எல்லாப்பொருளும் இதன்பால் உள…

நூல்கள் என்றழைக்கப்படும் புத்தகங்கள் பலவகைப்படும். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்(புதினம்), வாழ்க்கை வரலாறு, பயணநூல்கள் எனப் பல வகைப்படுத்திச் சொல்லிக்கொண்டே செல்லலாம். இவைதவிர, நீதிநூல்கள், பக்திநூல்கள், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான சுயமுன்னேற்ற நூல்கள், அறிவியல், வரலாறு, புவியியல், வானவியல், மருத்துவம், சோதிடம் என்ற வகையிலும் நூல்கள் அமைவதுண்டு.

          படைப்பிலக்கியங்களைத் தனிமனிதர்களும் படைப்பதுண்டு. பலர் படைத்ததைச் சிலர் தொகுத்துத் தொகுப்பு நூல்களாகவும் வெளியிடுவதுண்டு. சங்ககாலத்தில் நூலைப்படைத்தவர், படைத்த நூலைத் தொகுத்தவர் அவ்வாறு தொகுப்பிக்குமாறு சொன்னவர் ஆகியோருடைய பணிகளும் குறிப்பிடத்தகுந்தவைதான். சங்கஇலக்கியங்களில் இத்தகைய முறை காணப்படுவதுண்டு. ஒருகாலத்தில், ஒரு படைப்பாளி ஒரு நூலைப் படைக்கப், பிற்காலத்தில் அதனை ஒருவர் தொகுக்க, அப்படித் தொகுக்குமாறு அவரைத் தூண்டி ஒருவர் பொருளுதவி செய்ய, அவ்வகையில் தமிழ் இலக்கியத்தில் நூல்கள் பல காணப்படுகின்றன.

          சமீபத்தில் சிவகாசியைச் சேர்ந்த திரு.சிவராஜன் அவர்கள் என்னிடத்தில் ஒரு நூலினைக் கொடுத்து இதற்கு அணிந்துரை எழுதித்தாருங்கள் எனக் கேட்டார். அந்நூல்தான்கற்றவையும் கேட்டவையும்’ (ஆனந்த அனுபவம்). இந்நூல் நான் மேலே கூறிய படைப்பு நூலா? தொகுப்பு நூலா? என்று படித்துப் பார்த்தபோது, இவ்வணிந்துரையின் தொடக்கத்தில் நான் கூறியதுபோல அத்தனை செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது.

சினிமா, ஆன்மீகமும் தத்துவமும், அறிவியல், வரலாறு, சமூகம், கல்வி, இலக்கியம், உடல்நலம், மிகச்சிறந்த ஆளுமை என ஒன்பது தலைப்புகளில், நூற்றி ஐந்து உட்தலைப்புகளில், நூற்றி இருபத்து மூன்று பக்கங்களில் செய்திக் களஞ்சியமாக பல்வேறு செய்திகளை நமக்குத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஓய்வுபெற்ற முதுபெரும் தலைமை ஆசிரியர் திரு.து.ஆல்பர்ட் செல்வராஜ் அவர்கள்.

இந்நூலில் அவர் முன்னுரையில் கூறியுள்ளபடி அவர் படித்த, ரசித்த, அனுபவித்த, ஆராய்ச்சி செய்த, துன்பப்பட்ட, மகிழ்ந்த, பிறரை இன்னல்களில் இருந்து காத்த, பலரை முன்னேற்றிய செய்திகளின் அனுபவங்களின் தொகுப்பாக இத்தொகுப்பினைப் தொகுத்துத் தந்திருக்கிறார்.

          சுவையான சர்க்கரைப் பொங்கலில் ஆங்காங்கே நெய்யில் வறுத்த முந்திரிபோல சில கவிதைகளையும், ஒரு சில நகைச்சுவைத் துணுக்குகளையும் அவர் விரவித் தந்திருப்பது படிப்பவருக்கு மேலும் இன்பம் பயப்பதாக அமைகிறது. சான்றாக,

ஆசிரியர்: எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

மாணவன்: தெரி….யாது.

