வையகம் உள்ளளவும் வைகோவின் புகழ் வாழ்க!
‘வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம், ஆனால் போராட்டமே வாழ்க்கை’ எனத் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருமகனார், தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் களப்போராளி, ‘நாவசைந்தால் நாடசையும்’ எனும் நாவண்மைமிக்க பேச்சாளர்…. எனப் பட்டியலிட்டுக் கொண்டே சென்றால் இந்தக் கட்டுரைக்குப் பக்கங்கள் போதாது. ஆம் இத்தனை பெருமைகளுக்கும் உரிமையுடைய ஒரே பெருமகனார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் நம் வைகோ அவர்கள்தான்.
கலிங்கப்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்து தான் கற்ற கல்வியால், தான் நம்பிய கொள்கையால், இடையறாது உழைப்பால், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் மட்டுமல்லாது அவர்களது இல்லங்களிலும் குடும்பத்தில் ஒருவராய்க் கோலாச்சி வருபவர்தான் நம் வைகோ அவர்கள்.
விஞ்ஞானிகளின் விஞ்ஞானி அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்பது போல, என்னைப் போன்ற பேச்சாளர்களே வியக்கும் பேச்சாளர்களின் பேச்சாளர் திரு.வைகோ. என் மாணவப் பருவத்தில் நான் பயின்ற எங்கள் மதுரை தியாகராசர் கல்லூரிக்கு வந்து அவர் முழங்கிய பேச்சு, இன்றைக்கும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வியத்தகு நினைவாற்றல், கருத்தாழம் மிக்க சொல்லாற்றல், உள்;ர் நிகழ்வுகளை உலக வரலாற்றோடு ஒப்பிட்டுப் பேசும் பேரறிஞர் அண்ணாவைப் போன்ற பேச்சாற்றல் எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நான் ஆராய்ச்சி மாணவனாய் (PhD) ஆய்வு செய்து வந்தபோது பல்கலைக்கழக மு.வ. அரங்கில் அவர் பேசிய ‘வரலாறு திரும்புகிறது’ எனும் பேச்சுக்கு ஈடேது, இணையேது.
‘வடநாட்டு மன்னர்களான கனகவிஜயர் எனும் மன்னர்களைத் தலையில் கல் சுமக்கச் செய்தவன் நம் தமிழ் வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன் என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் இன்றோ நம் தமிழர்கள் செங்கல்லைத் தலையிலே சுமந்துகொண்டு வடநாடு நோக்கிச் செல்கிறார்களே என்ன கொடுமை?’ என அவர் முழங்கியபோது மண்டபம் அதிரக் கைதட்டியவர்களில் நானும் ஒருவன்.
வைகோ அவர்களின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரே முன்னின்று நடத்தும் தைத்திங்கள் தமிழர் விழாவில் நான் பலமுறை பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்க சென்றிருக்கிறேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடும் மக்கள் அரங்கம அது. அங்கே படை நடத்தும் தளபதியாக முன்வரிசையில் வைகோ. அந்நிகழ்ச்சிகளில் முன்; அமர்ந்து கைதட்டி அவர் சிரிக்கும் அந்தக் காட்சி, ‘சிரித்தது செங்கட்சீயம்’ என்னும் கம்பநாட்டாழ்வாரின் வரிக்கொப்ப அமைந்திருக்கும்.
ஒருமுறை பாரதக் கதையின் நிகழ்ச்சியைப் பட்டிமன்றத் தலைப்பில் நான் சொல்லிக்கொண்டு வரும்போது ‘பகதத்தன்’ என்னும் அரசனின் வலிமை மிகுந்த யானையைப் பீமசேனன் தன் கதாயுதத்தால் அடித்து மயங்கச் செய்தான். அந்த யானையின் பெயர்…. என்று நான் சற்று யோசித்தபோது மேடையின் முன்னே அமர்ந்திருந்த வைகோ அவர்கள் ‘சுப்ரதீபம்’ என முழக்கத்தோடு எடுத்துக்கொடுத்தார். அவரது நினைவாற்றலுக்கு என் வணக்கத்தைச் சொல்லிவிட்டு மீண்டும் என் பேச்சைத் தொடர்ந்தேன். அவ்விழா நாட்களில் பட்டிமன்றம் முடிந்தபிறகு இரவு அவரோடு அமர்ந்து உணவு உண்ணும் போது ஒரு காட்சியை நான் பார்ப்பேன். எப்போதும் அவர் இல்லத்தில் நூற்றுக்கணக்கான தம்பிமார்கள் அவரோடு சேர்ந்து உணவு உண்ணுவார்கள். அந்தக் காட்சி, ‘படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வராகப்’ புறநானூற்றில் பாண்டியமன்னன் பாடிய பாடல் காட்சியின் வரிக்கொப்பக் காணப்படும்.
இரண்டாண்டுகளுக்கு முன்னால் கலிங்கப்பட்டியில் அவரது இல்லத் திருமண விழா ஒன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அம்மணவிழா மேடையில் என்னையும் பேசுமாறு ஆணையிட்டார் வைகோ. நானும் பேசும் போது மேடையில் அமர்ந்திருந்த பெருமக்களை எல்லாம் வாழ்த்திவிட்டுக், ‘கலிங்கப்பட்டி என்னும் இச்சிற்றூர் இந்தியாவில் தமிழகத்தில் இருப்பதாகத்தான் நான் இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் இன்றைக்குத் தமிழகமே, இந்தியாவே கலிங்கப்பட்டிக்குள் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்’ என மெய்சிலிர்த்துக் கூறினேன். உண்மைதான் கட்சிப் பாகுபாடின்றி அத்தனை கட்சித் தலைவர்களும், துணைவேந்தர்களும், தொழிலதிபர்களும், ராம்ஜேத் மலானி போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்களும் அம்மேடையை அலங்கரித்தார்கள்.
உலக நாடுகளில் நான் பயணப்படும் போதெல்லாம் நம் தமிழர்தம் இல்லங்களில் தங்கியிருப்பேன். அங்கெல்;லாம் நான் காணுகின்ற ஒரு அரிய புகைப்படம் எது தெரியுமா? விடுதலைப் புலிகளின் தலைவராகிய மாவீரர் பிரபாகரன் அவர்களோடு மாவீரர் வைகோ அவர்கள் இணைந்து நிற்கும் அற்புதப் படம் தான்.
இப்பெருமகனார் நடக்காத தூரமில்லை, கடக்காத துன்பமில்லை ஆயினும் ‘பஞ்சவர்க்குத் தூது நடந்த கண்ணபெருமானின் புகழைப் போல’ இவரது புகழும் தமிழினம் உள்ளளவும் தரணியில் உள்ள மக்களால் போற்றப்படும், புகழப்படும்.
‘நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும’ என நெல்லிக்கனி பெற்ற சங்ககால ஒளவையார் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமானை வாழ்த்தியது போல நாமும் வாழ்த்துவோம்.
வையகம் உள்ளளவும் வைகோ நீங்கள் நீளாயுள் நிறை செல்வம் பெற்று குன்றாப் புகழோடு என்றென்றும் வாழுங்கள். நீங்கள் நன்றாக வாழ்ந்தால்தான் தமிழும், தமிழினமும் உலக அரங்கில் உயர்வு பெறும். இது, ‘உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’.
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை.