ஷேக்ஸ்பியர் வீடும்… ஜி.யு.போப் கல்லறையும்…

இந்த ஆண்டு (2019) பொங்கல் விழாவை நான் எங்கு கொண்டாடினேன் தெரியுமா? பொங்கல் என்றால் வழக்கமாக நகரத்தில் இருப்பவர்கள் கிராமத்தை நோக்கிப் போவார்கள். ஆனால் நானும் என் துணைவியாரும் லண்டன் மாநகருக்குச் சென்றோம்.

          லண்டன் தமிழ்ச்சங்கம் மிகப் பழமை வாய்ந்த ஒன்று. விரைவில் மணிவிழா காணப்போகின்ற மாபெரும் சங்கம். இதுமட்டுமில்லை உலகின் எல்லா நாடுகளிலும் தமிழ்ச்சங்கங்கள் இருந்தாலும் லண்டனில் ஹை ஸ்ட்ரீட் நார்த், மனோர் பார்க் என்கின்ற இடத்தில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருப்பதுதான் இப்பெருமை வாய்ந்த சங்கத்தின் தனிச்சிறப்பு.

          வேலம்மாள் கல்விக் குழுமங்களின் ஊநுழு வேல்முருகன் அவர்கள்தான் நான் லண்டன் செல்வதற்கான பேருதவி செய்ததோடு லண்டனில் வசித்து வரும் சமூகப் பணியாளர் திரு.சண்முகசுந்தரம் அவர்களிடத்திலே எங்களை அன்போடு பார்த்துக்கொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்து, ‘தமிழையே உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன்என்று பெருமைபடக் கூறினார். திரு.சண்முகசுந்தரம் அவர்களும் கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல் எங்களைப் பத்து நாளும் அன்போடு பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தன் வீட்டில் எங்களுக்கு விருந்து கொடுத்து, நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கெல்லாம் தன்னுடைய காரில் எங்களை அழைத்துச் சென்றார்.

          லண்டனில் ஆர்பிங்டன் என்ற பகுதியில்விதைநெல்என்ற தமிழ்ச்சங்கத்தை என்னிடத்தில் தியாகராசர் கல்லூரியில் படித்த மாணவர்  திரு.பிரபு அவர்கள் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். தற்காலத்திலும் ஆசிரியர் மாணவர் உறவு எத்தனை பெருமையோடு விளங்குகிறது என்பதற்கு அவரே ஒரு சான்று. தான் நடத்துகின்ற அத்தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்துச் சென்று என்னைப் பேசவைத்துப் பெருமை சேர்த்தார். அத்தோடு லண்டனில் நான் இருந்தவரை என்னோடு தொடர்பில் இருந்து என் தேவைகளைக் கவனித்துக் கொண்டார்.

          தமிழ்நாட்டிலே பிறந்து லண்டனில் மிகச்சிறந்த தொழிலதிபராகவும் லண்டன் தமிழ்ச்சங்கத்தின் முன்னால் பொறுப்பாளராகவும் விளங்கிய திரு.வீரா அவர்கள் என்னிடத்தில் கேட்ட முதல் கேள்வி, ‘ஷேக்ஸ்பியர் வாழ்ந்த வீட்டிற்குப் போவோமா? இந்த வார்த்தையைக் கேட்டவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. தமிழ்நாட்டில் பாரதி பிறந்த வீட்டையும், கம்பன் பிறந்த தேரெழுந்தூரையும் தரிசித்து மகிழ்ந்தவன் நான். மறுநாளே புறப்பட்டு விட்டோம். கொட்டும் பனி மைனஸ் 3டிகிரி. 3 மணிநேரக் கார் பயணம். ஆனால் அலுப்புத் தெரியாமல் நாங்கள் பேசிக்கொண்டே சென்றோம்.

          ஷேக்ஸ்பியர் வீட்டை அவர் வாழ்ந்த கிராமத்தில் அவர் வாழ்ந்தபோது அவ்வீடு எப்படி இருந்ததோ (16ஆம் நூற்றாண்டு) அப்படியே பராமரித்து வருகிறார்கள். ஷேக்ஸ்பியரின் தந்தையார் மிருகங்களின் தோலைவைத்துச் சிறிய தொழிற்சாலை நடத்தி வந்திருக்கிறார். அவர்கள் பயன்படுத்திய பொருள்களெல்லாம் அப்படியே பழமைப் பொழிவோடு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வீடு முழுவதும் அவரது நாடகப் பாத்திரங்கள் ஓவியமாகவும் அவரது நாடகவரிகள் காவியமாகவும் தீட்டப்பட்டிருந்தன. அப்படிப் பார்த்துக்கொண்டே மரப்படிகளில் ஏறிச்செல்லும்போது மாடி அறையில் ஷேக்ஸ்பியர் இருப்பாரோ? என்ற எண்ணம் எனக்கு வந்தது. அவருடைய பிறந்தநாளில் அந்த ஊரே விழாக் கோலம் பூணுமாம். ஷேக்ஸ்பியரின் நாடகப் பாத்திரங்களான ஒத்தல்லோ, மேக்பத் போன்று வேடமணிந்து ஊர் மக்கள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருப்பார்களாம்.

