பேச்சுக்கொரு பெரும்புலவர்….

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பேசும்கலையும் ஒன்று. இப்பேச்சுக்கலை கற்றோரையும், கல்லாத மற்றோரையும் ஈர்க்கவல்ல தனித்தன்மை பெற்றது.

          கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

          வேட்ப மொழிவதாம் சொல்

என்பது வள்ளுவரின் வாக்கு. இவ்வாக்கிற்கு ஏற்றபடித் தம் வாக்குத் திறமையால், வாதத்திறமையால் புராணங்களை, இலக்கியங்களை, நாட்டுநடப்புகளை மக்களிடத்திலே கொண்டுபோய்ச் சேர்;க்க தமிழகத்தைச் சார்ந்த பெரும் பேச்சாளர்கள் பலருள் தனக்கென ஒரு தனியிடத்தை அமைத்துக்கொண்டு அதில் தனி அரசராய் ஆட்சிசெய்த பெருமை பேராசிரியர் திருச்சி திரு.இராதாகிரு~;ணன் அவர்களுக்கே உண்டு.

          திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, தலைவராகப் பணியாற்றிக்கொண்டே தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் அயலகங்களிலும் சென்று தமிழின் பெருமையை, இனிமையை, அருமையை அனைவருக்கும் சொன்ன பெருமை ஐயா அவர்களுக்கே உண்டு.

          அக்காலத்தில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் மக்களைக் கவர்ந்த ஊடகங்களுள் ஒன்று. அப்போதெல்லாம் தொலைக்காட்சி கிடையாது. பத்திரிக்கை, வானொலி மற்றும் வீடுகளிலிருந்த தொலைபேசி (லேண்ட்லைன்) இவைதான் மக்களுக்கான ஊடகங்கள். இதில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய இலக்கிய நிகழ்ச்சிகள்தான் மக்களைப் பெரிதும் ஈர்க்கும். அதிலும் குறிப்பாக காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு இலக்கிய நிகழ்ச்சிகளின் மகுடம் எனலாம்.

          பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், தனிஉரைகள் என அத்தனை செய்திகளையும் அள்ளித்தந்த வானொலி திருச்சிராப்பள்ளி வானொலிதான்.

          மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்து வளர்ந்த நான் ஒரு தமிழாசிரியரின் மகன். ஆதலால் எங்கள் வீட்டில் நல்ல நூலகம் உண்டு, வானொலியும் உண்டு, புகழ்பெற்ற பேச்சாளர்களும் எங்கள் இல்லங்களுக்கு வருவது உண்டு. வானொலிகளில் தங்கள் குரலால் மக்களை ஈர்த்தவர்கள் என்று பட்டியலிடும்போது குன்றக்குடி அடிகளார், .சா.ஞானசம்பந்தன், திருச்சி இராதாகிரு~;ணன், திருப்பத்தூர் நமச்சிவாயம் எனப் பட்டியல் நீண்டுகொண்டே  செல்லும்.

          இவர்களுள் என்னை அதிகம் கவர்ந்த பேச்சு திருச்சி பேராசிரியர் திரு இராதாகிரு~;ணன் அவர்களின் பேச்சுதான். நான் அவர்களை நேரில் கண்;டதில்லை. அப்போது பள்ளியில்; படித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவரது பேச்சு இரசிகர்களில் நானும் ஒருவன். இவரை எப்போது காண்போம் என எண்ணி ஏங்கிய நாட்கள் பல உண்டு. அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது.

          நான் தியாகராசர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமையுடைய மதுரை ராஜா சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திரு.இராதாகிரு~;ணன் அவர்கள் பேசுகிறார்கள் என்பதைச் சுவரொட்டிகளில் பார்;த்தேன். கல்லூரி முடிந்தவுடன் எங்கள் ஊருக்குச் செல்லாமல் நானும் என்னோடு சேர்ந்த இலக்கிய நண்பர்களும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றோம். அப்போதுதான் நான் அவரை முதன்முதலில் மேடையில் பார்க்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம், தலையின் பின்புறம் கட்டுக்குடுமி, அழகிய ஜிப்பா, வே~;டி, தோளில் ஒரு ஜோல்னா பை, அமைதியான தோற்றம்.

          நான் என்னோடு இருந்த நண்பர்களிடம், ‘அதோ மேடைக்கு நடுவே இரண்டாவது நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரே அவர்தான் நான் சொன்ன இராதாகிரு~;ணன்என்றேன் பெருமையாக. அவர்கள் முகத்தில் சற்று ஏமாற்றம் தெரிந்தது. இவர் என்ன பேசிவிடப்போகிறார்? என்று யோசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் பேசிமுடித்தப் பிறகு நிறைவாக ஐயா அவர்கள் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார்.

