கவிதை முதல் கவிதை வரை…!
தமிழ் இலக்கிய வரலாறு இரண்டாயிரம் ஆண்டுப் பழைமை உடையது. சங்ககாலம் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டுவரை, கவிதையானது தமிழரின் இலக்கிய வாழ்வில் முக்கியமானதொரு இடத்தைப் பெற்று வருகிறது.
குறிப்பாகச் சொல்வதானால், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியபிறகு இந்தியாவில் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
அறிவியல் வளர்ச்சி, புகைவண்டிகள், கார்களின் வருகை, அணைக்கட்டுகள் போன்ற மாற்றங்களோடு ‘உரைநடை’ என்னும் புதிய இலக்கிய வகை, தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமாகத் தொடங்கியது.
ஆங்கிலேயரின் வருகைக்குமுன் தமிழில் எல்லாச் செய்திகளும் செய்யுட்களில், கவிதைகளில், பாடல்களில்தான் இருந்திருக்கின்றன என்பது ஒரு அதிசயமான செய்தியாகும்.
கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், மருத்துவக்குறிப்புகள், சோதிடச் செய்திகள், நிலப்பத்திரங்கள், ஆவணக்குறிப்புகள், ஒருவருக்கொருவர் எழுதும் கடிதங்கள், அத்தனையும் பாடல்களில்தான் அமைந்து இருந்திருக்கின்றன. இன்றுகூட யாரிடத்திலாவது ஏடு சோதிடம் பார்க்கப்போனால், ‘கேளப்பா என் பேச்சை கீர்த்தியுடன் வாழ்வாய் நீ’ என்று பாடலாகத்தான் தொடங்கிச் சொல்வார்கள்.
மாயவரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள்தான், தமிழில் முதல் நாவல் இலக்கியமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் நகைச்சுவை நாவலைப் படைத்தவர், அவர் சிறந்த கவிஞரும்கூட,
ஆங்கிலேயர் வருகைக்குப்பிறகு வந்த உரைநடை, புதுக்கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என வேறு வடிவங்களில் இந்த நூற்றாண்டின் – இக்கால இலக்கியமாகத் திகழ்ந்து வருகின்றது.
மகாகவி பாரதி மரபுக்கவிதைகள் எழுதியதோடு வசனகவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நெடுங்கதை எனப் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, புதிய வடிவங்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தார் என்பது உண்மை.
செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் கலாச்சாரம் இன்று பெருகிவிட்டது. ‘மெஸேஜ்’ என்பதே தகவல்களை விரைந்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைதான். அவற்றில் தாறுமாறாகப் பலர் விளையாடிக் கொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. பொங்கலன்று தமிழர் திருநாள் வாழ்த்துகளும், தமிழ்ப் புத்தாண்டு அன்று தமிழில் நல்வாழ்த்துகளும் செல்வழியாகச் சொல்லப்பட்டன உண்மைதான். ஆனால் அன்றைக்குப் பலர் அனுப்பிய தத்துவங்களும்… கவிதைகளும் தாங்க முடியவில்லை.
பொங்கலன்று வந்த செல் கவிதை, ‘லாரியில கரும்பு ஏத்தினா காசு, கரும்புலே லாரி ஏறினா ஜுஸு ׳ – அதற்கு மேலும் பல தத்துவங்கள் வந்தன. கவிதை வரிகள், கல்லில் இருந்து, தாமிரப் பட்டயங்களில் இருந்து, பனை ஓலைகளில் இருந்து, காகிதங்களுக்கு வந்து, இன்று கணினித் திரைக்கு வந்துள்ளன.
புதிய வடிவங்களுக்கு ஏற்ற புதிய கவிதைகளைப் பாடுவோம்… தமிழின் பெருமையைக் காப்போம்.
விரல்களால் வித்தைகள் செய்வோம்…