நாடகமே உலகம்….

நாம் மக்களுக்காகத்தானே நடிக்கிறோம், நாம் நாடகத்தில் திரையில் சொல்லுகின்ற செய்திகளைப் பலர் பின்பற்றுவதில்லையே, என்ன செய்வது? “இது பல கலைஞர்கள் சொல்லும் குற்றச்சாட்டு”.
நாடகக் கலைஞர்களும்கூட இப்படிச் சொல்கிறார்கள். இருந்தாலும் பார்வையாளர்களுடைய ரசனையை எடைபோட நாடகக் கலைஞர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதை கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். தமிழ்நாட்டில் அந்தக்காலத்தில் (திரைப்படங்கள் அதிகம் தயாரிக்கப்படுவதற்கு முன்பாக, மேடை நாடகங்கள் மூலம் சாதனை செய்தவர்களைப் பற்றி சற்றே சிந்திப்போம்)
புராண நாடகங்கள் மூலம் புகழடைந்த ஆர்.எஸ்.மனோகர் செய்த சாதனைக்கு ஈடேது. மதுரையில் நவாப் ராஜ மாணிக்கம் பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மூலம் தனது நாடகங்களைப் பார்க்க வைத்தாரே! அவர் நாடகத்தில் ஐயப்பன் கோவில் என்றால் பிரமாதமாக ‘செட்’ போட்டுவிடுவார். இந்த ஐயப்பன் நாடகம் தமிழகம் முழுவதும் போடப்பட்ட பிறகுதான், தமிழகத்திலிருந்து பெருந்திரளான மக்கள் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினார்கள். இத்தோடு மட்டுமல்லாமல் இதே ராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் இயேசுநாதருடைய வரலாற்றை நாடகமாக்கி அதை லண்டனில் போய் போட்டுக்காட்டி அவர்களையும் வியக்க வைத்திருக்கிறார்.
‘கிருஷ்ண லீலா’ என்று அவர் நடத்திய நாடகத்தில் ஒரு காட்சி. ஐந்துதலைப் பாம்பின்மீது ஏறிநின்று கிருஷ்ணன் நாட்டியமாடி அந்தப் பாம்பினைக் கொல்கிற காட்சி. இதற்கு மூன்று ‘செட்’ களைப் போட்டிருக்கிறார். முதல் செட்டில் கிருஷ்ணன் வேஷம் போட்ட குழந்தை நிற்கும். அதன் பின்னால் மெல்லிய திரையில் தண்ணீர் அலையடிப்பது போன்ற காட்சி. அதற்கென்று ‘லைட்டிங்’. அதை அணைத்தால் இன்னொரு செட்டில் கிருஷ்ணன் இன்னொரு தோற்றத்தில் நீருக்குள் பாம்போடு சண்டையிடுவார். இந்தக் காட்சிக்குக் கைதட்டல் பறந்திருக்கிறது.
எனக்குத் தெரிந்து திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த என் இனிய நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள் அருணகிரிநாதரின் வாழ்க்கையை நிஜ நாடகம் போல கோவிலுக்கு முன்னாலேயே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். எவ்வாறு என்றால், அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் ஏறுவதைப்போல, ஒருவர் ஏறுவார். ஒளிவெள்ளம் அவரை நோக்கிப் பாயும். பிறகு கோபுரத்தின் உச்சியில் இதே அருணகிரி நாதரைப் போல ஒருவர் நிற்பார். வெளிச்சம் அவர் மீது பாயும். அங்கிருந்து அவர் குதிப்பதைப்போல காட்டுவார்கள். அவர் வடிவில் ஒரு பொம்மை அங்கிருந்து போடப்படும். ஒளிவெள்ளம் கீழே வருகிறபோது முருகன் பெருமான் வேடமிட்டவர் கையில் அருணகிரிநாதர் இருப்பார். இத்தனையும் லைட்டிங் மூலமும், இசை மூலமும் நிகழ்த்திக் காட்டுவார்களாம். இதைப் பார்த்த ரசிகர்கள் வியந்தும் மகிழ்ந்தும் போவார்களாம்.
இதேமாதிரி, புத்தரின் வாழ்க்கையை நாடகமாக நிகழ்த்தியவர் பம்மல் சம்பந்த முதலியார். அதில் ஏதேனும் புதுமையைக் காட்ட நினைக்கிறார். மின்சாரம் சரியாக அறிமுகமில்லாத நேரம். புத்தர் ஞானம் பெறும் காட்சி. ஒரு மரத்தடி, கீழே புத்தர், அவர் பின்னால் ஒரு லைட்டை, பேட்டரியினால் எரிய வைத்தார்கள். வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.
மக்களைப் பார்க்க வைக்க எத்தனையோ யுக்திகள் இருக்கும்போது, கொச்சையான வசனத்தினாலும், அந்த அசைவினாலும் அவர்களை ரசிக்க வைக்க வேண்டுமா? என்பது இங்குள்ள கலைஞர்கள் ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
நாடகக் கலை என்பது முத்தமிழில் ஒரு கலை. அது தெய்வீகக் கலையும்கூட. திரைப்படங்களினுடைய வருகையினால் இக்கலை சற்றே பின்தங்கினாலும் சின்னத்திரையில் நாடகங்கள் தற்போது கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனாலும் தரமான நாடகங்களுக்குத்தான் எப்போதும் வரவேற்பு இருக்கும்.
உலகமே ஒரு நாடக மேடை. இதில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்பார் ஒரு மேல்நாட்டு அறிஞர். நாடகக் கலை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும். அவை காலத்துக்கேற்ற புதுமைகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
வளரட்டும் நாடகக் கலை!