அமுதனின்… தங்கத்தடம்…..

மனிதகுலத்தின் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று புத்தகம். நூலறிவு என்பது சிந்தனையின் வெளிப்பாடு. உலகத்தையே மாற்றி அமைத்த பெருமை நல்ல புத்தகங்களுக்கு உண்டு. புத்தகங்களைப் படைக்கின்ற எழுத்தாளர்கள்பிரம்மாக்கள்என்றே மதிக்கப்படுகிறார்கள்.

படைப்பதனால் என் பேர் இறைவன்என்கிறார் கவியரசு கண்ணதாசன். இவ்வகையில் புதிய நூல்கள் தமிழில் வெளிவர வெளிவர அவையெல்லாம்; தமிழன்னைக்கு அணிகலன்களாகவும், சில நேரங்களில் ஆயுதங்களாகவும் பயன்படுகின்றன என்பதுதான் நூல்களுக்குக் கிடைக்கின்ற பெருமை.

          “உலகெங்கும் தமிழர் தடம்எனும் மிகச்சிறந்த ஆய்வுநூலினைப் படைத்திருக்கின்ற திரு.தனசேகரன் எனும் இயற்பெயர்கொண்ட திரு. அமுதன் அவர்கள் மதுரையைச் சொந்தஊராகக் கொண்டவர். நான் பயின்ற, பணியாற்றிய  தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியின் முன்னாள் மாணவர் இவர்.

          பட்டப்படிப்பை முடித்ததோடு தமிழகத்தின் முதன்மை நாளிதழான தினத்தந்தியில் தமிழினத்தலைவர் திரு. சி..ஆதித்தனார் அவர்களிடத்திலே பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல் துறையில் அனுபவம் உள்ளவர். தொல்லியல், வாழ்க்கை வரலாறு, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் தன் அறிவை விரிவுசெய்து கொண்ட மிகச்சிறந்த ஆய்வாளர். பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், அதிசயக்கோவில் அங்கோர் வாட் போன்ற இவரது நூல்களைத் தினத்தந்தி பதிப்பகமே வெளியிட்டு இவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

          இன்றைக்கும் தினத்தந்தியில் நூல் மதிப்புரை பகுதியில் தன் பணியைத் தொடர்வதோடு எழுத்துத்துறையிலும் தனக்கென தடம் பதித்து வருகிறார் எழுத்தாளர் அமுதன். இவரின் புதிய நூல்தான்உலகெங்கும் தமிழர் தடம்”. இந்நூல்மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய எகிப்திய மன்னர் தமிழரா?’ எனும் முதல் கட்டுரையில் தொடங்கி, ‘கிரேக்க நாட்டுக்குத் தூதுக்குழு அனுப்பிய பாண்டியமன்னர்எனும் முப்பத்தி ஏழாவது அதிகாரம் வரை அரிய செய்திகளை, ஆராய்ச்சிக்குறிப்புகளை உள்ளடக்கியதாக திகழ்கிறது.

          இந்நூல் தரும் செய்திகளின் பதச்சோறாக சில துளிகள்.

       தமிழ் மொழியின் பெருமையைப் பற்றிச் சொல்லுகின்றபோது உலகில் தற்போது ஏழாயிரத்து பதினோறு மொழிகள் இருக்கின்றன என்றும் அவற்றுள் இப்போதும் பேச்சு வழக்கில் உயிர்ப்போடு இருக்கின்ற எட்டு மொழிகளில் தமிழும் ஒன்று என்று முதல் கட்டுரையின் செய்தியே நம்மை இந்நூலை வாசிக்கத் தூண்டுகிறது.

       ‘அப்பாஎன்னும் உறவுச்சொல் கொரிய மொழியிலும் அதே வழக்கத்தில் இருக்கிறது என்பதோடு, நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அக்கொரிய மொழியில் இன்றளவும் உள்ளன என ஆய்வாளர்கள் கூறுவதை எடுத்துக்காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் ஆசிரியர்.

       பூமியில் மனிதன் தோன்றிய மையப்புள்ளி எதுவாக இருக்கும்? எனக் கேள்வி கேட்டு, அதற்கு இவர் விடைசொல்லுகிற பாங்கும், லெமூரியா கண்டம் குறித்த தொல்லியல் ஆதாரங்களும், பஃருளி ஆறு குறித்த இலக்கியச் சான்றுகளும் இவரின் தமிழ் அறிவுக்கு, ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

       கடலில் மூழ்கிய தமிழ் நகரங்கள் என்பதை எடுத்துக்காட்ட தொல்காப்பியம் தொடங்கி, சிலப்பதிகாரம் வரை ஒரு காலப்பயணத்தைத் தன் எழுத்தில் தொடங்கி நம்மையும் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.

