காதில்… கேட்ட பாடல்கள்…

நான் பிறந்தஊர் மதுரை மாவட்டத்தில் வைகைக்கரையில் அமைந்த பழமையும் பெருமையும்மிக்க சோழவந்தான் என்னும் அழகிய சிற்றூர். இலக்கண இலக்கிய உலகில் சிங்கமெனத் திகழ்ந்த சோழவந்தானூர் அரசஞ்சண்முகனார் பிறந்தஊர் (இவரதுபடைப்புகள் குறித்துதான் நான் ஆய்வுசெய்து மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்) இவ்வூரின் வழியாக ஓடுகின்ற வைகையாற்றின் வடகரைதான் சோழவந்தான். தெற்குக்கரையில் தென்கரை என்னும் ஊரில் பிறந்தவர்தான் நாடக உலகிலும், திரைப்படஉலகிலும் புகழ்பெற்று விளங்கிய டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள்;.

இவ்வூரில் என் தந்தையார் கு.குருநாதன் அவர்கள் அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியதோடு சமுதாயப்பணிகள் பலவும் ஆற்றிவந்தார். திருவள்ளுவர் கழகம், திருமுறைக்கழகம், செந்நாப்போதார் மன்றம் போன்ற மன்றங்களை நடத்திவந்ததோடு, பலரும் கல்விகற்பதற்குத் தன்னாலான உதவிகளையும் செய்துவந்தார். அவர் தன்னுடைய இளமைக்காலத்தில் பயின்றதெல்லாம் மதுரையின் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று அழைக்கப்படுகின்ற தமிழ்ச்சங்கத்தில்தான். திருநாராயணஐயங்கார், இரா.இராகவஐயங்கார், மு.இராகவஐயங்கார் போன்ற பெருமக்களிடத்திலே கல்விபயின்றவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார். அவர் எனக்குத் தந்தையார் மட்டுமன்று, பள்ளியிலும் அவர்தான் எனக்கு ஆசிரியர்.

எந்தநேரத்தில் யார்வந்து எந்தப்பாடலைக் கேட்டாலும் சொல்லித்தரும் ஆற்றல் பெற்றவர். எங்கள் வீட்டில் எப்போதும் ஏழைமாணவர்கள் பலர் வந்து அவரிடத்தில் இலவசமாய்ப் படித்துச் செல்வார்கள்.

நான் சிறுபையனாக இருந்தபோது அதாவது பள்ளியில் சேரும் முன்பே அவர் பாடம் நடத்தும்போதும், பிறரிடத்தில் அவர் பாடல்களைச் சொல்லிக்காட்டும்போதும் நான் கேட்டுக்கொண்டிருப்பேன், விளையாடிக்கொண்டும் இருப்பேன். எங்கள் வீட்டுக்குத் தேவாரஓதுவார்கள் வந்து என் மூத்தசகோதரிகளுக்குத் தேவாரஇசை பயிற்றுவிப்பார்கள். அதையும் கேட்டுக்கொண்டே திரிவேன்.

ஒருநாள் எங்கள் ஊர்ச் சிவன்கோவிலின் திருமுறைக்கழகத்தில் பன்னிருதிருமுறைவிழா நடந்தது. அவ்விழாவில் நாங்கள் எல்லோரும் பங்கேற்றோம். யானைமீது சிவபெருமானின் திருவுருவப்படத்தை வைத்து மேளதாளத்தோடும், தேவாரப்பன்னிசையோடும் ஊர்வலமாகக் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.. விழா தொடங்கவேண்டிய நேரம் வந்தது. அன்றைக்கு விழாத் தலைமையேற்க நாகர்கோவில் சைவத்திருமடத்தைச் சார்ந்த மடாதிபதி ஆறுமுகநாவலர் அவர்கள் வந்திருந்தார்; (யாழ்ப்பணம் ஆறுமுகநாவலர் இவரில்லை)

கடவுள் வாழ்த்துஎன்று சொன்னவுடன் எல்லோரும் கண்மூடி கைகூப்பி நின்றோம். ஆனால் கடவுள் வாழ்த்துப் பாடவேண்டிய ஓதுவாரை மட்டும் காணவில்லை. எல்லோருக்கும் பதற்றம் ஏற்பட்டது. உடனே என் தந்தையார் அருகில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து (அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும்) ‘நீ பாடுகிறாயா?’ என்று கேட்டார். கேட்டதோடு ஒலிபெருக்கியையும் என் கையில் கொடுத்து விட்டார். அம் மைக்கைப் பார்த்தவுடன் நான் மகிழ்ந்து போனேன். இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படும் திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரப்பாடலானதோடுடைய செவியன்எனும் பாடலை நான் இராகத்தோடு பாடி முடித்தேன்.

