இராம (கிருஷ்ண) னின் பார்வையில் கம்பன்…

தமிழகத்தில் தமிழ்மொழி தழைத்தோங்கக் கல்வி ஆலயங்களும், தமிழ்ச்சான்றோர்களும் பக்கபலமாய்த் துணைநின்றனர். என்றாலும்கூட கம்பன் கழகங்கள்தான், எளிய மக்களிடமும் கம்பனின் மொழி மூலம் தமிழ்மொழியைக் கொண்டு சேர்த்தது, பரவச்செய்தது என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் குறிப்பாகக் காரைக்குடியில் கம்பன் கழகத்தை நிறுவிய கம்பன் அடிப்பொடி சா.கணேசன் போன்ற பெருமக்கள் தாம் வாழ்ந்த காலத்தில் காரைக்குடியில் கம்பன் கழகத்துக்குக் கால்கோள் செய்தார். அவர் தொடங்கி வைத்த கம்பன் கழகத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிறமாநிலங்களிலும், ஏன்? பிற நாடுகளிலும் கூட கிளைவிட்டு வளர்ந்து வருகிறது என்றால் அப்பெருமை அப்பெருமகனாரையேச் சாரும்.

          இதே போன்று சென்னைக் கம்பன் கழகமும், விழுப்புரம் கம்பன் கழகமும் பழமை மிகுந்தவையே. இவ்வகையில் செல்வச் செழிப்பால் வந்தாரை வாழவைக்கும் பெரும் திறத்தால் சிறப்புடைய நகரம் திருப்பூர். இத்திருப்பூர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கேத் துணை நிற்கிறது என்பதும் உண்மை. இப்பெருநகரத்தின் பெருமைகளில் ஒன்றுதான் திருப்பூர் கம்பன் கழகம். பத்தாம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இக்கம்பன் கழகத்தின் திறன்மிகு செயலர் நற்றமிழ் பேச்சாளர் தன் குடும்பத்தோடு விருந்தினரை வரவேற்று அறுசுவை விருந்தளிக்கும் ஆற்றலாளர் என் அருமை நண்பர் திரு.இராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளகம்பன் கற்றுத் தரும் வாழ்க்கைப்பாடம்எனும் பத்துக் கட்டுரைகளின் தொகுப்பினைப் படித்தேன், மகிழ்ந்தேன், வாழ்த்துகிறேன்.

          இனி அக்கட்டுரைக் கனிகளின் சுவையினைச் சற்றே சுவைப்போம்.

யார் இந்தக் கம்பன்?’ எனும் முதல் கட்டுரையில் கம்பரது வரலாற்றையும், கம்ப காப்பியத்தை அவர் எழுதத் தொடங்கிய முறையினையும் அரற்கேற்றத்தின்போது அவருக்கேற்பட்ட தடையினையும் அழகாய் விவரிக்கிறார் ஆசிரியர். குறிப்பாக, சடையப்ப வள்ளலின் பெருமையைக் கூறி அத்தகைய வள்ளல்களின் கொடைத் தன்மையால்தான் கம்பனைப் போன்ற கவிஞர்களும், இராமாயணம் போன்ற காவியங்களும் உலகுக்குக் கிடைத்தன என ஆசிரியர் மகிழ்ந்து கூறுகிறார். அத்தோடு செவிவழிக் கதைகளாகத் தான் கேட்ட செய்திகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அதில் திருப்பூர் அருகே மங்கலம் பகுதி நெசவாளர் குடும்பத்தில் நடக்கும் திருமண முறையினில் கம்பர் வாழ்த்துப்பா இன்றளவும் பாடப்படுவதற்கான காரணத்தை ஆசிரியர் சொல்வது படிப்போருக்கு வியப்பளிக்கும் ஒன்று.

எது பக்தி? எது ஆன்மீகம்?’ எனும் கட்டுரையில் கம்பனின் வரிகளோடு கூடிய அரிய கருத்துக்களை ஆசிரியர் எடுத்துரைப்பது பாராட்டுக்குரிய ஒன்று. சான்றாக,

தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன்கன்றை

ஆயும் அறியும் உலகின் தாய்ஆகின் ஐய!

எனும் வரிகளே ஒரு சோறு பதம்.

குகப்படலத்தில் குகன் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களைப் பார்த்த இராமன், அன்போடு கொண்டுவரும் இப்பொருட்கள் அமிர்தத்தை விட உயர்ந்தன எனப் பாராட்டுவது சிறப்பான ஒன்று.

இராமநாமத்தின் பெருமையை ஆசிரியர் வாலியின் வாயிலாகவும், வீடணின் வாயிலாகவும் சொல்லும்போது நாம் நெகிழ்ந்து போகிறோம். பக்தி என்பது ஆலய வழிபாட்டிலும் பூஜையிலும் இல்லை. தர்மத்தின் வழி நிற்கும் மனிதநேயத்தோடு கூடிய பக்திமானே சிறந்த ஆன்மீகவாதி எனும் ஆசிரியரின் கருத்து போற்றத்தக்கது.

