தமிழ்ப் பெருவெளியில்…கற்பக மலரும்… மணமும்…

தமிழ் இலக்கிய உலகின் எல்லை கீழடி போன்ற அகழாய்வுகள் மூலம் நீண்டுகொண்டே செல்வது தமிழுக்கும் தமிழர் இனத்துக்கும் கிடைத்த பெருமை. தமிழின் முதல் இலக்கணநூலான தொல்காப்பியத்தின் காலத்தை கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்றால் அந்நூலில் எடுத்தாளப்படுகின்றஎன்ப, என்க, என்மனார் புலவர் என்பதன்மூலம் இவ்விலக்கணநூலுக்கும் முன்பாகவே பல இலக்கியநூல்கள் வழக்கில் இருந்திருக்கின்றன என்பதை அறிகிறோம், வியக்கிறோம்.

          21ஆம் நூற்றாண்டாகிய இந்த நூற்றாண்டின் அகழாய்வுகளும், அறிவியில் செயற்கைக்கோள்களும், தமிழரின் வரலாற்றுப் பெருமையைக் காலவாரியாகச் சான்றுகளுடன் நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் துணைநிற்கின்றன. சுருக்கமாகச் சொல்வதானால் மண்ணில் இருந்தும் விண்ணில் இருந்தும் நாம் வரலாறுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

மூவாயிரம் ஆண்டுப் பழமையுடைய தமிழிலக்கிய வரலாற்றைச் சங்ககாலம், சங்கமருவிய காலம், நீதிஇலக்கியக் காலம், பக்திஇலக்கியக் காலம், காப்பிய காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக்காலம், தற்காலத் தமிழ்இலக்கியக் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் வகுத்து வைத்துள்ளனர். சான்றாகப், பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு என்ற நூலினைக் காண்க

இவ்வரிசையில் தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்களின் பெருமையையும், சங்கஇலக்கியத்தில் காணப்படுகின்ற தமிழர் வாழ்வின் அகப்புறச் செய்திகளையும் அறிந்து கொள்வது என்பது எப்படிப்பட்ட அனுபவம் தெரியுமா? வாசனை பொருந்திய தேன் சிந்துகின்ற, கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணமலர்கள் நிறைந்துள்ள பூஞ்சோலைக்குள் உலவி வருவது போன்ற ஒரு மகிழ்வை நமக்கு ஏற்படுத்தும்.

          இத்தகைய நறுமணம்மிகுந்த தமிழ்ச்சோலையில் அங்கு பூத்திருக்கும் பூக்களின் நறுமணத்தையும், தேனையும், வண்டுகளின் ரீங்காரத்தையும் கண்டறிந்து, உணர்ந்து உலகிற்குச் சொல்லும் பெருமக்கள் பலரை நாம் கண்டு மகிழ்கிறோம், வணங்குகிறோம்.

அவ்வகையில், தமிழ் இலக்கியத்தில் முதுகலை, இளம்ஆய்வாளர், முனைவர்ப் பட்டப் படிப்புகளை முடித்து, 16 வருடப் பேராசிரியப் பணி அனுபவமும் பெற்றிருக்கக்கூடிய மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியை முனைவர் மு.கற்பகம் அவர்கள் முன்னரே தம்முடைய தமிழ்க்கொடையாக மூன்று நூல்களைத் தந்திருக்கிறார்கள், அவை தமிழ் இலக்கணங்களில் சாரியைகள், இலக்கண மலர்கள், பந்தயக்குதிரை (கவிதை நூல்) என்பன. இவைகள்தவிர 63க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு தளங்களிலும், களங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

          தியாகராசர் கல்லூரியில் நாங்கள் தொடங்கிய தமிழிசை ஆய்வு மையத்தில் வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டு அதில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பையும் முடித்துப் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இசை ஆர்வலர், என்பது இப்பேராசிரியையின் தனித்தகுதிகளில் ஒன்று.

