இளங்கவியே எழுத்தால் வெல்….

“ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்” எனப் பாடுகின்ற ஒளவையார், ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞர்களாக உருவெடுப்பர் எனத் தன்னுடைய பாடல் ஒன்றில் குறிப்பிடுகிறார். அவ்வகையில் எத்தனைதான் கற்றிருந்தாலும், எவ்வளவோ பட்டங்களைப் பெற்றிருந்தாலும் அவ்வனைவரும் கவிஞர்கள் ஆகிவிடுவதில்லை.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனச் சொன்ன கனியன் பூங்குன்றனார்; ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு சங்கப்புலவர். சங்கப்புலவர்களின் பாடல் வரிகள் தமிழ் மொழிக்கு ஆணிவேர்.
இதேபோல் தமிழருக்கு, இந்தியருக்கு என்றில்லாமல் மனிதஇனத்திற்காகவே படைக்கப்பட்டது வள்ளுவப்பேராசானின் திருக்குறள் என்னும் நன்னூல், தொன்னூல். ஆழ்வார்களும், நாயன்மார்களும், கவிச்சக்கரவர்த்தி கம்பரும், இருபதாம் நூற்றாண்டில் பாரதியும், திரையுலகில் பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் தங்கள் கவிதைவரிகளால் மக்கள் என்றென்றும் நிலைத்துநிற்பார்கள் என்பது உண்மை.
புதிய கவிதைநூல்களைப் படிக்கிறபோதெல்லாம் ஒரு நல்லமனிதரைச் சந்திக்கின்ற மகிழ்ச்சி எனக்குள் ஏற்படும். வள்ளுவரும்,
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
எனக் கூறியிருக்கிறார்.
எங்கள் தியாகராசர் கல்லூரி கவிஞர்;களுக்கான கருப்பை, தாய்மடி. கவிக்கோ அப்துல்ரகுமான் தொடங்கி நா.காமராசன், மு.மேத்தா, மீரா, கவிமாமணி அப்துல்காதர், அபி எனும் தமிழ்க் கவிதைச் சங்கிலியின் தொடர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நான் பயின்றதும், பணியாற்றியதும் தற்போது ஓய்வுக்குப் பிறகும் பணியாற்றிக்கொண்டிருப்பதும் அப்பெருமை மிகுந்த தியாகராசர் கல்லூரியில்தான். என் உயர்வுகளுக்கெல்லாம் காரணம் எங்கள் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரிதான் என்று சொல்லுவதே எனக்குப் பெருமகிழ்ச்சியை எப்போதும் தரும்.
எங்கள் தியாகராசர் கல்லூரியின் படிக்கட்டுகளும் பரணி பாடும், புல்லும் புறநானூறு கூறும் என்று இன்றைக்கும் பெருமிதத்தோடு சொல்லுவோம். அந்தக் கவிதைப் பட்டறையிலிருந்து வெளிவந்து மின்னுகின்ற ஒரு சிறு தீப்பொறிதான் கவிஞர் பொன்.பாண்டியன்.
இவர் பிளஸ்2 வரையிலும் படித்துவிட்டுக் கல்லூரி தியாகராசர் கல்லூரியின் அலுவலகத்தில் பணியாற்றவந்தவர். தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். நான் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியபோது எங்கள் கல்லூரியிலிருந்து வெளிவந்த தியாகராசர் செய்திமடல் என்னும் இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தேன். அப்பத்திரிக்கை மாணவரின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காகத் தொடங்கப்பட்டது, நடந்து வருவது. பருவஇதழாக இருந்த அதனை மாதஇதழாக மாற்றி நான் நடத்திக்கொண்டிருந்தேன்.
அப்போது ஒருநாள் நம் கவிஞர் பொன்.பாண்டியன் தான் எழுதிய சில கவிதை வரிகளை என்னிடத்தில் கொண்டுவந்து காண்பித்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அவர் தமிழ் இளங்கலையோ, முதுகலையோ படிக்கும் மாணவர் அல்லர். அலுவலக உதவியாளர்தான். ஆனாலும் தமிழன்னை அவரையும் தத்தெடுத்திருந்தாள். அவரது கவிதை வரிகளைச் செம்மைப்படுத்தி தியாகராசர் செய்திமடலில் தொடர்ந்து வெளியிட்டு வந்தேன்.
