உரையரசியின் ஒரு நிமிடக் கதைகள்…

தமிழ் இலக்கிய வரலாற்றில் நீதிநூல்கள் என்னும் மைல்கற்களின் வழியே காலங்களைக் கடந்துசெல்லலாம். அத்தகைய நீதிநூல்களுல் காலத்தை அன்றும், இன்றும், என்றும் வென்று நிற்கும் ஒரு நூல் எதுவென்றால் அது இரண்டே அடிகளைக் கொண்ட திருக்குறள்தான்.

          உலகளந்த பெருமாளாகிய திருமால்கூட மூன்றடியால்தான் உலகை அளந்தார். ஆனால் திருவள்ளுவரோ இரண்டே அடிகளால் இவ்வுலகை அளந்திருக்கிறார். இரண்டு கால்களைக் கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு அடியாக முன்னேற வேண்டும் என்பதே வள்ளுவரின் உள்நோக்கமாக இருந்திருக்கலாம்.

          வள்ளுவப்பேராசான் எழுதிய திருக்குறளுக்குப் பழைய உரையாசிரியர்கள் மணக்குடவர் பரிதியார் முதலான பத்துப்பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அவர்களை அடுத்துப் பரிமேலழகரின் உரையே திருக்குறளுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

          இத்திருக்குறளுக்கு தற்காலம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட உரையாசிரியர்கள் உரை எழுதியிருந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு பெண்ணரசியும் இதற்கு உரை எழுதியிருக்கிறார் என்பது வியப்புக்குரிய ஒன்று.

          ஆம்! மருங்காபுரியை ஆண்ட ஜமீன்தாரிணிதிருக்குறள் தீப அலங்காரம் என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை கண்டிருப்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம். அவர்களுக்குப் பிறகு இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு பெண்ணரசியும் திருக்குறளின் உரையாக ஒரு நிமிடக்கதைகளோடு விளக்கம் தந்திருப்பது நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது.

          திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளரும், எழுத்தாளருமான பேராசிரியை டாக்டர். திருமதி. மீனாள் அவர்கள் வள்ளுவப்பேராசானின் குறளுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒருநிமிடக் கதைகளாக ஐம்பது கதைகளைப் படைத்துத் தந்திருக்கிறார்.

          இத்திருக்குறளுக்கு ஜெகவீரபாண்டியனார் எழுதிய திருக்குறட்குமரேச வெண்பா, வடமலைவெண்பா, சிவசிவவெண்பா, சோழவந்தானூர் அரசன் சண்முகனார் எழுதிய வள்ளுவர்நேரிசை போன்ற நூல்கள் கதைகளோடு கூடிய குறளின் விளக்கமாக அமைந்திருக்கும். அக்குறட்பாக்குரிய கதைகளெல்லாம் புராணங்களிலிருந்தும், இதிகாசங்களிலிருந்தும் மேற்கோளாக எடுத்தாளப்பட்டிருக்கும்.

ஆனால் நம் மேனாள் துணைவேந்தர் மீனாள் அவர்கள் சிறுகதை என்னும் மேல்நாட்டு வடிவத்தைக்கூட குறளுக்கு ஏற்றபடியாக (குழந்தைக்கு ஏற்ற ஆடைபோல, அணியும் பொன்னாபரணங்கள் போல) ஒரு நிமிடக்கதையாக படைத்துத் தந்திருக்கிறார்.

இந்த எண்ணம் அவருக்கு எப்படி வந்தது? ஒருமுறை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வானுயர்ந்து நின்ற வள்ளுவரின் சிலைக்கு அருகே இவர் சென்றபோது வள்ளுவரின் காலடியே நம் உயரம் என அளந்து மனதில் நினைத்து அவரின் குறட்பாக்களுக்குக் காலத்துக்கு ஏற்ற வடிவமாக இந்த ஒருநிமிடக் கதைகளை தாம் படைத்துத் தந்ததாக முன்னுரையில் கூறியிருக்கிறார்.

1330 குறளுக்கும் விளக்கக் கதைகள் எழுதவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்ததாம். இருந்தாலும் பணிப்பளுவின் காரணமாகத் தனக்குக் கிடைத்த காலஅவகாசத்தை வைத்துக்கொண்டு தான் சிந்தித்ததை நமக்கு விருந்தாக்கித் தந்திருக்கிறார்.

