வல்லமை தாராயோ…!

               வாழ்க்கை என்பது மிகுந்த ஓட்டத்தில் இருக்கிறது. நேற்றைக்கு வந்ததை இன்றைக்குப் பழையது என்கிறோம்.

               முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஒரு திரையரங்கம் இருக்கும். அதற்கு நடந்துபோய்த் திரைப்படம் பார்ப்போம். போகிற வழியில் குடும்பமே மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டு போகும். திரும்ப வரும்போது, பார்த்த திரைப்படம் குறித்தோ அல்லது வேறு விஷயங்களைப் பற்றியோ பேசிக்கொண்டு வருவோம். உறங்கும் வரைக்கும் பேசிக்கொண்டிருப்போம். உறங்கி எழுந்தவுடன் பேசுவோம். இதெல்லாம் இப்போது இல்லை.

               சமீபத்தில் எனது சொந்த ஊருக்கு அருகிலிருந்தத் திரையரங்கினை இடித்து விட்டார்கள். எனக்குக் கண்கள் கலங்கி விட்டன. அது ஏதோ நம்முடன் இருக்கும் உறவு போலத் தெரிந்தது. காரணம் என்னவென்றால் பழசு என்பது நன்றாக இருக்கும்.

               உலகில் பழையதாகாதது என்று கடவுள், உறவு இரண்டைக் குறிப்பிடுவார்கள். மற்றவை பழையதாகலாம். பழைய பள்ளிக்கூடம், பழைய வாத்தியார், பழைய பேப்பர், சாதம் கூட பழைய சாதம் என்கிறோம்.

               பழையதெல்லாம் கழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்கிற கவலை நமக்கு இருக்கிறது.

     இப்போது தொலைக்காட்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லோரும் ஆடுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து யாரேனும் வந்தால் நாடே ஆட்டம் கண்டுவிட்டதோ என்று நினைத்துக் கொள்வார்கள்.

         நகைச்சுவைக் காட்சிகள் என்று திரைப்படங்களிலிருந்து எடுத்து ஒளிபரப்புகிறார்கள். சொந்தமாக நகைச்சுவைகளைத் தயாரிப்பதில்லை. புதிதாய் ஒன்றைப் படைக்கின்ற திறன் இல்லாமல் போய்விட்டது.

               பழைய படங்களில் எம்.ஜி.ஆர் தன்னுடைய கதாப்பாத்திரத்தைச் சிறந்ததாக நல்ல முறையில் காட்டுவார். இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.

               குழந்தைகளோடு பேசுவதற்கு அதிகநேரம் ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் தாய்மார்கள், ‘சாப்பிட்டாயா? வீட்டுப்பாடம் எழுதினாயா? பாத்ரூம் சென்றாயா?’ என்ற மூன்று கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.

               அம்மா, தாத்தா, பாட்டி, தகப்பன் ஆகியோரின் மடியில் அமர்ந்து கதை கேட்ட காலம் போய்விட்டது.

               குழந்தைகள் வளர வளர விஷயங்களைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் வரும். பெற்றோர்கள் அதை கவனிப்பதில்லை. எனவே கார்ட்டூன், போகோ, கங்காமா, சுட்டி டிவி போன்ற சேனல்களை அதிக ஆர்வத்துடன் பார்க்கின்றனர். நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிக்கும்போது குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கின்றனர். அதில் அவர்கள் ஆச்சரியப்படும்படி விலங்குகளும் பறவைகளும் பேசுகின்றன.

               பேசவேண்டிய மனிதர்கள் பேசாமல் இருக்கின்றார்கள். பேசாதவை பேசுகின்றன என்பதால் கார்ட்டூன், போகோ போன்ற சேனல்களைப் பார்க்கின்றனர்.

               குழந்தைகளுக்குக் கதை சொன்னால் போதும், விக்ரமாதித்யன் கதையைவிட ஹாரிபார்ட்டர் கதைகள் அறிவுப்பூர்வமானவை அல்ல.

               கதைகளில் கேட்கப்படும் கேள்விகளைக் குழந்தைகளிடம் கேட்டு அவர்களை சிந்திக்க வைக்க முடியும். இவையெல்லாம் கவிதை வடிவில் இல்லை. சாதாரண உரைநடை வடிவில் இருக்கிறது.

               நம் நாட்டில் தண்ணீர் எடுக்கிற குடம் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி ஒவ்வொரு பெயரிலும் இருக்கும். பிளாஸ்டிக் குடம் வந்தபின்பு ஒரே மாதிரியாகி விட்டது.