       ஆரியர், திராவிடர் என்பவை இனப்பெயர்களா? எனக்கேட்டுத் தற்கால விவாத நிகழ்வுகளுக்கு ஏற்ப, நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.

       ‘இமயமலையில் பாதை அமைத்த சோழமன்னர்என்ற பகுதியில் மூவேந்தர்களும் எவ்வாறு இமயமலையில் தங்கள் சின்னங்களைப் பதித்;தார்கள், புதிய வழித்தடங்களை எவ்வாறு உருவாக்கினார்கள் என இவர் சொல்லும்போது படிக்கும் நாம் வியப்பில் ஆழ்ந்து விடுகிறோம். மலேயா குறித்த இவரின் குறிப்புகள் புதிய கண்ணோட்டம்.

       சீனர்கள் தங்கள் நாட்டில் உற்பத்திசெய்த பட்டுத்துணிகளைத் தரைமார்க்கமாக இந்தியாவிற்குக் கொண்டுவர இமயமலை வழியாக உருவாக்கிய பாதையே பட்டுப்பாதை என்று ஆசிரியர் குறிப்பிடும்போது வழித்தடம் என்னும் இந்நூல் பட்டுப்போல் ஜொலிக்கிறது.

       வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றில் ஒரு நிகழ்வை மலேசிய மன்னன் பரமேஸ்வரனின் வரலாற்றோடு ஒப்பிட்டு மலாக்கா அரசு உருவானதைப் பற்றி இவர் தருகின்ற குறிப்பு புதுமையிலும் புதுமை.

       மலேயா, சிங்கப்பூர் கல்வெட்டுக்கள் குறித்த இவரது ஆய்வுச் சேகரிப்பானது மலர்தோறும் தேனெடுக்கும் தும்பியின் (தேனீ) உழைப்பைப்போல் நமக்குத் தோன்றுகிறது.

       மலேசிய மொழியில் இருக்கும் தமிழ்ச்சொற்கள் என்று இவர் பட்டியலிட்டுக் காட்டும் சொற்களும் (அகா –  அக்கா, பூமிபூமிபுங்காபூங்கா) குடும்ப உறவுமுறைச் சொற்களும் இன்றளவும் அங்கே வழங்கி வருவது ஆச்சர்யமான ஒன்று என்கிறார் ஆசிரியர்.

       தாய்லாந்து, கம்போடியா நாட்டுத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் நம் நாட்டு பண்பாட்டு வேர்கள் இழையோடி இருப்பதை நாம் இந்நூல் மூலம் அறிகிறோம்.

       இந்தோனேசியாவில் அகத்தியர் வழிபாடு இன்றைக்கும் இருப்பதற்குக் காரணம் நம்முடைய கப்பலோட்டிகளான மாலுமிகளும், வியாபாரப் பெருமக்களும் என ஆசிரியர் கூறுகிறார். இந்தோனேசிய மொழியில் காணப்படும் தமிழ்ச்சொற்களின் பட்டியலும் இந்நூலின் ஆய்வுக்குப் பெருமை சேர்க்கின்றன.

       அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய காரைக்கால் அம்மையாரை தாய்லாந்து மக்கள் வணங்குகிறார்கள் என்பது வியப்புக்குரிய ஒன்று.

       என் அனுபவத்தில் சமீபத்தில் நான் பாலித்தீவிற்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த மணிமேகலைக் கோவிலைக்கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். இந்தோனேசியாவிலும் பாலித்தீவிலும் தமிழ்மக்களின், மன்னர்களின் பாதிப்பு இன்றைக்கும் இருக்கிறது என்பதை இந்நூலின் மூலம் நம்மால்  அறியமுடிகிறது.

       பர்மாவின் தலைநகரான மியான்மரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன என்பதை ஆசிரியர் கூறியிருக்கிறார், நான் இரண்டாண்டுகளுக்கு முன்பு மியான்மர் (யான்கூன்ரங்கூன்) சென்றபோது அதைக் கண்ணாரக் கண்டு வியந்தேன்.

       பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட பெண் தெய்வத்தின் சிலை ஓர் ஆச்சரியம் என்றால், இதேபோல் சுடுமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் கருடவாகனம் போன்றவையும் நம் நாட்டுக் கோவில்களில் இருப்பதைப் போலவே அங்கும் காணப்படுகின்றன என்பதும் வியப்பானவைதான்.

       கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர்வாட் கோவில் குறித்து ஆசிரியர் தனி நூலே எழுதியிருக்கிறார். இந்நூலிலும் அங்கோர்வாட் பற்றி பல அரிய செய்திகளைச் சொல்லுகிறார்.

