இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்….

ஈராயிரம் ஆண்டுத்தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள், நீதிஇலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் பின்னர் உரைநடைக் காலம், தற்கால இலக்கியங்கள் எனும் பட்டியலில் குழந்தைகளுக்கான இலக்கியங்கள் என்ற வகையில் தனியானதொரு இலக்கியவகையை நம்மால் காணமுடியவில்லை.
திருக்குறள் போன்றவை இரண்டடிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அவை ஆழமும், நுட்பமும், சொற்செறிவும் மிகுந்தவையாதலால் குழந்தைகள் மனனம் வேண்டுமானால் செய்யலாம், அவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாது.
பிற்காலத்;தில் ஆத்திசூடி, வெற்றிவேற்கை, கொன்றைவேந்தன் போன்ற இலக்கியங்கள் செய்யுள் வடிவிலும் அதனைத் தொடர்ந்து இச்செய்யுள் வடிவிலேயே மகாகவி பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, நாமக்கல் கவிஞர். இராமலிங்கம் பிள்ளை, அழ. வள்ளியப்பா, பூவண்ணன் போன்றோரும் குழந்தைகளுக்கான அழகிய பாடல்களை படைத்துத் தந்துள்ளனர்.
இந்த நீண்ட நெடிய மரபின் வழித்தோன்றலாக வந்தவர்தான் குழந்தைக் கவிஞர் செல்லக்கணபதி அவர்கள். சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் செல்லப்பர், மீனாட்சி தம்பதியினரின் மகனாக 1941ஆம் ஆண்டு பிறந்து தன் கல்வியால் படைப்பாற்றலால் குழந்தைகளுக்கான இலக்கியங்களை படைத்துத் தருவதால் என்றென்றும் தமிழர் நினைவில் வாழ்ந்து வருகிறார், வாழ்த்தப்படுகிறார், போற்றப்படுகிறார்.
அகவை எண்பதை எட்டியிருக்கும் நம் கவிஞர் சதாபிN~க விழாவை கொண்டாடும் வேளையில் ஆயிரம் பிறைகண்ட அண்ணல் என அனைவரும் போற்ற வாழ்ந்து வருகிறார். நாமும் இவரை வாழ்த்துவோம்.
இக்கவிஞர் பெருமகனார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைநூல்களையும், கட்டுரைகளையும், குழந்தைப் பாடல்களையும் இயற்றியுள்ளார் என்பது பெருமையான ஒன்று.
வெள்ளை முயல், காட்டில் பிறந்தநாள், பாட்டுப்பாடவா, ஓநாய்ப் பையன் எனத் தொடங்கி, உறவைத் தேடும் இராகங்கள், நினைவில் பூத்த கவிதை மலர், நெஞ்சில் பூத்த பக்தி மலர் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இத்தகைய கவிஞர் பெருமகனாருக்குக் கிடைத்த விருதுகளோ அவரின் வயதைப் போன்றே நிறைந்து காணப்படுகிறது. பாரதி விருது, சிறுவர் இலக்கிய மாமணி விருது, குழந்தை இலக்கியப்பணி விருது, சாதனையாளர் விருது எனும் பல்வகை விருதுகளோடு தேடல் வேட்டை சிறுவர் பாடல் நூலுக்காக சாகித்ய அகாடமி வழங்கிய பால சாகித்ய புரஸ்கார் விருதினையும் 2015ஆம் ஆண்டு பெற்றுள்ளார் நம் கவிஞர்.
குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பாவின் வாரிசு இவரே என இலக்கிய உலகம் பாராட்டுகிறது.
பரிசு பெற்ற இவரது படைப்புக்கள் என வரிசைப்படுத்தும்போது,
பாப்பா பாட்டு பாடுவோம் – குழந்தை எழுத்தாளர் சங்க பரிசு,
பிறந்தநாள் – திருப்பூர் தமிழ்ச்சங்கம் பரிசு, மற்றும் பாரத ஸ்டேட் வங்கி பரிசு,
மணக்கும் பூக்கள் – தமிழக அரசின் பரிசு(2006ஆம் ஆண்டு) என எண்ணிக்கை தொடரும்.
இவர் இடையறாது ஆற்றிவரும் இலக்கியப்பணிகள் என்று பட்டியலிடுகிறபோது குழந்தைஎழுத்தாளர்சங்கப் புரவலராக, வள்ளியப்பா இலக்கியவட்ட அமைப்பாளராக, கோவை புத்தக வணிக சங்கத் தலைவராக, கோவை நகரத்தார் சங்கத் தலைவராக, கண்டனூர் பேரூராட்சி மன்றத் தலைவராக, உலகம் முழுவதும் பயணித்து தமிழைப் பரப்பும் தமிழ்த்தேனீயாக இவரின் செயல்வேகம் இவரது நூல்களைக் கற்போருக்கும் இவரை அடிஒற்றித் தொடர்வோருக்கும் ஊக்கத்தைத் தருகின்றன என்பது உண்மை.
சன் தொலைக்காட்சி, கலைஞர், ஜெயா மற்றும் பொதிகைத் தொலைக்காட்சிகளில் பங்கேற்று ஊடகநாயகனாகவும் திகழ்கிறார்.
இவரது படைப்புகளை அழகப்பா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சிசெய்து எம்ஃபில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் இவருக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று என்றே நாம் போற்றுவோம்.
தமிழ்நாட்டில் இவரைப் போற்றிப்பாராட்டிய பெருமக்கள் எனப் பட்டியலிட்டால் திருமுருக கிருபானந்த வாரியார், கவியரசு கண்ணதாசன், பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன், வலம்புரி ஜான், கவிஞர் வாலி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், டாக்டர் சிலம்பொலி செல்லப்பன், கவிப்பேரரசு வைரமுத்து, எழுத்தாளர் சுஜாதா என்று அப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பேராசிரியர் அய்க்கண் அவர்கள் இவரைப் பற்றி பாராட்டிச் சொல்லும்போது ‘ஹாட்ரிக் அடித்த குழந்தைக் கவிஞா.; இந்துப் பத்திரிக்கை பாராட்டிய முதல் தமிழ்க் குழந்தைக்கவிஞர்’ என்பன போன்ற ஆச்சர்யமான செய்திகள் இவருடைய உயரத்தை கூட்டிக்கொண்டே செல்கின்றன, நம்மை நிமிர்ந்து பார்த்து வியக்கவைக்கின்றன.
எண்பது வயதுச் சான்றோரே! என்றும் இளமை பெற்றோரே!
குன்றா இளமை வளத்தோடு நன்றே வாழ்வீர்! நானிலத்தில்
என்றே வாழ்த்தி வணங்குகின்றோம் வாழ்வீர்! வாழ்வீர்! வளத்துடனே…
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.