வாழ்த்துரை – வாலியின் வள்ளுவம் வாழும் அவனியில்

திரையுலகக் கவிஞர்களில் பாபநாசம் சிவன் தொடங்கி, இன்றைக்கும் பாட்டெழுதிக்கொண்டிருக்கின்ற கவிஞர் பெருமக்களுள,; ஐந்து தலைமுறைக் கவிஞர் எனப் பெயர்பெற்று, இலக்கிய உலகிலும் கவியரங்க மேடைகளிலும் கவித்தென்றலாய் பெரும் புகழோடு உலாவந்த பெருமகனார்தான் கவிஞர் வாலி.
இராமகாதையையும்(அவதாரபுருசன்), பாரதக்கதையினையும்(பாண்டவர்;;;பூமி);, இராமானுஜகாவியத்தையும், கிருஷ்ணவிஜயத்தையும், நிஜ கோவிந்தத்தையும் மின்யுகப்புரட்சிக்காலத்தில்; வாழும் இளையசமுதாயத்திற்குக் கொண்டுசேர்த்தப் பெருமை வாலிப வாலியையே சாரும். பழமையைப் புதுமையாகவும், புதுமையை இனிமையாகவும் தர இவரால்மட்டுமே முடியும். இவரது எழுத்துலக இலக்கிய பயணத்தில் வள்ளுவ பேராசானின் குறளுக்கும் புதுக்கவிதை வடிவில் பொருள்கூற கிடைத்த இவரது நேரம் தமிழுக்குத், தமிழருக்குப் பொன்னான நேரம்.
திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் தன் நூலுக்குத் தானே உரையெழுதாமல் விட்டதால்தான் இன்றளவும் காலத்துக்கேற்ற அரிய உரைகள் ‘பாஞ்சாலியின் துகில்’ போல நமக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.
மணக்குடவர் தொடங்கி பழைய உரைகாரர் பதின்மரும் மற்றுமொரு திருவள்ளுவராக நமக்குக் கிடைத்த பரிமேலழகரும் தந்த உரைகள் தங்க உரைகள். மருங்காபுரி ஜமீன்தாரிணியாகிய ஒரு பெண்மனியும் திருக்குறள் தீப அலங்காரம் எனும் பெயரில் குறளுக்கு உரை செய்திருப்பது நினைக்கத்தக்கது.
‘திருக்குறள் நீரோட்டம் பாயாத இலக்கிய வயல்களே இல்லை’ என்பார் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உரையாசிரியர்களில் ஒருவராகிய வ. சுப மாணிக்கனார்.
திருக்குறளுக்கு ஓராயிரம் உரைகள் வந்தாலும் இந்த நூற்றாண்டில்; திருவரங்கத்தார் இருவர் தந்த இன்னுரைகள்தான் நமக்கு கண்மணிகளாய் காட்சி தருகின்றன. அவ்விருவரில் ஒருவர் சுஜாதா மற்றவர் வாலி.
‘முப்பாலில் முதற்பாலை மட்டுமே எழுதி முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள்’ ஆயிற்று என வாலி அவையடக்கமாய் கூறும் போதே கம்பரின் நினைவுதான் நமக்கு வருகின்றது.
இவரது புதுக்கவிதை உரை குறள்போல இனிக்கிறது, இவருக்கே உரித்தான இயைபுத் தொடை அலங்காரத்தால், இவரின் குறள் உரையைப் பதவுரையும், தெளிவுரையும் இன்றிப் பாமரரும் படித்து மகிழ முடியும்.
அறத்துப்பால் உரையில் சில அமுதத் துளிகள்,
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’ எனும் முதற் குறளுக்குத் தன் சொல் விளையாட்டால் உரை கூறத் தொடங்குகிறார்…
‘அக்கரங்களில்
ஆரம்பமாவது
அகர உயிர்…
அக்கரங்களில்
ஆரம்பமாவது
அகில உயிர்’
இல் வாழ்க்கையில் ‘இல்வாழ்வான் என்பான் என்னும் குறளுக்கு
மூவர்க்கும் நன்
முறையொடு புரிவான் உதவி
இசைபெறும் (புகழ்பெறும்) அவனால்
இல்வாழ்வான் எனும் பதவி
‘பொறையுடைமை’ அதிகாரத்தில் ‘நிறைவுடைமை’என்னும் குறளுக்கு
நீ
நிறைகுணத்தின் சொரூபி எனும்
புகழோடு விளங்க உன்
பொறை குணத்தை நிரூபி எனும் சிற்றுரை குறள் வடிவிலேயே நம்மை வியக்க வைக்கிறது.
‘புகழென்னும்’ அதிகாரத்தில் ‘வசையென்ப வையத்தார்க்கு’ எனும் குறளுக்கு இவர்போல உரை சொல்வார் யார்? வாலியாரே சொல்லுகிறார்
உனக்குப் பின்
உன்புகழை
வைத்துவிட்டுப் போ
வான்வழி ; இல்லையேல்
வந்து சேரும்
வீண்பழி
நிறைவாக ‘ஆசை நீர் வி;டாவிடில் அவலச்செடி பட்டுவிடும் விட்டால்
மீண்டும் மீண்டும் மொட்டு விடும் என்றும்
‘இம்பர் உம்பர்
இரண்டிலும் இன்பம் தின்பர்’ என சொற்சாலம் புரியும் வாலியார்,
ஊழின் பெருவழி யாவுள எனக் கேட்டு ‘உலகில் ஊழைவிடப் பெருவலி உளதா ஒருவலி? எனக் கேட்டு அறத்துப்பாலை நிறைவு செய்கிறார்.
குறளென்னும் குழந்தையை அள்ளி முத்தம் இடாதார் யார்? அதனால் பெருமை பெறாதார் யார்?
இவ்வகையில், வாலியின் வள்ளுவம் என்றென்றும் வாழும் அவனியில் எனப் பாராட்டிக் கவிஞர் வாலியின் அடிச்சுவட்டில் தன் கவி மலர்களால் நாளும் அர்ச்சிக்கும் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களுக்கும் என் அன்பு பாராட்டு.
வாழ்த்துக்களுடன்
கு.ஞானசம்பந்தன்