கடற்கரையில் கல்யாணம்… கலகலக்கும் சந்தோசம்…
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை கல்யாண மாலை திருமணத்தகவல் மையத்தின் (Matrimonial) மூலமாக நடத்திக்காட்டிய சாதனையாளர்கள் திரு.கல்யாணமாலை மோகன் அவர்களும், அந்நிகழ்ச்சியின் இயக்குநர், எழுத்தாளர், பேச்சாளர் என சகலகலாவல்லியாக விளங்கும் திருமதி. மீரா நாகராஜன் அவர்களும்தான்.
காலத்திற்கு ஏற்றவாறு கல்யாண மேட்ரிமோனியல் நிகழ்வினை சன் டி.வி.என்னும் ஊடகத்தின் மூலம் இன்றைக்கும் வெற்றிகரமாக இந்நிகழ்வினைத் தொடர்ந்து வருபவர்கள் இவர்கள்.
உலகமெங்கும் உள்ள வீடுகளில் கல்யாண விளக்கேத்திய இவர்கள் வீட்டுத் திருமணம் வா~pங்டனில் திருமணம்போல சென்னை மகாபலிபுரக் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் மிக அற்புதமாக நிகழ்ந்தது. திருமதி. மீரா நாகராஜன் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி.—————– ஆகியோரின் திருமணம்தான் மாமல்லபுரத்தையே மகிழ வைத்தது.
சீனநாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கும் (Xi Jinping), இந்தியப் பிரதமர் மோடி அவர்களும் இந்த மாமல்லையில்தான் சந்தித்தார்கள். உலகமே பார்த்து வியந்தது. மீண்டும் ஒரு அற்புதம் அங்கே நிகழ்ந்தது என்றால், அது கல்யாணமாலை வீட்டுக் கல்யாணம்தான்.
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ‘பர்ஸ்ட் லுக்’ வெளியிட்டு திருமணம் நிகழ இருக்கிற லொக்கே~னில் குறும்படம் எடுத்து, மங்கல இசையோடு நம்மை அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரவேற்றது அவர்கள் செய்த புதுமை. திருமணத்திற்கு முதல்நாள் மாலை, வரவேற்பு நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். மதுரையிலிருந்து சென்னை சென்றது பெரிதாகத்தெரியவில்லை. மகாபலிபுரத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வரங்கத்திற்குள் கார்கள் ஊர்ந்து சென்ற விதம் ‘மௌன்ட் ரோடு’ டிராபிக் ஜாமை நினைவூட்டியது. கார்கள் போகும்வழியை ஒருவழிப் பாதையாக்கி கார் பார்க்கிங்கை மைதான அளவில் விரிவுசெய்து வைத்திருந்தும், நாங்கள் இறங்கி நடந்துதான் போகவேண்டியிருந்தது. ஆனால் கடற்கரையில் நடப்பதற்கு அதிலும் கலகலப்பான கல்யாணவீட்டில் நடப்பதற்கு நமக்கெல்லாம் சொல்லியா கொடுக்கவேண்டும். துள்ளிக்கொண்டு உள்ளே செல்லலாம் என்றால், அங்கும் வரிசை. ‘நீங்க எப்ப வந்தீங்க?’ இப்படிக் கேட்டவர்கள் மும்பையிலிருந்து வந்தவர்கள். ‘அவரோடதான் நானும் வர்றேன்’ என்று சொன்னவர் டெல்லிக்காரர். ‘ஹைதராபாத்திலிருந்து நான் முந்தாநாளே வந்துட்டேன்’ என்றார் ஒருவர் சிரித்துக்கொண்டே. இதில் என்னை ஆர்வமாய் வரவேற்றவர்கள் அமெரிக்கக்காரர்கள்.
மணமக்கள் இருந்த மேடையை பைனாகுலர் மூலம்தான் என்னால் பார்க்க முடிந்தது. அத்தனை நீண்ட க்யூ. அப்போது ஒருவர் வந்து, ‘நீங்கள் சிறப்பு விருந்தினர். இப்படி வாருங்கள்’ என்று அழைத்துக்கொண்டுபோனார். அவர் மேடைக்குத்தான் அழைத்துக்கொண்டு போறார் என்று மகிழ்வோடு போக, அங்கேயும் ஒரு க்யூ. அதற்குள் என்னைப் பார்த்துவிட்ட கல்யாணமாலை மோகன் அவர்கள் எப்போதும்போல புன்னகை ததும்பும் இன்முகத்தோடு என்னை வரவேற்க, திரு.நாகராஜன் அவர்களும், திருமதி. மீரா நாகராஜன் அவர்களும் மணமக்கள் அருகில் என்னை அழைத்துச்சென்று அவர்களை ஆசிர்வதிக்கச் சொன்னார். தொலைவில் இருந்து மேடையைப் பார்த்த நான் மேடையில் இருந்து கீழே பார்த்து அசந்து போய்விட்டேன். ‘சாப்பிடப் போகலாம்’ என்று என்னை அழைத்துக்கொண்டு அநேகமாக ஒரு பர்லாங்கு தூரம் அந்தக் கூட்டத்தைக் கடந்து, நான் சாப்பிட வந்தேன்.
