தொல்லியல் பல்கலை வித்தகர் தொ.ப…

தமிழகத்தின் ஆய்வுலகில், எழுத்துலகில் மானுடவியல் பற்றிய சிந்தனையில் தனித்தனியே புகழ்பெற்ற அறிஞர்கள் பலரை நாம் வியப்போடு வணங்குகிறோம். அவர்களின் படைப்புகள் மூலமாக புதியதோர் உலகில் பயணிக்கிறோம். இத்துறையில்; தனக்கே உரிய தனியானதொரு ஆய்வு நெறிமுறையை தேர்ந்தெடுத்த பெருமகனார் யார் தெரியுமா?
களஆய்வுச் சிந்தனையாளராக, மானுடவியல் அறிஞராக (யுவொசழிழடழபளைவ) வைணவத்தில் பெரியாழ்வார் தொடங்கி சுயமரியாதையில் தந்தை பெரியார் வரை ஆழமான நுட்பத்தோடு அறிந்தும், உணர்ந்தும், எழுதியும், கற்பித்தும், பேசியும், வாழ்ந்தும் வந்த அறிஞர்தான் பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள். இவர் அனைவராலும்; தொ.ப. என்றே அன்புடன் அழைக்கப்பட்டார்.
அவர் எப்போது பேசினாலும் அவரது பேச்சில் பொதுவுடைமைத் தத்துவங்கள், புகழ்மிக்க சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், பக்திஇலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உலகஇலக்கியங்கள் சார்ந்த செய்திகள் அருவியாய்ப் பாய்ந்து வந்து பயன்நல்கும்.
அவரின் ‘அழகர் கோவில்’ புத்தகத்தை மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமே வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. அவர் எழுதிய பல நூல்களுள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்ற நூல் ‘பண்பாட்டு அசைவுகள்’ எனச்; சொல்லலாம். அப்படி என்ன அந்த நூலில் இருக்கிறது? பதச்சோறாக ஒரு செய்தி.
கிராமத்தில் ஒரு துக்கவீட்டில்; நடந்த அரிய பண்பாட்டு நிகழ்வு ஒன்றை தான்நேரடியாகக் கண்ட அனுபவத்தின் மூலம் இவ்வாறு விளக்குகிறார் தொ.ப.
‘அந்த வீட்டின் தலைவனாக இருந்த இளம்வயது வாலிபர் ஒருவர் ஏதோ ஒரு காரணத்தால் அகாலமரணம் அடைந்துவிட்டார். அவரது உடல் இன்னும் சற்றுநேரத்தில் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக வயது முதிர்ந்த ஒரு பெண்மணி வீட்டிற்குள் இருந்து நீர் நிரம்பிய பானையோடு வெளியில் வந்து அந்த இளைஞரின் உடலருகே அந்தப் பானையை வைக்கிறார். கூட்டத்தில் இருந்த அனைவரும் மௌனமாக அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் தன் மடியிலிருந்த பூக்களில் ஒன்றை எடுத்து அந்தக் குடத்து நீர்pல் இட்டார். பிறகு இரண்டு மூன்று என்று பூக்களை இட…. கூட்டத்திலிருந்தோர் ‘ஐயோ! அடடா!’ என்று வருத்தத்துடன் சொல்ல, அந்தப்பெண் அந்தப் பானையை உள்ளே எடுத்துச்செல்ல அந்த இளைஞரின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்த நிகழ்வின் மூலம் என்ன செய்தி அறிவிக்கப்படுகிறது? அதாவது இறந்துபோன அந்த இளைஞன் திருமணமானவன் என்றும் இப்பொழுது அவளின் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்றும் மூன்றுமாதக் குழந்தை அவள் வயிற்றில் வளர்கிறது என்றும்; ஊரார் அறிந்து கொள்வதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதாம்.