          இவரது தற்போதைய வெளியீடானதமிழ்ப் பெருவெளியில் எனும் நூலினைப் படித்தேன், மகிழ்ந்தேன், வியந்தேன். உணர்வு வெளிப்பாட்டில் மலர் எனும் முதல் கட்டுரையில் தொடங்கி தொல்காப்பியம் குறித்த ஆறு கட்டுரைகளையும், சங்கஇலக்கியங்கள் குறித்த ஆறு கட்டுரைகளையும், வையை நதியின் வளமை மற்றும் பழமை குறித்தும் எனப் பதினைந்து கட்டுரைகளில் தொல்காப்பியத்தையும், சங்கஇலக்கியப் பாடல்களையும் இவர் முன்னும் பின்னுமாக தமிழ்இலக்கிய வயலில் ஓரேர்உழவராக இலக்கிய உழவு செய்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.

          பொதுவாகத் தற்கால ஆய்வாளர்கள் எளிமை கருதியே தற்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கின்றனர் அல்லது ஒப்பிலக்கியங்கள், நாட்டார் வழக்காறுகள் எனப் புதுப்புதுத் துறைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். அத்தகையை ஆய்வுகளும் தமிழ்மொழிக்குத் தேவைதான்.

இருப்பினும் சங்கநூல்களின் பெருமைகள் தனித்தன்மை உடையன என்பதை நாம் அறிவோம். இதனை உலகறியச் செய்த பெருமகனார் யார் தெரியமா? மதுரை தியாகராசர் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் பணியாற்றிப் பின்னர் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்குப் பணியாற்றச் சென்ற பேராசிரியர் கி.இராமானுஜம் அவர்கள்தான், சங்கப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதுகண்டு தமிழரின் பெருமையை உலகம் கண்டு வியந்தது.

தமிழரின் அகப், புற வாழ்க்கைகள் களவு, கற்பு, இயற்கையை நேசிக்கும் திறம், சுற்றுப்புறச் சூழல்களின் வர்ணனைகள் என எல்லாவற்றையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து வைத்த சங்கப்பாடல்கள் தமிழரின் தங்கக்கோபுரத்தின் வைரக்கலசங்கள் எனலாம்.

இப்பெருமைமிகு சங்கஇலக்கியங்களில் ஆய்வும், தோய்வும் கொண்டுள்ள இந்நூலாசிரியர் பேராசிரியை மு.கற்பகம் அவர்கள்உணர்வு வெளிப்பாட்டில் மலர் எனும் தன் முதல் கட்டுரையில் ஓர் அரிய செய்தியைச் சுட்டிக்காட்டுகிறார்.

பழந்தமிழர்கள் இயற்கையோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்பதனைக் கூறும்போது, மானுட உயிர்களுக்கும், இயற்கைக்கும் தொன்றுதொட்டு இருந்து வருகின்ற உறவின் கணபரிமாணமே ஆதாரம் என்பதை ஓர் சங்கப்பாடல் மூலமாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அப்பாடல்,

நும்மினும் சிறந்தது  நுவ்வை யாகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே

அம்ம நாணுதும் நும்மொடு நகையே

–        நற்றிணை – 172

இவ்வாறு அமைகிறது. இப்பாடலில் காட்டப்படுகின்ற புன்னைமரம், தமிழர் வாழ்வில் தொடர்ந்து வருகின்ற செய்தியினையும் சான்றுகள் மூலம் எடுத்துரைக்கிறார் இந்நூலாசிரியர்.

தலைவியின் காதல் உணர்வும், நாணமும் இப்பாடலில்  சொல்லப்படுகின்றன. தன் தாய் ஊன்றிய புன்னைவிதை காலவளர்ச்சியால் மரமானது. அம்மரத்தைச் சகோதரியாக நேசித்தால் தலைவி. அம்மரத்தின்மீது அன்பும்பரிவும் கொண்டிருந்தாள். எனவே அதனருகே தன்னைத்; தன்காதலன் தொட முயன்றபோது அவனை விலகச்சொல்லித் தனக்கு ஏற்பட்ட நாணத்தை மென்மையாக எடுத்துரைக்கிறாள் தலைவி. இக்காட்சியின் மாட்சியை நாம்  அறிந்து வியக்கிறோம்.