நாங்கள் கொட்டும் பனியிலும் அங்கு உணவு சாப்பிடுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் நம்ம ஊர்ப் புளியோதரையையும் பொங்கலையும் ஒரு கை பார்த்தபோது எங்கள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் முகத்தில் தெறிக்கும் பனியோடு சேர்ந்து வழிந்தது.

          பின்னர் நாங்கள் காரில் புறப்பட்டபோது, ‘ஜி.யு.போப்பின் கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்; என்ற வாசகம் இருப்பது உண்மையா?’ என்று நான் நண்பர்களிடத்தில் கேட்டேன்.

நாளைக்குப் போய் பார்த்துவிடலாம்என்று அவர்களும் மகிழ்ச்சியாகச் சொன்னார்கள். மறுநாள் எங்களோடு நண்பர் அருணும் சேர்ந்து கொண்டார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை நோக்கி எங்கள் கார் விரைந்தது.

நாங்களும் இத்தனை வருடமாக இந்த நாட்டில்தான் இருக்கிறோம். ஆனால் ஜி.யு.போப்பின் கல்லறையைக் காணவேண்டும் என்று தோன்றவில்லையேஎன்று நண்பர் வருத்தப்பட்டுக் கொண்டார். அப்போது நான் சொன்னேன், ‘அயர்லாந்து தேசத்திலே பிறந்து தமிழகத்தில் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்களில் ஒருவர்தான் (ஜார்ஜ் உக்ளோ போப்) ஜி.யு.போப். ஆனால் நம் தமிழ்மொழி அவரைத் தன்பால் ஈர்த்தது. திருக்குறளை, நாலடியாரை, திருவாசகத்தை உலகிற்கு மொழிபெயர்த்துத் தந்தவர் அப்பெருமகனார்தான்என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போதே ஆக்ஸ்ஃபோர்டு நகருக்குள் எங்கள் கார் நுழைந்தது. உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் அதுவும் ஒன்று. (இப்பல்கலைக்கழகத்தில்தான் என் மகன் பயின்றார் என்ற எண்ணமும் எனக்குப் பெருமையைத் தந்தது) அந்த ஊரே அந்தப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தும், வீதிகள் எல்லாம் அந்நாட்டு கவிஞர்கள், கல்வியாளர்களின் பெயரில்தான் அமைந்திருக்கின்றன.

          நண்பர் சண்முகசுந்தரமோ, ‘இன்னும் அரைமணிநேரத்தில் கல்லறையில் இருப்போம், இன்னும் பத்து நிமிடத்தில் கல்லறைக்குப் போய்விடுவோம்என்று சொல்லிக்கொண்டே வர எல்லோரும் அதைநினைத்துச் சிரித்துக்கொண்டே சென்றோம். அங்கிருந்த மக்கள் யாருக்கும் ஜி.யு.போப்பின் கல்லறை பற்றித் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் கண்டுபிடித்து அங்கே சென்றோம்.

ஆங்கில டிராகுலாப் படங்களில் காட்டப்படுகின்ற கல்லறைப் பகுதிகள் போல், கொட்டும் பனியில் உதிர்ந்த சருகுகளுக்கிடையே நாங்கள் நடந்துசென்று அந்தக் கல்லறையைப் பார்த்தோம். சமீபத்தில் அந்தக் கல்லறையில் யாரோ மலர்க்கொத்து வைத்திருக்கிறார்கள். நான் மீண்டும் ஜி.யு.போப்பின் பெருமைகளைச் சொல்லத் தொடங்கினேன். அதன் அருகில் குடியிருந்த அந்நாட்டுப் பெண்மணி நான் சொல்வதைக் கேட்டு (நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க) வியந்து போனார்கள்.

          ‘நீங்கள் சொன்னபடி இவற்றில் தமிழ் எழுத்துக்களைக் காணவில்லையே? என்று என் துணைவியார் என்னிடத்தில் கேட்டார். அவரும் தமிழில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்தான். அப்போது நான் சொன்னேன,; ‘ஒருவேளை இவரது உயிலில் இவர் எழுதியிருக்க வேண்டும். தன் கல்லறையில் இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்றும் தாமிரபரணி தண்ணீரில் ஒரு குவளையும், திருக்குறளில் ஒரு ஏடும் இங்கிருக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம்என்று சொன்னேன்.

