்ணங்களால், எழுதும் தூரிகையால், கற்பனை வளத்தால் நாம் காணாத உலகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுவான்.

எத்தனையோ இலக்கியங்களை நாம் கற்றிருந்தாலும் அவற்றின் சுவைமிகுந்த பகுதிகளைத் தனித்தனியே காண்பது இனிமைதான்.

கண்ணப்பநாயனார் தான் சுவைத்ததில் சிறந்ததைச் சிவபெருமனானுக்குக் கொடுத்தது போலவும்,

இராமாயணத்தில் சபரி இராமபிரானுக்குத் தீங்கனி ஈந்ததைப்;போலவும், இந்நூலாசிரியரும் இலக்கியத்தில் தான் அறிந்ததை, உணர்ந்ததை நமக்கு விருந்தாக, மருந்தாகத் தருகின்றார்.

பேராசிரியை முனைவர். விஜயசுந்தரி அவர்களின் நல்உழைப்பிற்கு நம் வாழ்த்துக்கள். இந்நூல் கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட வேண்டும்.

கையடக்கக் கைபேசியில் உலகச்செய்திகளை அறிந்துகொள்ளும் இளையதலைமுறையினருக்கு இந்நூலும் ஒரு கையடக்கக் கணினிதான், கட்டற்ற இலக்கியக் களஞ்சியம்தான்.

தொடரட்டும் ஆசிரியரின் எழுத்துப்பணி, மலரட்டும் தமிழ்ச்சோலையில் புதுமலர்கள்.

                                                                      அன்புடன்

                                                                   கு.ஞானசம்பந்தன்.

                                                                   தகைசால் பேராசிரியர்.

                                                                   தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.