வாழ்த்துரை – கலைமாமணி, முனைவர், பேரா.கு.ஞானசம்பந்தன், எம்.ஏ.எம்.பில்.பி.எச்.டி.

புதிய இலக்கியங்கள் தமிழன்னைக்கு அணிவிக்கப்படும் சிறு அணிகலன்கள் என்பது நூலோர் கருத்து. எளிய செய்திகளைக் கூட இலக்கிய நயத்தோடு சொல்லப்புகுந்தால் அது கேட்போருக்கும், கற்போருக்கும் என்றென்றும் இனிமை பயக்கும் என்பது உண்மை.
சான்றாகத் தமிழ் நாட்டின் மும்மணிகளில் (பண்டிதமணி. கதிரேசச் செட்டியர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்) ஒருவராகிய பண்டிதமணி அவர்கள் ஒருமுறை தம் மாணவர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தாராம். அவ்வீட்டார் பண்டிதமணி அவர்களுக்கு வெள்ளிக் குவளையில் பால் தந்தார்களாம். பாலை கையிலே பெற்றுக்கொண்ட பண்டிதமணி சற்றுநேரம் அதனை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாராம். உடனே அவ்வீட்டார் ‘ஐயா என்ன பார்க்கிறீர்கள் என்று ஆவலாய் கேட்க, ‘பார்க் கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்’ என்றாராம் நகைச்சுவையோடு. எல்லோரும் அந்தக் குவளையை வாங்கிப் பார்க்க அதில் ஒரு சிற்றெரும்பு இருந்ததாம். இதனைத்தான் பண்டிதமணி அவர்கள் சீனியிலே வாசம் செய்யும் (வாழும்) சிற்றெரும்பை சீனிவாசன் என்றும், வெள்ளிப் பாற்குவளையை திருப்பாற் கடலென்றும் வேடிக்கையாய் குறிப்பிட்டாராம்.
பாலில் எறும்பு கிடக்கிறது என்பதைக் கூட இவ்வளவு இனிமையாக நம் தமிழ் மொழியில் தான், தமிழாய்ந்த பெருமக்களால்தான் கூறமுடியும் என்பது உண்மை. இவ்வகையில் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம’; எனும் சிறந்ததொரு ஆய்வு நூலினை எப்போதும் தேனீயைப் போல் சுறுசுறுப்பாய் இயங்குகின்ற தேனி மாநகரத்தின் திரு.சீனிவாசன் அவர்கள் படைத்துத் தந்துள்ளார்.
தமிழ்மொழியில் இயற்றப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் யாவராலும் விரும்பிப் படிக்கப்படுகின்ற இன்சுவைக் காப்பியமாக விளங்குவது சிலப்பதிகாரமே என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இச்சிலப்பதிகாரத்தின் படித்துத் தாம் இன்புற்றதோடு “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என அரிய செய்திகளை எளிய நடையில் படைத்துத் தந்துள்ள நூலாசிரியருக்கு நம் பாராட்டு
இக்காலத்தில் பண்டைய தமிழ் இலக்கியங்களைப் படித்து இன்புறுகின்றவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறன்றி ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட தணியாத ஆர்வத்தினால், சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து, இத்திறனாய்வு நூலினைப் படைத்து, சிலப்பதிகாரத்தின் பெருமையை யாவரும் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் தமிழுலகிற்கு அளித்துள்ளார்.
இத்திறனாய்வு நூல் சிறந்ததொரு நூல் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கோவலனுக்கும் கண்ணகிக்கும் புகார் நகரத்தில் திருமணவிழா நிகழ்ந்த போது, பெண்டிர் பலர் கூடிநின்று கோவலனின் அழகினைப் போற்றுகின்றனர். அப்போது அவர்கள் கோவலனை, “கண்டேத்தும் செவ்வேள் என்றிசை போக்கி” என்று பாராட்டி உரைக்கின்றனர். வேள் என்னும் சொல்லுக்கு முருகன் என்றும், மன்மதன் என்றும் இருபொருளுண்டு. முருகனுக்கும் இரண்டு மனைவியர்; மன்மதனுக்கும் இரண்டு மனைவியர். எனவே கோவலனுக்கும் கண்ணகியைத் தவிர, மாதவி என்பாளும் மனைவியாக வரப்போகின்றாள் என்பதனை முன்கூட்டியே குறிப்பதாக வேள் என்னும் சொல் அமைந்துள்ளது என்பதனை நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ள திறம் வியப்பையும் நயப்பையும் பயப்பதாக உள்ளது.
“நவில்தொறும் நூனயம் போலும்” என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்கு. அஃதாவது ஒரு சிறந்த நூலானது புதிய பொருள்களையும,; புதிய இலக்கிய இன்பத்தினையும் தருவதாக விளங்க வேண்டும். அவ்வாறு நோக்கும் போது சிலப்பதிகாரம் படிப்பவர்களுக்குப் புதிய புதிய இலக்கிய இன்பச் சுவையினைத் தருகின்ற நூலாக விளங்குகின்ற காரணத்தாலேயே, ஆசிரியர் எஸ்.ஆர்.பி. சீனிவாசன் அவர்கள் சிலப்பதிகாரத்தை தம் ஆய்வுக்குரிய நூலாக எடுத்துக்கொண்டு இத்திறனாய்வு நூலினை எழுதியுள்ளார்.
தமிழின் சுவையையும் இணையற்ற இன்பமாகிய இலக்கிய இன்பத்தினையும் பெறவிழையும் அனைவரும் ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ வாங்கிப் படித்துப் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன்.
நூலாசிரியர் சீனிவாசன் அவர்களின் தமிழ்த் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தி அமைகின்றேன்.