          மேலும் மலர்கள் மனிதருடைய வாழ்வோடு பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதையும் இக்கட்டுரையிலேயே நாம் காண்கிறோம். மானுட வளர்ச்;சி நிலைகளைக் கூறும்போது பெண்களுக்கும் ஆண்களுக்குமான பருவங்களை ஏழேழு பருவங்களாகச் சொல்லுவர், அவை மலர்களுக்கும் உண்டு என எடுத்துக்காட்டும்போது அரும்பு (அரும்பும் நிலை), மொட்டு (மொக்குவிடும் நிலை), முகை (முகிழ்க்கும் நிலை), மலர் (மலரும் நிலை), அலர் (மலர்;ந்த நிலை), வீ (வாடும் நிலை), செம்மல் (வதங்கும் நிலை) என தொகுத்துச் சொல்லும் ஆசிரியர் அவற்றை மனிதவாழ்க்கையின் பருவங்களோடு ஒப்பிடுவது சிறப்பு.

          மேலும் இம்மலர்கள் அரசர்களின் மாலைகளாக மாறி, அரசியல் தொடர்போடும் புறவாழ்விலும் பேசப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிகிறோம்.

          நோன்புக்காலத்தில் கூடமலரிட்டு நாம் முடியோம் (திருப்பாவை 2) என ஆண்டாள் கூறும் வார்த்தைகள் மூலம் மலர்களின் பெருமை அந்நோன்புக்காலத்திலும் எப்படிப் பயன்படுகின்றன என அறிகிறோம்.

          களவுக்காலத்தில் மட்டுமல்லாது கற்புக்காலத்திலும் (இல்வாழ்க்கை) மலர்கள் பூப்பதை வைத்தே பெண்கள் தலைவனின் வருகையை அறிவார்கள். இதனை; ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் என்பதன் மூலம் அவர்களின் கற்புத்திறத்தையும் மலர்களோடு ஒப்பிட்டுச் சொல்லுகின்றனர் நம் முன்னோர்கள்இதனை இவ்வாறு அழகாக விளக்கிக் காட்டிவிட்டு இந்த முல்லை மாறியே பிற்காலத்தில் மெல்ல மெல்ல மொள்ளமாரியாக (ஒழுக்கங்கெட்ட இயல்புள்ளவளாக) வந்திருக்க வேண்டுமென்று ஆசிரியர் சொல்லும்போது நாம் திகைத்துப் போகிறோம்.

          தலைவியின் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதற்குத் தோழி என்னும் பாத்திரம் மட்டுமில்லை செடிகளும், கொடிகளும், மரங்களும், மலர்களும் துணைநின்றன என்பதைச் சான்றுகளோடு விளக்குகிறார் இந்நூலாசிரியர். இவ்வாறு உணர்வு வெளிப்பாட்டில் மலர்களைச் சுட்டும் ஆசிரியரின் முதல் கட்டுரையே நம்மை நூல் முழுவதையும் படிக்கத் தூண்டுகிறது.

          ‘சங்க மற்றும் நாட்டுப்புற நெய்தல் நிலப்பாடல்களில்பெண் கருத்தாக்கம் எனும் கட்டுரையில் பழந்தமிழர்கள் நிலத்தை ஐந்தாகவும் (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல், பாலை), திசைகளை நான்காகவும் (கிழக்குமேற்கு, வடக்கு, தெற்கு), தமிழ் மொழியை மூன்றாகவும் (இயல் இசை நாடகம்), தமிழர் வாழ்வியலை இரண்டாகவும் (அகம் புறம்), ஒழுக்கத்தை ஒன்றாகவும் வகுத்து வாழ்ந்து வந்தார்கள் என அறிகிறோம்.