மாயாபஜார் படத்தில் ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்று சொல்வது போல, உணவுவகை பட்டியலை இந்தக் கட்டுரையின் பாக்ஸ் நியூஸில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆர்வமாய்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரிடம், ‘சுடச்சுட தோசை தருகிறார்களாமே! எங்கே?’ என்றேன். அவரும் அவசரமாக சாப்பிட்டுக்கொண்டே, ‘அடுத்தத் தெருவில்’ என்றார். உண்மைதான், காரைக்குடி பக்கம் நகரத்தார் வீடுகளில் சமையல்கட்டுக்கு சைக்கிளில்தான் போவார்கள்போல, என்று நானே அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்போது நான் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு திரும்பி நடந்து வருவதற்குள் பசித்துவிட்டது. அதனால் என்ன? ஆந்திரா பெசரெட்டு, கன்னட பிசிபேளாபாத், மும்பை பேல்பூரி, தமிழ்நாட்டு அடை அவியல், என்று சோறு கண்ட இடம் சொர்க்கமாக, நான் சுற்றிக் கொண்டிருந்தேன். வந்திருந்த அத்தனை விருந்தாளிகளுக்கும் தங்குவதற்கான ஏற்பாட்டையும் கடற்கரை ரிசாட்டிலேயே செய்திருந்தார்கள் கல்யாண வீட்டார். வரவேற்பே இப்படி ஜொலித்தது என்றால், மறுநாள் திருமணத்தைக் கேட்கவா வேண்டும். பார்க்கத்தான் பல்லாயிரம் கண்கள் வேண்டும்.
சூரியன் அதிகாலையில் தோன்றுவதற்கு முன்பாகவே திருமணச்சடங்குகள் தொடங்கி விட்டன. அந்தத் திருமணத்திற்கு முதல்நாள் இரவு சந்திரனும் வந்திருந்தான், மறுநாள் காலை சூரியனும் வந்திருந்தான். திரைப்பட நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
மணமகன், மணமகள் கண்ட கனவு அங்கே அற்புதமாய் நிறைவேறிக் கொண்டிருந்தது.
வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான்
என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப்
புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
தோழீநான்.
எனும் ஆண்டாள் நாச்சியாரின் பாடலுக்கு ஏற்பத் தோரணங்களும், கமுகும், வாழையும், வரவேற்பு நிகழ்வுகளும் கண்டோரை மெய்சிலிர்;க்க வைத்தன. காலை விருந்தும், அந்தச் சுவை மாறும்முன,; மதியவிருந்தும், எல்லோரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தன. மணமகன் மங்கலநாண் பூட்டிய பிறகு, நலுங்கு நிகழ்ச்சிகள் நலம்பெற நிகழ, ஊஞ்சல் காட்சி நடந்தது. மறக்கமுடியாத நிகழ்ச்சி. வழக்கமாக வீடுகளில் மண்டபத்தில் ஊஞ்சலில் மணமக்களை அமரவைத்து, ஊஞ்சல் பாட்டுப் பாடுவார்கள். இத்திருமண நிகழ்வில் ஒரு சிறப்பு என்னவென்றால், திருமணம் நிகழ்ந்ததே கடற்கரையில்தான். ஊஞ்சலை அவர்கள் அமைத்திருந்த விதம் எப்படித் தெரியுமா? ஊஞ்சலின் பின்புறத்தில்; சூரியன், ஆகாயத்தில் மேகங்கள், கடல் அலைகளின் ஆரவாரம் சுத்தி நின்றோர் பட்டுப்போன்ற கடற்கரை மென்மணலில் பட்டுப்புடவைகள் பளபளக்க, கைவளையல்கள் கலகலக்க, ஊஞ்சல் பாட்டுப் பாடியபோது, நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாக அந்தக் காட்சி வந்திருந்தவர்களை மகிழ வைத்தது.
உலகெங்கும் வந்திருந்த அத்தனை இல்லத்தாரும் மணமக்களை வாழ்த்தியதோடு, தங்கள் திருமணத்தை நடத்திவைத்த கல்யாணமாலை மோகன் அவர்களையும் திருமதி.மீரா நாகராஜன் அவர்களையும், வணங்கி ஆசிபெற்றுச் சென்ற காட்சியும், கண்டோரை நெகிழ வைத்தது. சென்னையில் திருவையாறு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். சென்னைக்கு அருகே மகாபலிபுரம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மகாபலிபுரம் இருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆனால் அன்றைக்கு தமிழ்நாடு மகாபலிபுரத்திற்குள்தான் இருந்ததோ! என்ற எண்ணம் நமக்குத் தோன்றியது.
கல்யாணமாலை திரு.மோகன் அவர்களும், திருமதி.மீரா நாகராஜன் அவர்களும் தங்கள் நிறுவனத்தின் மூலம் ஏற்றிவைத்த இல்லற விளக்குகள் அனைத்தும் அன்றைக்குக் கடற்கரையில் ஒன்றுகூடிய காட்சியைப் பார்த்தபோது, அத்தனைபேரும் வாயார, மனதார மணமக்களை வாழ்த்திய வாழ்த்தொலி நம் காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர்
குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல
வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும்
பெருந்தகை இருந்ததே
–திருஞான சம்பந்தர்.
நீளாயுள், நிறைசெல்வம், மக்கட்பேறு, மங்கலச் செயல்கள் என மணமக்களின் நல்வாழ்வு தொடரட்டும். வாழ்க மணமக்கள்! வாழ்க மணமக்கள்!