மாணிக்கத்தமிழ் இலக்கணம்…

தாமிரபரணித் தண்ணீரும் நெல்லைச் சீமையின் இன்தமிழும் நாவிற்கு இனிமையானவை. இன்பத்தேனாறு வந்து காதில் பாய்வதைப் போல நெல்லைத் தமிழ் செவிக்கு இனிமையைத் தரும். தமிழ்த் தாத்தா .வே.சா. அவர்கள் கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் விடுபட்ட மலர்களைத் தேடி எடுத்ததும் இம்மாவட்டத்தில்தானே! மகாகவி பாரதியும், கப்பலோட்டிய தமிழன் ..சிதம்பரனாரும் கல்வி பயின்றது இத்திருநெல்வேலியின்தான். இத்தகைய பழமையும் பெருமையும் மிக்க இத்திருநெல்வேலியில்; நற்றமிழறிஞர்கள் பலர் ஆய்வுலகிலும், படைப்புலகிலும்; இன்றைக்கும் தமிழைப் போற்றி வளர்த்து வருகின்றனர் என்பது உண்மை.

          இவ்வறிவுலகத் தொடர்ச்சியின் ஒரு கண்ணியாய், பைந்தமிழ் மாலையில் ஒரு நறுமலராய் மலர்ந்திருப்பதுநடைமுறைத்தமிழ் இலக்கணம் எனும் இந்நூல் ஒரு நன்னூல்’. இந்நூலினை நமக்கு ஆய்ந்து தந்திருப்பவர் பாளையங்கோட்டைத் தூய யோவான் கல்லூhயில் பல்லாண்டு காலம் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் முனைவர் வே.மாணிக்கம் அவர்கள் ஆவார். இப்பெருமகனார் வீரபாண்டிய கட்டபொம்மன் அவரது தம்பி ஊமைத்துரை ஆகியோரது வரலாற்றை கள ஆய்வாக ஆய்வுப்பணி  செய்து உலகிற்குத் தந்தவர்மேடைப்பேச்சில் வல்லவர். தமிழ்மொழியைத் தமிழராய் பிறந்த அனைவரும் முறையாகப் பேசவேண்டும், பிழையின்றி எழுத வேண்டும் எனும் அவாவினால் அல்லும் பகலும் அரும்பணியாற்றி வருபவர்.

          நெல்லைப் பகுதியில், தமிழ்மொழிப் பயிற்சி மையம் என்ற அமைப்பின் மூலம் பல்லாண்டு காலமாக தமிழ்மொழியில் பிழைநீக்கி எழுதும் பயிற்சியை அளித்து வருபவர். உள்;ர் தொலைக்காட்சியிலும் பல்லோரும் அறிய நேரலையாக இதனைப் பாடமாகவும் நடத்தியவர். அவ்வாறு பாடம் நடத்துவதற்காகப் பெருமுயற்சியோடு தயாரிக்கப்பட்ட குறிப்புக்களை நூல் வடிவில் நடைமுறைத்தமிழ் இலக்கணம் எனும் பெயரோடு ஆக்கித்தந்த பெருமையும் இவருக்கு உண்டு.

இந்நூல்,

1)வல்லெழுத்து மிகுதல் மிகாமை,

2)ஒருமை பன்மை,

3)குழப்பம் தரும் சொற்கள்,

4)தொடர்களில் சொற்பயன்பாடு,

5)நிறுத்தக்குறிகள்,

6)பிரித்தெழுதுதல் சேர்த்தெழுதுதல்,

7)இலக்கணம்

 எனும் ஏழு தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கிறதுஒவ்வொரு தலைப்பிலும் தமிழ் மொழியை முறையாகக் கல்லாதாரும் கற்றுத்தேறும் வண்ணம்; எளிய எடுத்துக்காட்டுகளோடு நூலினை ஆசிரியர் தந்திருப்பது போற்றுதற்குரியது.

சான்றாக, அன்றாடம் நம் வாழ்வில் பயிலும் சொற்களை எடுத்து வைத்துக்கொண்டு அச்சொற்களில் வல்லெழுத்துக்கள் எவ்வாறு, தோன்றல், திரிதல், கெடுதல் எனும் விதிகளுக்கேற்ப வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிச் சொல்வது சிறப்புடையதாய் அமைகிறது.