          ஆண் பெண் இருபாலரது வாழ்;க்கை நெறிமுறைகளை இலக்கியங்கள் பகுத்தும் வகுத்தும் சொன்னாலும் பெண் குறித்த கருத்தாக்கத்தினை நெய்தல் நிலப்பாடல் கொண்டு இக்கட்டுரையில் ஆராய்கிறார் நூலாசிரியர். சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண்பாத்திரங்கள் என்று பார்க்குமிடத்து தலைவி, நற்றாய், தோழி, செவிலி எனும் வகையிலேயே நாம் இவர்களைப் பற்றி அறியமுடிகிறது.

          கடல்மேல் மீன்பிடிக்கச் செல்லும் ஆடவன் தன் களைப்பைப் போக்கிக்கொள்ளப் பாடும் வாய்மொழிப் பாடலில் கூட,

          “பழத்தை நம்பிஏலெலேர்

            நீயிருக்கஐலசா

           உன்னை நம்பிஏலெலேர்

           நானிருக்கேன்ஐலசா

என்று பாடுகிறான். இப்பாடலின்படி பெண்ணே ஆடவனின் வாழ்க்கையில் முதற்பொருளாக இருக்கிறாள் என்பதை எடுத்துக்காட்டும் ஆசிரியர் அப்பெண்ணும் தலைவனையே உயிராகக் கருதி வாழ்கிறாள் என்பதையும் தக்க சான்றுகளோடு விளக்குகிறார்.

          களவுக்காலத்தில் அதாவது காதலிக்கும்போது தன்னை விரும்பியவன் தன்னையே கரம்பிடிக்க வருவான் எனக் காத்திருக்கிறாள் தலைவி. திருமணத்திற்குப் பின்பு தலைவன் பொருள்தேடிச் சென்றாலோ கடல்மீது மீன்பிடிக்கச் சென்றாலோ அவன் பிரிவினைப் பொறுத்துக்கொண்டு அவனை நோக்கியே ஆற்றியிருக்கிறாள். அச்சமயங்களில் எல்லாம் அச்சம், பழிக்கு அஞ்சல் போன்ற தனிமைத் துயரையும் அவள் ஏற்றுக்கொள்கிறாள் என்பதனை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

          மேலும் தலைவி என்ற பெண்ணுக்கு ஏற்படுகின்ற ஏக்கம், இயலாமை, போராட்டம், அன்புமிகுதி, பழிபாவங்களுக்கு அஞ்சுதல் இவை எதுவாக இருந்தாலும் அதைத் தலைவனிடத்தில் நேரடியாகச் சொல்லமுடியாத தலைவி தோழியிடத்திலும் நிலவு, தென்றல், மரஞ்செடி கொடி பறவை இவற்றோடே பகிர்ந்து கொள்கிறாள் எனவும் எடுத்துரைக்கிறார்.

          காலங்கள் மாறினாலும் தொழில் முறைகள் மாறினாலும் அறிவியல் வளர்ச்சி பெற்றாலும் பெண்ணுக்குரிய கருத்தாக்கங்கள் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன. பெண் எதனையும் ஏற்று நிற்பவள், இயைந்து செல்பவள், காத்து நிற்பவள், காலங்கள் மாறினும் அவள் அவளாகவே இருப்பாள் எனும் ஆசிரியர் கூற்று நினைக்கத்தக்க ஒன்று.

          தொல்காப்பியத்தில் குறிப்புமொழி, தொல்காப்பிய புறத்தினை காட்டும் பொருள்சார் பண்பாடு, தொல்காப்பியத்தில் செவிலியும், தோழியும், தொல்காப்பியத்தில் பெண், தொல்காப்பியத்தில் சொல்லல்லாத் தொடர்பியல், முன்னைய மூன்றும் பின்னைய நான்கும் எனும் தொல்காப்பியம் குறித்த ஆறுகட்டுரைகளில் பல்வேறு கோணங்களில் தொல்காப்பியத்தை  அணுகியிருக்கிறார் இந்நூலாசிரியர்.