தலைமைதாங்க வந்த சைவமடாதிபதி என்னைப்பற்றிக் கேட்க, என் தந்தையார்என் மகன்தான்என்று மகிழ்வோடு கூறினார்;. ‘பையனுடைய பெயர் என்ன?’ என்று கேட்டார் மடாதிபதி. என் தந்தையாரும்எங்கள் குலதெய்வம் அங்காளஈஸ்வரி அதனால் இவன்பெயர் அங்குச்சாமிஎன்றார் பெருமையாக. உடனே மடாதிபதியும்அங்குச்சாமி என்ற பெயரை வீட்டில் அழைத்துக் கொள்ளுங்கள், ஞானசம்பந்தன் என்று பெயர் சூட்டுங்கள்என்று மகிழ்வோடு கூறினார்.

ஒரேபாடலில் பேர்வாங்கிய ஒரேஆள் நானாகத்தானிருப்பேன். அப்போது அப்பாடல் பக்திப்பாடல் என்று தெரியுமே தவிர, அப்பாடலை பாடியது யார்? அதன் பொருள் என்ன? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. ஆனால் என்றோ கேட்டு, அன்று நான் பாடிய அப்பாடல் இன்றைக்கும் என் சொந்த சொத்தாக விளங்குகிறது.

நான் முதலாம், இரண்டாம் வகுப்புப் படிக்கிற காலங்களில் அதிகாலையில் எழுந்து என் தந்தையார் செய்யும் சிவபூசைக்கு மலர்கொய்து கொண்டுவந்து கொடுப்பேன். ஊரில் உள்ள நந்தவனங்கள், பலதோட்டங்களில் உள்ள மலர்கள் அனைத்தையும் பூக்குடலையில் கொண்டுவருவேன். பூசைஅறையில் வைத்துவிட்டு என் தந்தையார் செய்யும் சிவபூசைக்குத் துணைநிற்பேன்.

சந்தனக்கல்லில் சந்தனம் நான் அரைத்துக் கொண்டிருக்கும்போதே அவர் சொல்லுகிற பாடல்கள் என் காதில் விழுந்து கொண்டேயிருக்கும். அந்தப் பாடல் யார் எழுதியது? எந்த நூல்? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அதில் ஒருபாடல்,

முருகார் மலர்த்தாம முடியோனடியார் முயற்சித்திறந்

திருகாமல்விளைக்கும தயானவதனச் செழுங்குன் றினைப்

புருகூதன் முதலாய முப்பத்து முக்கோடி புத்தேளிரு

மொருகோடி பூதேவருங்கை தொழுங்கோ வையுறவுன் னுவாம்.

இந்தப்பாடலை நான் பல்லாண்டுகாலமாகக் கேட்டிருக்கிறேன். ஆனால் என் தந்தையார் சொல்லிக் கேட்டிருக்கிறேனே ஒழிய, எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள்கூட இதைச் சொன்னதில்லை.

பல ஆண்டுகள் கழித்து நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தபின், காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் ஆராய்;ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வழிகாட்டியாக விளங்கியவர் தமிழறிஞர் பேராசியர் நா.ஜெயராமன் அவர்கள்.

அப்பேராசிரியப் பெருமகனார்தான் மேடையிலே என்னைப் பேசுவதற்குப் பழக்கியவர். ஒருமுறை அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டி என்ற சிற்றூருக்கு என்னையும், என்னோடு பயின்ற என் நண்பரையும் வழக்காடு மன்றத்திற்கு அழைத்துச் சென்றார் எங்கள் பேராசிரியர். தலைப்பு கர்ணன் குற்றவாளியா? நடுவர் பேராசிரியர் அவர்கள். என் நண்பர் வழக்குத் தொடுக்க, நான் மறுத்துப் பேசவேண்டும்.

