அடுத்த வீடே…. அயல்கிரகம்தான்…

               விருந்தே புதுமை’ என்கிறது தொல்காப்பியத்திலுள்ள ஒரு நூற்பா. அக்காவோ, தாத்தாவோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நம் வீட்டுக்கு வந்தால், அவர்கள் எல்லாம் விருந்தாளிகள் இல்லையாம். யாரோ முகந்தெரியாமல் வருகிற ஒருவரை வரவேற்று உபசரிப்பதற்குப் பெயர்தான் விருந்து.

               நண்பர்களுக்கு விருந்தளிப்பது கடமை. உறவினர்களுக்கு விருந்தளிப்பது உரிமை. நம்மூரைப் பொறுத்தவரை, சிலப்பதிகாரத்திலும், கம்பராமாயணத்திலும் விருந்தைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் விருந்தோம்பலைப் பற்றித் தனி அதிகாரமே படைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் காக்க வைத்துவிட்டு அமிர்தமாக இருந்தாலும் சாப்பிடக்கூடாது என்கிறார் அவர்.

               மழைக்காலத்தில் ஊருக்குள் நுழைகிறவன் அங்கு தங்கிக்கொள்ள முடியும் என்பதற்காகத்தான், கிராமப்புறங்களில் வீட்டுத்திண்ணை என்கிற முறையே இருந்தது.

               இன்றைக்கும் கிராமப்புறங்களில் எந்நேரம் போனாலும், ‘சாப்பிடுறியாப்பா?’ என்று கேட்பார்கள். ‘இது சாப்பாட்டு நேரமா?’ என்று நம்ம ஆட்கள் சிலர் சிரிக்கக்கூடும்.

               இப்போது திண்ணை போய், காம்பவுண்ட் சுவர் முளைத்து, நாய்கள் சுற்றி வருகின்றனவே தவிர, விருந்தோம்பல் குறைந்து போய்விட்டது.

               வெளிநாடுகளில் முன்கூட்டியே தெரிவிக்காமல் விருந்தாளிகள் வருவதைப் பொதுவாக விரும்புவதில்லை. நம்ம ஆட்கள் மாதிரி ‘சர்ப்ரைஸ் விசிட்’ எல்லாம் அங்கு கிடையாது. முன்கூட்டியே தெரிவிப்பதால், வருகிறவர்களைக் கவனிக்க, நேரம் ஒதுக்க அவர்களால் முடிகிறது.

               இதெல்லாம் நாகரிகமா என்று கேட்கக் கூடாது. நாகரிகம் காலத்திற்கேற்ப மாறுகிற விஷயம் முன்பு திருமணம் என்றால் நெருங்கிய சொந்தபந்தங்களை நான்கு நாட்களுக்கு முன்பே வரச்சொல்லி விடுவார்கள். வருகிற பெண்கள் முறுக்கு மாவு இடிப்பார்கள், சமைப்பார்கள். இப்போது விருந்துக்காகச் சமைப்பதையே, ஒரு குழுவிடம் ஒப்படைத்து விடுவதால், வீட்டுப்பெண்களும் மற்ற காரியங்களைப் பார்க்க முடிகிறது.

               முன்பும் களவு, கொள்ளை போன்ற குற்றங்கள் இருந்தாலும், திண்ணையும், விருந்தோம்பலும் இருக்கத்தான் செய்தன. அதே ஊரில் இப்போது முகம் தெரியாத ஆட்களைப் பார்த்து மிரளுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம், நம்முடைய ஊடகங்கள் பரப்பி வைக்கிற பீதிதான்.

               இதன் விளைவு, யாரைப் பார்த்தாலும் சந்தேகப்பட்டு, பயந்து, அடிப்படையான விருந்தோம்பலும், உபசரிப்பும் அபூர்வமாகிப் போய்விட்டன. வருகிறவர்களைக் கண்காணிப்பதற்கான கண்ணாடியைக் கதவுகளில் பொருத்துகிறார்கள். பாதுகாப்புச் செயின் கதவுகளில் தொங்குகிறது. சி.சி.டிவி கேமராக்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.

               கிராமங்களிலும் இந்த நாகரிகம் தலைகாட்டினாலும், கிராமத்து இயல்பு முழுக்க மாறிவிடவில்லை. இன்றைக்கும் ஊரில்போய் முகவரியைத் தேடினால், பொறுப்பாகத் தன் வேலையை விட்டுவிட்டு, நம்மிடம் வந்து வழிகாட்டுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

               மதுரையில் நான் குடியிருந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒரு பெண் கேட்டார்…

               ‘நீங்க இங்கதான் இருக்கீங்களா?’

               ‘என்னைப் பார்த்திருக்கிறீர்களா, தெரியுமா?’ – என்று கேட்டேன்.

               டி.வி.யிலே பார்த்தேன்…’ என்று சொன்னார் அந்தப் பெண்.

               ஜன்னலைத் திறந்தால் என்னுடைய வீட்டைப் பார்த்துவிட முடியும். ஆனால் சாட்டிலைட் மூலம்தான் அறிமுகமாக வேண்டியிருக்கிறது.

               அண்டை வீடு நமக்கு அயல் கிரகம் மாதிரி ஆகிவிட்டது.

அமெரிக்கா அடுத்த வீடு மாதிரி ஆகிவிட்டது.

               சுற்றுச்சூழல் கல்வி மாதிரி மனிதாபிமானத்தையும், விருந்தோம்பலையும் கூட, இனி வலியுறுத்த வேண்டியிருக்கும் போலிருக்கிறது.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.