நெஞ்சுக்கு நேர்மை….இவரின் எழுத்து ஆயுதஎழுத்து
சில ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் சிறைத்துறையில் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியை நடத்திக்கொடுக்க நான் சென்றிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அன்றைய விழாவிற்கு தலைமையேற்ற பெருமகனார் தமிழகத்தின் புகழ்பெற்ற தலைமை உயர் அதிகாரியாக (IPS) இருந்த டாக்டர்.திரு.ஆர்.நடராஜன் அவர்கள் என்பதே அச்செய்தி. அப்பெருமகனாரைப் பற்றி நான் பெரிதும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எழுத்துக்களை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அதைக்காட்டிலும் எனக்கு மகிழ்ச்சி என்ன தெரியுமா? இவர் தந்தையாருக்கும் நான் ரசிகன் என்பதுதான்.
நான் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிற காலத்தில் ஆனந்தவிகடன் பத்திரிக்கையின் தீவிர வாசகன். ஆனந்தவிகடன் மட்டுமல்லாமல் குமுதம், கல்கி, கலைமகள், மஞ்சரி என எல்லா வாரப்பத்திரிக்கைகளையும் கைக்கு வந்தவுடன் படித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். அப்படி இருந்த என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர் திரு.உமா சந்திரன் அவர்கள். இவர் கல்கியில் எழுதிய ‘முள்ளும் மலரும்’ எனும் நாவல் அக்காலத்திலேயே முதற்பரிசான ரூபாய் பத்தாயிரத்தைப் பெற்ற நாவல். இவரின் ‘முழுநிலா’ என்ற நாவல் ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. அதில் வருகின்ற முக்கியப் பாத்திரமான ‘உப்பிலி’ என் பால்யகால நண்பன் என்றே சொல்லலாம். அதிலும் கோபுலுவின் ஓவியங்களோடு அந்த நாவலை இப்போதும் நினைத்துப் பார்த்தாலும் நான் அந்தக் காலங்களுக்கேச் சென்றுவிடுவது வழக்கம். அத்தகைய நாவலை எழுதிய திரு.உமாசந்திரன் அவர்களின் அருமை மகன்தான் திரு. ஆர்.நடராஜன் அவர்கள்.
நான் அவர்களை நேருக்கு நேர் சந்தித்தவுடன் அவரது தந்தையாரைப் பற்றி அவரிடத்தில் சொல்லி மகிழ, அவரும் மிக மகிழ்வோடு கேட்டுக்கொண்டு அன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கியது மட்டுமல்லாமல் மிகச்சிறப்பாக சிறப்புரையையும் அவர் நிகழ்த்தினார். அதன் பின்னர் நான் தலைமை தாங்கிய பட்டிமன்றம் முழுவதையும் விரும்பிக்கேட்டு எனக்குப் பெருமை சேர்த்தார். அந்தப் பட்டிமன்றத்தில் ஒரு ஆச்சரியம். நான் நடுவர் மட்டுமே. அணியில் பேசிய அத்தனை பேரும் அங்கிருந்த கைதிகள்தான். இந்த நினைவுகளோடு திரு.ஆர்.நடராஜன் அவர்களின் ‘நெஞ்சுக்கு நேர்மை’ எனும் நூலுக்கான வாழ்த்துரையைத் தொடங்குகிறேன்.
திரு.ஆர்.நடராஜன் அவர்கள் தான் செய்யும் பணியில் நேர்மையைக் கடைபிடிப்பது போலத் தன் எழுத்திலும் ஒழுக்கத்தையையும், மேன்மையையும் வலியுறுத்தும் பண்பாளர் என்பதை இந்நூலைக் கற்கும் எவரும் அறிந்து கொள்ளலாம். தினமணி, தினத்தந்தி, தினமலர் போன்ற பல்வேறு ஊடகங்களில் வெளியான கட்டுரைக்கனிகளின் தொகுப்பு இந்நூல். 35 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் சொல்லுகிற செய்திகள் ஆயிரம் ஆயிரம்.
சான்றாக, ‘பெண்ணே, நீ தலை வணங்காய்’ எனும் கட்டுரையில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டி இந்நிலைக்கு மாற்று என்ன? என்பதையும் அவர் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக அவர் வரிகளிலே சொல்வதாக இருந்தால், ‘திருமண வைபவங்களில், நம்பிக்கை அடிப்படையில் நடைபெறும் பழக்கவழக்கங்களைக் கொச்சைப்படுத்தாமல் வரதட்சணை கேட்டல், சொத்துப்பிரித்துக் கொடுக்க மறுத்தல், புகுந்தவீட்டில் பெண்ணை கொடுமைபடுத்துதல் போன்றவற்றை எதிர்த்துப் பெண்கள் போராட வர வேண்டும்’ என அவர் அனைவரையும் அழைப்பது போர் அறைகூவலாகவே நமக்குத் தோன்றுகிறது.
