அரிமளத்தில் ஒரு அதிசயம்….

பயணிப்பது என்பது எப்போதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. பயணப்படும்போது நாம் செல்லுகின்ற வாகனத்தின் வேகத்திற்கேற்ப நம்முடைய மனம் சிறகடித்துப் பறக்கும் என்பது உண்மை. அப்படிப் பயணிக்கும்போது சிலர் நம்மைத் திகைக்க வைப்பார்கள், சிலர் நம்மை நகைக்க வைப்பார்கள். நகைத்தான சம்பவம் ஒன்று…
அப்போது பெருங்கூட்டத்தோடு வந்த பஸ் எங்கள் அருகிலே நிற்க, படியில் தொங்கிக்கொண்டு வந்த கண்டக்டர், ‘சில்லரை இல்லாதவங்க எல்லாரும் மரியாதையா இறங்குங்க…’ என்று கத்தினார். அவரோடு தொங்கிக்கொண்டு வந்த இன்னொருவர், ‘உன்கிட்ட இருக்கா?’ என்று கண்டக்டரைப் பார்த்துக் கேட்டார்.
‘இல்லை’ என்று கண்டக்டர் எரிச்சலாகச் சொல்ல, ‘அப்ப நீயும் இறங்கு, பேசிக்கிட்டே போவோம்’ என்று சொன்னதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். எங்கள் பயணமும் தொடங்கியது…
எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்கு நான் சென்றாலும் அந்த ஊரின், நாட்டின் பழைமை மிகுந்த கோயில்கள், நூலகங்கள், கோட்டைகள், அரண்மனைகள் போன்றவற்றைச் சுற்றிப் பார்ப்பதோடு, அவை குறித்த புராண, வரலாற்றுச் செய்திகளை இலக்கியச் சான்றுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்வதும் எனக்குப் பிடித்தமானதுதான்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் புதுக்கோட்டைக்கு அருகிலே உள்ள அரிமளம் என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, மக்கள் தொலைத்தொடர்பு சாதனங்களில் வானொலி முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்பது உண்மை.
குறிப்பாகத், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தார் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும்போது, இசை வாணர்கள், இசைக் கலைஞர்களின் பெயர்களைக் கூறி, மறக்காமல் அவர்களின் ஊர்களையும் கூறுவார்கள். அப்படித்தான் திருவீழிமிழலை, காணாடு காத்தான், அரிமளம், திருக்கோகர்ணம் என்ற ஊர்ப்பெயர்களை நான் கேட்டறிந்தேன்.
இந்த ஊர்களையெல்லாம் நேரில் பார்க்கிறபோது பழைய நினைவலைகள் வந்து மோதும். அந்த நினைவுகளோடு அரிமழத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பேசிவிட்டுப் புறப்படும்போது, அவ்வூரைச் சார்ந்த நண்பர் ஒருவர், ‘ஐயா! இந்த ஊரில்தான் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளுக்கு அதிட்டானம் (சமாதி, நினைவிடம்) இருக்கிறது. பார்த்துவிட்டுப் போகலாமா?’ என்று கேட்டார். நான் உடனே ஆச்சரியத்தோடு, ‘அப்படியா? கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் கற்பனைப் பாத்திரம் என்றல்லவா நினைத்திருந்தேன்!’ என்று சொல்லிவிட்டு, ‘உடனே அங்கு செல்லலாம்’ என்று நான் கூற, அனைவரும் புறப்பட்டோம். அப்போது உடன்வந்த, என்னிடத்திலே ஆய்வு செய்கிற மாணவர் தமிழ்வேந்தன், ‘ஐயா! மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நாடகத்தில்தானே கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் ஜீவக வழுதிக்குக் குருவாக வருவார்?’ என்று கேட்டார். ‘சரியாகச் சொன்னீர்கள். மனோன்மணீயம் நாடகத்தில் முக்கியமான பாத்திரங்களில் சுந்தரசுவாமிகளும் ஒருவர். அத்தோடு நாடகத்தில் எதிர்நிலைப் பாத்திரமான (வில்லன்) குடிலனின் சூழ்ச்சிகளை முறியடித்து, அந்நாடகத்தின் நாயகனான புருேஷாத்தமனையும், நாயகி மனோன்மணியையும் இணைத்து வைப்பவரே இச்சுவாமிகள்தான்’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு சிறிய கோயிலுக்கு முன்பு எங்கள் கார் நின்றது.
சிறிய கோயிலாக இருந்தாலும் அழகான பூந்தோட்டத்துக்கு நடுவே காணப்பட்டது. என்னோடு வந்த உள்௵ர் நண்பரிடம், ‘சுவாமிக்குச் சொந்த ஊரே இதுதானா?’ என்று தமிழ்வேந்தன் கேட்டார். நான் உடனே, ‘இல்லை, இல்லை… சுந்தரசுவாமிகள் பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோடகநல்லூர். மனோன்மணீயம் சுந்தரனாருக்கும் குருவாக இருந்தவரும் இவர்தான். குருவைத் தெய்வமாக மதித்த சுந்தரனார், தன் நாடகத்தில் தன் குருவையும் நிலையான பாத்திரமாகப் படைத்திருக்கிறார்’ என்றேன் நெகிழ்வோடு.
அப்போது கோயிலில் இருந்த பெரியவர் ஒருவர் சுந்தரசுவாமிகளின் பெருமைகளைச் சொல்லி, ‘சாமி, பெரிய சித்தர்! செட்டிநாட்டுப் பகுதிகளில் ஒன்பது ஊர்களில் இருக்கக்கூடிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களை இவர் சொல்லித்தான் செட்டியார்கள் கட்டினார்கள். அது மட்டுமில்லை! ஒன்பது கோயில் கும்பாபிேஷகத்தையும் ஒரே நாள்ல, ஒரே நேரத்துல, ஒன்பது இடங்களில் தோன்றி இந்தச் சாமி செஞ்சு வச்சாராம்!’ என்று மெய்சிலிர்க்கச் சொன்னார்.
நாங்கள் சற்றுநேரம் அங்கே அமர்ந்திருந்தோம். அப்போது அருகில் இருந்த பள்ளிக்கூடத்தில், ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை, பள்ளிக்குழந்தைகள் பாடிய ஓசை கேட்டது. உடனே தமிழ்வேந்தன் அந்தப் பெரியவரைப் பார்த்து, ‘ஐயா! இந்தப் பாடலை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் குருநாதர் இச்சுவாமிகள்தான்!’ என்று சொல்லி, கீழே விழுந்து வணங்கினார். நாங்களும் வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
மனோன்மணியம் சுந்தரனாரும், கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளும் என்றைக்கும் தமிழுலகம் போற்றும் சுந்தரபுருஷர்கள்தான்.