அதுமிகச்சிறிய குக்கிராமம். அந்தஊரில் கிராமத்துப்பேருந்து ஊருக்குள் வருகின்ற ஒருசந்திப்பில் மேடைபோட்டிருந்தார்கள். எல்லோரும் அமர்ந்திருப்பார்கள். ஒருபேருந்து வந்தவுடன் எல்லோரும் கலைந்துபோய் திரும்பவந்து அவரவர் இடத்தில் தரையில் உட்கார்ந்துவிடுவார்கள். அதிகம் படிக்காத எளிய கிராமத்து மக்கள் கூட்டம் அங்கே குழுமியிருந்தது.

விழா தொடங்குமுன்கடவுள் வாழ்த்துஎன்று தலைவர் சொல்ல, மேல்சட்டை போடாத ஒருவர் தன் தோளில் போட்டிருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தார். நானும் என் நண்பரும் இவரைப் பார்த்தால் படிக்காதவர்போல் இருக்கிறார், எப்படிப் பாடப்போகிறார்?’ என்று யோசித்தோம்.

உடனே எங்கள் பேராசிரியர்அப்படி நினைக்கவேண்டாம். எந்தப்பூவில் எவ்வளவு தேன் இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? சற்று பொறுத்திருந்து பாருங்கள்என்றார். கடவுள் வாழ்த்தாக அவர் வில்லிபாரதப்பாடல்களைப் பாடத்தொடங்கினார். அவர் பாடப்பாட, நாங்கள் திகைத்துப் போய்விட்டோம். அதில் அதிகமாக அதிர்ச்சி அடைந்தது நான்தான். ஏனென்றால் அவர் பாடியபாடலில் என் தந்தையார் பூசையில் சொல்லும்முருகார் மலர்தாம முடியோன்என்கின்ற பாடலும் வந்தது. அப்போதுதான் அந்தப்பாடல் வில்லிபாரதத்தில் வரும் பாடல் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

வில்லிபாரதத்தில் தற்சிறப்புப்பாயிரம் பாடுகின்ற வில்லிபுத்தூர்; ஆழ்வார்,

நீடாழி உலகத்து மறைநாளொடு ஐந்தென்று நிலைநிற்கவேஎன்று தொடங்கி சிலபாடல்கள் பாடுகின்றார். அதில் இரண்டாவதாக வருகின்ற பாடல்தான்முருகார் மலர்த்தாமஎன்கின்ற பாடல் என்பதை நான் அறிந்துகொள்ள எனக்கு முப்பதுவருடங்கள் ஆகியிருக்கின்றன என்றாலும், அப்பாடலை இப்போது கேட்டாலும் என்னால் சொல்லமுடியும்.

இதேபோல நான் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்றபோது எங்களுக்கு இலக்கணம் நடத்தவந்தவர் பேராசிரியப் பெருமகனார் பல்துறைவல்லுநர் திரு.நா.பாலுசாமி அவர்கள். அவர் முதலாண்டு மாணவர்களான எங்களையெல்லாம் பார்த்துஎங்கே யாராவது ஒருவர் இந்தக் கரும்பலகையில் ஏதாவது ஒரு பாட்டெழுதி அணிபிரித்து விளக்கம் சொல்லவேண்டும் முடியுமா’? என்றார். எல்லாமாணவர்களும் தயங்கிநிற்க, நான் கரும்பலகைக்கு அருகிலே சென்றேன். அவர் உடனே ஒரு கட்டளை இட்டார். ‘நீ தமிழாசிரியர் மகன்தானே எனவே குறள்வெண்பாவான திருக்குறளை எழுதி அணிபிரிக்காமல், வேறுபாடல் எழுதுஎன்றார்.

நான் உடனே என் தந்தையார் தன் மாணவர்களுக்கு நடத்தியபாடல் ஒன்றை நினைவில் கொண்டுவந்து கரும்பலகையில் சீர்பிரித்து எழுதத்தொடங்கினேன். அந்தப்பாடல் இதுதான்,

          திக்கயங்களெட்டுமுட்டவைத்தபுட்பதாகையான்

                   செழியர்கொற்றவளவர்வந்துதிறையளக்குமுன்றிலான்

          மைக்கருங்கண்மாதரார்மனங்கவற்றுமாரவேள்

                   மதுரைவீரகஞ்சுகன் மணந்துதந்தபந்தநோய்

          கைக்குள்வந்தகப்படாதுகண்முனிற்குமொருவராற்

                   காணொணாதுகாணுமென்றுகாட்டொணாததன்றியும்

          ஒக்குமென்றுரைக்கலானவுவமையில்லையிருவரும்

                   உள்ளறிந்ததன்றிமற்றிவ்வூரறிந்த தல்லவே.

