ஆன்மீகப்பணியே அறப்பணி…

‘ஆன்மாவின் மொழிகள்’ என்னும் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட அரிய நூல் ஒன்றினை ஆய்வு நோக்கில் ஆக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் கா.குமாரவேல் அவர்கள்.
திரு.குமாரவேல் பாரம்பரியம்மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் சகோதரர் டாக்டர்.கா.காளிமுத்து அவர்கள் தமிழகத்தின் ஒப்பற்ற பேச்சாளரும், மிகச்சிறந்த தமிழறிஞரும், சட்டப்பேரவை மேனாள் தலைவரும் ஆவார்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும், இந்தியாவின் ஞானதீபமாம் சுவாமி விவேகானந்தரையும்; தன் இரு கண்களாக போற்றுபவர்தான் இந்நூலாசிரியர்.
‘ஆன்மாவின் மொழிகள்’ என இந்நூலுக்கான பெயர்க்காரணத்தை முதல் கட்டுரையில் தக்க சான்றாதாரங்களுடன் எடுத்து உணர்த்தும் இவரது பாங்கு வியப்புக்குரிய ஒன்று.
சான்றாக, 1933ஆம் ஆண்டில் தேசப்பிதாவான மகாத்மா காந்தியடிகள் ‘வெள்ளை அரசாங்கத்தை எதிர்த்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பாக இறைவனோடு கலந்து தன் ஆன்மாவின் குரலை கேட்டறிந்த பிறகே உண்ணாவிரதத்திற்கான காலத்தையும், நேரத்தையும் நிர்ணயித்ததாகக் குறிப்பிடுகிறார். அது ஒரு மனிதனின் குரல் போலிருந்தது. ஆனால் அது சத்தியத்தின் குரல் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்;’ என்கிறார் காந்தியடிகள்.
‘ஆன்மாவின் குரலை இறைவனின் குரலாக ஏற்கவேண்டும். அப்படி அல்லாத எந்தக் குரலையும் நாம் துரும்பாக மதித்து ஒதுக்கித் தள்ளவேண்டும் என்னும் ‘யோக வாஸிஸ்டம்’ கூறும் நற்செய்தியையும் நமக்குப் பகிர்ந்து அளிக்கிறார் ஆசிரியர்.
‘இந்து’ என்ற பெயர் வேதாந்தம் தந்தது எனும் முதல் அத்தியாயத்தில் அருணகிரிநாதரின் திருப்புகழை மேற்கோள்காட்டி ‘முத்தமிழை முற்பட எழுதிய முதல்வோன் விநாயகனே’ எனும் சான்றோடு கட்டுரையை சுவாரஸ்யமாகத் தொடங்குகிறார்.
உலகெங்கும் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருந்திருக்கிறது என்பதை சீனா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டுக்களைக் கொண்டு விளக்கிக்காட்டுகிறார்.
இந்து என்பது ‘ஆத்மா’ என்றும் அதனை அறிந்தவனே இந்திரன் என்றும் ஒரு புதுப்பொருளைத் தருகிறார் ஆசிரியர்.
கடவுள் என்பது நிரூபணப் பொருள் அல்ல. அனுபவப் பொருள்தான் என்பதை மலரின் மணம்கொண்டும் அதனைநோக்கி வருகின்ற வண்டுகளின் நிலைகொண்டும் விளக்குகிறார்.
சுயமரியாதை, பகுத்தறிவு என்பதற்கான ஆசிரியர் தரும் விளக்கங்களை நாம் அனைவரும் கற்றுணர வேணடும்.
‘பூர்ண சுதந்திரம் என்பது உடலுக்கும் மனதுக்கும் ஆன்மாவுக்கும் சேர்ந்து கிடைக்க வேண்டும். இதுவே, உபநிடதங்களின் மூலமந்திரம்’ என்னும் விவேகானந்தரின் மேற்கோள் விடுதலை என்பதன் உண்மைப் பொருளை நமக்கு விளக்குகிறது. தந்தை பெரியார் நடத்திய பத்திரிக்கையின் பெயரும் விடுதலைதான்.
மதம் என்பது என்ன? என்னும் கேள்விக்கு ஏழைகளுக்கு சேவை செய்வதே மதம் எனும் விவேகானந்தரின் விடை. மதங்கள் உள்ளவரை மனிதர்கள் உணரவேண்டிய ஒரு வார்த்தை.