ஆசிரியர்: எட்டு எட்டாப் போனா நாலு எட்டுல அடைந்து விடலாம். அதாவது

             8848 மீட்டர்.        

          இதேபோன்று கவிதை ஒன்றையும் தருகிறார்,

                   மகளின் பர்த் சர்டிபிகேட்டுக்காக

                      அப்பா லஞ்சம் கொடுப்பதும்,

                   அப்பா டெத் சர்டிபிகேட்டுக்காக

                     மகள் லஞ்சம் கொடுப்பதுமாகக்

                   கழிகிறது வாழ்க்கை!

          எனும்; இவரது கூற்றைப் பார்க்கிறபோது இந்த உலகத்தில் சாகாதது லஞ்சம் ஒன்றுதான் போலும் என்று நமக்குச் சிந்திக்கத் தோன்றுகிறது.

இந்நூலின் சினிமா பற்றிய தலைப்புகளில் ஆசிரியர் கூறுகின்ற பல செய்திகளுக்கு ஆதாரங்களைச் சான்றுடன் தந்திருப்பாரேயானால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும். உதாரணமாக, ‘கண்ணதாசன் கொடுத்த வாய்ப்புஎன்னும் முதல் கட்டுரையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்சாரதாபடத்திற்கு திரு.பஞ்சுஅருணாசலம் பாட்டெழுதிய செய்தியும், இளையராஜாவை இசையமைப்பதற்காகப் பஞ்சுஅருணாசலம் அறிமுகப்படுத்திய செய்தியையும் சொல்லலாம்.

எம்.ஜி.ஆரின் மனிதநேயத்தைப் பற்றிக் கூறும்போது பழம்பெரும் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் வீட்டை ஒரேநாள் இரவு விடிவதற்குள் அவருக்கு மீட்டுக்கொடுத்த செய்தியையும,; சிவாஜிசாந்திபடத்தில் பாடிய, ‘யார் அந்த நிலவு?’ என்ற பாடலுக்குசிவாஜி ஊதித்தள்ளிய (சிகரெட்) பாடல்என்ற தலைப்பும் நமக்கு வியப்பைத் தருகின்றன.

          வசனகர்த்தா ஆரூர்தாஸ் கூறிய கவிஞர்கள் குறித்தக் கருத்தாக (கே.பி. காமாட்சி, கம்பதாசன், தஞ்சை ராமையாதாஸ்) இந்நூலாசிரியர் கூறும் செய்தியை இந்நூலில் தவிர்த்திருக்கலாமோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

          ‘கன்னடத்துப் பைங்கிளியின் கலை நயம்இபன்னீரில் குளித்த சூப்பர் ஸ்டார், பழம்பெரும் நடிகை காஞ்சனா, பின்னனிப் பாடகி மின்மினிஆகியோரைப் பற்றிய செய்திகள் போகிறபோக்கில் வாசிக்கத் தக்கவையாக அமைகின்றன.

          ‘ஆன்மீகமும் தத்துவமும்எனும் இரண்டாம் பகுதியில் ஆசிரியர் கூறுகின்ற தத்துவக்கருத்துக்கள் கற்போருக்குப் பயன் தருகின்ற பலாச்சுளைகளாக அமைகின்றன. அறிவியல் பகுதியில் பெரும்பாலும் ஆசிரியர் கூறுகிற கருத்துக்கள் நாம் யூட்யூபிலும், வாட்ஸ்அப்பிலும் கண்டு மகிழ்கிற செய்திகள் என்றாலும் இவற்றைத் தேடி ஆசிரியர் தொகுப்பித்ததற்காக நன்றி கூறலாம்.

          ‘வரலாறுபகுதியில் ஷாஜகானின் மயிலாசனத்தைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். சமீபத்தில் நான் லண்டன் சென்றிருந்தபோது அங்குள்ளவர்களிடம் அந்த மயிலாசனத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டேன். அவர்களும் கோகினூர் வைரத்தைப் பற்றியும,; ஷாஜகானின் மயிலாசனம் பற்றியும் இந்நூலாசிரியர் கூறிய கருத்தையே பதிவு செய்தார்கள்.

