டைனிங் டேபிளில் சாப்பிட்ட குரங்கு…

“வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்று சொல்வார்கள். இவை பொய்யில்லை. மிகையுமில்லை.
வெவ்வேறு அளவில் மனஅழுத்தங்கள் இன்றைக்கு அதிகரிக்கின்றன. இளைஞர்களில் பலருக்கும் மன அழுத்தங்கள் இருக்கின்றன. சிரிக்கத் தெரிந்தால் இந்த மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
வெளிநாட்டில் ஆபரேஷனுக்கு முன்பு ஒருவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் போனார்கள். அவர் மறுத்துவிட்டு ‘வேண்டாம்… சார்லி சாப்ளின் படத்தைப் போடுங்கள் போதும்’ என்றிருக்கிறார். அதன்பிறகு ஆபரேஷன் நடந்திருக்கிறது. நகைச்சுவையின் வலிமை அது.
கேன்சராலோ, எய்ட்ஸாலோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னால் ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பபூன்’ போல வேஷம் போட்டு வித்தைகள் காட்டியபோது, அந்தக் குழந்தைகள் அப்படியொரு சிரிப்புச் சிரித்தார்களாம்.
இதுவும் நகைச்சுவையின் வலு. நாங்கள் மதுரையில் பல ஆண்டுகளாக ‘நகைச்சுவை மன்றத்தை’ நடத்துகிறோம். அதில் பல குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து ‘ஜோக்’ சொல்லச் சொல்கிறோம்.
அவர்களுடைய பெற்றோர் சொல்லித் தந்தாலும், குழந்தைகள் சொல்வது ஒரு அழகு. முகபாவனை, அங்க அசைவுகள் மூலம், நளினமாகச் சிரிக்க வைக்கிற அபூர்வமான கலை. இப்போது மறைந்துவிட்டது, படித்து விட்டுச் சிரிப்பது ஒரு வகை. பழையவற்றை நினைவுபடுத்திச் சிரிப்பது இன்னொரு வகை.
இலங்கை வானொலியில் ‘கீரை கிண்டிய கட்டபொம்மன்’ என்று ஒரு நாடகம் ஒலிபரப்பாகும். சீரியஸான வசனங்களையே மாற்றி, அதில் நகைச்சுவையாக்கி இருப்பார்கள்.
‘இரும்புத்தலைவன் என்று எனக்குப் பெயர்’ என்று வெள்ளைக்காரன் சொல்லி, ‘அது உருக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறு தான்…’ என்று வசனம் வரும்.
அந்த வானொலி நாடகத்தில் ஓட்டல் வைத்திருப்பான் கட்டபொம்மன். அவரிடம் வரிவசூலிக்க வந்தவன் சொல்வான், ‘எனக்கு அப்பளத்தலையன் என்று பெயர்’.
உடனே கீரை கிண்டிய கட்டபொம்மன் சொல்வான், ‘அது நொறுக்க வேண்டிய பொருள், அதனிடம் இரக்கம் காட்டிப் பேசியது தவறுதான்’.
இதுபோல ‘திருவிளையாடல்’ வசனம்கூட, கல்லூரி விழாக்களின்பேர்து கேலியாகப் பயன்படுத்தப்படுகின்றன. நகரங்களை விட கிராமப்புறங்களில் இளைஞர்களிடம் ‘என்ன மாப்ளே!’ பங்காளி என்று பண்ணுகிற கிண்டல்கள் அதிகம்.
ஒருத்தர் ஜோக் சொன்னால் – ‘இப்படித்தான் எங்க ஊர்லே’ என்று இன்னொருவர் ஆரம்பிக்க, அப்புறம் ரகளை தான். இந்தச் சூழல் உருவாக்கும் அன்யோன்யம் அதிகம்.
சிரித்த முகத்துடன் நகைச்சுவை உணர்வோடு இருக்கிறவர்களை விரும்புகிறவர்களும் அதிகம். எங்க வீட்டில் நடந்த சம்பவம். வெளியே கடைக்குப் போய்விட்டு வந்து, வீட்டைத் திறந்தோம். நாங்கள் சாப்பிடுகிற டைனிங் டேபிளில் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. என்னுடைய மனைவி நுழைந்ததும் போட்ட வீல்’ என்ற அலறலில் குரங்கு ஆடிப்போய் விட்டது. ‘குரங்கை இந்த அளவுக்குப் பயமுறுத்தி விட்டீர்களே!’ என்று மனைவியைக் கேலி செய்வார்கள் பிள்ளைகள். இன்னொரு கூட்டம் கண்ணதாசனைப் பற்றி விறுவிறுப்பாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு பேச்சாளர் ‘கண்ணதாசனின் இயற்பெயர் என்ன தெரியுமா?’ என்று கேட்டார். சிறிது இடைவெளிவிட்டு ‘அவருடைய பெயர் முத்தையா’ என்று சொன்னாலும் சொன்னார்.
உடனே எதிரே உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன், அவரைப் பார்த்துக் குறும்புடன் சொன்னான், ‘உள்ளேன் ஐயா’
எந்தச் சீரியஸான பேச்சையும் உணர்வையும் நகைச்சுவை திசை திருப்பிவிடும்.