அஜந்தா ரகசியம்…

               சென்ற மே மாதத்தில் டில்லி மற்றும் புனே தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின்பேரில் நானும் என் துணைவியாரும் அங்கு சென்றுவிட்டு புனேயிலிருந்து ஷுரடிக்குப் போய் பாபாவையும் தரிசித்துவிட்டு எனது அன்பிற்குரிய தம்பி மகன் கணினிப் பொறியாளர் திருமிகு. ரவி மற்றும் அவர்கள் குடும்பத்தாரோடு எல்லோரா, மற்றும் அஜந்தா போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.

               சிவகாமியின் சபதம்’ நாவலை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது படிக்கத் தொடங்கி, இன்றுவரை படித்து வருகிறேன். அதில் கதாநாயகியாகிய சிவகாமியின் தந்தையான ஆயனசிற்பி அஜந்தா ஓவியங்களின் வர்ண ரகசியத்தை அறிந்துகொள்ள அந்த நாவல் முழுவதும் முயற்சிப்பார். மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், அவர்களின் தளபதி பரஞ்சோதியார் (பிற்காலத்தில் இவர்தான் 63நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர்) ஆகியோர் மூலமெல்லாம் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முயன்று கொண்டே இருப்பார். அந்த நாவலைப் படிக்கின்ற நாமும் அஜந்தாவைப் பார்க்க வேண்டும், அந்த வர்ண ஓவியங்களின் ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தோம். தொடர்ந்து படித்தோம். இம்முறை அங்குசென்று எல்லோராவை பார்த்தபோது மலைக்குகையைக் குடைந்து கட்டப்பட்ட அந்த சிவன்கோவிலும் சமணக்கோவில்களும் எங்களை வியப்பில் ஆழ்த்தின.

               அஜந்தாவில் நாங்கள் அந்தக் குகைகளுக்குள் பயணித்தபோது அந்த ஓவியங்களின் அழகும் புத்தரின் பன்முக முத்திரைகளுடன் கூடிய வடிவங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அந்த மலைக்குகைகளில் தீட்டப்பட்ட அந்த வர்ண ஓவியங்கள் இன்னும் நிறம் மங்காமல் இருக்கக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆயனசிற்பி போல நானும் யோசித்து அங்கிருந்த சிலரைக் கேட்டபோது, அந்தந்த வண்ணப் பளிங்குக் கற்களை அதாவது சிவப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கறுப்பு போன்ற வண்ணக்கலவைக் கற்களை மாவுபோல பொடித்து அவற்றோடு மூலிகைச்சாறுகளைச் சேர்த்து அந்த ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதால்தான் இன்றைக்கும் அவை அப்படியே இருக்கின்றனவாம்.

               மலைகளைக் குடைந்து கட்டப்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. இனி அஜந்தா எல்லோரா பற்றி விரிவாகக் காண்போம்…

எல்லோரா குகைக்கோயில்:-

               கி.பி.5ஆம் நூற்றாண்டில் சரநந்திரி மலையில் 30க்கும் மேற்பட்ட குகைகள் வெட்டப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் எல்லோரா குகையினுள் இருக்கும் கைலாசா கோயில்’ தான் உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும்.

               இந்த எல்லோரா சிற்பங்கள் ராஸ்டிரகூடர் மற்றும் யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

               இந்திய குடவரைக் கோயில் கட்டிடக்கலையின் உச்சமாக எல்லோரா குகைகள் திகழ்கின்றன என்றே சொல்லலாம்.

               சரணாந்த்ரி மலையில் மொத்தம் 34எல்லோரா குகை குடைவரை கோயில்கள் இருக்கின்றன. இவற்றில் 17ஹிந்து கோயில்களும், 12பௌத்த கோயில்களும், 5ஜைன கோயில்களும் இருக்கின்றன. அருகருகே வெவ்வேறு மத கோயில்கள் இருப்பது அக்காலத்தில் நிலவிய மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

               இந்த கோயில்கள் 6 – 9ஆம் நூற்றாண்டிற்குள் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கலாச்சுரி, சாளுக்கியர், ராஸ்டிரகூடர் போன்ற அரசவம்சங்களின் கீழ் எல்லோரா குகைகள் இருந்திருக்கின்றன.

               எல்லோரா குகைக்கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் கைலாசநாதா கோயில்தான் உலகிலேயே ஒரே கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோயிலாகும். இக்கோவிலுனுள் மிகப்பெரிய சுவர்ச்சிற்பங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அஜந்தா குகைக்கோயில்:-

               இக்கோவிலும் மகாராஷ்டிராவில் உள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினர் உலக பாரம்பரிய தளமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அஜந்தா பாறை வெட்டுக் குகைகள் கி.மு.2ஆம் நூற்றாண்டிலிருந்து உருவாக்கத் தொடங்கியது.

               தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் மலைக்குகையில்  அமைந்துள்ள சமணப்பள்ளிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்தும் நான் வியந்துபோனேன். இந்த வண்ணங்கள் எங்கிருந்து கிடைத்தன? என்று நான்  கேட்டபோது, அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் எனக்கு அந்த அதிசயத்தைக் காண்பித்தார். அவனை நான் தொடர்ந்து செல்கிறேன்… அந்த ரகசியம்… நான் தொடர்ந்து சொல்கிறேன்….

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.