          தொல்காப்பியத்தில் குறிப்புமொழி எனும் பகுதியில் பொருள் புலப்பாட்டினைக் குறிப்பு மொழியால் சுட்டவேண்டும் என்பதை

          “எழுத்தொடும் சொல்லோடும் புணரா தாகிப்

           பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்ப

எனும் நூற்பா கொண்டு விளக்குகிறார் ஆசிரியர்.

          ‘ஒரு செய்தியை சொற்கள் மூலமாக விளக்குவதோடு அச்சொல்லின் பொருள் ஆழத்தை உணர்த்தும் வண்ணம் அதில் வேறு ஒரு குறிப்புப் பொருளும் உள்ளது என்பதை விளக்க நேரடிப்பொருளைவிட குறிப்புப்பொருளினால் சொல்லப்படுகின்ற செய்தியினால் இலக்கியங்கள் மேன்மை அடைகின்றன எனக் குறிப்பிடும் நூலாசிரியர், தன் கருத்திற்கு வலிமை சேர்க்கத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பிசி, முதுமொழி, மந்திரம் போன்ற குறிப்புமொழி இவற்றோடு முன்னம், உள்ளுறை, இறைச்சி, பழிகரப்புஅங்கதம், போன்றவற்றைக்கொண்டும் சான்றுகளோடு விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியர்.

          எடுத்துக்காட்டாக, “அகவன் மகளே பாடுக பாட்டே என்னும் குறுந்தொகைப் பாடலில் தலைவியினுடைய உள்ளம் மகிழ்ச்சி அடைவதற்காகத் தலைவனுடைய நாட்டைப்பற்றித் தோழி குறிப்பாகக் கூறுகிறாள் என்பதை எடுத்துக்காட்டி அறியவைக்கிறார் ஆசிரியர். இவ்வாறு மேற்குறித்த குறிப்புமொழிகள் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுகளால் நம்மை வியக்க வைக்கிறது ஆசிரியரின் எழுத்துநடை.

          தொல்காப்பியப் புறத்தினை காட்டும் பொருள்சார் பண்பாடு எனும் பகுதியில் பண்பாடு என்பதற்கான விளக்கங்களை தொல்காப்பியம் தொடங்கி, திருக்குறள் வரையிலே எடுத்துக்காட்டுகளை மேற்கோளாகத் தருகின்ற ஆசிரியர் பண்பாடு என்பது பொருள் சார்ந்தது, பொருள் சாராதது என இருவகைப்படும் என ஒரு புதிய செய்தியை நமக்குக் காட்டுகிறார்.

          கண்ணால் கண்டு தொட்டு உணர்ந்து அனுபவிக்கும் பொருள்களெல்லாம் பொருள்சார்ந்த பண்பாட்டில் அடங்குவன எனச்சொல்லி, அவை காலத்துக்கேற்ப மாறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்பொருள்சார் பண்பாட்டில் அடங்குவன எவை என்பதைச் சங்ககாலத்தில் ஆநிறை, இயற்கைப் பொருள்கள், சோறு, கள் என்பவையும் பிற்காலத்தில் எந்திரங்கள், கருவிகள், அணிகலன்கள், கட்டிடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் என்பவையும் அடங்கும் எனச்  சொல்லி பொருள்சார் பண்பாட்டுக்குரிய சான்றாதாரங்களையும் காலத்துக்கு ஏற்ற இலக்கியங்கள் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

ஆநிறை தொடங்கி நடுகல்லும் ஈமக்காடும் எனும் பகுதி வரையிலும் இவர் எடுத்துக்காட்டுகின்ற செய்திகள் தனித்தனி நூல்களுக்கான செய்திகளாக அமைகின்றன.

