எல்லா உயிரும்…நம் உயிர் தான்…

வீட்டில் ஏதாவது ஜீவன்களை வளர்ப்பது இயல்பான விஷயம். அதனைப் பற்றிச் சொல்வதற்கு முன், ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
சின்னப்பையன் ஒருவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்த சமயத்தில், அவன் ஆசையாக வளர்த்து வந்த மைனா இறந்துவிட்டது. சாயங்காலம் அவன் வீட்டுக்கு வந்ததும், தயங்கியபடி அம்மா அவனிடம் சொன்னாள். அவனோ விளையாடப் போய்விட்டான். விளையாடித் திரும்பியவன் மைனா எங்கே? என்றான். டேய் அப்பவே சொன்னேன். தெரியலையா? அது செத்துப் போச்சு என்றாள் அம்மா.
பையன் உடனே புரண்டு புரண்டு அழுதான்.
அவனைத் தூக்கி நிறுத்தி, ஒரு அடி கொடுத்தாள் அம்மா.
டேய் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் செத்துப் போச்சுன்னு சொன்னேனே… உடனே விளையாட ஓடிவிட்டே? என்றாள்.
பையன் நிதானமாகச் சொன்னான்.
நான் நைனான்னு நினைச்சேன். அவனைப் பொறுத்தவரை நைனா அடிக்கும். மைனா அடிக்காது. ஒன்றைக் கொஞ்சலாம். இன்னொன்றைக் கொஞ்ச முடியாது.
வீட்டில் மைனா, நாய், பூனை, கிளி, குருவி இப்படி எதை வளர்த்தாலும் அதனுடன் சட்டென்று ஒன்றிவிடுவது குழந்தைகள்தான். வெளிநாடுகளில் சிலர் முதலை, ஓணானைக்கூட ‘பெட்’ அனிமலாக வளர்க்கிறார்கள்.
ஒருமுறை வெளிநாட்டுக்குப் போயிருந்தபோது, அங்கு ஒருவர் விமானத்தில் ஏறும்போது வித்தியாசமாகத் தெரிந்தார். உற்றுக் கவனித்தால், அவருடைய தோளில் உடும்பு, விமானநிலைய அதிகாரிகள் அரண்டு விட்டார்கள். எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அதற்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிக்கொண்டு ‘உடும்புப்பிடியாக’ப் பயணம் செய்தார். இங்குள்ள நடிகை வீட்டில் ஒரு நாயைப் பார்த்தேன். உருண்டையாக இருந்தது. ‘கடிக்குமா?’ என்று கேட்டேன். ‘கடிக்காது’ என்றார்கள். ‘குரைக்குமா?’ என்று கேட்டபோது, ‘குரைக்காதே’ என்றார்கள். கிராமத்து வீட்டில் நாம் தூங்க, நாய் வெளியே காவல் காக்கும். நகர்ப்புறங்களில் நாய் மெத்தையில் படுத்திருக்க, அது ஓடிவிடாமல் காவல் காக்கிறார்கள்.
எங்கள் கிராமத்து வீட்டில் நாங்கள் வளர்த்த நாய், திடீரென்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச காலமாயிற்று. ஒருநாள் அடைமழை, ஒரே குளிர், வீட்டுக்கதவை மெதுவாக யாரோ பிறாண்டுகிற சத்தம். திறந்தால் ஈரத்துண்டு மாதிரி இருந்தது அதன் முகபாவம். மகிழ்ச்சியுடன் நாங்கள் குரல் கொடுத்ததும், முதலில் அது நுழைய, அதன் பின்னாடி நான்கு குட்டிகள், அதன்பிறகு அதுகள் பண்ணிய அட்டகாசம் இருக்கிறதே…ஒரே அமர்;க்களம்தான்.
இன்னொரு சம்பவம், ஒரு சிறுவன் பிரியமாக வளர்த்த நாய் இறந்து போய்விட்டது. அந்த சோகம் தாளாமல் அழுதுகொண்டிருந்த பையனை, சமாதானப்படுத்த ஒரு டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போனார்கள். சீரியஸானபடி முகத்தை வைத்துக்கொண்டு, பையனிடம் சொன்னார் டாக்டர்.
‘அழாதேப்பா… எங்க தாத்தா கூடத்தான் செத்துப்போயிட்டாரு நான் அழறேனா… பாரு…’
அழுகையை நிறுத்திவிட்டுச் சொன்னான் பையன், ‘நான் அந்த நாயை அதோட சின்ன வயசிலிருந்தே வளர்த்திருக்கேன். அதனாலேதான் அழறேன். நீங்க என்ன உங்க தாத்தாவைச் சின்ன வயசிலிருந்தா வளர்த்தீங்க?’ அதன்பிறகு சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை டாக்டர்.
வளர்ப்புப் பிராணிகளோ, மீனையோ வளர்த்தால் மனிதர்களின் மனஅழுத்தம் குறையும் என்று சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
செல்போன், டி.வி., கம்ப்யூட்டருடன் நாம் கொள்ளும் உறவு, வெறும் இயந்திர உறவுதான்.
ஆனால், வளர்ப்புப் பிராணிகளிடம் நமக்கிருக்கும் உறவோ, உயிர்த்துடிப்பானது.
உயிர்களை நேசிப்போம், உலகையும் நேசிப்போம்!