அறத்துப்பாலில் 36 திருக்குறள்களையும், பொருட்பாலில் 14 திருக்குறள்களையும் களமாக எடுத்துக்கொண்டு இவர் கதைவடிவில் எழுத்தோவியமாக்கியிருக்கிறார்.

வள்ளுவர் போன்றே கடவுள் வாழ்த்தில் கதையைத் தொடங்கும் இவர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பால்வெளி வீதியில் (கேலக்ஸி) பள்ளிகொண்டிருந்த ஸ்ரீரங்கராஜன் உலகத்தில் முதலில் கால் பதித்தான். தூரத்தில் கோவில் மணியோசை கேட்டது. உயிர்கள் வாழும் கிரகத்தைக் கண்டுபிடித்து விட்டோம் என ஸ்ரீரங்கராஜன் தகவல் அனுப்பினான் எனச் சொல்லி, ‘அகர முதல எழுத்தெல்லாம் எனும் குறட்பாவின் பொருளை இவர் கூறும்போது நம் மெய் சிலிர்க்கிறது.

திருநெல்வேலி அப்பா மழை பெய்ததற்கு சந்தோசப்பட, சென்னையில் இருந்த தங்கை கடும் மழையால் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டோம் என்று புலம்ப, இந்த இரண்டு செய்திகளையும் அமெரிக்காவிலிருந்து போனில்கேட்ட கதிரேசனுக்கு என்ன திருக்குறள் நினைவுக்கு வந்திருக்கும்?’

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

என்று முடிக்கிறார் ஆசிரியர்.

நல்லபிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு உயர்வும், நடத்தையால் தீயகுணங்களைக் கொண்ட பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை ஒரு வினாடியில் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். எப்படித் தெரியுமா? ஏர்போர்ட்டில் ஒரு தந்தை தன் மகன் அமெரிக்காவிலிருந்து விஞ்ஞானியாக வர அவனை வரவேற்கக் காத்தி;ருக்கிறார். மற்றொரு தந்தை திகார் ஜெயிலில் இருந்த தன் மகனுக்கு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில், பெயில் கிடைத்ததால் அவனைப் பார்க்கச் செல்கிறார்.

பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.

இதேபோல,

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

எனும் குறட்பாவிற்குக் கதை கூறுகிற ஆசிரியரின் எழுத்துநடையழகை எப்படிப் பாராட்டுவது? தாத்தாவிற்கும், பாட்டிக்கும்; சர்க்கரைவியாதி. பேரன் சுவைத்துவிட்டுக் கொடுத்த ஐஸ்கிரீமை இரண்டுபேரும் சண்டைபோட்டுக்கொண்டும், போட்டிபோட்டுக்கொண்டும் வாங்கிச் சுவைக்கிறார்களாம்.

இதே அதிகாரத்தில் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்ற மகள் இந்த வெற்றிக்குக் காரணம் தன் தந்தைதான் என்றுசொல்ல, சக்கர நாற்காலியில் இருந்த தந்தை கண்ணீர் விடும்போது, ‘தந்தை மகற்குஆற்றும் நன்றி என்ற குறளை நினைவூட்டுகிறார் ஆசிரியர்.

இந்நூல் முழுவதும் மனிதர்களின் அன்பு, நட்பு, வெளிவேசம், பணஆசை, நன்றிஅறிதல் என்று ஒரு நிமிடக் கதையை குறளோடு கலந்து மர்மக்கதை படிக்கும் விறுவிறுப்போடு நூலைப் படைத்துள்ள ஆசிரியர் திருக்குறள் முழுமைக்கும் இதுபோன்ற கதைகளைப் படைத்துத் தரவேண்டும். குறிப்பாக ஆசிரியர் கையாளும் கதைக்களங்கள் அனைத்தும் எளிய மனிதர்கள்     அறிந்துகொள்ளக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய, உணர்ந்துகொள்ளக்கூடிய கதைக்களங்கள்தான்.