          தொல்காப்பியத்தில் செவிலியும், தோழியும் எனும் பகுதியில் சங்கஇலக்கிய மாந்தர்களை நற்றாய், செவிலி, தலைவி, தோழி, பரத்தை, பாடினி, விறலியர், எனும் பாத்திரங்களாய்  நமக்குக் காட்டுகிறார் ஆசிரியர்.

இவர்களுள்செவிலி என்னும் வளர்ப்புத்தாய் பற்றியும், அவளது மகளாகவோ அல்லது வேறு பெண்ணாகவோ இருக்கின்ற தலைவியோடு இன்னொரு தாயாக உலாவருகின்ற தோழிகுறித்தும் இக்கட்டுரையில் ஆராய்கிறார் ஆசிரியர்.

தன்னைப் பெற்ற தாயாகிய நற்றாயைக் காட்டிலும் செவிலித்தாய் மீதே தலைவிக்குப் பாசம் அதிகம் என்பதையும், தலைவி உடன்போக்குச் சென்றபோது அவளைப் பாசமிகுதியால் தேடிச்செல்பவளும் செவிலியே என்பதை அறிகிறோம்.

மேலும் தோழி, தலைவியில் பாதி என்பதைப்போல தலைவியின் துயரங்களைத் தன் துயரங்களாக ஏற்றுக் களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவியின் நலமே தன் நலம் எனக் கருதும் அப்பாத்திரத்தின் அருமையைச் சிறப்புடன் விளக்குகிறார் ஆசிரியர்.

களவுக்காலத்தில் தலைவனைத் திருமணத்திற்கு உடன்படச் செய்வதும் செவிலி மற்றும் நற்றாயின் மனங்கள் ஏற்குமாறு தலைவியின் காதலைச் சொல்வதும், பொருள்தேடிச்செல்லும் கணவனுக்குத் தலைவியின் அருமையை உணர்த்துவதும் தோழியின் பணிகள் எனத் தொல்காப்பிய நூற்பாக்களைக்கொண்டு ஆசிரியர் கவினுற விளக்குகிறார்.

தொல்காப்பியத்தில் பெண் என்னும் பகுதியில் பெண்ணின் பெருமைகள் எவ்வாறு அக்காலத்திலேயே உணரப்பட்டன என்பதையும் பெண்ணின் கடமைகளாக அமைந்த பல்வேறு செய்திகளையும் தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டே விளக்கிக் காட்டுகின்ற ஆசிரியரின் நுண்மான் நுழைபுலம் பாராட்டுக்குரியது.

தொல்காப்பியத்தில் சொல்லல்லாத் தொடர்பியல் (ழேn ஏநசடியட ஊழஅஅரniஉயவழைn) எனும் பகுதியில் சொல்வழித் தொடர்பியல், சொல்லல்லாத் தொடர்பியல் என இருவகையாகப் பிரித்து அதில் சொல்லல்லாத் தொடர்பியல்  பற்றிக் கூறும்போது செய்தியைத் தருநர், செய்தியைப் பெறுநர், தகவல், தகவலுக்குப் பயன்படும் கருவி, உடலின் அங்க அசைவுகள் போன்ற ஒலி, சைகை, என்பவற்றை இவற்றுள் அடக்கி அவைத் தொல்காப்பியத்துள் எங்ஙனம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்பதையும் சான்றுகளோடு தருகின்றார் ஆசிரியர்.

இனி முன்னைய நான்கும் பின்னைய மூன்றும் எனும் பகுதியில் அன்பின் ஐந்தினைத்  தவிர,

          “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே

          பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே

எனும் தொல்காப்பிய களவியல் நூற்பா மூலம் புதிய செய்திகளை திருமணமுறைகள் மூலம் எடுத்து விளக்குகின்றார் இந்நூலாசிரியர்.