நிறைகுடம் என்பது அப்பெண்ணின் கருவுற்ற வயிற்றையும், பூக்களின் எண்ணிக்கை எத்தனை மாதம் என்பதையும், எந்தச் சொற்களையும் பயன்படுத்தாமல் மௌனமொழியால் விளக்குகின்ற சமூகம்சார் அரிய நிகழ்வு அது. மேலும் இன்னும் ஏழுமாதங்கள் கழித்து குழந்தை பிறக்கிறபோது, இறந்துபோனவனை மறந்துபோன ஊர், இந்தக் குழந்தை எப்படி வந்தது? என்று கேட்டுவிடாமல் இருப்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது என்பதைக் களஆய்வில் நேரடியாகக் கண்ட தொ.ப. தன்னுடைய பண்பாட்டு அசைவுகளில் இதனைப் பதிவுசெய்யும்போது நாம் அதுவரை இலக்கிய உலகில் கண்டிராத ஓர் அரிய காட்சியைக் கண்டு வியக்கிறோம். நாட்டார் இலக்கியங்கள் நம் இலக்கிய உலகிற்குத் தந்த கொடைகளில் இதுபோன்றவையும் உண்டு என்கிறார் தொ.ப.
இவர் பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அத்தனையும் களஆய்விலும் இலக்கிய ஆழ்கடலிலும் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துக்கள் எனலாம்.
1986முதல் 1998வரை நான் பயின்ற பின்னர் பணியாற்றிய மதுரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறையில் இப்பெருமகனாரோடு பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்பன்னிரெண்டு ஆண்டுகள் நான் குருகுலத்தில் பயின்ற மாணவன்போல அவரிடத்தில் ஆர்வத்தோடும் சிலநேரங்களில் கோபத்தோடும் கலந்துரையாடியே அனைத்தையும் கற்றுக்கொண்டேன். (அன்பே சிவம் படத்தில் கமல் மாதவன் உரையாடல்போல என்று சொன்னால் கொஞ்சம் மிகையாகத்தான் இருக்கும். இருந்தாலும் அவை உன்னதமான உரையாடல்கள்)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை இவரது சொந்தஊர். இளங்கலைப் பொருளாதாரத்தை பாளையங்கோட்டையில் பயின்ற இவர் முதுகலைத் தமிழை அழகப்பா பல்கலைக்கழகத்தில் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் சாரங்கபாணி போன்றோரிடத்திலும் பயின்றிருக்கிறார்.
பின்னர் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலேயே மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘அழகர்கோவில்’ பற்றிய ஆய்வினைச் செய்து முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அதன்பின் தியாகராசர் கல்லூரிக்கு வந்து பன்னிரெண்டு ஆண்டுகள் இங்கே பணியாற்றிவிட்டு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழத்துறைத் தலைவராகப் பணியேற்று, பின்னர் விருப்பு ஓய்வுபெற்று தம் நாட்டமிகு களஆய்வுப்பணியிலும், எழுத்துப்பணியிலும் ஈடுபட்டவர்.
அவரிடத்தில் நான் உரையாடுகிறபோதெல்லாம் ஒவ்வொருநாளும் ஒரு புதிய செய்தியை அறிந்து கொள்வேன். என் தந்தையார் இருந்த காலத்தில் மார்கழி மாதத்தில் எங்கள் ஊராகிய சோழவந்தானில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நான் திருப்பாவை, திருவெம்பாவைக்கு உரை சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் என் தந்தையார்தான் எனக்குப் பல புதிய விளக்கங்களை எடுத்துச் சொல்லி என்னைப் பேசுமாறு தூண்டுவார், என் சந்தேகங்களுக்கும் விடையளிப்பார். அவருக்குப் பின் அந்த நுண்ணறிவை நான் தொ.ப. அவர்களிடம்தான் அறிந்து மகிழ்ந்திருக்கிறேன்.
வைணவ இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் தொ.ப. அவர் உரையாசிரியர்களின் சொற்களை வரிபிறழாமல் சொல்லுகின்ற ஆற்றல் பெற்றவர். இத்தனைக்கும் அவர் பொதுவுடைமைச் சிந்தனையையும், கடவுள் மறுப்புக் கொள்கையையும் கொண்டவர்தான். அதே ஈடுபாடு பக்திஇலக்கியங்களின் மீதும் அவருக்கு உண்டு என்பதுதான் ஆச்சரியம்.
