மீனுக்கும் ஆயுள் கம்மி…

ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் நமக்கு வழங்கும். சிறுபிள்ளைகளாக இருக்கும்போது, எங்காவது சுற்றுலா செல்கிறோம் என்று சொன்னால் இரவெல்லாம் தூங்கமாட்டோம். பஸ்ஸிலோ, ரயிலிலோ ஜன்னலோரத்தில் உட்கார்ந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற மரங்களை, எதிர்த்துச் செல்லும் வாகனங்களை, கூடவே வரும் நிலாவை, மேகத்தை ரசித்து மகிழ்வது எப்போதும் எல்லோருக்கும் பிடிக்கும்.
திருவனந்தபுரத்திலிருந்து செங்கோட்டை வரும் வழியில் ‘புனலூர்’ என்ற ஊருள்ளது. அந்த ஊர் தமிழ்ச்சங்கத்திற்கு ஒருமுறை நான் பேசப் போயிருந்தேன். கூட்டம் முடிந்ததும் நண்பர்கள் அந்த ஊரிலிருந்த ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். மிகப்பெரிய ஆறு. ஆற்றினையொட்டிய மலைமீது சாலை, மலைச்சரிவில் வீடுகளும் கட்டிடங்களும் அதில் அந்த உணவு விடுதி அமைந்திருந்தது.
மழை எப்போது வரும். எப்போது நிற்கும் என்று சொல்லமுடியாதபடி வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. நாங்கள் பயணித்த காரை சாலையோரம் நிறுத்திவிட்டு மரங்கள் அடர்ந்த சரிவுகளில் இறங்கத் தொடங்கினோம். அந்த உணவு விடுதி தனித்தனிக் கண்ணாடிக் கூண்டுகள்போல அமைந்திருந்தது. ஒவ்வொரு கண்ணாடிக் கூண்டுக்குள்ளும் ஆறுபேர் அமர்ந்து கொள்ளலாம். மெல்லிய விளக்கொன்று உள்ளே எரிந்து கொண்டிருந்தது. வாடைக்காற்றையும், மலையையும் தாண்டி நாங்கள் உள்ளே சென்று கதகதப்பாக அமர்ந்து கொண்டோம். பெருமழை தொடங்கி கண்ணாடிக் கூண்டுகள் வழியே தாரை தாரையாக மழை இறங்கத் தொடங்கியது. கீழே இருந்த ஆற்றில் படகுகள் விளக்குகளோடு நகரத் தொடங்கின.
நாங்கள் சொன்ன உணவு வகைகளை அந்தப் பணியாளர் கொண்டுவந்து எங்களுக்குப் பரிமாறினார். பல்வேறு வகையான புலால் உணவுகள், மீன் வகைகள் அதிகம். அடுத்து என்ன சாப்பிடலாம் என்று நாங்கள் யோசித்தபோது கூட வந்த நண்பர், அந்தப் பணியாளரிடம் ‘இங்கு கிடைக்கின்ற பெரிய மீனை வதக்கிக்கொண்டு வாருங்கள். ஆயில் கம்மியாக இருக்கட்டும், மறக்க வேண்டாம்! ஆயில் கம்மியாக இருக்கட்டும்’ என்று பலமுறை சொல்லி அனுப்பினார். சற்றுநேரத்தில் சுடச்சுட அந்த மீன் வாழை இலைத் தட்டில் வந்து சேர்ந்தது. மீனுக்குப் பக்குவம் சொன்ன நண்பர் மீண்டும் விடாமல் கேட்டார். ‘ஆயில் கம்மிதான!’ என்று. அதற்கு அந்தப் பணியாளர் மெல்லிய புன்னகையோடு, ‘இதுலயும் ஆயில் கம்மிதான். இந்த மீனுக்கும் ஆயுள் கம்மிதான். அதனால தட்டுக்கு வந்திருச்சு. சாப்பிடுங்க’ என்றார். அவர் பேசிய சிலேடையால் செவி இனித்தது. சுற்றுப்புறச் சூழலில் மனம் இனித்தது. சுவையான மீனினால் நா இனித்தது.
அந்த மழைக்கால இரவில் மீனும் சுவையாக இருந்தது. அந்தப் பணியாளர் பேசிய சிலேடைத் தமிழும் சுவையாக இருந்தது. வாழ்க்கையின் இனிமையான நேரங்களை நினைத்துப்பாருங்கள். என் நண்பர் இயக்குநர் நடிகர் ஆர்.பாண்டியராஜன் அவர்கள் சொல்வதுபோல ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது இருக்கும்; இனிமையைக் காட்டிலும் அதை நினைத்து கடக்கும்போது இருக்கும் இனிமையின் சிறப்பே தனிதான். நல்ல நிகழ்வுகளை அசைபோட்டுப் பாருங்கள் சுவை கூடும்