பாரதியும்…சாரதியும்…

ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் நீண்ட நெடிய கவிதை வரிகளைக் கொண்டவை.

          அடுத்து வந்த நீதி இலக்கிய காலத்தில், பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் இந்த வடிவம் மாறியது.

அந்நூல்களில் நான்கு வரிகளைக் கொண்ட வெண்பா வடிவம் தோன்ற அவ்வெண்பாவிலும் பாதியாய் இரண்டடிகளில் (ஏழு சீர்களில்) திருக்குறளைப் பாடிய வள்ளுவப் பேராசானின் முயற்சி அந்த நூற்றாண்டுகளின் ஹைக்கூ கவிதைகளாக இருக்கலாமோ? என்ற எண்ணம் எனக்குத் தோன்றும்.

          இந்த ஹைக்கூ கவிதைவடிவம் ஜப்பானியரின் கொடை என்பதை யாவரும் அறிவோம். அவர்களின் போன்சாய் (டீழளெயi) மரம் போல தொட்டிக்குள்ளிருக்கும் ஆலமரம்தான் ஹைக்கூ. ‘அரிசியில் சிற்பம் செதுக்குவதைப் போலவார்த்தைகளைச் சுருக்கி நுண்ணிய வடிவத்தில் ஆகாயத்தை ஆலம் விதைக்குள் அடைக்கும் முயற்சியே இக்கவிதை வடிவம்.

          1916இல் பாரதி தொடங்கி வைத்த இக்கவிதை முயற்சிக்குமீன்கள் உறங்கும் குளம்எனும் தன் ஹைக்கூ நூலின் கவிதை வரிகளால் மகுடம் சூட்டியிருக்கிறார் இந்த சாரதி (பிருந்தா சாரதி).

          ‘மீன்கள் உறங்கும் குளம்இக்கவிதை தலைப்பே ஆயிரம் சிந்தனைக்கு வித்திடுகிறது. அமைதி நிறைந்த ஆகாயம் என்னும் குளத்தில் விண்மீன்கள் உறங்குகின்றனவா? அல்லது உண்மையில் குளத்தில் மீன்கள் உறங்கத்தான் செய்யுமா? கம்பன் தன் இராமாயணத்தில் நாட்டுப்படலம் பகுதியில் உறங்குகின்ற உயிர்களைப் பற்றி ஒரு பட்டியல் தருகின்றான்.

          நீரிடை உறங்கும் சங்கம்;; நிழலிடை உறங்கும்  மேதி

          தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்

          தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி

          போரிடை உறங்கும் அன்னம்; பொழிலிடை உறங்கும் தோகை

          சங்குப் பூச்சிகள் நீரில் உறங்க, எருமைகள்  நிழலில் உறங்க, பூமாலையில் வண்டுகள் உறங்க, தாமரை மலரில் திருமகள் உறங்கசேற்றிலே ஆமை உறங்க, படித்துறையில் சிப்பிகள் உறங்க, வைக்கோல் போரிலே அன்னங்கள் உறங்க, மயில்கள் சோலைகளில் உறங்கிற்றாம். நம் கவிஞர் தம் கவிதை வரிகளில் நம்மையே கி()றங்க வைக்கிறார்.

          ஒற்றைக் கண்ணால் உற்றுப் பார்க்கும் தெருவிளக்கும்

          நாவல் மரத்திற்கு பூங்கொத்தை நீட்டுகின்ற கொன்றை மரமும்

          பழுத்த இலையின் நதிநீர் பயணமும்

          ஹைக்கூவாய் கூவும் குயிலின் குரலும்

          விழித்திருந்து வழிநடத்தும் லாந்தர் விளக்கும்

என்ன அற்புதம்! நம்மையே கவிதை ஓவியத்தை வரையத் தூண்டும் தூரிகைகள் இவை.

          விண்ணிலிருந்து இறங்கி மண்ணைத் தொட வந்த மழைத்துளி நடுவே இலையில் தவிப்பதை எங்ஙனம் உணர்ந்தார் கவிஞர்? என்ன உணர்த்த வருகிறார்? சில இலக்குகள் குறிக்கோளை அடையாமல் தத்தளித்துத் தவிப்பதையா?

          உலகிற்கே பொதுவான காற்று எல்லா நாட்டுக்கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எனும் பொதுவுடைமை சிந்தனையும்,

                   ‘பாகனின் மகனுக்கும்

                    பணிகிறது

                    கோயில் யானைஎனும் வரிகளில் பரம்பரை அடிமைத்தனத்தின் அங்கதமும்,

          வேப்பம்பூ கோலத்தைக் கலைத்து விடும் காற்றின் விளையாட்டுக் குணமும்

          பூத்துக் காய்த்துக் கனியும் மயானத்து மரம் குறித்த தத்துவமும்

          குழந்தையாய்ச் சிரிக்கும் பாட்டியும்

          ஊன்றுகோல் ஊன்றி நடிக்கும் பேத்தியும், ஹைக்கூ கவிதைகளுக்கே உரிய நகைமுரண்.

          கண்ணதாசனின் கவிதை நயமும், வண்ணதாசனின் வார்த்தை மௌனங்களும், பிருந்தாசாரதியின் கவிதைக்குள் ஒளிந்தும், மறைந்தும் சற்றேத் தலை நீட்டியும் திடீரென்று ஓடிவந்து பயமுறுத்தும்; குழந்தை போல நம்மை மகிழவைக்கிறது, நெகிழ வைக்கிறது.

          சாரதியின் கவிதைத் தேர் ஒற்றைச் சக்கரத்தையும், ஏழு குதிரைகளையும் உடைய கதிரவனின் தேர் போல உலகை வலம் வரட்டும்தமிழ் இவரால் நலம் பெறட்டும்.

                                                                                                அன்புடன்

                                                                       பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.