          தொல்காப்பியம் எதனையும் நிரல்படக் கூடும் தன்மையுடையது. வடமொழி மரபு போன்று மயக்கத்தைத் தருகின்ற தன்மையற்றது எனக் கூறும் ஆசிரியரின் சொற்கள் வீரத்தமிழச்சியின் உரையாகவே நமக்குத் தோன்றுகிறது, பாராட்டுக்கள்.

          இனி குறிஞ்சித்திணையும் குறிஞ்சிப்பாட்டும் எனும் கட்டுரையில் மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி குறித்தும் அதனை முதன்மைப் பொருளாகக் கொண்டு பாடப்பட்ட கபிலரின் குறிஞ்சிப்பாட்டு குறித்தும் விரிவாக இக்கட்டுரையில் ஆராய்கிறார் ஆசிரியர். இக்குறிஞ்சிப்பாட்டு 261 அடிகளைக் கொண்ட அருமையான அகத்திணை இலக்கியம். தோழியே இதில் கதாநாயகி, அவளது கூற்றும் நுண்ணறிவும், செவிலியிடம் தலைவியின் காதலை எடுத்துரைக்கும் ஆளுமையும் இன்றைய பெண்ணுலகம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

          இக்குறிஞ்சிப்பாட்டை தொல்காப்பிய மரபுகளோடு பொருத்திக்காட்டி காலை, நண்பகல், மாலை, இரவு, யாமம் என்னும் பொழுதுகளுக்கேற்ப குறிஞ்சிப்பாட்டின் வரிகளையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுவது சிறப்பான ஒன்று. தலைவியின் காதல் வெற்றிபெற அறத்தொடு நிற்கும் தோழியின் செயல் என்றும் போற்றத்தக்க ஒன்று என்பதை அவள் கூறும் சொற்களாகக் குறிஞ்சிப்பாட்டின் வரிகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

          மேலும் தலைவன்மேல் தனக்கு ஏற்பட்ட காதலை அவனிடத்தில் சொல்லமுடியாமல் தலைவி தவிக்கும்போது அவன் உணருமாறு தலைவியின் காதலை எடுத்துரைக்கும் தோழி, பின்னர் செவிலியிடத்திலும் அவள் கோபங்கொள்ளாதவாறு தலைவன் தலைவி இருவரது காதலையும் எடுத்துரைப்பதும் சிறப்பு.

          இதனையே, தோழியின் குரல் உண்மையில் அக்குறிஞ்சிப்பாட்டினைப் பாடிய கபிலரின் குரலாகவே ஒலிக்கிறது என்கிறார் ஆசிரியர். களவுநிலை கற்புநிலையாக மாற எத்துனை முயற்சி தேவைப்படுகிறது என்பதைக் குறிஞ்சிப்பாட்டின் மூலம் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

          இதில் ஆண்மகனின் குணம் இன்ப நுகர்ச்சியாகவும், தலைவி அச்சத்தின் வடிவமாகவும், தோழி அறிவின் வடிவமாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள் எனச் சுருக்கமாக விளக்குகிறார் நூலாசிரியர்.

          தமிழ் இலக்கியத்தில் மனித மாண்புகள்பெருந்தலைச் சாத்தனார் எனும் இக்கட்டுரையில் சங்கஇலக்கியம் பாடிய 473புலவர்களுள் பெருந்தலைச் சாத்தனாரும் ஒருவர் எனக் குறிப்பிடும் இந்நூலாசிரியர் பெருந்தலை என்பது இவரின் ஊரின் பெயர் என்பதையும் மறவாது குறிப்பிடுகிறார்.