எங்கள் நகைச்சுவை மன்றத்திலும் உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றும் தன்மை படைத்தவர் கவிஞர் பொன்.பாண்டியன். அவரிடத்தில் நான், ‘உயர்கல்வி கற்க விரும்புகிறீர்;களா?’ என்று கேட்டதோடு மட்டுமல்லாமல், அவருக்கு அதில் ஆர்வம் இருப்பதை அறிந்து அவரைப் படிக்கத் தூண்டினேன், அதற்கானப் பொருளுதவியும் செய்தேன். தற்போது அவர் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றுப் பெருமையோடு திகழ்கிறார்.
மாமதுரை கவிதைப் பேரவையின் மறைந்த தலைவர் வீரபாண்டியத் தென்னவன் அவரிடத்தில் கவிதைப் பயிற்சி பெற்ற பொன்.பாண்டியன் பல மேடைகளைக் கண்டவர். பரிசுகளையும் பட்டங்களையும் வென்றவர். தற்போது கவிஞர் பொற்கைப் பாண்டியன் அவர்களுடைய கவிதாமண்டலக் கவிஞர்களுள் ஒருவராகக் கவிதைத்தூரிகையோடு உலாவருகிறார். கவிஞர் பொற்கைப் பாண்டியனின் நன்மதிப்பையும் பெற்று இதோ அவரது முதல் கவிதை நூலான ‘மிச்சமிருக்கும் மனிதர்கள்’ எனும் தொகுப்பினையும் வெளியிட முனைந்துள்ளார். கவிஞருக்கு வாழ்த்துக்கள்!
இக்கவிதை நூலில் ‘கனவு மெய்ப்பட வேண்டும்;’ எனும் கவிதையில்
மோதும் கனவு மெய்ப்பட நாமே
முனைந்து செயல்பட வேண்டும் இணைந்தே!
எனக் கனவு மெய்ப்பாட்டிற்கான வழியினைக் கூறுகிறார்.
‘விழித்தெழு விண்ணைத்தொடு’ என்னும் கவிதையில்
விழித்தெழு தோழி எனத் தொடங்கி,
காலம் கடந்தால்
காசுகூட செல்லாதே
வாழ்க்கையைத் தொலைத்தால்
வாய்ப்பு உனக்குக் கிட்டாதே!’
என அவர் குறிப்பிடும்போது பழைய ஐநூறு ரூபாய், மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாமல் போன (னநஅழநெவணையவழைn) செய்தி நமக்கு நினைவுக்கு வருகிறது. கவிதையை முடிக்கும்போது,
எழு தோழா! விண்ணைத்தொடு
எனத் தோழியையும், தோழனையும்; தோள்மீது தட்டிக்கொடுத்துத் தன்னம்பிக்கை எண்ணங்களை விதைக்கிறார் கவிஞர்.
‘நீரின்றி வாழாது உலகு’ எனும் கவிதையில்
வந்தவரை வாவென்று
வாயாற அழைத்தோம்
வறண்ட தொண்டைக்கு
மோர் கொடுத்து மகிழ்ந்தோம்!
எனத் தொடங்கி
வக்கற்றுப் போய் குடிதண்ணீர் விற்றுக்
கூவிகூவிப் பிழைக்கின்றோம்
என நம் இன்றைய சூழ்நிலையை வருத்தத்துடன் பதிவு செய்கிறார் கவிஞர்.
காவிரியைப் பற்றிக் கூறும் கவிதையில்,
காவேரி நீ தேவதை
நீ தரவேண்டும் தரிசனம் தண்ணீர் தரிசனம்
எனக் காவிரித் தாயிடம் வேண்டுகோள் வைக்கிறார்.