“ஆயர்தம் கொழுந்து” என்னும் தொடருக்கு விளக்கமாக, ‘வேரிலே வெட்கை தட்டினால் கொழுந்து வாடுமாப் போலே’ எனும் வரி, பக்தர்களுக்குத் துயர் ஏற்பட்டால் பகவான் வாடிப்போவான் என்பதைக் குறிக்கிறது என்பதை அவர் சொல்லச் சொல்ல, நான் சிலையாக நின்றிருக்கிறேன்.
இதேபோல் சைவஇலக்கியங்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்று,
சிவபெருமான் திருமணத்திற்காக மதுரைக்குப் புறப்பட்டபோது அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) ‘எம்பெருமானே! தடாதகைப் பிராட்டியாகிய அங்கயற்கண்ணியை மணம் செய்து கொள்கிறபோதும் மணமேடையில் இதே புலித்தோல் உடைதானா? அல்லது வேறுஉடையா?’ என்று தோழமையோடு கேலிபேசுவதை ஒரு தேவாரப் பாடல் மூலம் எடுத்துரைத்ததோடு, அதற்கு விடையாகத் திருவிளையாடல் புராணத்தில் ‘சடைமறைத்து, சடாமகுடம் தரித்து’ எனும் பாடலையும் தொ.ப.அவர்கள் வினாவிடை முறையில் விளக்கிச் சொன்ன அழகு நான் வகுப்பறையில்கூட கேட்டிராத ஒன்று.
இதேபோல் ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு முன்னே இருக்கின்ற வண்டியூர் தெப்பக்குளத்தில் மாலைநேரத்தில் எங்கள் உரையாடல் தொடங்கியது. நான் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைப் பற்றி அவரிடத்தில் பேசத்தொடங்கினேன். ‘பூர்~;வா, முதலாளித்துவம், காரல்;மார்க்ஸ், மாயக்கோவிஸ்க்கி, மாக்சிம் கார்க்கி’ பற்றியெல்லாம் படிக்காதவர்கள் மனிதர்களே இல்லையா?’ என்று நான் அப்பாவியாகக் கேட்டேன்.
அவர் பலமாகச் சிரித்துவிட்டு, ‘இப்படி உட்காருங்கள்’ என்று அந்தத் தெப்பக்குளப் படிக்கட்டில் என்னை உட்காரச்சொல்லி, பொதுவுடைமைத் தத்துவங்களையும், இயங்கியல் விதிகள் (னுயைடவைiஉயட ஆயவநசயைடளைஅ) குறித்தும் சொல்லத்தொடங்கி, மிக எளிமையாக விளக்கிவிட்டுத், ‘தம்பி இந்தத் தெப்பக்குளம் எப்படி உருவானது தெரியுமா? திருமலைமன்னர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக (திருமலைநாயக்கர் மஹால்) இங்கிருந்துதான் மணல் எடுக்கச் சொன்னாராம். அப்படி மணல் எடுக்கப்பட்ட பெரும் பள்ளத்தை இப்படிக் குளமாக மாற்றினார்களாம். இந்தக் குளத்தின் வரலாறு இதுதான், இங்குதான் தைப்பூசத் திருநாளில் சொக்கநாதரும், மீனாட்சியும் தெப்போற்சவ விழாவில் பங்குபெற வருவார்கள்’ என்று அவர் சொன்னபோது ஒரு நூலகத்தில்; அமர்ந்து பல்வேறு நூல்களைப் படித்த அனுபவம் எனக்கு அப்போது ஏற்பட்டது.
