காலத்தை வென்ற கவிஞர் கா.மு.ஷெரீப் .…

தமிழ்த் திரையுலகம் 1931ஆம் ஆண்டு பாட்டோடுதான் பேசத் தொடங்கியது. எனவே இன்றைக்குவரைக்கும் தமிழ்த் திரைப்படங்களில் பாடல் என்பது ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்பாடலை தொடங்கி வைத்த பிதாமகர் என்ற பெருமை தமிழ்ப்பாடல் உலகின் பிதாமகர் பாபாநாசம் சிவன் அவர்களையே சாரும். அவரைத் தொடர்ந்து உடுமலை நாராயணகவி, கு.ம.பாலசுப்பிரமணியன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, என்ற வரிசையில் தனக்கென ஒரு தனியிடத்தை வகுத்து அதில் தடம் பதித்தவர் கவிஞர். கா.மு.ஷெரீப் அவர்கள்.
தமிழ்த் திரையுலகில் தத்துவப் பாடல்களானாலும், காதல் பாடல்களானாலும் அப்பாடல்களில் இவரின் கற்பனை வளம் நெஞ்சை நிறைக்கும். சந்த நயம் செவியில் இனிக்கும்.
‘தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்…
என்று மழலை இன்பத்தை ‘நான் பெற்ற செல்வம்’ படத்தில் எழுதியிருப்பார். அதே படத்தில் ‘வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா… என்ற பாடல் எக்காலத்துக்கும் பொருந்தி வருகின்ற திரைப்படப்பாடல்.
இதேபோல் டவுன்பஸ் திரைப்படத்தில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப் பிரிந்த போன கணவன் வீடு திரும்பலே… என்ற பாடலும், இதே படத்தில் ‘பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால்… என்ற தத்துவப் பாடலும்,
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே…
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே… போன்ற பல பாடல்கள் இப்போது கேட்டாலும் நம்மை மகிழ வைக்கும்.
இவைதவிர திருவிளையாடல் படத்தில் வருகின்ற ‘பாட்டும் நானே பாவமும் நானே..’ என்கின்ற புகழ்பெற்ற பாடல் கண்ணதாசன் பெயரோடு வந்தாலும், அது நம் கவிஞர் பெருமான் கா.மு.ஷெரீப் எழுதிய பாடல்தான் எனப் பலர் குறிப்பிடுவர். இவர் குறித்து மேலும் விரிவான செய்திகள்…
கா.மு.ஷெரீப் 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி என்னும் ஊருக்கு அருகிலுள்ள அபிவிருத்தீஸ்வரத்தில் பிறந்தார். இவர் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சமூகம், வரலாறு என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களை ஆர்வத்தோடு ஆழ்ந்து கற்றார்.
சிறுவயதிலேயே நாடக ஆர்வமும், பாட்டெழுதும் திறனும் இயல்பாகவே இருந்தது. இவருடைய முதல் கவிதை 1934ஆம் ஆண்டு ‘குடியரசு’ எனும் இதழில் வெளியானது. சுதந்திரப் போராட்ட ஈர்ப்பினால் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். அதுகுறித்து விழிப்புணர்வுக் கவிதைகளை இதழ்களில் எழுதினார். ‘ஆத்திரம் கொள்’ என்னும் கவிதை அவற்றில் குறிப்பிடத்தகுந்தது. தனது கவிதைகளைத் தொகுத்து ‘ஒளி’ என்ற தலைப்பில் சிற்றிதழ் ஒன்றை நடத்தினார். அதன்மூலம் அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.
ஒளி இதழைத் தொடர்ந்து, 1952 முதல் 1969வரை, ‘தமிழ் முழக்கம்;’ ‘சாட்டை’ போன்ற இதழ்களையும் நடத்தியிருக்கிறார் கா.மு.ஷெரீப் அவர்கள். இந்த இதழ்கள் மாதமாகவும், மாதம் இருமுறையாகவும், தினஇதழாகவும் வெளி வந்திருக்கின்றன. இவர் பத்திரிக்கை உலகில் கோலோச்சிய அதேவேளையில், திரைப்படத் துறையிலும் ஒளி வீசியிருக்கிறார்.
கவிதைகள் மட்டுமல்லாமல் விழிப்புணர்வு நாடகங்களையும், பாடல்களையும் எழுதி வந்தார். அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்திற்காக இவர் எழுதிய ‘திருநாடே’ என்ற பாடல் பலராலும் ரசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலம்பிய கம்பெனி ரிக்கார்டுகளுக்காக’ வசனமும், பாடலும் எழுதத் தொடங்கிய கவிஞர், 1948இல் வெளிவந்த ‘மாயாவதி’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாகத் திரைப்படப் பாடல் எழுதினார். இதேகாலத்தில், ‘பெண் தெய்வம்’ ‘புதுயுகம்’ போன்ற படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார் கவிஞர்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப்‘அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் முன்னோடி இவர். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. ‘ஒளி’ என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்’ என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.
‘சீறாப்புராணம்’ சொற்பொழிவைக் கேட்ட பிறகு கா.மு.ஷெரீப் அவர்களை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்’ என்று கி.ஆ.பெ.புகழ்ந்துள்ளார்.
‘கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைபோல நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுதவேண்டும்’ என்று சொன்னவர் கா.மு.ஷெரீப் அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.
கா.மு.ஷெரீப்அவர்கள் எழுதிய இறைவனுக்காக வாழ்வது எப்படி? இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன.
திரையிசைப் பாடல்களும் இலக்கியத் தரம் வாய்ந்ததுதான் என்று நிரூபித்துக்காட்டிய கவிஞர்களுள் ஒருவர்தான் நம் கா.மு.ஷெரீப் அவர்கள். குரலுக்காக மட்டுமல்லாமல் பொருளோடும் திரையிசைப் பாடல்களைத் தந்தவர் நம் கவிப்பெருந்தகை கா.மு.ஷெரீப் அவர்கள்தான் என்பது காலம் ஏற்றுக்கொள்ளும் உண்மை.