திருமலை….ஏற்றிய தீபம்….

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிக்கை. அச்சு ஊடகங்களின் வருகைக்குப் பிறகு பத்திரிக்கை மக்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்பது உண்மை.
இத்தகைய பெருமைமிகுந்த பத்திரிக்கை உலகில் நாற்பது ஆண்டுகால பணி அனுபவத்தை உடையவர். முப்பத்தி இரண்டுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர். இவரது நூல்கள் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிதை உறவின் சிறந்த கட்டுரை விருது, இலக்கிய விருது, பாரதி இலக்கியப்பேரவை விருது, பொதிகை மின்னல் அமைப்புக்களின் விருதுகளைப் பெற்றிருக்கின்றன.
இவரும் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, வி.கிருஷ்ணசாமி விருது, சேவா இரத்ன விருது, சமூக எழுத்தாளர் விருது, என இன்னும் பலப்பல விருதுகளையும் பெற்று தினமலர், தினமணி, குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தரிசனம் எனப் பல்வேறு இதழ்களில் பற்பல பொறுப்பான பதவிகளை வகித்ததோடு தற்போது ‘நமது மண்வாசம்’ பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.
இத்தனை பெருமைகளையுடைய அன்பிற்கும், நட்பிற்கும் இலக்கணமாய்த் திகழ்கின்றவர் யார் தெரியுமா? என் இனிய நண்பர் எனது உயர்வுகளுக்கான ஆலோசகர் திரு பகவதி பெருமாள் திருமலை, ப.திருமலை சுருக்கமாகப் ‘பதி’ எனும் பெயர் கொண்ட அன்பு நண்பர். இவரது படைப்புகள் சமூகம் நோக்கிய பிரச்சனைகளைச் சொல்வதோடு அதற்கான தீர்வுகளையும் ஆராய்ந்து சொல்லும். இத்தகைய நூல்களைப் படைக்கும் நுண்மான் நுழைபுலம் உடையவர் இவர்.
நான் மேடைகளில் பேசப்போகும்போதெல்லாம் ஒன்று, இவரிடத்தில் பேசிவிட்டுப் போவேன் அல்லது இவரது நூல்களைப் படித்துவிட்டுப் போவேன். ஆழமான செய்திகளுக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் சொந்தமானவர்.
பத்திரிகை உலகின் காலமாறுதலுக்கேற்ப செயல்படும் திறன்மிகுந்தவர். அதாவது ருpனயவந ஆகாவிட்டால் ழரவனயவந ஆகிவிடுவோம் என்பதை அறிந்த பெருமகனார். மேற்குறித்த பெருமைகளை எல்லாம் தன்னகத்தே கொண்ட நண்பர் ப.திருமலை அவர்கள் சமீபத்தில் எழுதியுள்ள புத்தகம்தான் ‘ஆன்மீக ஒளியில் அறிவியல்’.
இந்நூல் முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கிய மருந்துப் பெட்டகம.; மற்றும் அறிவியில் ஆச்சரியம் என்றும் வியக்கலாம்.
மேற்குறித்த முப்பது கட்டுரைகளை அடையாளம், வழிபாடு, வழிபாட்டுப் பொருள்கள், வழிபடும் முறைகள், சடங்குகள், மாதங்களின் சிறப்பு, அறிவியல் – அன்று என ஏழு பிரிவுகளில் எளியோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியிருப்பது இவரது எழுத்து நடைக்கு ஒரு சான்று.
‘அடையாளம்’ என்கின்ற பகுதியில் மஞ்சள், குங்குமம், சந்தனம், திருநீறு எனும் நான்கு மங்கலப்பொருள்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அப்படிக் குறிப்பிடும்போது கூட அந்தக் கட்டுரையின் சாரம் முழுவதையும் ஒருவரியில் தருவதைப்போல இவர் தந்திருக்கும் அழகே அழகு.
சான்றாக, மஞ்சள் – சமையலுக்கு மட்டுமல்ல சகலத்துக்கும்
குங்குமம் – மங்கல மங்கையர் அடையாளம்
சந்தனம் – அழகு நெற்றிக்கு அரைத்த சந்தனம்
திருநீறு – பூச இனியது.
இவைபோன்றே அனைத்துக் கட்டுரைகளுக்கும் இவர் சூடியிருக்கும் தலைப்பூக்கள் வாசனை மிகுந்தவை, தேன் நிறைந்தவை, வாசகர் என்னும் தேனீக்களை ஈர்க்கக்கூடிய இயல்புடையவை.