       வியட்நாமில் காணப்படுகின்ற வி~;ணுசிலையும், இசைக்கருவிகளும் தமிழரின் பெருமையை இன்றைக்கும் பறைசாற்றுகின்றன என்பது ஆசிரியரின் கருத்து.

       இலங்கை குறித்து இந்நூலாசிரியர் தொடங்கும்போதே போர்க்களங்கள் உருவாக்கிய வரலாற்றுத் தடங்கள் எனத் தொடங்கி இருப்பதே அந்த அத்தியாயத்தின் சாரத்தை நமக்கு உணர்த்துகிறது.

       சீனாவைப் பற்றிக் குறிப்பிடும்போது அதன் புராதாணப் பெருமையைச் சொல்லித் தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பையும் எடுத்துக் கூறுகிறார்.

       மேலும் சீனாவில் கட்டப்பட்டுள்ள இந்துக்கோவில்களில் காணப்படுகின்ற கல்வெட்டுக்களில் உள்ள தமிழ் எழுத்துக்கள் சீனமொழிக்கு முந்தியவையாக இருக்கும் என ஆசிரியர் எடுத்துரைக்கும்போது நம் தமிழரின் பெருமையும், தொன்மையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு விளங்குவதோடு, கீழடியை நோக்கி நம் சிந்தனையைத் திருப்புகின்றன.

       நூலின் இறுதிப்பகுதியில், தென்கொரியாவில் அரசபரம்பரயை உருவாக்கியவர் ஒரு தமிழ்ப்பெண்மனி என ஆசிரியர் தருகின்ற செய்தியும், ஜப்பான் நாட்டின் மொழி அரிச்சுவடியை உருவாக்க உதவிய தமிழரின் உதவியும் பற்றிக் கூறுவதோடு அரேபியா, எகிப்து, ரோம் ஆகிய பண்டைய நகரங்களின் தமிழகத் தொடர்பையும் ஆசிரியர் நுண்மான்நுழைபுலத்தோடு விளக்குகிறார்.

       சென்னை மருத்துவரின் வியத்தகு கண்டுபிடிப்பு எனும் பகுதியில் மரபணுக்கள் பற்றிய இவரின் கூற்று மூலம் உலகத்தின் முதல் மனிதன் தமிழனாகத்தான் இருப்பானோ? என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.

இந்நூலின் நிறைவுக் கட்டுரை பாண்டியமன்னர்களின் பெருமையைக் கூறுகிறது. அதிலும் குறிப்பாகக் கிரேக்க நாட்டிற்குத் தூதுக் குழுவை அனுப்பிய பாண்டியமன்னர்களின் ஆற்றலை எங்ஙனம் அளவிடுவது என்கிறார் ஆசிரியர்.

இதன் அடிப்படையில்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ரோமாபுரிப் பாண்டியன் என்ற ஒரு சரித்திர நவீனத்தை உருவாக்கியிருப்பார் போலும்.

இந்நூலை உருவாக்கிய ஆசிரியர் அமுதன் அவர்களின் இடையறாத படிப்பும், ஆழ்ந்த ஆராய்ச்சி அறிவும், தொல்லியல் மற்றும் பயணம் குறித்த இவரின் உலகஞானமும் நம்மை வியக்க வைக்கின்றன.

உலகெங்கும் தமிழர் தடம்என்னும் இந்நூலின் பயன் யாது? எனில் எதிர்காலச் சந்ததியினர் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்காக, தமிழரின் பெருமையைப் புரிந்து கொள்வதற்காக என நாம் துணிந்து கூறலாம். மேலும் இந்நூல் கடந்த காலத்திற்கு நம்மைப் பயணப்பட வைக்கும் ஒரு கால எந்திரம் (டைம் மெ~pன்) எனக் கூறுவது மிகையாகாது.

வருங்காலச் சந்ததியினருக்கு இந்நூல் ஒரு கிடைத்தற்கரிய பொக்கி~ம். அவர்கள் இப்பொக்கி~த்தைப் போற்றி மகிழ்வார்கள.; பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குக் கைமாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை இந்நூல் நமக்குத் தருகிறது.

இத்தகைய பெருமையுடைய இந்நூலாசிரியரின் பணியை நாம் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசும் இவருக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் அதுவே உயரிய மரியாதை. மேலும் இந்நூல் சிறுபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

நம் கனவு மெய்ப்படல் வேண்டும்….

அன்புடன்

கு.ஞானசம்பந்தன்

தகைசால் பேராசிரியர்

தியாகராசர் கல்லூரி, மதுரை.                   

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.