என்றபாடலை எழுதி நேர் நேர் தேமா என்று நான் சீர்பிரித்துச் சொன்னபோது வியந்துபோன எங்கள் பேராசிரியர் என்னைப் பாராட்டிஇவ்வளவு பெரிய பாடலை எங்குபடித்தாய்? எப்படிமனனம் செய்தாய்?’ என்று கேட்டார். நான் என் தந்தையாரிடத்தில் கற்ற செய்தியைச் சொன்னவுடன் அவர் மகிழ்ந்து போனார். தமிழ்த்துறை முழுவதும் அன்றைக்கு இதேபேச்சாக இருந்தது.

          இந்தப்பாடல் எந்த நூலில் வருகிறதென்பது இந்தக் கட்டுரை எழுதப்படுகின்ற நாள்வரை எனக்குத் தெரியாது. இப்படி இருக்கையில் இந்;தப்பாடலை நான் தேடத் தொடங்கினேன். பிறகு அறிஞர்களிடத்தில் கேட்கத் தொடங்கினேன். மதுரையின் பெரும்புலவரும், நல்லாசானுமாகிய புலவர் கி.வேலாயுதனார்  அவர்கள் நான் கேட்ட சிலமணி நேரங்களில் பாடலைத் தேடி எடுத்து எனக்குச்  சொல்லிவிட்டார். இப்பாடல் தனிப்பாடல் திரட்டில் வருகிறது. கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடைய தொகுப்பில் பாருங்கள் என்று வேதவாக்காக அவர் கூற, நான் தேடிக்கண்டுபிடித்து மகிழந்தும், நெகிழ்ந்தும் போனேன். அப்பாடலின் பொருள்இதுதான்,

          காதல் வயப்பட்ட தலைவியைப் பார்த்து, ‘உனக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்க, அப்போது தலைவி, தலைவனின் பெருமையைக் கூறி, ‘அவனால் ஏற்பட்ட இந்தக் காதல் நோயானது மன்மதன் துணையோடு எனை வந்து சேர்ந்தது. இந்த நோய் கையில் அகப்படுமா? என்றால் அகப்படாது, கண்ணால் காட்ட முடியுமா? என்றால், காட்ட முடியாது. அந்த நோயைப் போல, இந்த நோயைப் போல என்று ஒப்புமை காட்ட முடியுமா? என்றாலும் முடியாது. ஏனென்றால் இக்காதல் நோயால் தாக்கப்பட்டவர்களன்றி வேறு யாரும் அறியமுடியாது. காதல் வயப்பட்டவர்களுக்குத்தான் இதன் அருமையும், கொடுமையும் தெரியும்என்று வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

          நான் நினைத்துப் பார்க்கிறேன். தமிழறிந்த என் தந்தையாருக்கு நான் தொடர்ந்து பணிவிடைகள் செய்தபோது காதில் கேட்ட பாடல்கள்தான் என்னை நினைவாற்றல் மிக்கவனாக, மேடைப்பேச்சாளனாக மாற்றி இருக்கவேண்டும்.

தமிழ்த்தாத்தா .வே.சாமிநாதஐயர் அவர்கள் எவ்வாறு கண்டதும், கேட்டதும் என்று தன் நினைவில் இருந்த நிகழ்வுகளையெல்லாம் எழுதினாரோ அதுபோல நான் கேட்டதை மட்டும், நினைவில் நின்றதை மட்டும் உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.

நான் கேட்ட பாடல்கள் முழுவதையும் சொல்லவேண்டுமென்றால் தனி நூலாகத்தான் போடவேண்டும். ஏனென்றால் என் தந்தையார்  நூற்றுக்கணக்கான பாடல்களை எனக்குச் சொல்லியிருக்கிறார்.

அவற்றில் சிலமலர்களை மட்டுமே உங்களுக்குக் காட்டியிருக்கிறேன், இந்தப் பவளவிழா மலருக்குச் சூட்டியிருக்கிறேன் என்பதைப் பெருமிதத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

          ‘கற்றலில் கேட்டலே நன்றுஎன்னும் வாக்கு பொன்னானது என் வாழ்க்கையில்.

                                                                             வாழ்த்துக்களுடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.  

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.