இக்கட்டுரைகளில் ஒரு ஆய்வு நெறிமுறையை இவர் கைக்கொள்ளும் வழிமுறை, நூல் எழுதுவோருக்கு ஓர் முன்னுதாரணம்.
அதாவது மஞ்சள் என ஒரு பொருளை எடுத்துக்கொண்டால் அப்பொருளுக்கான பெயர்க்காரணம், அப்பொருள் விளைகின்ற பகுதி, அப்பொருள் பயன்படும் தன்மை, அதற்கான இலக்கியச்சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், ஆயுர்வேதத்தன்மைகள் நிறைவாக அறிவியல் அப்பொருளை எம்முறையில் பயன்படுத்தச் சொல்கின்றது என வரிசைப்படுத்தி சொல்லிவரும்போது இத்தனை நாட்களாக நாம் இந்தப் பொருளைப் பார்த்திருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம். இது இத்தனை அருமையுடையதா! இத்தனை மருத்துவ குணம் உடையதா! என்றெல்லாம் நம்மை எண்ணவைத்து திகைப்பில் ஆழ்த்துகிறார், அசத்துகிறார் திருமலை.
இக்கட்டுரைகள் படிப்போருக்குப் பயன் ஏற்படும் என்பது உண்மை. அதுமட்டுமல்லாமல் படிக்கும்போது அயர்ச்சி ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே இவர் பயன்படுத்தும் உத்திகள் மிக அருமை.
குங்குமம் என்று வருகின்றபோது
‘குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
எனும் கவியரசு கண்ணதாசனின் பாடலோடு (படத்தின் பெயரும் குங்குமம் தான்) தொடங்கும்போதே படிப்பவருக்கு ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. இப்பொருள்கள் தமிழரின் பண்பாட்டு வாழ்வில் எத்தகைய முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன என்பதைத் தனக்கே உரிய ஆய்வுப்பண்போடு விளக்குகிறார். குறிப்பாகச் சந்தனம், அரைக்கப்பட்ட சந்தனம் குளிர்ச்சிமிகுந்தது என்பது நமக்குத் தெரியும். இச்சந்தனத்தை அக்காலத்தில் பெண்கள் குளிர்;ச்சி கருதி மார்பில் பூசிக்கொள்வார்கள் அதுவும் ‘தொய்யில் எழுதுதல்’ என்னும் வரிக்கோல முறையில் பயன்படுத்துவார்கள் என்பதற்குச் சங்கஇலக்கியங்களிலிருந்தும், திருப்புகழிலிருந்தும் இவர் எடுத்துக்காட்டுகளைத் தரும்போது தமிழ்ப்பேராசிரியர்களே வியந்து போவார்கள்.
இதேபோன்று திருநீறு தயாரிக்கும்முறை, அதனைப் பூசுவதனால் கிடைக்கும் பயன்பாடு. இலக்கியங்களில் குறிப்பாக திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகத்தின் பெருமையைச் சொல்லுகின்ற பதிகம் என்று அடிக்கிக்கொண்டே போகின்றார் ஆசிரியர்.
இதற்குமேலும் ஒரு சான்றாக, இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த திருமுருக கிருபானந்த வாரியார் திருநீறு அணிவதற்குத் தருகின்ற விளக்கம் இருக்கிறது பாருங்கள்…. நீங்களே படித்துப் பாருங்கள்… இதையெல்லாம் படிக்கப்படிக்க மனம் இனிக்கும், திருநீற்றின் வாசனை நம் நாசிகளில் மணக்கும்.
வழிபாடு பற்றிக்கூறும்போது கோபுரவழிபாடு, மரங்களின் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு என்று வரிசைப்படுத்திச் சொல்வதோடு வழிபடுவதற்குரிய பொருள்களையும் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
‘வழிபாட்டுப் பொருள்கள்’ எனும் தலைப்பில் (நீர்pன்றி அமையா உலகு) நீர், பூக்கள், வெற்றிலை, அருகம்புல், எலுமிச்சம்பழம், வாழை, பானகம், வேப்பிலை எனும் பொருள்களைக் குறிப்பிடும்போது ஒரு ஆய்வாளருக்குரிய தன்மையோடு ஒவ்வொரு பொருளின் இயற்கைத் தன்மை, புனிதத்தன்மை, மருத்துவப் பயன்பாடு, அறிவியல் விளக்கம் என்று இவர் சொல்லிச் செல்லும் முறை ஒரு ஆசிரியர் இனிமையாய் பாடம் சொல்வதைப் போன்று அமைகிறது, நம் மனதில் பசுமரத்தாணிபோல் பதிகிறது.