திரு குறள் ஸ்ரீ திருக்குறள் (க்) தோன்றல் (வல்லெழுத்தாகியக்உண்டாதல்)

நெல் பயிர் ஸ்ரீ நெற்பயிர் (ல், ற்) திரிதல் (ல், ற் ஆக திரிந்து வருவது)

வடக்கு கிழக்குஸ்ரீ வடகிழக்கு (க்கு) கெடுதல்  (க், கு எனும் வல்லெழுத்து மறைந்து போதல்

எனத் தொடங்கி,

பட்டு சேலை வல்லெழுத்தாகிய சகரம் (ச்) வராவிட்டால் பட்டும் சேலையும் என்று ஆகி விடும்.

பட்டுச்சேலை என்றால் பட்டினால் ஆகிய சேலை எனச் சரியாகப் பொருள்படும்.

மருந்து கடை இதில்க்எனும் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் மருந்தை மோர், கீரை கடைவது போலக் கடை என்பது பொருள்.

மருந்துக்கடை என்றால் மருந்தினை விற்கும் கடை என எடுத்துக்காட்டுவதோடு , ஆல், கு, இன், அது, கண் என வேற்றுமைத் தொடரில் மிகும் இடங்களையும், மிகா இடங்களையும் அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டுவதோடு பட்டியல்கள் போட்டு கற்போரை பண்படுத்துகிறார் பேராசிரியர். மாணிக்கம்.

இனி, ஒருமை பன்மை மயக்கம் என்பதை விளக்க வரும் போது திணை, பால், எண், இடம் எனும் நான்கும்தான் ஒரு தொடரினைச் சரியாக முற்றுப்பெறச் செய்யும் பகுதிகள் எனச் சுட்டிக்காட்டி, ஒரு தொடரில் ஒரு பொருள் ஒருமையாக உயர்திணையில் இருந்தால் வினைமுடிவும் ஒருமையில் ஆண்பாலில்தான் முடியும், பன்மையாக இருந்தால் பன்மையாக முடியும். இவை உயர்திணை.

இவையே அஃறிணையாக இருந்தால் அதற்கேற்ற ஒருமை, பன்மைகளில் முடியும்;. சான்றாக,

அவன் பள்ளிக்குச் சென்றான் (ஒருமை உயர்திணை)

மகளிர் வேண்டுகோள் விடுத்தனர் (பன்மை உயர்திணை)

அது வந்தது (ஒருமை அஃறிணை)

அவை வந்தன (பன்மை அஃறிணை)

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதேஎனும் புகழ்பெற்ற திரைப்பட பாடலில் கூட ஒவ்வொரு பூவுமே எனத்தான் இருந்திருக்க வேண்டும். இசை நோக்கி அவர்கள்  அதை மாற்றியிருக்கலாம்.

          இவ்வாறு எடுத்துக்காட்டுகள் கூறுவதோடு சில குறிப்புகளும் தருகின்றார் ஆசிரியர். ‘தமிழ்மொழியில் ஒருமை, பன்மை மிக எளிமையானது. அது ஒரு ஒழுங்குமுறையைக் கொண்டது. அறிவியல் தன்மை கொண்டது. இதனை உணராத வானொலி, தொலைக்காட்சி, மேடைத் தொகுப்பாளர்கள் மனம் போன போக்கில் ஒருமை பன்மை மயக்கங்களோடு பேசுவது தமிழுக்குச் செய்யும் தீங்குஎனவும் துணிவோடு சுட்டிக்காட்டுகிறார்.

          குழப்பம் தரும் சொற்கள் எனும் பகுதியில் மாணவ, மாணவியருக்கு,

          ணன, லளழ, ரற போன்ற எழுத்துக்களை பயன்படுத்தும்போது ஏற்படும் மயக்கங்களைச் சான்றுகளோடுத் தருகிறார்,

ஆணையாளரா? ஆனையாளரா?

கட்டடமா? கட்டிடமா?

சமையலா? சமயலா? எனக் கேள்வி கேட்பதோடு உச்சரிப்பு சரியாக இருந்தால் இப்பிழைகள் ஏற்படாது என்பதனையும் தொல்காப்பிய நூற்பா கொண்டு ஆசிரியர் விளக்குகிறார். இதை விளக்குவதற்காக ஒரு சொல்லினைக் கொடுத்து அதில் பிழையானது எது? சரியானது எது? என்பதையும்     விளக்கி காட்டுகிறார். சான்றாக,

இமையமலை () இமயமலை ().