பெண்களுக்கான கடமையைச் சொல்வதோடு, ஆண்கள் கடைபிடிக்கவேண்டிய நெறிகளையும் இந்நூலாசிரியர் வரைமுறைப்படுத்திக் கூறியிருப்பது அனைத்து ஆடவர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகும்.
‘தரமான நிலக்கடலை வேண்டுமா?’ பாளையங்கோட்டை சிறைச்சாலையில் பயிரிடப்படும் நிலக்கடலையவே வாங்குங்கள் என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு சிறைச்சாலைக்குள்ளேயும் வேளாண்மை நடைபெறுகிறது என்பதை ‘விளைநிலமாகும் சிறை வளாகங்கள்’ எனும் கட்டுரையில் நமக்கு ஒரு புதிய செய்தியைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அதிலும் சிறப்பாக சிறைக்கைதிகளைச் சொல்லும்போது அவர்களை ‘இல்லவாசிகள்’ என்று மனிதாபிமானத்தோடு குறிப்பிடுவது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பாடமாகும்.
சிறைச்சாலையில் சாதி பேதம் இல்லை, ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை, அங்கு சமஉரிமை, சமபந்தி, நல்லுறவு என்று பட்டியலிடுகின்ற ஆசிரியர் காந்தியடிகளின் மேற்கோளையும் கவனமாகக் காட்டுகிறார். ‘சிறைக்கைதிகள் அடிமைகள் அல்லர், நாட்டின் உடைமைகள்’.
இக்கட்டுரையில் பல்வேறு நாட்டின் சிறைச்சாலைகள், சட்டங்கள், அமைப்பு முறைகள் இவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு சிறைவாசிகளின் எண்ணிக்கை 4.12 லட்சம் என்றும் அதில் விசாரணைக்காகக் காத்திருப்பவர்கள் 2.78 லட்சம் என்றும் அவர் பட்டியலிட்டுக் கொண்டு வரும்போது, படிக்கும் நம் உள்ளம் பதைபதைக்கிறது. சிறையில் ஏற்படும் மரணங்கள் குறித்தும் இக்கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டுகிறார். இத்தோடு டெல்லி திகார் ஜெயில்தான் அதிகமான பொருள்களை உற்பத்தி செய்கின்றன என்று கூறி 2013ஆம் ஆண்டு அச்சிறையின் மூலம் கிடைத்த வருமானம் 2792.9 லட்சம் என அவர் குறிப்பிடும்போது நமக்கு வியப்பால் மயக்கமே ஏற்படுகிறது.
‘சட்டத்தின் பிடியில் சிறார்கள்’ எனும் கட்டுரை குற்றவாளிச் சிறுவர்களின் நிலைபற்றி எடுத்துரைக்கிறது. சிறுவர், சிறுமியரை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தும் வக்கிர குணமுடையவர்கள் எங்ஙனம் தண்டிக்கப்படவேண்டும் என்பதை இக்கட்டுரை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. ‘நிர்பயா’ வழக்கு பற்றி இவர் விளக்கும் செய்திகள் ஊடகங்களால் கூட எடுத்துரைக்க முடியாதவை.
குற்றம் இழைக்கும் சிறார்களை சிறைச்சாலையில் வைக்காது சட்ட மாற்றங்களால் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதைச் சொல்வதோடு அவர்கள் குற்றம் புரிகிறார் என்றால் அதற்கு இந்தச் சமுதாயம்தானே காரணம் என ஆசிரியர் கேள்வி சாட்டையை சொடுக்கும்போது நமக்கு அவரின் அறச்சீற்றம் புரிகிறது.