‘மோட்ச வீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யம்தான். அதாவது அனைத்து உயிர்களின் மீதும் நாம் காட்டுகின்ற எல்லையற்ற கருணைதான்’ எனும் வள்ளலாரின் விளக்கத்தை ஆசிரியர் சுட்டிக்காட்டி இருப்பதன் மூலம் அவரின் காருண்ய குணம் நமக்குப் புலப்படுகிறது.
ஞானிகளுக்கு எதிர்காலத்தையும், நிகழ்காலத்தின் திடுக்கிடும் சம்பவங்களையும் உணரும் தன்மை உண்டு என்பதற்கு ஒரு ஆச்சரியமான எடுத்துக்காட்டை விவேகானந்தரின் வாழ்க்கையிலிருந்து நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
‘பேலூர் இராமகிருஷ்ண மடத்தில் ஒருநாள்; அதிகாலை 2 மணிக்கு தூங்காமல் கண்களில் தண்ணீர் வழிய விவேகானந்தர் அமர்ந்திருந்தாராம். அந்நிலையில் அவரைப் பார்த்த சுவாமி விஞ்ஞானானந்தர் திடுக்கிட்டு ‘என்ன விவரம்? என்று விவேகானந்தரிடம் கேட்க, அதற்கு சுவாமிஜி, ‘நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென மிகப்பெரிய நடுக்கத்தை உணர்ந்தேன். அநேக மக்கள் இயற்கையின் சீற்றத்தால் அவதிப்படுவதை உணர்கிறேன்’ என்றாராம். மறுநாள் செய்தித்தாளில் வந்த செய்தியைப் பார்த்து விஞ்ஞானானந்தர் திகைத்துப் போனாராம.; ஏனென்றால் பிஜித்தீவில் எரிமலையின் சீற்றத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துபோன செய்தி அதில் வந்திருந்ததாம்.
வேதாந்தம் என்பது உலக மதம் என்பதை ஆசிரியர் உளப்பூர்வமாக நமக்கு அறிவிக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் சான்று ‘தத்வமஸி’ (நீதான் அது நீதான் கடவுள்) அதனால்தான் நமக்குள்ளே கடவுள் இருக்கிறார். நம் உடலே கோவிலாய் இருக்கிறது என்னும் திருமூலரின,;
‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ எனும் திருமந்திரப் பாடலையும் நமக்கு நினைவூட்டுகிறார் ஆசிரியர்.
‘வேதமந்திரங்களே பிரபஞ்சத்தின்மொழி, பிரபஞ்சத்தின் ஒலி இவையாவும் தமிழ் முனிவர்களால் (ரிஷிகள்) கண்டுபிடிக்கப்பட்டே உலகெங்கும் சொல்லப்பட்டன’ என்பது ஆசிரியரின் ஆணித்தரமான கருத்து. மூத்த தமிழ்கடவுள் முருகப்பெருமானே,
‘ஓம்’ எனும் பிரணவ வழிபாடு நம் தமிழ்மொழியைச் சேர்ந்ததே என்பதற்கு ஆசிரியர் தரும் விளக்கம் சிந்திக்க வேண்டிய ஒன்று.
நிறைவாகத் தமிழர் பூமியே ஆரியர் பூமி, நேரடி ஆன்மீகம் எனும் செய்திகளையும் விரிவாகக் கூறி, உலகம் வெல்லப்படுமானால் அது ஆன்மீகத்தால் மட்டுமே நிகழும,; அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கையோடு இந்நூலினை நிறைவு செய்திருக்கும் நம் ஆசிரியருக்கு நம் இனிய பாராட்டுக்கள்.
அயராது உழைக்க வேண்டிய சூழலிலும,; கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா நடைபெறும் வங்கி மேலாளர் பொறுப்பில் இருந்தபோதும்,
‘திருவேறு, தௌ;ளிய அறிவு வேறு’ என்னும் வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை உணர்ந்த நூலாசிரியர் கா.குமாரவேல் அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட பணியினை மனநிறைவோடு செய்ததோடு, தாம் இடையிறாது சிந்தித்தவையும் நூல் வடிவில் தந்து, ஆன்மீக உலகிற்கு அரும்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார். இப்பணி தொடரட்டும். நற்பணியாய் சிறக்கட்டும்.
அன்புடன்
பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன்.