குருவே தெய்வம்!

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தௌ;ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
என நாலடியார் எனும் நூல் கல்வியின் பெருமையை எடுத்துக்கூறும்.
எண்பதாயிரம் கோடி உயிரினங்களில் கல்வியால் உயர்வு பெறுவது மனித இனம் மட்டுமே. ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய மதுரை மாநகரின் இன்றையப் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்கின்ற கல்வி ஆலயம் தூய ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்;த்துவதற்காக மதுரை மாநகரில் தொடங்கப்பெற்ற நிர்மலா மேல்நிலைப்பள்ளி என்னும் ஆலவிருட்சத்தின் விழுதுகளில் ஒன்றுதான் தூய ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி. இக்கல்லூரி அப்பள்ளி வளாகத்திலேயே அமைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.
தமிழ் இலக்கியங்கள் பெண்களின் வயதினையும் வளர்ச்சியினையும் சொல்லும்போது பேதை (5 வயது முதல் 7 வயது வரை), பெதும்பை (8 வயது முதல் 11 வயது வரை), மங்கை (12 வயது முதல் 13 வயது வரை), மடந்தை (14 வயது முதல் 19 வயது வரை), அரிவை (20 வயது முதல் 25 வயது வரை), தெரிவை (26 வயது முதல் 31 வயது வரை), பேரிளம்பெண் (32 வயது முதல் 40 வயது வரை) என பகுத்துக்கூறும்.
பெண்களின் ஐந்தாம் வயது தொடங்கி முப்பதாம் வயது வரையிலும் படித்துக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு இக்கல்வி வளாகத்தில் அமைந்திருப்பது ஓர் பெருஞ்சிறப்பு, வியப்பு!.
கல்விப்பணி எனும் நெடும் பயணத்தில் தூய ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி ஐம்பதாவது ஆண்டாகிய பொன்விழாவைக் கொண்டாடுகிறது. பொதுவாக மாணவ, மாணவிகளை உருவாக்கும் பணியினை கல்வி நிலையங்கள் செயல்படுத்தும். அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆசிரியர்களை உருவாக்குவதில் குறிப்பாகப் பெண் ஆசிரியர்களை உருவாக்குவதில் இக்கல்லூரியின் பெரும்பணி போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் நான்கு பேருக்கும் மனித வாழ்க்கையில் முக்கியப்பங்கு உண்டு. இதில் தந்தைக்கு அடுத்தபடியாக தெய்வத்திற்கு மிக அருகில் இடம் பெறுபவர் ஆசான் என்கின்ற குரு ஆவார். அறியாமை என்னும் இருள் அகற்றும் ஒளி விளக்கே ஆசிரியர்.
ஆசிரியப் பணியின் பெருமைதான் என்ன? கிரேக்க நாட்டில் ஒருநாள் ஃபிலிப் மன்னனின் அவையில் சேவகன் ஒருவன் ஓடிவந்து, ‘அரசே! தங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறார்’ என மகிழ்வோடு சொல்ல, உடனே மன்னன் தங்கத்தட்டில் இருந்த பாண்டியநாட்டு மதுரை முத்துக்களை கைநிறைய எடுத்து அச்சேவகனுக்குக் கொடுத்தாராம். அதைப்பெற்ற அவன் வணங்கிப் புறப்பட்டபோது மீண்டும் அழைத்து மற்றொரு கைநிறைய முத்துக்களை அதே சேவகனுக்கு அளித்தாராம். சேவகனும் சபையோரும் வியப்போடு பார்த்தபோது ஃபிலிப் மன்னன் கூறிய வார்த்தைகள் இவைதான்.
‘கேளுங்கள் சான்றோர்களே, கிரேக்கத்தின் இளவரசன் பிறந்துவிட்டான் என்பதற்காக இச்சேவகனுக்கு நான் முதலில் ஒருகை முத்தை அள்ளிக்கொடுத்தேன். மீண்டும் கொடுத்தது எதற்காகத் தெரியுமா? என் ஆசிரியர் அரிஸ்டாட்டில் உயிருடன் இருக்கும்போதே என் மகன் பிறந்துவிட்டான். அதனால் அவனும் அவரிடத்தில் கல்வி கற்பான் என்ற மகிழ்வால் மீண்டும் முத்துக்களை அள்ளிக்கொடுத்தேன்’ என்றாராம் ஃபிலிப் மன்னன் பெருமையோடு. அப்படி அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்ற அந்த இளவரசனே உலகத்தையே வென்ற மகாஅலெக்ஸாண்டர். ஆசிரியப்பணியின் பெருமையைச் சொல்ல இதனினும் வேறு சான்று வேண்டுமா?
வேலூரில் ஊரிஸ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களே இந்தியாவின் புகழ்பெற்ற ஜனாதிபதியானார். உலகின் 62 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளன.
இந்தியாவின் ஒப்பற்ற ஜனாதிபதியாக விளங்கிய மேதகு.அப்துல்காலம் அவர்கள் தம் இறுதிக்காலத்தில்; அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்ப்பது.
அகல்விளக்கு சிறிய வெளிச்சத்தைத் தருவதுதான். மின்சார பல்பு அதிக ஒளியை உமிழ்வதுதான். ஆயினும் எத்தனை முயன்றாலும் ஒரு மின்சார பல்பால் இன்னொரு பல்பை உருவாக்க முடியாது. ஆனால் ஒரு அகல்விளக்கு லட்சம் விளக்குகளை ஏற்றும். ஒரு ஆசிரியர் ஓராயிரம் நல்லாசிரியர்களை உருவாக்குவார், உலகுக்குத் தருவார்.
இராமாயணத்தில் சீதாயை மணப்பதற்காக இராமன் வில்லை முறித்தபோது சீதையின் தந்தையாகிய ஜனகமன்னன் இராமனுக்குத் தன் மகளாகிய சீதையை மணமுடித்துத்தர சற்றுத் தயங்கினாராம். அவர் தயக்கத்தைப் புரிந்துகொண்ட இராமனின் அருகிலிருந்த ஆசிரியராகிய விஸ்வாமித்திரர், ‘ஜனகமன்னனே இராமனின் தந்தையாகிய தசரதனுக்குப் பல பட்டத்தரசிகள் இருக்கிறார்களே என்று நீ கவலைப்பட வேண்டாம். இராமனைப் பெற்றது தசரதனே ஆனாலும் இராமனை வளர்த்தவர்கள் வசிட்டமாமுனி என்ற ஆசிரியனும், நானும்தான்’ என நற்சான்று அளித்தாராம் அந்த ஆசிரியர்.
கடவுளாக இருந்தாலும் அவருக்கு நற்சான்று தருவதற்கு இரண்டு ஆசிரியப்பெருமக்கள் தேவையாய் இருந்திருக்கிறார்கள் என்பதை புராணங்களில் இருந்து அறிகிறோம்.
இத்தகையப் பெருமை மிகுந்த ஆசிரிய பெருமக்களை உருவாக்கி உலகுக்குத் தரும் தூய ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி இன்று பொன்விழா காணுகிறது. இனிவரும் காலங்களில் பவளவிழா, நூற்றாண்டு விழா என விழாக்களால் இக்கல்வி ஆலயம் பெருமை பெறட்டும். மதுரையை நோக்கி தூய ஜஸ்டின் கல்வியியல் கல்லூரியை நோக்கி கல்வி கற்க மாநிலமே திரண்டு வரட்டும். வாழ்த்துக்களுடன்.
இப்படிக்கு
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்