இந்தோனேசியத் தமிழ்ச்சங்கம் என்றென்றும் வளர்க!

‘முந்நீர்த்தீவு பன்னீராயிரம்’ சென்று அந்நாடுகளை வென்று தமிழர் தம் பெருமையை நிலைநிறுத்தியவர்கள் நம் சோழ மன்னர்கள் என்பதை முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
கங்கை கொண்டான், கடாரம் (மலேசியா) கொண்டான் எனும் புகழோடு சாவகம், புட்பகம் போன்ற தீவுகளிலும் தங்களின் கொடியை பறக்கச் செய்தவர்கள் சோழ மன்னர்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கரிகால் பெருவளத்தானும், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் தங்களது கடற்படையோடு சென்று நாடுகளை வென்றனர். வியாபாரத்திலும் ஈடுபட்டனர்.
நக்கவாரம் (அந்தமான் நிக்கோபார்) தீவுகளின் வழியே சாவகத் தீவாகிய ஜாவாவை அடைந்து (இன்றைய ஜகார்த்தா) அங்கும் தமிழை, தமிழர் தம் பண்பாட்டை அறிமுகம் செய்தவர்கள் நம்மவர்கள் தான். இத்தகைய பாரம்பரியப் பெருமையை இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு நல் விழாவிற்கு இனிமையான பாராட்டுக்கள்.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக நம் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத்தில் உரையாற்றுகின்ற நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் பாராட்டும் பெருங்குணமும், முத்தமிழ் கலைஞர்களை வரவேற்று விருந்தளிக்கும் இன்முகமும் உடைய சான்றோர்கள் தமிழ் மக்கள் நிறைந்த இத் தமிழ்ச் சங்கத்திற்கு மீண்டும் என்னை அழைத்தமைக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு வருகை தரும் பேச்சாளப்பெருமக்களான வழக்கறிஞர் திருமதி. சுமதி, பேராசிரியை திருமதி. பிரேமா, திருமதி. சாந்தாமணி, இனிய நண்பர்கள் திரு. மோகனசுந்தரம், திரு. மணிகண்;டன், திரு. மாது ஆகியோரின் சார்பாகவும் வாழ்த்தினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என முச்சங்கங்களையும,; இருபதாம் நூற்றாண்டில் பாண்டித்துரைத் தேவர் அவர்களால் நிறுவப் பெற்ற நான்காம் தமிழ்ச் சங்கத்தையும் பெற்றப் பேறுடையது எம்மதுரை. இம்மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை நிகழ்த்திய அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு.திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் அன்றைக்கே உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு கால்கோள் நாட்டினார்;. அவரின் கனவை நனவாக்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் மதுரையில் பெருந்திட்ட வளாகம் எனும் உலகத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிக் காட்டியுள்ளார். அத்தகைய பெருமக்களின் வாழ்த்துக்களோடு,
‘சேமமுறவேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்’ எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப தாங்கள் சென்று வாழ்கிற நாடுகள் தோறும் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் தமிழ்ச்சங்கச் சான்றோர்களுக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக இத்தனை ஆண்டுகளாக இச்சங்கத்தை போற்றி வளர்த்துவரும் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலர், பொருளாளர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பொருளுதவி செய்து புகழ் காக்கும் செல்வந்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருட்டும் உங்கள் தமிழ்ப் பணி, இந்தோனேசியத் தமிழ்;ச் சங்கம் வெள்ளிவிழா, பொன்விழா, பவளவிழா, நூற்றாண்டு விழா காணட்டும்.
கனவு மெய்ப்படல் வேண்டும்.
அன்புடன்
கு.ஞானசம்பந்தன்