செம்மொழி நாயகர்…பரிதிமாற் கலைஞர்…!

மதுரை மாநகரம் ஈராயிரம் ஆண்டுப் பழைமையோடும் குன்றாத பெருமையோடும் இன்றும் திகழ்ந்து வருகிறது. முச்சங்கங்கள் தோன்றியது இம்மதுரையில்தான். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் போன்ற சங்கப்புலவர்கள் வாழ்ந்ததும் இம்மதுரையில்தான். இதன் தொடர்ச்சியை இருபத்தியோராம் நூற்றாண்டிலும் காண்கிறோம்.
மதுரையின் பெருமையை உலகறியச் செய்ததோடு தமிழ் உயர்தனிச் செம்மொழிதான் என முதலில் முழக்கமிட்டவர் பரிதிமாற் கலைஞர்.
இவர் 1870ஆம் ஆண்டு மதுரைக்கு அருகிலுள்ள விளாச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தம் தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரைச் சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். (தற்போது மதுரைக் கல்லூரி)
உயர்தனிச் செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர் பரிதிமாற் கலைஞர். பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கிலமொழிக்கு தமிழர்கள் அடிபணியக்கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர் ஆவார்.
பரிதிமாற் கலைஞர் ஒரு தமிழாசிரியரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தின் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர்.
இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித்தொகையைப் பெற்று, சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். தமிழ்மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிறதுறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்களாம். தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார்.
அதேபோல், தமிழ்ப்பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருக்கும் மாணவர்களிடம் கண்டிப்போடு நடந்து கொள்வார் பரிதிமாற் கலைஞர். ஒருமுறை வகுப்பறையில் பாடம் நடத்தும்போது இதுபோன்ற மாணவனொருவன் சிக்கினான். அப்போது அவனிடம், ‘நமது சொற்பொழிவை பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக’ என நயம்பட உரைத்து வெளியேற்றினார்.
தமிழைச் செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கற்க வேண்டும் என்று முழங்கியவரும் இவரே. செந்தமிழ் நடையில் எழுதுவதிலும், சேக்ஷ்பியர் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருவதிலும் பரிதிமாற் கலைஞரின் ஆற்றலைக் கண்டு வியந்த யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார், இவருக்குத் ‘திராவிட சாஸ்திரி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.
எப்போதும் பரிதிமாற் கலைஞரின் கவிதை நடை எளிமையாகவும், உரைநடை கடினமாகவும் இருக்கும். சி.வை.தாமோதரனார் உயர் செந்தமிழ் நடையில் ஒரு நூலினை எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவே, பரிதிமாற் கலைஞரும் ‘மதிவாணன் – புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை’ என்ற புதிய நூலினை எழுதி வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக உயர் செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல் இதுவேயாகும்.
இவர் தனது தனிப்பாசுரத் தொகை என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரைப் ‘பரிதிமாற்கலைஞர்’ எனத் தமிழில் மாற்றிக்கொண்டார். பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டபோது இவருடைய கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஆரிய மொழிகள்தான் எல்லா மொழிகளுக்கும் மூலமொழி என்றும், அதிலிருந்துதான் மற்ற மொழிகள் எல்லாம் பிறந்ததாக ஆரியர்கள் கூறி வந்தனர். இதை மறுத்துப் பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டார். இந்நூலில் இவர், ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே தமிழர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்ற உண்மையை வெளியிட்டார். மேலும் எழுத்துச் சுவடி என்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
1901ஆம் ஆண்டு மே24இல் மதுரையில் பாஸ்கர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் ‘செந்தமிழ்’ எனும் திங்களேட்டை வெளியிட்டது. அச்செந்தமிழ் என்னும் முதல் இதழில்தான் பரிதிமாற் கலைஞர் உயர்தனிச் செம்மொழி தமிழே! என்று தலைப்பிட்டுக் கட்டுரை வெளியிட்டார்.
பரிதிமாற் கலைஞர் நாவல், உரைநாடகம், செய்யுள் நாடகம், கவிதைநூல், ஆய்வுநூல், நாடக இலக்கணநூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
மேலும் பல தமிழ் அறிஞர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உள்பட 67நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டுள்ளார். ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்துத் ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர் இவர்.
இவர் நாடக இலக்கணம் குறித்துச் செய்யுள் வடிவில் ஓர் நூலையும் இயற்றியுள்ளார். அத்தோடு மட்டுமல்லாமல் நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் எழுதிய ‘மனோகரா’ நாடகத்திலும், மனோகரனாக இவர் நடித்திருந்ததாக நான் படித்திருக்கிறேன். இலக்கணம், இலக்கியம், நாடகம் என எல்லாத் துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியதோடு நம் தமிழின் பெருமையை உலகறியச் செய்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது 33ஆவது வயதில் இறந்தபோது, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் வில்லியம் மில்லர் அவர்கள்,
என்புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே.
என்று அவர் வருந்திய செய்தியைப் படிக்கிறபோது பரிதிமாற் கலைஞரின் இழப்பை நாம் உணர்கிறோம்.
உண்மையில் தமிழுக்குச் சூரியனாகவும், கலைஞராகவும் திகழ்ந்தவர் இவரே…!