அவர் பழைய புத்தகப்பிரியர். புத்தகச் சேகரிப்பாளர், வாசிப்பாளர், நேசிப்பாளர். நானும் அவரும் மதுரை வீதிகளில் பழைய புத்தகக் கடைக்குப் பலமுறை சென்றிருக்கிறோம். அப்போது கிடைத்த ஓர் அரிய புத்தகத்தை மிக்க மகிழ்வோடு எனக்குக் காட்டி, ‘இப்புத்தகம் ரேனீஸ் பாதிரியார் என்பவரால் 150ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அறிவியல் புத்தகம். பூமி சாஸ்திரம் அல்லது பூகோள சாஸ்திரம் என்பது இந்நூலின் பெயர். அரிய பொக்கி~ம் இன்று கிடைத்தது’ என்று அவர் பெருநிதி கிடைத்த வறுமையாளன்போல மகிழ்ந்துபோன காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது.
கடவுள் குறித்துப் பலமுறை நான் அவரிடத்தில் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே இருப்பேன். அவரும் அயராது எவர் மனதும் நோகாது விடை சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஒருமுறை நானும் அவரும் மதுரை மேலமாசிவீதி வழியே நடந்து வரும்போது அங்கிருந்த திண்டுக்கல் ரோடு முருகன் கோவிலைப் பார்த்து நான் வணங்குவதற்காக உள்ளே சென்றேன். அவர் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
நான் முருகனை வழிபட்டுவிட்டு வந்தவுடன் ஆர்வத்துடன் ‘தம்பி முருகனை வழிபட்டீர்களா? இந்த முருகனின் உருவஅமைப்பை வைத்துப் பார்க்கிறபோது அவரதுஇடையில் சொருகப்பட்டிருக்கும் உடைவாளின் அமைப்புப்படி இது நாயக்கர் காலத்து கோவிலாகத்தான் இருக்கவேண்டும், கீழே சில கல்வெட்டு எழுத்துக்;கள் இருக்கும், வாசித்தீர்களா?’ என்றும் கேட்டார்.
நான் உடனே சற்று கோபத்துடன் ‘நீங்கள் சொல்வதை எல்லாம் நான் பார்த்துக்கொண்டிருந்தால் கடவுளை எப்படி வழிபட முடியும்? அப்படி என்றால், நீங்கள் என்ன கடவுள் இல்லை என சொல்லுகிறீர்களா?’ என்று சற்று கோபத்தோடு கேட்டேன். உடனே அவர் தன் கையிலிருந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டு ‘இல்லேன்னு சொல்லைல தம்பி, இருந்தா நல்லதுதான’ என்று அவர் சொன்னவுடன், நான் அதிர்ந்து போனேன்.
இந்த உரையாடலைத்தான் என் இனிய நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களிடத்திலே பின்னாளில் நான் சொன்னேன். அவரும் மகிழ்ந்து தன்னுடைய தசாவதரரம் படத்தில் இதனை வசனமாக வைத்து உலகோர் அனைவரும் அறியச் செய்ததோடு, இந்த வார்த்தைகள் தொ.பரமசிவன் அவர்கள் கூறியது என்று ஒரு பேட்டியில் மிக மகிழ்வோடு கூறியிருப்பார்.
கல்லூரியில் பணியாற்றும்போது அருகில் இருக்கும் உணவு விடுதி ஒன்றுக்கு நானும் அவரும் மதியஉணவு உண்ணச் செல்வோம். அப்படி நாங்கள் தொடர்ந்து செல்வதைப் பார்த்த ஒருவர்,
‘என்ன சார் ரெகுலர் கஸ்டமரா?’ என்று எங்களைப் பார்த்துக் கேட்க,
உடனே தொ.ப. சட்டென்று ‘க~;டம் தான் ரெகுலர்’ என்று சொல்ல அந்த இடமே கலகலப்பானது. அவரது நகைச்சுவை உணர்வை நான் அறிந்தவரையில் சிறுபுத்தகமாகவே போடலாம்.
கல்வெட்டு, வரலாறு, பழந்தமிழ் இலக்கியம், பக்திஇலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை, புதுக்கவிதை, நாட்டார் வழக்காறுகள் என எல்லாத் துறைகளிலும் களங்கண்ட பெருமகனார் அவர். அவர் ஒவ்வொருமுறை சொல்லுகிற புதியசெய்தியும் அதுவரை யாரும் சொல்லாதது அல்லது நான் அறியாதது என்ற வகையிலேயே இருக்கும்.