மேலும் நம் தேசத்தந்தை காந்தியடிகள் தான் குருவாக நினைத்த ரஷ்யநாட்டின் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரான லியோடால்ஸ்டாய் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதில் வாழ்க்கையில் துன்பங்களும் சிக்கல்களும் வரும்போது என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தாராம். அதற்கு லியோடால்ஸ்டாய்இந்துவுக்கு ஒரு கடிதம்எனும் தலைப்பில் காந்தியடிகளுக்கு இப்படிப் பதில் எழுதினாராம். ‘உங்கள் கேள்விகளுக்கான விடை உங்கள் இந்தியநாட்டில் தமிழ்மொழியில் உள்ள திருக்குறள் என்ற நூலில் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பை நான் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அந்நூல் உலகம் போற்றும் ஒரு நூல். அதனைப் படித்துப் பாருங்கள்என்று லியோடால்ஸ்டாய் கூறக்காரணம் இதோ இந்தக் கல்லறையில் இருக்கும் இப்பெருமகனாருடைய திருக்குறள் மொழிபெயர்ப்புதான்என்று நான் சொன்னபோது அத்தனை பேரும் மெய்மறந்து கேட்டார்கள். ஷேக்ஸ்பியர் இல்லத்தில் செய்ததுபோலவே இங்கேயும் கொஞ்சம் மண்ணெடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டோம்.

          லண்டனில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்களே அங்கிருக்கிற பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கிறார்கள். தமிழ்ச்சங்க விழாவில் தலைவர் திரு.சாமி, செயலாளர் உதயகுமார், பொருளாளர் விஜயசூர்யா துணைத்தலைவர் சேது மற்ற நண்பர்கள் அத்தனை பேருடைய உழைப்பினால் பொங்கல்விழா தமிழின் இயல், இசை, நாடகத்தோடு இனிதே நிறைவேறியது.

          செம்ஸ்ஃபோர்டு நகரிலிருந்த தமிழ்ச்சங்கத்திலும் நான் பேசினேன். அந்நகரில்தான் வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி தன்னுடைய வானொலி ஒலிபரப்பு நிலையத்தை அமைத்திருந்தாராம். அங்கே மார்க்கோனி அரங்கத்தில்தான் தமிழ்ச்சங்க விழா நடந்தது.

தலைவர் சந்துரு எங்களை எல்லாம் வரவேற்றார்.; தலைவாழை இலைபோட்டு கறி விருந்தோடு பாண்டிகோவில் கிடாவெட்டு மாதிரி அத்தனைபேரும் மகிழ்ச்சியோடு உணவருந்தினோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனைபேரும் தமிழ்ப்பண்பாட்டின்படி வேஷ்டிசட்டை, பட்டுச்சேலைகளோடு வந்து விழாமேடையில் தமிழ்த்தாய் வாழ்;த்துப்பாடி ஒரு நூலினையும் வெளியிட்டுபொங்கலோ பொங்கல்என்று உற்சாகமாக அவர்கள் குரல் எழுப்பியபோது நாம் மதுரையில் இருக்கிறோமா, லண்டனில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசை நாடுகளின் ஓலைச்சுவடி சேகரிப்புப் பகுதியில் தமிழ்நாட்டு ஓலைச்சுவடிகளைப் பார்த்தவுடன் நான் மெய்சிலிர்த்துப் போனேன். அருணாசலக்கவிராயர் எழுதிய இராமநாடகக் கீர்த்தனையை நூல்வடிவத்தில் தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை லண்டன் பல்கலைக்கழகத்தில்தான் பார்த்தேன். அப்பல்கலைக்கழக வளாகத்த்pல்தான் திருவள்ளுவருக்கான உருவச்சிலையும் இருக்கிறது. அவரும் போதி மரத்துப் புத்தர்போல புல்வெளியில் அமர்ந்து காட்சி தருகிறார். உயர்ந்த பீடம் ஏதும் அவருக்கு இல்லை.

லண்டன் மாநகரித்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலிலும், லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலிலும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இருந்த சபையில் பேசுகிற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

          தேம்ஸ் நதிக்கரையையும் பிரிட்டிஷ் மியூசியத்தையும், மேடம் துஸாட்ஸ் (ஆயனயஅந வுரளளயரனள) மெழுகுக் கண்காட்சியில் உலகத் தலைவர்களையும் பார்த்துவிட்டுப் புறப்பட்டபோதுசொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமாஎன்று செல்போனில் ஒலித்த பாட்டு வைகையை நோக்கி எங்களை திருப்பியது. நான் சென்ற உலக நாடுகளிளெல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் அந்நாட்டுத் தமிழ்ப்பிள்ளைகள் அருமையாகத் தமிழ்க் கற்பதைப் பார்க்கப் பொறாமையாய் இருக்கிறது. இனிமேல் தமிழ்ப் படிக்க வேண்டுமென்றால் அயல்நாடுதான்  செல்லவேண்டுமோ? என்ற கவலையும் ஏற்பட்டது. ஆனாலும் தமிழ், தோன்றிய இடத்தில்தான் வேரூன்றும், கிளைகள் வேண்டுமானால் வெளியில் செல்லட்டும்.

லண்டன் பொங்கலை நினைத்தாலே நாவினிக்கிறது. அங்கு நம் தமிழைக் கேட்டதால் இப்போதும் செவி இனிக்கிறது.

                                                                                       அன்புடன்

                                                                          கு.ஞானசம்பந்தன்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.