இதயத்திலிருந்து… இதயத்தை நோக்கி…

குழந்தைகள் நலச்சிறப்பு மருத்துவர் டாக்டர். கண்ணன் அவர்களுடைய தனிப்பெரும் ஆற்றல் மருத்துவம். குறிப்பாகக், குழந்தைகளின் இதயத்தை நலமாக்கும் மருத்துவர். இவருடைய மற்றொரு பரிணாமம் இவர் மிகச்சிறந்த எழுத்தாளர். தன் எழுத்தின் மூலம் உலகத்தமிழர்களின் இதயத்தைத் தொடும் எண்ணங்களின் மருத்துவர். மருத்துவத்துறையில் நோயாளிகளின் நாடிபிடித்துப் பார்க்கத்தெரிந்த இவர், தன்னுடைய உணர்வுப்பூர்வ எழுத்தால் உலகமக்களின் நாடித்துடிப்பையும் அறிந்து வைத்திருக்கிறார்.
எழுத்துலகில் சிறுகதை எழுதுவதென்பது அரிசியில் சிற்பம் செதுக்குவதைப் போன்ற நுட்பமான செயல். அதில் டாக்டர். கண்ணன் அவர்கள் வல்லுனராய் இருக்கிறார். “இதயப்பூக்கள்” என்னும் இச்சிறுகதை தொகுப்பில் 19 கதைகள் இருக்கின்றன. அத்தனை கதைகளும் வாசகருக்கு இதம் தரும் நலம் தரும் மருந்துகள்.
‘சிறியதோர் உதவி’ எனும் சிறுகதையில் கடைசிச் சொல்லில் அவர் கடவுளைக் காட்டும் இடம் படிப்பவரைப் பரவசத்தில் ஆழ்த்தும்.
அண்ணன் தம்பி என்றால், இராம, இலக்குவனர்களைத்தான் காட்டுவோம். அல்லது பஞ்சபாண்டவர்களைக் காட்டுவோம். இவரோ தன் ‘உயர்ந்த உள்ளம்’ சிறுகதையில் சொக்கலிங்கத்தையும், இராமலிங்கத்தையும் படைத்துக்காட்டி பாசஉணர்வால் நம்மைப் பிணைத்துவிடுகிறார்.
‘ஹேப்பி தீபாவளி’ படித்துப் பாருங்கள். மதுரையின் சூடான பருத்திப்பாலின் சுவையும் மணமும் மனிதர்களின் நற்குணமும் தெரியும்.
‘நம்பிக்கை’ சிறுகதையில், வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் மனிதர்களை வாழவைப்பது நம்பிக்கைதான் எனத் தெம்பூட்டுகிறார் கண்ணன்.
‘சீனாவில் ஒரு நாள்’ கனவுகளின் கதை.
(அ)சாதாரண மனிதர்கள் சிறுகதையின் கடைசிவரி நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. நெருப்பைத் தொட்டதுபோல் நாம் துடிக்கிறோம் என்றால் அதுவே இவரின் எழுத்தின் வெற்றி.
இவர் மலையைச் சுண்டுவிரலில் தூக்கி மழையைத் தடுக்கும் கண்ணன் இல்லை, மழையின் காதலன்.
இராதையின் காதல், காதலுக்கு ஓர் வேதம் புதிது.
விநாயகரின் ஆங்கிலம் என்று அவர் கதையை முடிக்கும்போது படிக்கும் நமக்கு நித்யானந்தம் ஏற்படுகிறது.
மனசாட்சி, கவரிமான் எனும் சிறுகதைகளோடு நரித்தந்திரம் கதையைப் படிக்கும்போது நாமே மிரண்டு போகிறோம். எழுத்தாளர் சுஜாதா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் பற்றி இப்படியொரு கதையை முடித்திருப்பார். வானவில், விழலுக்கு இறைத்த நீர், சிகை, சாபம் எனும் கதைகள் படிக்கப் படிக்க இனிமை.
எலும்புத் திருடர்கள், இக்கதை யாருக்கு சமர்ப்பணம்? என்பதைப் படித்துப் பாருங்கள். நண்பனால் நல்ல உதவி எனும் கதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நண்பர்கள் நண்பர்கள்தான் என நமக்குப் புரியவைக்கிறது.
வால்வா? வாழ்வா? எனும் சற்றே பெரிய கதையும் நமக்குப் புதிய பாடத்தைத்தான் சொல்லுகின்றது.
ஒரு துறையில் சாதித்துக்கொண்டே இன்னொரு துறையில் சாதிக்க முயல்வது கூடுவிட்டுக் கூடு பாய்கின்ற சித்தர்களின் வேலை. நம்முடைய டாக்டர். கண்ணன் அவர்களும் மருத்துவச் சித்தர்தான். எழுத்துச் சித்தராகவும் தன் படைப்புகளால் திகழ்ந்து வருகிறார்.
எல்லாமே இதயத்திலிருந்து இதயத்தை நோக்கி செல்வதுதானே! விரைவில் இவருடைய நாவல் (புதினம்) ஒன்றையும் எதிர்பார்ப்போம். இதோ வெளியில் கோடைமழை தொடங்கிவிட்டது. நமக்கும் மழையில் நனைய வேண்டுமென்ற ஆசை வருகிறது. கண்ணனின் கீதமழை தொடரட்டும்….
அன்புடன் கு.ஞானசம்பந்தன்
தகைசால் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.