‘சாலை வழிச் சீற்றங்கள்’ எனும் கட்டுரை ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் படிக்கவேண்டிய பகுதி. காரணம் சாலையில் செல்லும் பயணிகளை வழிமறிக்கிறது காவல்துறை. இப்போது இருபுறமும் ஏற்படுகிற வாக்குவாதமும், சில நேரங்களில் கைகலப்பும், அத்துமீறிய செயல்களும் நடைபெறுகிறபோது, சிலர் அதைத் தங்களது அலைபேசியில் படமெடுத்து உலகம் முழுதும் பரப்பும்போது இரண்டு பக்கத்தாரும் குறிப்பாக காவல்துறையைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அருமையாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். சில நேரங்களில் சட்டங்களை மீறும் பொதுமக்களை உயிரைப் பணயம் வைத்துத் தடுத்துநிறுத்தும் காவலர்கள் பாராட்டப்படுவதையும், அவருக்கு வெகுமதி தரப்படுவதையும் ஆசிரியர் சான்றுகளோடு எடுத்துக்காட்டுகிறார். இக்கட்டுரையில் உலக நாடுகளின் காவலர்களின் நிலையை எடுத்துக்காட்டி நாமும் அவற்றிலுள்ள நல்லதைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி, ‘காவல் போற்றுதும், காவல் போற்றுதும்’ என்று சமுதாயம் போற்றட்டும் என ஆசிரியர் சொல்லும் யோசனையை போற்றுவோம்.
‘பயணம் நெடுந்தூரம்’ எனும் கட்டுரையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெருமையை விளக்கும் ஆசிரியர், ஊழலுக்கு எதிரான பயணம் நெடுந்தூரந்தான், அதில் நாம் ஓய்வின்றி, சலிப்பின்றி பயணப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டுகிறார்.
இன்னும் இவ்வரிய நூலில் ‘மதம் பிடித்த மதவாதம்’ ‘ஒரு தாய் மக்கள் நாம் என்போம்’ ‘பாதுகாப்பின்றி அமையாது வளர்ச்சி’ ‘விதியை மாற்ற புது விதிகள்’ என பல்வேறு தலைப்புகளில் நாம் இதுவரை படித்தறியாத பார்த்தறியாத செய்திகளை தன் அனுபவத்தின் வாயிலாகவும், தான் அறிந்த நூல்கள் மூலமாகவும் நமக்கு எடுத்துரைக்கும் ஆசிரியரின் இப்பணி பாராட்டுக்குரியது.
மேலும் சொல்வதானால் சில கட்டுரைகளுக்கு இவர் கொடுத்திருக்கும் தலைப்பே வியப்பாக இருக்கிறது. ‘கொடியாரை வேந்துறத்தல்’ ‘துப்பாய துப்பாக்கி’ எனும் குறட்பாவின் சொற்களும் ‘தீயா வேலை செய்யணும்’ ‘சூரசம்ஹாரம்’ என திரைப்படங்களின் பெயர்களையும், ‘கிலியூட்டும் சங்கிலித் திருடன்’ என கலகலப்பான பெயர் சூட்டலுமாக இந்நூல் முழுவதும் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரைகள் சங்கஇலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் கூறும் 99வகை மலர்களைப்போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால் இக்கட்டுரை மலர்கள் மணமும், தேனும், வண்ணமும் உள்ள மலர்கள் மட்டுமல்ல பல்வேறு சமுதாய நோய்களைப் போக்கும் மருத்துமலர்களும் ஆகும். இத்தகைய அருமருந்து மலர்களாகிய கட்டுரைகளைத் தொடுத்து நிறைவாக ‘நல்லதோர் வீணை செய்தே’ என பாரதியின் வரிகொண்டு நூலினை முடித்திருப்பது இந்நூலுக்கு மகுடம் சூட்டியிருப்பது போல் அமைகிறது.
புலிக்குப் பிறந்தது புலியாகத்தான் இருக்கும் என்பதற்கேற்பவும,; தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்னும் சொற்றொடரை உண்மைபடுத்தும் விதமாகவும் தமிழக மக்களின் மனங்கவர்ந்த எழுத்தாளர் திரு.உமா சந்திரன் அவர்களின் மைந்தரான திரு.நடராஜன் அவர்கள் தன் பணி அனுபவத்தின் மூலமும் எழுத்துப்பணியின் மூலமும் சிகரங்களைத் தொட்டு வருகிறார்.
காவல்துறையிலிருந்து அரசியல் துறைக்கு கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாலும், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்துகொண்டு ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனப் பம்பரமாய்ச் சுழன்றுவரும் ஆடல்வல்லானாகிய நடராஜரை பாராட்டுவோம், வாழ்த்துவோம், புகழ்ந்து போற்றுவோம்.
இவரின் எழுத்துப்பணி தமிழன்னைக்கு அணிகலன் மட்டுமில்லை தீயவரை அச்சுறுத்தும் வல்லாயுதமும் ஆகும்.
இவ்வகையில் இவர் எழுத்து ஓர் ஆயுதஎழுத்து என்றால் மிகையில்லை.
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்.