          குமணவள்ளலைத் தேடிச்சென்ற பெருந்தலைச்சாத்தனார் அவன் நாடாளாமல் காடு ஏகுமாறு செய்தான் அவன் தம்பி என்பதை உணர்ந்து வருந்தி, இருப்பினும் தன் வறுமை நிலை என்ன என்பதைக் குமணனை நாடிச்சென்று, அம்மன்னனிடத்தில் சொல்லும்போது  குமணன் எத்தகைய குணமுடையவன் என்பதை எளியவரிகளில் பெருந்தலைச்சாத்தனார் எடுத்துரைத்ததைக் கீழ்கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையாயினும் தன்னை நாடிவந்த இரவலர், மற்றும் வறுமைமிக்கப் புலவர்களுக்குப் பொருள் பெறுவதற்கான வழியினைக் காட்டுகின்ற தன்மையுடைய வள்ளல் குமணன் என்பதை,

          “எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென

           மறுமை நோக்கின்றோ அன்றே

           பிறர்வறுமை நோக்கின்று அவன்கைவண் மையே

எனும் பாடல் மூலம் பெருந்தலைச் சாத்தனார் விளக்குவதாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

          புலவர்கள் வறுமையில் வாழ்ந்தபோதும் அவர்களிடத்தில் இருந்த குணங்களாக காதல் இல்லறம் வீரம் புகழ் சான்றான்மை ஈகை என்பன எப்போதும் அவர்கள் பண்பில் கசிந்து கொண்டிருந்தன என்பதைப் பெருந்தலைச் சாத்தனாரின் வாழ்க்கை மூலம், அவரின் பாடல்வரிகள் மூலம் எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

          இவைபோன்றே தமிழ் இலக்கியங்களில் உயிர் இரக்கச் சிந்தனை, சங்கஇலக்கியத்தில் சாதிய முரண்பாடு, வையை, அகஉணர்வு வெளிப்பாட்டில் நெய்தல் கருப்பொருள், குறிஞ்சிப்பாட்டில் தகவல் தொடர்பும் மொழிப்பயன்பாடும், போன்ற கட்டுரைகள் மூலமாக விளக்கிச் சொல்லுகிறார் இந்நூலாசிரியர்.

மேலும் இன்றைய தலைமுறையைச் சார்ந்த, வருகின்ற தலைமுறையைச் சார்ந்த இளையசமுதாயத்திற்குப் பழந்தமிழர் பெருமையை, நாகரீகத்தை, வீரத்தை, கொடைஉணர்வை, மரபுநிலை வழுவாத காதலை, இல்லற வாழ்க்கையின் இனிமைகளைக், கொடையாளர்களின் பண்பினை, வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த புலவர்களின் தன்மையை என அவர்களின் அத்துனை குணநலன்களையும் இயன்ற அளவு எளியநடையில் விளக்க முயல்கிறார் ஆசிரியர்.

தொல்காப்பியம் தொடங்கி சங்கஇலக்கிய எல்லைக்குள் அச்செவ்வியல் இலக்கியங்களின் பெருமைகளைத் தன்னுடைய கல்வி  என்னும் நுண்ணறிவால் மிளிரச் செய்கிறார் பேராசிரியை முனைவர் மு.கற்பகம் அவர்கள்.

          இந்நூலில் காணப்படுகின்ற கட்டுரைகளைத் தனித்தனியே சிறுநூல்களாக்கி இன்றைய தலைமுறையினருக்குப் பாடநூலாக தந்தால் அவர்களும் இவ்வரிய செய்திகளை எளியமுறையில் கற்றுக்கொள்வார்கள். மாணவர்களுக்கு மட்டுமன்றி ஆய்வாளர்களுக்கும், இந்நூல் கலங்கரை விளக்கமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

நவில்தொறும் நூல்நயம் போலும் என்பதற்கேற்ப இந்நூல் புதுமைகளை அணிகலன்களாக்கிக்கொண்டு ஒளிர்கிறது. தொல்காப்பியத்தையும் சங்கஇலக்கியங்களையும் தமிழர்கள் இருகண்களாகப் போற்றவேண்டும் என்பதை இந்நூல் மூலமாக நாம் அறிகிறோம், வாழ்த்துகிறோம்

அன்புடன்

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

                                                                  தியாகராசர் கல்லூரி, மதுரை.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.