               எல்லாம் ஒரே மாதிரியாய் ஆக வேண்டும் என்று நினைக்கிற போது கற்பனை அழிந்து போகும்.

               பல நல்ல விஷயங்களைப் பாடங்களாக வைத்து மாணவர்களை வெறுக்க வைத்து விட்டோம்.

               குடும்பத்தில் எல்லோரும் அமர்ந்து பேசவேண்டும். குறைந்தபட்சம் இரவு உணவுநேரத்தின்போது ஒன்றாய்கூடி உண்ண வேண்டும். அப்போது முக்கியமாகத் தொலைக்காட்சியை அணைத்துவிட வேண்டும்.

               வெளிநாடுகளில் ஒருவரைப் பார்க்கச் சென்றால் அவர்கள் செய்கிற முதல் விஷயம் தொலைக்காட்சியை அணைப்பது. நம்நாட்டில் பெரும்பாலும் கதவையே திறப்பதில்லை. நேரில் நண்பர்களோடு பேசுவதில்லை. முகம் தெரியாதவர்களோடு செல்போனில் பேசுகிறோம். முகநூலில் உரையாடுகிறோம்.

               வாழ்க்கையில் உயரக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையெல்லாம் புராணக் கதைகளில் மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்கள்.

               நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது நம் குலதெய்வம் நமக்கு முன் நிற்கும் என்கிறார் வள்ளுவர்,

               குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

               மடிதற்றுத் தான்முந் துறும்.

               அந்த மனவேகத்துடன் நாம் பணியாற்றுகிறபோது ஒரு கரம் தாங்கி நம்மை உயர்த்துவதுதான் தெய்வநிலை.

               தெய்வம் என்பது வடிவம் சார்ந்ததில்லை. மனதில் கஷ்டம் வருகிறபோது அதை மனிதனிடம் சொல்லாமல் தெய்வத்திடம் சொல்ல நினைப்போம்.

               கலக்கம் வருகிறபோது தாங்கிப் பிடிக்கிற மாதிரி இலக்கியங்கள் இருக்கவேண்டும்.

               நாம் கஷ்டப்படுகிறபோது தெய்வம் துணைக்கு வந்து நிற்குமா? நிற்க வேண்டும் என்று நம்பினால் நிற்கும், நம்பவில்லையென்றால் நிற்காது.

               கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம்’ வரும்.

               தெய்வம் என்றால் அது தெய்வம்

                வெறும் சிலையென்றால் சிலைதான்’ நம்பிக்கைதான்.

               பக்தன் பெரியவனா? கடவுள் பெரியவனா? என்ற கேள்விக்கு மகாபாரதத்தில் விடை இருக்கிறது.

               மகாபாரதப் போரில் கிருஷ்ணன் ஆயுதமெடுப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறான். துரியோதனின் தூண்டுதலால் கிருஷ்ண பக்தரான பீஷ்மர், கிருஷ்ணனை ஆயுதமெடுக்க வைக்கிறேன் என்று சபதமெடுக்கிறார். அடுத்தநாள் போரில் பீஷ்மர் தாக்குகிறபோது தாங்க முடியாத அர்ஜுனன் திகைத்து நிற்கிறான். கிருஷ்ணன் மீதும் தாக்குதல் நடத்துகிறார் பீஷ்மர். வேறுவழியில்லை. கிருஷ்ணன் சக்ராயுதத்தைக் கையிலெடுக்கிறார். கையில் எடுத்தவர் நேரே பீஷ்மரை நோக்கி ஓடுகிறார்.

பீஷ்மரும் கிருஷ்ணனால் தாக்கப்படுவதை விரும்பி வருகிறார். இடையில் புகுந்து அர்ஜுனன் தடுக்கிறான். அன்றைய போர் முடிந்து இரவில், கிருஷ்ணனிடம் அர்ஜுனன், ஏனிந்த நாடகம் என்று கிருஷ்ணனைக் கேட்கிறான். “நான் ஆயுதமெடுப்பதில்லை” என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் என் பக்தனாகிய பீஷ்மர் என்னை ஆயுதமெடுக்க வைப்பேன் என்று சபதம் செய்து விட்டார். எனவே பக்தனுக்காக நான் ஆயுதமெடுத்தேன்” என்றார் கிருஷ்ணர். கடவுள் கூட தோற்கலாம். பக்தன் தோற்கக்கூடாது.

நம்புகிற பக்தனைத் தெய்வம் கைவிடுவதில்லை. நம்பினார் கெடுவதில்லை நான்குமறைத் தீர்ப்பு.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.