மதுரையும்…பழைய புத்தகக் கடைகளும்…

               ‘மதுரைக்குள்ளேயே மஹால் இருக்கு, தெப்பக்குளம் இருக்கு, ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு, புதுசா வந்த ஷாப்பிங் மால் நாலஞ்சு இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு பழைய புத்தகக் கடையைப் பார்க்கலாம்னு கூட்டிட்டுப் போறாரே, இது சாமிக்கே அடுக்குமா?’ என்று என்னோடு வந்த மாணவர்களில் ஒருவர் புலம்பியது என் காதில் விழுந்தது.

               கல்லூரி முடித்து மாணவர்களை அழைத்துக்கொண்டு மதுரையின் புகழ்பெற்ற தெற்கு சித்திரை வீதியில் பழைய புத்தகக் கடைகளை நோக்கி நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது நான் என்னோடு வந்த மாணவரின் கவலைக்குரல் அவ்வாறு ஒலித்தது. என்னிடத்தில் எம்.ஏ., தமிழ் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள். தொன்மையான மதுரையின் பெருமைகளில் இந்தப் பழைய புத்தகக்கடைகளும் ஒன்று.

               பழைய புத்தகக் கடைகளுக்கே சில அமைப்புகள் உண்டு. பத்துக்குப் பத்து இடத்தில் ஒரு நபர் மட்டுமே உட்காரக்கூடிய ஒரு சிறிய அறை. பழைய புத்தகங்களைப் போலவே முதிர்ந்த பெரியவர் ஒருவர் பலகையில் அமர்ந்திருக்க, அந்த அறை முழுவதும் நிரம்பி வழியும் புத்தகங்கள் நடைபாதை (பிளாட்ஃபார்ம்) வரை அடுக்கப்பட்டிருந்தன. அந்தக் கடையின் படிக்கட்டுகள்கூட புத்தகத்தால் ஆனதோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு.

               ‘ஐயா! வணக்கம்’ என்று நான் சொன்னவுடன், கண்ணாடி போடாமலே புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு, ‘ஐயா! வாங்க, நீங்க கேட்டிருந்த விநோதமஞ்சரி’யும், பெரியெழுத்து விக்கிரமாதித்தன் கதையும் வந்திருச்சி’ என்று சொல்லி என் கையில் அந்தப் புத்தகத்தைத் தந்தபோது அவரைக்காட்டிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன். அந்தப் புத்தகங்களைக் கையில் வாங்கியவுடன் நான் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்த என் மாணவர்களில் ஒருவர், ‘என்னைய்யா, பத்மஸ்ரீ பட்டம் பெற்றதுபோல் இவ்வளவு சந்தோஷப்படுறீங்களே?’ என்று கேட்டார்.

               ‘உண்மைதான், கடுமையாக முயன்றால் பத்மஸ்ரீ பட்டம் என்ன, நோபல் பரிசுகூட பெற்றுவிடலாம். ஆனால், இந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்ட ஆண்டைப் பாருங்கள்…. 1888, 1890, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பாக அச்சடிக்கப்பட்டு வெளிவந்த நூல்கள் இவை. எத்தனை ஆயிரம் மனிதர்கள், எத்தனை எத்தனை கரங்களில் இவை மாறி வந்திருக்க வேண்டும். யோசியுங்கள்’ என்று நான் நெகிழ்வோடு சொன்னபோது, அந்த மாணவர்களில் ஒருவர், ‘ஐயா! மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் உங்களைப் பற்றி ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும்’ எனும் கட்டுரையில் மகிழ்வோடு குறிப்பிட்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது’ என்று சொல்ல, கடையில்; இருந்த பெரியவர், ‘சுஜாதா என்ன சொல்லியிருந்தார்?’ என்று ஆவலோடு கேட்டார்.