அதிலும் அருகம்புல்லை விநாயகருக்குச் சூட்டுவதற்கான புராணக்கதையையும் சொல்லி, புல்லினத்திலேயே முதலில் தோன்றியது அருகம்புல்தான் என்ற வரலாற்றுச் செய்தியையும் குறிப்பிடுகிறார்.
‘வழிபாட்டுமுறைகள்’ என்னும் தலைப்பில் கோலங்கள் பற்றி எண்ணக்கோலங்களாய் இவர் குறிப்பிடும் செய்திகள் நமது மனதில் வண்ணக்கோலங்களாய்ப் பளிச்சிடுகின்றன.
சங்கு, விரதம், முளைப்பாரி, செம்பு என வரிசைப்படுத்தி அவை உருவாகும் விதம் தொடங்கி உபயோகப்படும் முறை வரை ஆராய்ச்சிக் கூடத்தில் விளக்கம் தருவதைப்போல எடுத்துக்காட்டுகளுடன் இந்நூலாசிரியர் குறிப்பிடும்போது நாம் அந்தப் பொருள்களின் தன்மையை அறிந்து மகிழ்கிறோம், உணர்கிறோம்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஹோமம் (புகை நல்லது) தீப வழிபாடு, சூரியநமஸ்காரம் என்று ஒளிரும் பொருள்கள் மூலம் நம் மெய்யுணர்வைத் தூண்டுகிறார் ஆசிரியர்.
‘சடங்குகள்’ பகுதியில் மெட்டி அணிதல், மொட்டைபோடுதல், மருதாணி இட்டுக்கொள்ளுதல், தேர்த்திருவிழா என சொல்லிக்கொண்டு வந்து ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களின் பெருமைகளை இவர் சொல்லும்போது நமக்குப் பெருமையாய் இருக்கிறது.
இந்நூலின் நிறைவுப் பகுதியில் இன்றைய அறிவியல் அற்புதங்கள் பல அன்றைக்கே நம் புராணங்களில், இதிகாசங்களில், இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன என்று ஆசிரியர் ஆதாரத்தோடு விளக்கும்போது நாம் மகிழ்ந்து போகிறோம்.
மேலும் மருத்துவமுறைகளும், அறுவை சிகிச்சை முறையும் அன்றைக்கே இருந்திருக்கின்றன என்பதை அயல்நாட்டு அறிஞர்களின் குறிப்புகளாக இவர் எடுத்துரைத்திருப்பது இவரின் பரந்துவிரிந்த அனுபவப்பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இந்நூலினை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் தோன்றும் எண்ணம் இதுதான், சாதி, மத, நிற, இன, பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதகுலத்திற்கே பயன்படும்வகையில், இன்னும் சொல்வதானால் அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மூலமாகவே புராணங்களை, வரலாறுகளை, மருத்துவத்தை, உடல்நலத்தை, அறிவியலை, பூகோளத்தைக் கற்பிக்க முடியும் என்பதை இந்த ஒரு நூல் நிச்சயமாக நமக்கு எடுத்துரைக்கிறது.
வரும் தலைமுறையைச் சேர்ந்த இளையசமுதாயத்திற்கு இந்நூல் ஒரு பொக்கிஷம், புதையல். இந்நூலாசிரியராகிய ப.திருமலை அவர்களின் தேடுதல் வேட்கையும், தானறிந்த நல்லவற்றை நாலு பேருக்கு… நாலு பேரென்ன… நான்கு கோடி பேர்களுக்கு சொல்லவேண்டும் என்கின்ற இவரது பேராசை நமக்குப் பிடித்திருக்கிறது. இந்நூல் அனைவரையும் சென்றடையட்டும். இந்நூலாசிரியரின் ஆசை நிறைவேறட்டும். இவரின் உழைப்பிற்கு நமது இருகரம் கூப்பிய வணக்கங்கள், ஆங்கிலத்தில் சொல்வதானால் சல்யூட் சார்.
இந்நூல் முழுப்பாடநூலாகவோ அல்லது இந்நூலின் சில பகுதிகள் தமிழ் பயிலும் மாணவர்களின் பண்பாட்டுப் பாடத்திட்டத்திலோ சேர்க்கப்படுமானால் வரும் தலைமுறையினருக்கு இன்னும் பயனுடையதாக அமையும். இது அரசுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள். நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு…
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.