விதியும் விளைவும்வென்று வாழவேஎனும் கட்டுரையில் விதி குறித்த ஆசிரியரின் விளக்கமும் காடு செல்லும் இராமன், இலக்குவனுக்கு விதியின் வலிமையைக் கூறுகின்ற இடமும் அழகான கம்பச் சித்திரங்கள்.

இதேபோல நாம் சிலநேரங்களில் சிலரைப் பிரியவேண்டி வருந்துகின்ற நிலை வந்தபோதும், அப்பிரிவும் பிரிந்தோர்க்குப் பெருமை சேர்க்கும் பிரிவு என்றால் அதனால் வருந்தலாகாது என்பதைத் தசரதன், இராமன்விஸ்வாமித்திரன், வசிட்டன் என நால்வரையும் கொண்டு ஒரு நாடகக் காட்சியாக நமக்கு விளக்குகிறார் ஆசிரியர் இராமகிருஷ்ணன்

விதி என்னும் பகைக்குக் கம்பன் கொடுக்கும் வீரத்தீர்வு மானுடத்திற்கு ஒரு அரிய பொக்கிஷம்என கம்பன் வழியில் நின்று ஆசிரியர் பேசுமிடம் வியப்புக்குரியது.

யார் இந்தப் புதுமைப் பெண்கள்?’ எனும் கட்டுரையில் பெண் கல்வி குறித்துக் கம்பன் பேசும் அழகை ஆசிரியர் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார்.

          பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,

          பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,

எனும் கம்பன் வரிகளைச் சொல்லி, அயோத்தி மாநகரத்துப் பெண்கள் அழகுடையவர்கள் மட்டுமில்லை, கல்வி அறிவிலும் மேலோங்கி இருந்தனர் எனும் சான்று குறிக்கத்தக்கது.

கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டப் பகுதியில் இலங்கை சென்று சீதையைக் கண்டுவந்த அனுமன், இராமனிடத்தில் சீதையின் பெருமைகளைக் கூறும்போது, ‘பிறந்த வீட்டின் பெருமைக்கும், புகுந்த வீட்டின் புதுமைக்கும், கணவனைக் கண்ணிமை போல் காக்கும் பொறுமைக்கும், உதாரணமாக திகழ்ந்து வரும் பெருந்தெய்வத்தின் திருவுருவே சீதைஎனக் குறிப்பிடுவது ஓர் அரிய காட்சி.

அயோத்தி மாநகரத்து, கல்வி அறிவுடைய பெண்கள், கதையின் நாயகியாகிய சீதை என இவர்களோடு சுமித்திரையின் பெருமையையும் எடுத்துக் காட்டும் கம்பர் இத்தகைய பெருங்குணமுடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையின் தடம்மாறினால் எத்தகையத் தீமை ஏற்படும் என்பதை சூர்ப்பனகையின் வாயிலாகவும் சுட்டிக்காட்டுவதை ஆசிரியர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

நமது மனமே நம் யோகமும் போகமும்எனும் கட்டுரையில் சீதாராம கல்யாணக் கோலத்தின் மங்கலக் கோலத்தை நமக்குச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் யோக வடிவாக இராமனும், அருட்போக வடிவாக சீதையும் இருந்தால் எனச் சுருக்கமாக விளக்குவது படிப்பவருக்கு இனிமை பயக்கும் என்பது உண்மை. இதேபோன்று இராமனின் மனநிலையையும், தக்க இடங்களில் ஆராய்ந்து சொல்லும் ஆசிரியரின் கூற்றுநோக்கு குறிப்பிடத் தகுந்தது.

இதேபோலஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்கடன்பட்டாரே கலங்க வேண்டும்சரையு என்பது தாய்முலைப்பாலடா’, ‘கம்பன் கவி தரும் அமுதத் தமிழ் ஆனந்தம்எல்லோரும் அருட்போகக் கனிகளாய் ஏற்றம் பெறுவோம்எனும் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரைகளிலும் இந்நூலாசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களின் கல்வியாற்றலும், கம்ப ஈடுபாடும் இந்நூலைக்கற்போரை வியப்பில் ஆழ்த்தும் கம்பச் சித்திரங்கள் எனலாம். இக்கட்டுரைகளின் நிறைவில் கம்பரை வாசிப்போம், சுவாசிப்போம், நேசிப்போம்  என ஆசிரியர் நம்மை கம்ப நெறியில் ஆற்றுப்படுத்துவது போற்றுதற்குரியது.

திருப்பூர் கம்பன் கழகத்தில் செயலராய் இருந்து அருஞ்செயல்கள் செய்வதோடு அரிமா முழக்குனராக மேடைகளில் தோன்றுவதோடு எழுத்துலகிலும் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த இராமனின் கைபட்டு பல அகலிகைப் பூக்கள் புத்தகங்களாய் மலரட்டும். தொடரட்டும் இவரது தமிழ்ப்பணி. பரவட்டும் கம்பனின் அருட்பணி.

                                                                                      அன்புடன்

                                                                               கு.ஞானசம்பந்தன்

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.