ரஹமத் – இறையருள் பெற்ற பள்ளி

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியங்கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

–        மகாகவி பாரதியார்.

வணக்கத்திற்குரிய திரு.எம்..முஸ்தபா அவர்கள் திருவும் தௌ;ளிய அறிவும் மனிதநேயமும் மாண்பும் கொண்ட பெருமகனார். முத்துப்பேட்டையில் பிறந்து சிங்கப்பூரில் வணிகத்தால், தன் உழைப்பால் முன்னேறிய நல்லறிஞர்

மில்லினியம் ஆண்டுத் தொடங்கியபிறகு 2001ஆம் ஆண்டு நான் மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்து சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தில் பேசுவதற்கு என்னை அழைத்தார் திரு.முஸ்தபா அவர்கள். அவரை முதன்முதலில் சந்தித்தபோதே மகிழ்ந்து போனேன், அவரது அன்பால் நெகிழ்ந்து போனேன்.

அவருடைய தோற்றம் என்னை வியக்கவைத்தது, வணங்கவைத்தது. சிவந்தமேனி, தூயவெண்ணிறஆடை, சிரித்தமுகம், நட்பை வெளிப்படுத்தும் கண்கள் இவைதான் திரு.முஸ்தபா என்னும் நல்மனிதர். எவருக்கும் அவரைக் கண்டவுடன் நட்புக்கொள்ளத் தோன்றும் தோற்றத்தை இறைவன் அவருக்கு அளித்திருக்கிறான். என்றும் அவர் இத்தகைய பொலிவோடு வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

அன்றைக்கு அவருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பானது இன்றும் இனிமையாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே எனக்குக் கிடைத்த பெருமை.

 2002ஆம் ஆண்டில் எங்களது பட்டிமன்றக் குழுவினரைச் சிங்கப்பூருக்கு அழைத்து அவர் நடத்திய நிகழ்ச்சியில் பேசவைத்ததோடு பட்டிமன்றத்தில் பேசிய அத்தனை பெருமக்களுக்கும் பொன்னாபரணத்தைச் சூட்டி மகிழ்ந்த பெருமகனார் ஐயா முஸ்தபா அவர்கள்.

வந்த நாடான சிங்கப்பூரில் தன் தொழில் திறமையால் பெயர் பெற்றதோடு, தமிழ் சார்ந்த எந்த நிகழ்வுக்கும் பொருளுதவி செய்து அதனால் அகமகிழும் அன்பிற்கினியவர் இவர்.

சரி, சொந்த நாட்டில் சொந்த ஊரில் இவரின் சாதனைகள் என்ன? என்றால், எத்தனையோ இருக்கலாம். அவற்றில் பதச்சோறாக இதோ ஒன்று.

இன்று வெள்ளிவிழாக் காணுகின்ற ரஹமத் பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிதான்இப்பள்ளியை இவர் தன் தாயாரது பெயரில் தொடங்கியிருப்பதிலிருந்தே தாயின் மீது இவர் கொண்டிருக்கக்கூடிய பற்றும் பெண்களுக்கென ஒரு பள்ளி அமையவேண்டுமென்ற இவரது பெருவிருப்பமும் கனவும் மெய்ப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்பள்ளியால் பள்ளியின் முதல்வரால் ஆசிரியப் பெருமக்களால் மாணவச் செல்வங்களால் இப்பள்ளியின்  பெருமை எங்கும் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.

கல்வி இல்லாத பெண் களர்நிலம்,

அங்கு புல் விளையலாம்,

புதல்வர்கள் விளையக்கூடாது

என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கு ஏற்ப, பெண்களின் நல்லறிவை சுடர்விடச் செய்யும் முயற்சிதான் முத்துப்பேட்டை ரஹமத் மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்பது உண்மை.

முத்துப்பேட்டையில், பசுஞ்சோலைகளுக்கு நடுவே அமைந்திருக்கிற இப்பள்ளி பூக்களாலும், பூவையராலும் பெருமை பெறுகிறது. இப்பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு நான் இருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை தனிப்பொழிவிற்கும், மற்றொருமுறை பட்டிமன்றத்திற்கும் என்னை அழைத்திருந்தார்கள்.

