கண்ணுக்கும்,காதுக்கும்,கருத்துக்கும் விருந்து…

மதுரையினுடைய பெருமைகளில் ஒன்று சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தது. அந்த முத்தமிழில் இயற்றமிழில் வல்லவர் பலர். இசைத்தமிழில் வல்லவர் பலர். நாடகத்தமிழும் வளர்ந்தது இம்மதுரையில்தான். அதனால்தான் நாடக உலகின் ஆசானாகிய சங்கரதாஸ்;சுவாமிகளுக்கு மதுரை தல்லாகுளத்தில் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமைமிகுந்த மதுரையில் மருத்துவத்துறையில் குறிப்பாகக் கண்மருத்துவத்தில் புகழ்பெற்ற மருத்துவராக இன்றும் விளங்கி வருபவர் கண்மருத்துவர் கோ. பாஸ்கரராஜன் அவர்கள். இவர் கண்மருத்துவத்துறையில் மட்டுமல்லாது இசைத்துறையிலும் வல்லவர்.
25 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரைக்கல்லூரியில் நான் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் புறப்பட்டபோது டாக்டர்.பாஸ்கரராஜன் அவர்களுடைய புல்லாங்குழல் இசைநிகழ்ச்சி தொடங்க இருக்கிறது என்ற அறிவிப்பு வந்தது. அரங்கைவிட்டு வெளியில் வந்த நான் ‘காற்றினிலே வந்த அந்த கீதத்தை’, புல்லாங்குழல் நாதத்தைக் கேட்டு மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து கச்சேரி முடியும் வரை இருந்து ரசித்துவிட்டு வந்தேன்.
அப்போது எனக்கு ஒரு உண்மை விளங்கிற்று. இவர் தன் மருத்துவக்கல்வியால் பார்வைக்குறைபாடுகளை நீக்கி ஒளி தருகிறார் என்பதோடு, தன் இசைத்திறத்தால் உலகோரின் செவிகளுக்கு இசைஒலி வழங்கி பல்துறை வித்தகராகவும் விளங்குகிறார் என அறிந்தேன். இதற்குமேலும் இவர் எழுத்துலகிலும் சுடர்விடுகிறார் என்பதை சமீபத்தில் அறிந்தேன். எப்படித் தெரியுமா? அவருடைய ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ எனும் நூலைப் படித்தேன், அது உண்மையில் ஒரு படித் தேன், அதனால் மகிழ்ந்தேன், உளம் நெகிழ்ந்தேன். இந்நூலில் முன்னுரை, நன்றியுரை நீங்கலாகப் பதினெட்டுக் கட்டுரைகளில் தன் வாழ்;க்கை அனுபவம் முழுவதையும் பகிர்ந்திருக்கிறார், படிப்போரின் மனதில் பதியவைத்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.
இவர் தன் கல்லூரிக் காலங்களில் என்.சி.சியில் சேர்ந்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார். பின்னர் தன் பயண அனுபவங்களை இந்நூல் முழுவதும் பட்டுநூலாக இழையோட விட்டிருக்கிறார். இதில் குஜராத்தான் இவரின்; முதல் பயணமாக அமைந்திருக்கிறது.
இதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள். நம் மாண்புமிகு.பிரதமர் மோடி அவர்களும் குஜராத்தில் பிறந்தவர்தான். அவருக்குப் பிறகு அவரைப்போலவே அதிகநாடுகளைச் சுற்றிவந்தவர்; நம் மருத்துவர் பாஸ்கரராஜனாகத்தான் இருப்பார் போலும். இதோ இந்த பட்டியலைப் பாருங்கள்.
இங்கிலாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, நைஜீரியா, குரோசியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் என்று இவர் செல்லாத நாடுகளே இல்லை. அப்படி இவர் செல்லாவிட்டால் அது நாடே இல்லை என்று சொல்லுகிற அளவிற்கு உலகவரைபடம் முழுவதும் சென்று வந்து அதை நமக்குத் திரைப்படக்காட்சியைப் போல் வர்ணிக்கிறார்.
அதிலும் குறிப்பாகக் கடவுச்சீட்டு (Pயளளிழசவ) பெறுவது முதல், விசா பெறுதல், இமிக்கிரேசனில் பட்டபாடு, அயல்நாட்டு அனுபவங்களில் கிடைத்த அற்புத அனுபவங்கள், உண்ட உணவுகள், கண்ட மனிதர்கள், ரசித்த காட்சிகள், படித்த புத்தகங்கள் என்று இவர் வர்ணித்துக்கொண்டே செல்லும்போது அந்த இடங்களுக்கெல்லாம் நாமும் எப்போது செல்வோம் என்ற ஏக்கம் ஏற்படுகிறது.
ஆனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இவர் சென்று வந்த நாடுகளுக்கெல்லாம் நானும் சென்று வந்திருக்கிறேன். அதனால் அவர் சொல்லுகிற இடங்களையும், சென்று வந்த காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது.
இந்நூலின் மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா? தன் எழுத்தோவியத்தில் தான் பங்குபெற்ற காட்சிகளை நமக்குச் சாட்சிகளாகக் காட்டுவதற்காக வண்ணப்புகைப்படங்களையும், நூல் முழுவதும் பதியவைத்து வடிவமைத்திருப்பது மேலும் ஒரு அழகு.
பாஸ்கரன் என்றால் சூரியன் என்று ஒரு பொருள் உண்டு. அந்தச்சூரியன் நின்ற இடத்திலே நின்றாலும் நம் சூரியன் (பாஸ்கரன்) உலகைச் சுற்றி வலம் வந்திருக்கிறார். அதை நூல் வடிவிலும் ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு வாழ்த்துரையாகத் தமிழ் ஆட்சி மொழி, தமிழர் பண்பாடு, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், திருமிகு.க.பாண்டியராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருப்பது பெருமைக்குரியது.
டாக்டர்.பாஸ்கரராஜன் அவர்கள் மருத்துவத்துறையிலும், இசைத்துறையிலும் தற்போது எழுத்துத்துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். வாழ்க அவர் புகழ். உலகோரின் கண்ணுக்கும், காதுக்கும், கருத்துக்கும் பயன்படுமாறு இவர் செய்கின்ற செயல்கள் எல்லாம் காண்பதற்கு எளிமையாய், கேட்பதற்கு இனிமையாய், படிப்பதற்கு அருமையாய் அமைந்திருப்பது இவரின் பெற்றோர்கள் செய்த தவம். இவர் குடும்பத்தார் பெற்ற வரம். இறைவன் இவருக்குக் கொடுத்த அருள். தொடரட்டும் இவரின் பணிகள். வாழ்வில் பலருக்கு ஒளிவிளக்காய் இவர் வழிகாட்டுவார் என வாழ்த்துகிறேன்.
அன்புடன்.
கு.ஞானசம்பந்தன்.
தகைசால் பேராசிரியர்.
தியாகராசர் கல்லூரி, மதுரை.