          இனி, ணன, லளழ, ரற என ஒலி வேறுபடும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றை எங்ஙனம் உச்சரிக்க வேண்டும் என்பதனையும் விளக்கிச் சொல்லும் ஆசிரியரின் விரிவாக்கம் அவரின் கடும் உழைப்பிற்கு ஒரு பதச்சோறு.

          சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார். உயர்திணையை அஃறிணையாக சில பேர் எழுதிவிடுவார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்,

          எனது மகன்  (பிழை) என் மகன்   (சரி)

          திருவளர்ச் செல்வி  (பிழை) திருவளர் செல்வன்  (சரி).

          நிகழும் மங்களகரமான  (பிழை) நிகழும் மங்கலகரமான  (சரி).

இனிவரும் தொடர்களில் சொற்பயன்பாடு எனம் பகுதியில் தமிழில் தொடர்கள் எழுவாய், செயற்படுபொருள், பயனிலை எனவே அமையும் என்பதை,

கண்ணன்               பாடம்                          படித்தான்

எழுவாய்              செயப்படுபொருள்                 பயனிலை

எனச் சுட்டிக்காட்டிவிட்டு ஆங்கில மொழியில் இவ்வாறு அமையாமல் எவ்வாறு அமையும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

 இதேபோல் மரபுச்சொற்களை மாற்றினால் நகைப்பிற்கு இடமாகும் என்பதனை இத்தாலி நாட்டிலே பிறந்து இந்தியாவிற்கு வந்து தமிழ்கற்ற வீரமாமுனிவர் ஒரு கூட்டத்தில் பேசும்போதுகோழி தன் குட்டிகளை பாதுகாப்பது போலஎன ஒரு உவமையைச் சொல்ல அனைவரும் சிரித்தனராம். காரணம் கோழிக்குஞ்சுகள் என்றுதான் நாம் பயன்படுத்துவோம்;. இதனை அறிந்துகொண்ட வீரமாமுனிவர் தமிழ்மொழியின் நுட்பத்தை அறிந்து வியந்து போனாராம். பொருத்தமான வினை முடிவுகள், மரபுவினை, துணைவினைகள் என ஒவ்வொன்றிற்கும் ஆசிரியர் தரும் எடுத்துக்காட்டுகள் அரிய பொக்கிஷங்கள்.

இனி, பேசும்போதும், எழுதும்போதும் சொற்களைப் பயன்படுத்துவதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் எழுதும்போது நிறுத்தக்குறிகளை (. ,) பயன்படுத்தும் முறைகளையும் தக்க சான்றுகளுடன் கற்றுத்தருகிறார்.

தமிழ்ச்சொற்களைப் பிரித்தெழுதும்போதும், சேர்த்தெழுதும்போதும் ஏற்படும் நுட்பமான வேறுபாடுகளையும், பொருள் மாறுபடுகளையும் சுட்டிக்காட்டி அதனால் ஏற்படும் குழப்பங்களை எடுத்துரைக்கிறார் ஆசிரியர். இதுமட்டுமல்லாமல்  சொற்களைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு நூலாசிரியர் தரும் பட்டியல் நினைவு கொள்ளத்தக்கது.

முடிவில் நால்வகைச் சொற்கள், பெயர்ச்சொல், வினைச்சொல், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம், தொடர், இருவகைத் தொடர், வேற்றுமை, குற்றியலுகரம் என இலக்கண நூல்களில் கூறப்படுகின்ற செய்திகளை அனைவரும் கற்குமாறும் புரிந்துகொள்ளுமாறும் எடுத்துக்காட்டி விளக்கி இருக்கும் இந்நூலாசிரியர் பேராசிரியர் வே.மாணிக்கனார் அவர்களுக்கு நம் உளமார்ந்த நன்றியினை சொல்லிக் கொள்வோம்.

நல்ல தமிழ் பேசுவும், பிழையின்றி எழுதவும் நம் தமிழை நாம் அறிந்து கொள்ளவும் இந்நூல் எல்லா வகையிலும் பயன்படும் என்பது,

            ‘உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் என அத்தனை படி நிலைகளிலும் மாணாக்கர் கற்றுணர்வதற்கு இந்நூலினைத் தமிழ்நாடு அரசு பாடத்திட்டக்குழுவினர் மாணவருக்கான பாடத்திட்டங்களில் சேர்த்தால் நலம்பயக்கும். அது தமிழுக்கும் பெருமை.

உண்மையில் இந்நூல் மாணிக்கத்தமிழ் என்பதில் ஐயமில்லை.

                                                                      அன்புடன்

                                                                   கு.ஞானசம்பந்தன்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.