அத்தகைய நிகழ்வுகளின்போது அப்பள்ளி மாணவியரின் பன்முகத்திறமையை (பேச்சு, கவிதை, ஆடல், பாடல்கள், நாடகம், நுண்கலைகள்) மேடையில் கண்டு நான் வியந்திருக்கிறேன், மகிழ்ந்திருக்கிறேன்.

இப்பள்ளியில் சிறப்பாய் அமைந்திருக்கும் பள்ளிவாசல் இங்கு பயிலும் மாணவியரின்; தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது என்பது இன்னும் ஒரு தனிப்பெருமை. கற்றலின் பயன்களில் ஒன்று கடவுளின் பெருமையை அறிதலும்தானே.

இத்தௌ;ளிய நோக்கத்தோடு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அனைத்து மத மாணவியரின் அறிவு வளர்ச்சி என இடையறாது முயன்றுவரும் இப்பள்ளியின் பெருமை தமிழகத்தின் வரலாற்றில், ஏன் இந்தியாவின் வரலாற்றில் ஒருநாள் நிச்சயம் இடம்பெறும்.

இப்பள்ளி இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் அழகே அழகு.

இப்பள்ளியில் பாடங்களைக் கற்பித்தலோடு ஆண்டுதோறும் அறிவார்ந்த பெருமக்களை, பன்முகத் திறன்கொண்ட நல்லறிஞர்களை, அறிவியலாளர்களை, ஆன்மீகப் பெரியோர்களை அழைத்துவந்து இங்குள்ள மாணவியருக்கு அறிமுகம் செய்விக்கும் செயல்பாடுகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

இத்தகைய சிறப்புமிக்க ரஹமத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நம் பிள்ளைகளும் பயிலவேண்டுமென்று சுற்றுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மதத்தைச் சார்ந்த பெற்றோர்களும் விரும்புகிறார்களென்றால் அதுதான் இப்பள்ளிக்குக் கிடைத்த வெற்றி. தன் தாயாரின் பெயரில் பள்ளியை நடத்தும் தாளாளர் தமிழன்பர், தருமசீலர், தனவணிகர் ஐயா முஸ்தபா அவர்களுக்கு கிடைத்திருக்கும் பெருமை.

வெள்ளிவிழா இன்று இப்பள்ளி விழா. இனி இதனைத் தொடர்ந்து வருகின்ற பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டு விழா என அனைத்து விழாக்களையும் காண இருக்கின்ற இப்பள்ளியின் வளர்ச்சிக்கு இறைவனின் தனிப்பெருங்கருணை, அருட்பார்வை எப்போதும் துணைநிற்கும்.

இப்பள்ளி வருங்காலங்களில் கல்லூரிகளாகப், பல்கலைக்கழகமாக மாறுகின்ற காலம் நம் கண்ணுக்குத் தெரிகின்றது. இத்தகைய கல்வி வளாகத்தின் வேந்தராக நமது அன்பிற்குரிய ஐயா முஸ்தபா அவர்கள் திகழ்வார் என்பதும் உண்மை.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

பயன்மரம் உள்;ர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்

எனும் வள்ளுவரின் கருத்திற்கேற்ப ஊருக்கு நடுவே அமைந்த நன்னீர்ப்பொய்கை போன்றும், சுவைமிகுந்த கனிவளர் மரம் போன்றும், இப்பள்ளியும் திரு.முஸ்தபா அவர்கள் தேடிய செல்வத்தால், நல்லறிவால் பயன்பெற்றுக் கொண்டிருப்பது ஊருக்கு, பாருக்குக் கிடைத்த நன்மை.

தொடரட்டும் இப்பள்ளியின் கல்விச் சாதனை. வளரட்டும் இப்பள்ளியை நிறுவிய பெருமகனாரின் செல்வமும், புகழும்.

                                                                             வாழ்த்துக்களுடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.