அவ்வகையில் சில சான்றுகள்.
இளங்கோவடிகள்தான் முதன்முதலில் பெண்ணுக்கும் கோவில் அமைக்கலாம் என்பதைப் பதிவு செய்தவர். சேரன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி கண்ணகிக்குக் கோயில் அமைத்து அக்கோவிலுக்குக் கண்ணகிகோட்டம் எனப் பெயரிட்டான். அதற்கு முன்னர் தெய்வங்களுக்கும் அரசர்களுக்கும் ஆடவருக்கும்தான் சிலை உண்டு, அந்த மரபை மாற்றிக்காட்டியவர் இளங்கோவடிகள் என்பதால்தான் பாரதி அவரை மூன்று இடங்களில் பாராட்டுகிறார் என்பதை ஒருமுறை சுட்டிக்காட்டினார் தொ.ப.அவர்கள்.
மீனாட்சிஅம்மன் பாண்டியமன்னனின் மகள் என்ற நம்பிக்கையை உறுதிசெய்யும் வண்ணம், இன்றைக்கும் பாண்டியமன்னர்களின் பூவாகிய வேப்பம்பூமாலை மீனாட்சி பட்டாபிN~கத்தின்போது அவருக்கு அணிவிக்கப்படுகிறது என்பதைத் தொ.ப. தன் நூல் ஒன்றில் அருமையாக எடுத்துக்காட்டியிருப்பார்.
கடவுள்மறுப்பைப் பெரியார் தனது கோட்பாடாக வெளிப்படுத்தினார். ஆனால் பெரியாரைப் பாராட்டும் தொ.ப.அவர்கள் மக்களின் சிறுதெய்வ வழிபாட்டை, நாட்டார் தெய்வங்களை, குலதெய்வங்களைப் போற்றவேண்டும் என்பதை இடையறாது வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இக்கருத்தை அவர் எழுத்திலும், சொல்லிலும், செயலிலும் வலியுறுத்தி வந்தார் என்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நெல்லையில் ஒரு படப்பிடிப்புக்கு வந்தபோது (வேட்டையாடு விளையாடு) நான் தொ.ப.அவர்களை அழைத்துச் சென்று திரு.கமல் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அன்று அவர்கள் இரவு முழுவதும் பேசிய பேச்சுக்கள் உண்மையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக மருதநாயகம் பற்றிய இருவரின் உரையாடல்கள் மிகச்சிறந்த வரலாற்றுப் பதிவுகள்.
தொ.ப.அவர்களின் பெருமையை நன்குணர்ந்த கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் தொ.ப.அவர்களின் மறைவைத் தான் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பதிவுசெய்தபோது, ‘இந்தச் சிங்கத்தை நான் பல்லோடு பார்த்திருக்கிறேன்’ எனக்கூறி, அவரது நூலான அழகர்கோவிலையும் உலகறியச் செய்தார்.
மேடைப்பேச்சுகளில் நான் வெற்றியடைய தொ.ப.அவர்களின் ஆதரவும் எனக்குப் பின்புலமாக இருந்தது. ஒற்றையடிப் பாதையாக இருந்த என் பேச்சுநடையைத் தேசியநெடுஞ்சாலை ஆக்கிய பெருமை அவரையே சாரும்.
மேடைகளிலோ, வானொலி, தொலைக்காட்சிகளிலோ தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்காத பேரறிஞர் தொ.ப. அவர் இப்போது நம்மிடத்தில் இல்லை, ஆனாலும் அவரது சிந்தனை விதைகள் சமுதாயகளத்தில் விதைக்கப்படவேண்டுமென்றால் அவரின் படைப்புகள் அரசுடைமையாக்கப்படுவதோடு, கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பாடநூல்களாக வைக்கப்பட வேண்டும். உலகத்தமிழ்ச்சங்கங்களில் அவரது சிந்தனை மலர்கள் மணம்பரப்ப வேண்டும்.
என்றும் தொ.ப.வின் நினைவுகளோடு
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.