‘தமிழே எங்கள் உயிர்மூச்சு’ கவிதையில், ஆலயத்திலும், குலதெய்வக் கோயில்களிலும் தமிழால் வழிபாடு செய்வோம் என இக்கவிஞர் அன்று வேண்டினார், இன்றைய தமிழக அரசு அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பதைச் சட்டமாக்கி இருக்கிறது. ஆஹா…கவிஞனின் கனவு மெய்ப்பட்டு விட்டது.
இந்த நூற்றாண்டில் பாரதியைப் பாராட்டாத கவிஞன் உண்டா? கவிஞர் பொன்.பாண்டியனும் பாரதியைப் பற்றிக் கூறும்போது
முண்டாசுகட்டிய வேங்கை
மீசையை முறுக்கிய காளை
கண் சிவந்து நின்ற சிங்கம்
கருத்தினை உரைத்த தங்கம்
எனப் பாராட்டி மகிழ்கிறார்.
பாட்டுக்கோட்டையாம் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தைப் பாராட்டும்போது,
பேனா முனையைப் போர்வாளாய் வளைத்தவர்
போராட்டக் களத்தில் தமிழை விதைத்தவர்
என்னும் வரிகள் இவர் பட்டுக்கோட்டைக்குப் போடும் பூமாலை.
கவியரசு கண்ணதாசனுக்கு எல்லாக் கவிஞர்களுமே தாசர்கள்தான் இதோ நம் கவிஞரும் கண்ணதாசனைப் பற்றிக் கூறும்போது
சொல்லெல்லாம் தங்கக்கட்டி
சுவையெல்லாம் வெல்லக்கட்டி!
என்று, கட்டித்தங்கம் வெட்டியெடுத்து
காதல் என்னும் சாறுபிழிந்து
எனக் கவிதை பாடிய கண்ணதாசனையே இவர் பாராட்டும்போது அந்த வரிகளைப் படிக்கின்ற நமது நா அதன் சுவையை அறிகிறது.
பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியாரை வணங்கிப்பாடும்போது,
பகுத்தறிவு படிக்கப் படிக்கப் பாலாறு அதைப்
படிக்காதவன் தலையில்தானே கோளாறு!
என்று இவர் கேட்கும்போது நம்மை அறியாமல் நம் முகத்தில் புன்னகை தோன்றுகின்றது.
தமிழர் பண்பாடு, கீழடி காட்டும் தமிழ்க்குடி, கூவாத குயில்கள், யாதும் ஊரே யாவரும் கேளீர், விழியாலே பேசும் அழியாத நேசம், அச்சமின்றி உச்சம் தொடு, தமிழென்று கொட்டு முரசே, பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி! கட்டமைப்பு தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தா கிரந்தெழுத்தா, தமிழரின் வாழ்வியல் முறைகள், பைந்தமிழில் நுழைந்துள்ள பார்த்தீனியம் களைவோம் எனப் பல்வேறு தலைப்புகளில் இவர் படைத்திருக்கும் கவியரங்கப் பரிசு பெற்ற கவிதைகள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகிறது.
நிறைவாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழக்கவிஞர் காசி ஆனந்தனின் தாக்கத்தில் இவர் படைத்திருக்கும்
பிறமொழியைக் கலக்காதே தம்பி தம்பி
பிழைப்பாட்டால் தமிழ்த்தவிக்கும் வெம்பி வெம்பி
எனும் கவிதையில்
அமுதம் அருந்திட கசப்பா
அழிகின்ற பிறமொழிகள் உனக்குச் சிறப்பா சிறப்பா
என இவர் கேட்கும்போது இவரது பேனாவின் கூர்மை நம் நெஞ்சைத் தொடுகிறது.
இளம்கவிஞரே! உன் எழுதுகோல் சமுதாயத்திற்காக, தன்னம்பிக்கைக்காக அநீதியை எதிர்க்கின்ற போர்முரசாக நிமிரட்டும்! ஒலிக்கட்டும்!
தொடரட்டும் உங்களின் கவிதைப்பணி… மலரட்டும் தமிழில் கவிதைப் பூக்கள்…
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.