சமூகம்என்னும் பகுதியில்தோள் சீலைப் போராட்டம்குறித்து ஆசிரியர் எடுத்துக் காட்டியிருப்பதும், மெக்காலே இந்தியாவை வீழ்த்திய தந்திரமும், இன்றைய இளைய தலைமுறையினர் நினைவு கொள்ள வேண்டிய ஒன்று.

இதேபோல பாரதியார், நிவேதிதாதேவி சந்திப்பை அழகாகக் கூறிய ஆசிரியர்பாரதிக்குப் பாடம் புகட்டிய நிவேதிதாஎன்று தலைப்பைத் தந்திருப்பதை மாற்றியிருக்கலாமோ! என எண்ணத் தோன்றுகிறது.

கல்விஎனும் தலைப்பில்; ‘இரவில் கதவைத் தட்டியக் காவலர்என்ற செய்தியும், தேர்வு நேரத்தில் ரத்தவாந்தி எடுக்கும் பையனைச் சுட்டிக்காட்டிதேர்வும் இரத்த வாந்தியும்என்ற தலைப்பில் கூறுகின்ற செய்தியும், ‘சாவியை மறந்த அலுவலர்’, ‘விடைத்தாளும் திருப்பதி மொட்டையும்போன்றவையெல்லாம் இந்நூலாசிரியரே நேரில் சந்தித்த அனுபவங்களாதலால் மர்மக்கதை படிப்பதைப் போல நமக்கு ஒரு சுவாரஸ்யம் ஏற்படுகிறது.

இலக்கியம்என்ற தலைப்பில் திருக்குறளில் இவர் எடுத்துக்காட்டும் அரிய செய்திகளும் ஒளவை குறித்த ஆய்வும் ஆய்வுக்குறிய அரிய களங்கள்.

உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்பதைச் சாதாரணப் புரோட்டா மூலமும், கொடுமையான சர்க்கரை வியாதி மூலமும் ஆசிரியர் மிக எளிமையாகச் சுட்டிக் காட்டுகிறார்.

நிறைவாகமிகச்சிறந்த ஆளுமைஎன்ற தலைப்பில் உள்ள 13 தலைப்புகளும் (93 தொடங்கி 105 வரை) இந்நூலின் மிக உயரிய செய்திகளாக நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன. குறிப்பாகச் சர்தாரின் மகள் மணிபென் படேல் குறித்த செய்தியும,; ‘பத்துப் பைசாவில் ஓர் திருமணம்என்ற செய்தியும் மிக அற்புதமான பதிவுகள்.

கல்விப் பணியில் பல்லாண்டு காலமாகத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிப் பின்னர் திருக்குறளில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆய்வில் (.Phடை) பட்டம் பெற்று, இடையறாது எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இயங்கிக் கொண்டிருக்கும் திரு.து.ஆல்பர்ட் செல்வராஜ் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். மேலும் பட்டங்கள் பெற வேண்டும். கற்றவற்றை, தான் பெற்றவற்றை, மற்றவர்க்குத் தரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் இவரது பண்பு மென்மேலும் வளர வேண்டும்.

கி.மு.வில் தொடங்கி கி.பி.யில் நேற்றைய செய்தியான (26.03.2018) நிக்கா ஹவாலா வரையிலும் இவர் இந்நூலில் பதிவு செய்திருப்பது இவரின் ஆழ்ந்த புலமைக்கும் ஆர்வம் மிகுந்த படிப்பிற்கும் சான்றாக அமைகின்றன. தொடரட்டும் இவரது பணிகள்.

வாழ்த்துக்களுடன்

இப்படிக்கு

                                                          கு.ஞானசம்பந்தன்

                                                                         தகைசால் பேராசிரியர்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.