உலகம் உங்களை அழைக்கிறது…

சுற்றுலா போவது என்பதே சந்தோஷம் தரும் விஷயம். இது வெளிநாடுகளில் பழக்கமான அளவுக்கு நம் நாடுகளில் பழக்கமாகவில்லை.
நாம் திருப்பதி, ராமேஸ்வரம், பழனி என்று “சேர்ந்து கொண்டு” ஆன்மிகத்தின் பெயரால் கோயில்களுக்குப் போய் வருகிறோம். மலைக்கு நடந்து போவது. இங்குள்ளவர்களுக்கு ‘உடற்பயிற்சி’யாகவும் இருக்கிறது.
பள்ளிகளில் மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, ‘அந்தப் பக்கம் பார்க்காதே. இந்தப் பக்கம் நடக்காதே’ என்று சத்தம் கேட்கும். போலீஸ், கைதியை அழைத்துச் செல்கிற மாதிரி, மாணவர்களை அழைத்துச் செல்வார்கள் ஆசிரியர்கள். கொடைக்கானலுக்குச் சமீபத்தில் போயிருந்தேன். பள்ளி மாணவர்கள் சிலர், மவுன ஊர்வலம் போல சென்று கொண்டிருந்தனர்.
அப்புறம் ஓர் இடத்தில் அவர்களை உட்கார வைத்திருந்தார்கள். இதில் ஒரு பையன் சோகமாய் உட்கார்ந்திருந்தான். ‘என்னப்பா… டூருக்கு வந்துட்டு இவ்வளவு தூரம் கவலையா இருக்கே?’ என்று கேட்டேன். ‘இதாவது பரவாயில்லை சார்… ஸ்கூலுக்குப் போனதும், போய்ட்டு வந்த சுற்றுலாவைப் பத்தி ஒரு கட்டுரை எழுதுச் சொல்லிருவாங்க சார். அதை நினைச்சாத்தான் இப்பவே கவலையா இருக்கு’ என்றான்.
சுற்றுலா என்பது இன்பமான அனுபவம். அந்த அனுபவத்தை எந்தக் குறுக்கீடுகளும், நிர்ப்பந்தங்களும் இல்லாமல் ஒருவன் ரசிக்க வேண்டும். இயற்கையை ஒரு மாணவன் இரசிக்கும்போதே, ‘நல்லாப் பாரு… எத்தனை விதமான பூ, செடியெல்லாம் இருந்துச்சுன்னு நாளைக்குக் கேட்பேன்’, என்று வகுப்பறையின் இறுக்கத்தைச் சுற்றுலாவிலும் தொடரக்கூடாது.
ஓர் அருவியை நேரடியாகப் போய்ப் பார்த்து, அதன்கீழ் நின்று உணர்வது பரவசமான அனுபவம். அதைச் சினிமாகவோ, தொலைக்காட்சியோ, எழுத்தோ தந்துவிடாது. வெறுங்காலில் மண்ணில் நடந்து போவது, மிகவும் சுகம்.
வெளிநாடுகளில் விடுமுறையை, தினமும் பழக்கமான இடத்திலிருந்து கிளம்பி, வேறு எங்கோ சென்று கொண்டாடுகிறார்கள். அது அவர்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுக்கிறது. இங்கு நமக்கு தினமும் ஒரே சூழல், ஒரே தெரு, திரும்பத் திரும்ப அதே முகங்கள், அதே அனுபவம். இந்தச் சூழல்தான் ஒருவிதத்தில் நம்முள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இயந்திரத்தனமான உறவை உருவாக்குகிறது.
சுற்றுலா – இதிலிருந்து நம்மை விடுபட வைக்கும் சமாச்சாரம். ஏதாவது ஒரு இடத்திற்குக் குடும்பத்தினருடன் கிளம்பிப் போயப் பாருங்கள். மாறுதலான அனுபவம், நம் மனதை நெகிழ்த்தும் விதத்தைக் கண்கூடாக உணரமுடியும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களாக இருக்கும்போது சேர்ந்து ‘டூர்’ போவது – ஒருவித சந்தோஷம். இந்த அனுபவங்கள் உருவாக்கும் தருணங்களை நாம் இழந்துவிடக் கூடாது.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் – சிலர் சுற்றுலாவுக்குக் குடும்பத்தை அழைத்துப் போய்விட்டு – அங்கு ‘செல்போனில்’ உள்ளம் வியாபாரத்தையே சுற்றிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் எப்படி புதிய அனுபவத்தைப் பெறமுடியும்? எப்படி அந்த இடத்துடன் ஒன்ற முடியும்?
இவர்களைப் போன்றவர்கள் என்னதான் சம்பாதித்தாலும், வசதிகள் இருந்தாலும், ‘சிகாகோ’ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சொன்ன மாதிரி ‘கிணற்றுத் தவளைகள்’தான்.
வகுப்பறைகள், நாம் பணிபுரிகிற அலுவலகங்கள், நம்முடைய வீடுகள், இதைத்தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. பார்வை இருக்கிறது. அனுபவம் இருக்கிறது. இதைச் சாத்தியமாக்குவது சுற்றுலாதான்.
ஜன்னலுக்கு வெளியே உலகம் இருக்கிறது. மனக்கண்களில் கண்ட காட்சி இருக்கிறது. எப்படி இருந்தாலும் எல்லாவற்றையும் காணக் கண்கோடி வேண்டும். உலகம் உங்களை அழைக்கிறது.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும்.