இரயிலில், விமானத்தில், மாட்டுவண்டியில், இருசக்கர வாகனத்தில், நடைபாதையில் எனப் பயண ஊர்திகளில் சொல்லப்படுகின்ற கதையும், கதைச் சம்பவங்களும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக ~;டியப்த பூர்த்தி (60ஆம் கல்யாணம்) முடிந்த அன்றைக்கு இரவு கணவன் தன் மனைவியிடத்தில், ‘உனக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டேனா?’ எனக்கேட்க, ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா, ஆனாலும் நம் முதலிரவில் என் அத்தை மகனை காதலித்தேனா? என்று நீங்கள் கேட்ட சொல் இன்றைக்கும் என் மனதில் வடுவாக நிற்கிறது என்று அந்த மனைவி சொல்ல,

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

எனும் குறளைப் பொருத்திக்காட்டும் ஆசிரியரின் எழுத்துத் திறமையால் இந்நூலாசிரியர் துணைவேந்தராக இல்லை இல்லை உரைவேந்தராகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறார்.

இந்த ஒரு நிமிடக் கதைகளுக்கான தலைப்புகளும், அவர் கூற வரும் குறட்பாவிற்கு முன்னோட்டமாக அமைந்திருப்பதும், ஆசிரியர் அமைத்திருப்பதும் மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது. சான்றாக, ‘எதிர்வினை எனும் கதைக்கு,

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

எனும் குறளும், ‘டைரிக்குறிப்பு எனும் கதையில் உயிருக்குப் போராடும் மனிதனை அவனுக்கு உதவாமல் அவனை செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் தற்கால மனிதமனநிலையை, ‘செத்தாருள் வைக்கப்படும் எனத் தன் டைரியில் ஒருவர் குறிப்பதும்,

சிரிக்காமல் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சிலையாக நிற்கும் மனிதன் வேலை முடிந்து வந்து தான் பெற்ற குழந்தையோடு சிரித்து மகிழ்வதை, ‘சிரிப்பு என்னும் தலைப்பிலும், எளியோரை வலியார் தாக்கினால் அந்த வலியாரும் அதற்கு மேலுள்ள வலியாரால் தாக்கப்படுவார் எனும் கருத்து அமைந்த கதையும்,

சம்பாத்தியத்துக்கு ஏற்ற சந்தோசமே இனிய வாழ்க்கை என்பதை,

ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை.

எனும் குறளுக்கேற்ப அமைத்திருப்பதும் சிறப்பு. இவை தவிர பேச்சு, வாக்கு, பரிசு, வெற்றி, அனுதாபம், கௌரவம், உற்சாகம், உதவி, இலக்கு என ஒரு நிமிடக் கதைகளுக்கு ஒரு சொல்லில் தலைப்பிட்டு நம்மை வியக்க வைக்கிறார் ஆசிரியர்.

நிறைவாகஅன்போடு இயைந்த எனும் குறளுக்குத் தன் மாற்றுத்திறனாளியான மகளுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்பணிப்பதே சிறப்பு என நினைக்கும் பெற்றோரின் மனநிறைவோடு நூலி;னை நிறைவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கடினமான ஆழமான திருக்குறளின் உரைகளை உள்வாங்கிக்கொண்டு குழந்தைக்கு உணவூட்டும் தாய் அக்குழந்தையும் ருசிக்கேற்றபடி நெய்விட்டு கையால் பிசைந்து நிலாகாட்டியும் சிட்டுகாட்டியும் சிறுகதை சொல்லியும் அக்குழந்தையின் மனதை அன்பால் நிறைக்கிறார். நெய்யுடை அடிசிலை குழந்தையின்; வயிற்றிலும் நிரப்புகி;றார். அத்தாய்போல திருக்குறளுக்கும் அதன் உரைக்கும் புத்தாக்கம் தந்திருக்கும் மேனாள் துணைவேந்தருக்கு நம் பாராட்டை மகிழ்வோடு தெரிவிப்போம்.

உரையரசியின் ஒரு நிமிடக் கதைக்கு நம் வாழ்த்துக்கள். காத்திருப்போம் எதிர்பார்ப்போம், இவரின் அடுத்தடுத்து வரும் படைப்புகளுக்காக.

                                                                             அன்புடன்

                                                                    கு.ஞானசம்பந்தன்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.