               உடனே அந்த மாணவர், ‘மதுரையிலிருந்து பேராசிரியர் வருகிறபோதெல்லாம் எனக்குப் பழைய புத்தகங்கள் கொண்டு வருவார். அவை பழையவையென்றால் அப்படிப் பழையவை. அதட்டினால் கூட கிழிந்துவிடும் என்று எழுதியிருப்பார்’ எனச் சொன்னவுடன், கடைக்காரப் பெரியவர் சிரித்த சிரிப்புக்கு அந்தக் கடைவீதியே திரும்பிப் பார்த்தது.

               ‘ஐயா! இந்தப் பகுதியில இன்னும் சில பழைய புத்தகக் கடைகள் இருந்ததாக என் அப்பா சொல்லியிருக்கார். அவையெல்லாம் அப்போது இல்லையா?’ என்று நான் அவரிடம் கேட்க, திடுக்கிட்ட என் மாணவர் ஒருவர், ‘உங்கப்பாவும்… பழைய புத்தகக் கடைக்குத்தான் வருவாரா?’ என்று ஏதோ பரம்பரை வியாதியைப் பற்றி விசாரிப்பதுபோல் அதிசயமாய்க் கேட்டார். நான் மெல்லச் சிரிக்க, கடைக்காரர் குறுக்கிட்டு, ‘ஐயா! நீங்க சொல்றது மேங்காட்டுப்பொட்டல் பகுதியில் இருந்த பழைய பழைய புத்தகக் கடைகள்’ என்று சொல்ல, நான் பலமாகச் சிரித்து, ‘மாணவர்களே! கவனித்தீர்களா? பழைய பழைய புத்தகக் கடை’ இந்தச் சொற்கள் புரிகின்றதா?’ என்று கேட்டேன்.

               ‘பழைய பழைய அடுக்குத்தொடர்’ என்று ஒரு மாணவர் சொல்ல, உடனே மற்றொரு மாணவர், ‘அட போடா புரியாதவனே… முதல்ல சொன்ன ‘பழைய’ என்பதற்கும் முன்னர், முந்தி, முன்னாள் என்ற பொருள். அடுத்துவந்த ‘பழையதான் பழைய புத்தகத்தைக் குறிக்கும். அதைத்தான் ஐயா ரசிச்சி சிரிச்சுருக்காரு’ என்று விளக்கினார்.

               அப்போது கடைக்காரப் பெரியவர் பக்கத்துக் கடைக்காரச் சிறுவனிடம் சைகை காட்ட, அந்தச் சிறுவன் எங்களுக்குச் சிறிய தட்டுகளில் சூடான, மெல்லிய, பசுமைநிற சிறிய அப்பளம் போன்ற வடைகளைக் கொண்டுவந்து கொடுத்தான். நாங்கள் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொள்ள, அந்தப் பெரியவர், ‘ஐயா!  பங்கரப்பான் பைரியை புர்கோவுல தொட்டு சாப்பிடுங்க’ என்று சொன்னவுடன், ஆசையோடு அதை நாங்கள் சாப்பிட, ‘ஐயா! இந்த வடைக்குப் பெயர் என்ன?…. ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ போல ஏதோ இந்திப்பட பெயர் சொன்னீங்களே…’ என்று ஒரு மாணவர் கேட்டார். உடனே நான் ‘இந்த வடைக்குப் பெயர் முள்ளு முருங்கைக்கீரை வடை, பக்கத்தில இருக்கிறது பொரிகடலை காரப்பொடி, அதைத்தான் அவர் சௌராஷ்டிரா மொழியில் சொன்னார்’ என்று சொன்னேன்.

               ‘அடடே, என்ன ருசி! ஐயா, இனிமே நீங்க எப்பக் கூப்பிட்டாலும் பழைய புத்தகக்கடைக்கு வருவோம். நீங்க கூட வரலையின்னாலும் வருவோம்’ என்று மாணவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

               அரிய புத்தகங்களை வாங்கியதால் மனதும் இனித்தது, ருசியான கீரை வடையால் நாவும் ருசித்தது. மதுர மதுரதான்….!

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.