பாம்புப் படுக்கையில்…

பேச்சாளராக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு சோதனைகளும், வேதனைகளும் எப்போதும் அதிகம் காத்திருக்கும். தலைநகரத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கில், குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த நேரத்தில் முடிக்கும் சான்றோர்களும், உயர்அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கூட்டங்கள் ஒரு பேச்சாளருக்கு எப்பபோதும் கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது.
பல ஆண்டுகளுக்கு முன், நாங்கள் குழுவோடு தேனி, கம்பம் பகுதியில் ஒரு ஊருக்குப் பட்டிமன்றம் பேசச் சென்றோம். அந்த ஊரின் பெயர் பெருச்சாளிபட்டி. இந்த ஊரைத் தமிழகத்தின் வரைபடத்தில்கூடக் காணமுடியாது. நாங்கள் ஒருவழியாகத் தேடிப் பலரிடம் பேட்டி கண்டு இரவு 11மணிக்கு அந்த ஊரைக் கண்டுபிடித்துக் காரோடு ஊருக்குள் நுழைந்தோம்.
எங்கள் காரைப் பார்த்தவுடன் பெரிய மக்கள் கூட்டம் ஆரவாரமாக ஓடி வந்தது. “வந்தாச்சு வந்தாச்சு!” என்று சினிமாப் படப் பெட்டியைக் கண்ட தியேட்டர்காரர்கள் மாதிரி ஊரே சந்தோஷப்பட்டது. ஆரவாரமாக ஓடி வந்த சிலர், ‘கேட்டுருவோம்! ஐயாட்ட கேட்டுருவோம்!’ என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். நான் அவர்களைப் பார்த்து ‘என்ன கேட்க வேண்டும்’ என்று கேட்டேன். அதற்கு அவர்களில் ஒருவர், ‘ஒண்ணுமில்லிங்க ஐயா! மேடை எங்கண போடலாம்னு உங்களத்தான் கேக்கணும்னு உக்காந்திருந்தோம்’ என்றார். எனக்கு அவர்களைப் பார்த்து ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அப்போதே மணி 11.30 ஆகியிருந்தது. இப்படி நாங்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில் கடப்பாறையோடு என்னருகே வந்த ஒருவன், ‘ஐயா! உங்களைப் பார்த்த உடனே தான் குழியத் தோண்டலாம்னு இருக்கேன்’ என்றான் எதார்த்தமாக. அதற்குள் இன்னொருவன், ‘அந்தப் பாம்புப் புத்த இடிச்சிராம மேடைய அதுமேல போடுங்க’ என்று யோசனை வேறு சொன்னான்.
பாம்புப் படுக்கையில் படுத்த அனந்தசயனப் பெருமாளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்புப் புற்றுக்கு மேல் மேடை போட்டுப் பேசிய எங்கள் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அவர்கள் மாலை போட்டதெல்லாம் அது பாம்பாகத்தான் இருக்குமென்று நாங்கள் பட்டபாட்டை அந்த நாராயணனே அறிவான்.