          மெதுவான குரலில் ஆரம்பித்தார். ‘போன வாரம் தஞ்சாவூருக்குப் போயிருந்தேன், அங்கிருந்து மன்னார்குடிக்கு பஸ் ஏற பஸ் ஸ்டாண்டுல காத்திருந்தேன். அப்ப அங்கிருந்த ஒருவர் வேகமாக ஓடிவந்து என்னைப் பார்த்து, ‘சாமி வணக்கம்! உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும் நான் உங்கள் இரசிகன்என்று அவர் சொன்னவுடன் நான் மகிழ்ந்து போனேன். பரவாயில்லையே ஒரு கிராமத்து விவசாயிகூட நம்மைத் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று மகிழ்வோடு, ‘என்னை எங்கே பார்த்திருக்கிறாயப்பா?’ என்று அன்போடு கேட்டேன். உடனே அவர்என்ன சாமி இப்படிக் கேட்டுட்டீங்க, நீங்கதான மன்னார்குடி பண்ணையார் வீட்டுல தவில் வாசிக்க வந்தவரு, அன்னைக்கு என்னா போடு போட்டீங்க சாமி, மறக்கமுடியுமாஎன்று அவர் சொல்லச் சொல்ல சொல்லகூட்டத்தில் அலைஅலையாய் சிரிப்பு.

அன்றைக்கு இராமாயணத்தில் பரதன் குறித்து அவர் பேசினார். அப்படிப் பேசும்போது அவர் குரலில் இருந்த ஏற்ற இறக்கங்களும் பேச்சுக்கிடையில் இருந்த நகைச்சுவையும் அரங்கத்தை அப்படியே கட்டிப்போட்டன. அதைக்காட்டிலும் பரதன் அழுதால் கேட்டுக்கொண்டிருந்த நாமும் அழுகிறோம், பரதன் தன் தாயாகிய கைகேயியை கோபித்தால் நாமும் கோபப்படுகிறோம். இப்படி நம்மை பேச்சில் வசப்படுத்திய அவருடைய குரல் ஓரிடத்தில் உச்சக்கட்டத்தை எட்டி, ‘இராமனைக் காடு செல்லச் சொன்ன நீயும் ஒரு தாயா?’ என்று சிலிர்த்து அவர் கேட்டபோது அவருடைய குடுமி அவிழ்ந்து அவர்தோளில் புரண்டது. அந்தக் காட்சி எனக்கு இப்போதும் நினைவு இருக்கிறது. அவர் பேச்சு முடிந்தபோது அத்தனைபேரும் விடாமல் கைதட்டினோம். என் நண்பர்கள் மகிழ்வோடு எனக்குக் கைகொடுத்து என்னைப் பாராட்டினார்கள். பிறகு கீழே இறங்கி அவர் வந்தபோது அவருடைய திருவடிகளைத் தொட்டுவணங்கிய பலபேரில் நானும் ஒருவன்.

பின்னர் குன்றக்குடி அடிகளாரின் பட்டிமன்றங்களில் அணித்தலைவராக, இன்னும் பல பட்டிமன்றங்களில் நடுவராக, தனிப்பேச்சு நாயகராக, தமிழ்நாட்டு இலக்கிய மேடைப் பேச்சாளர்களின் ஒரு முன்னோடியாக, பேச்சுலகில் ஒரு சிங்கமாகத் திகழ்ந்தவர் திரு இராதாகிரு~;ணன் அவர்கள்.

அவருடைய மறைவிற்குப் பிறகு அவருடைய திருமகனார் திரு. மாது அவர்கள் தந்தையார் விட்ட பேச்சுப்பணியைத் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் நாங்கள் அனைவரும் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தோம். நான்கைந்து கூட்டங்கள் அமெரிக்காவில் நடந்தன.

ஒவ்வொரு கூட்டத்திலும் நான் மாது அவர்களை அறிமுகப்படுத்தும்போது அவருடைய தந்தையாரின் பேரைச்சொல்லி அறிமுகப்படுத்துவேன். அப்போது ஒரு கரவொலி எழும். பின்னர் மாது அவர்களுடைய பேச்சாற்றலுக்குக் கிடைக்கும் வரவேற்பில் அடிக்கடி அரங்கம் கரவொலியால் அதிரும். தந்தைக்கேற்ற தனயன். ஆம் உண்மைதான். நெல் போட்டால் நெல் விளைவது உறுதி. அதுபோல தந்தையின் அறிவு மகனிடத்தில் மிளிரும் என்பதை நாலடியார் என்ற நூலில் ஒரு பாடலில் நாம் காணலாம். அப்பாடல் இதுதான்,

செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றுமச்

 செந்நெல்லே யாகி விளைதலால்அந்நெல்

 வய னிறையக் காய்க்கும் வளவயல் ஊர!

 மகனறிவு, தந்தை அறிவு.

இன்றைக்கும் எங்களைப் போன்ற பேச்சாளர்கள் மேடைப் பேச்சுகளில் வெற்றி பெறுகிறோம் என்று சொன்னால் அதற்குப் பேராசிரியர் திருச்சி இராதாகிரு~;ணன் ஐயா போன்றவர்கள் போட்ட இராஜப்பாட்டை பாதைதான் காரணம் என்பதை பெருமிதத்தோடு சொல்வோம்.

பேச்சுலகில் ஒரு பெரும் பேராசிரியர் திருச்சி இராதாகிரு~;ணன் அவர்கள் என்பது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

அன்புடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.