வென்றார்கள்…. தந்தார்கள்….

         பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் எவையாக இருந்தாலும் வகுப்பறைகள் சிறப்படையத் தேவை – நல்ல ஆசிரியர், சிறந்த மாணவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாடத்திட்டம். இவை சரியாக அமைந்தால் அத்தகைய கல்விக்கூடங்கள் சிந்தனைக் கூடங்களாக மாறும்.

               எனக்கொரு ஆசிரியர் இருந்தார், அவர் பாடவேளை முடியும் மட்டும் பாடம் நடத்தமாட்டார். ஒரு அரைமணி நேரம் நடத்திவிட்டுக் கேள்விகள் கேட்கச் சொல்லுவார் அல்லது வகுப்பு மாணவர்களை இரண்டு அணிகளாக்கி ஒரு அணி மற்றொரு அணியைக் கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் தூண்டுவார். சிலநேரங்களில், தான் சிந்தித்ததைக் கேள்வியாக மாணவர்களிடத்திலே கேட்டுவிட்டுக், கடைசியில் அவரே விடையும் சொல்லுவார்.

               ஒருமுறை எங்களுக்குத் திருக்குறள் நடத்திவிட்டுப் பொதுவாக ஒரு கேள்வி கேட்டார். ‘எங்க யாராவது சொல்லுங்க பார்க்கலாம். உடம்பு, உயிர் இந்த ரெண்டுல உடம்ப வளர்க்கறதுக்குச் சாப்பாடு சாப்பிடுகிறோம். தண்ணி குடிக்கிறோம் அது மாதிரி நம்ம உயிருக்கு ஏதாவது தர்றோமா!’ என்று கேட்டார்.

               வழக்கப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு பதில் சொன்னோம்.

               ‘உடம்புக்குக் குடுத்தா உயிருக்குக் குடுத்தமாதிரி தான்.. சார்’ என்றான் ஒருவன்.

               ‘இது பரீட்சைக்கு வருமா சார்’ என்றான் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன்.

               ‘உயிர்வேற உடம்பு வேறயா சார்’ என்று அடிப்படைச் சந்தேகத்தைக் கிளப்பினான் மற்றொருவன்.

               எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ஆசிரியர், ‘நீங்க இத்தனைபேரும் நான் கேட்ட கேள்விக்கு சிந்திச்சீங்களே, அதுவே பெரிய வெற்றி’.

               ‘இதுதான் விடையா’ என்றான் ஒரு குறும்புக்கார மாணவன்.

               ஆசிரியர் கோபப்படாமல், ‘விடை இனிமேதான் சொல்லப்போறேன்.’

               ‘உடம்பையும் உயிரையும் பற்றி பலர் அருமையாச் சொல்லியிருக்காங்க…’

               ‘உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே’ அப்படின்னு திருமூலரும்….

               உடம்போடு உயிரிடை நட்பு’ என்று திருவள்ளுவரும் சொல்லி இருக்கிறார். இந்த உடம்பில்லாட்டி உயிர் இல்லை, உயிர் இல்லாட்டி அது உடம்பே இல்லை. எங்க தனித்தனியாச் சொல்லிப்பாருங்க. மேடையில் உட்கார்ந்திருக்கிற தலைவர் உடம்புக்கு இந்தப் பொன்னாடையைப் போர்த்திக்கிறேன் என்றால் அதுக்குப் பொருளே வேற.

               அந்த உயிர் அங்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு என்றால் அதுக்கும் வேற அர்த்தம். அதுனால….’

               ‘சார் மணி அடிக்கப்போகுது’ என்றான் ஒருவன் வேகமாக.

               ‘இல்லை நேரமிருக்கு. உடம்பும் உயிரும் சேர்ந்திருந்தாத்தான் பெருமை. இதுல உடம்புக்கு உணவைத் தர்றோம். உயிருக்கு நீங்க அடையிற புகழைத்தான் தரமுடியும். உணவால வளர்ந்த உடம்பு அழிஞ்சுபோகும். புகழால பெருமை அடைகிற உயிர், மறைஞ்சு போனாலும் எப்பவும் நிலைச்சு நிற்கும்.

               இதைத்தான் நம்ம திருவள்ளுவர்…. புகழ் அடையணும்னா… உயிருக்கு ஊதியமா ஈகைய… அதாவது குடுக்கறதக், கொடை கொடுக்கறதப்பத்திச் சொல்லியிருக்காரு, என்ன சொல்லியிருக்காரு….’

               ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

                ஊதியம் இல்லை உயிர்க்கு”

என்று கணீரென்று சொன்னான் ஒரு மாணவன்.

               ‘சபாஷ்! அருமை’ என்று பெருமிதமாக அந்த மாணவனை ஆசிரியர் பாரட்டிவிட்டுப் பிறகு சொன்னார்.

               ‘இந்த உலகில் வறுமையால் சிரமப்பட்டு, முயற்சியால் வெற்றிபெற்று பெரும் செல்வத்தைச் சேர்த்த பல அறிஞர்கள், விஞ்ஞானிகள் தாம் சேர்த்த பொருளை உலகிற்குத் தந்து, அதனால் புகழ் அடைந்து இன்றைக்கும் நம்மிடத்திலே பேசப்படுகிறார்கள்.

               எடுத்துக்காட்டாக… ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி….’ என்று அவர் சொல்லத் தொடங்கியபோது பாடவேளை முடிந்து மணி அடித்தது.

               ‘சரி, நீங்கள் இவர் பற்றி தெரிந்துகொண்டு வாருங்கள்’ என்றார்.

               ‘டைனமைட்’ என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பெரும் செல்வத்தைச் சம்பாதித்தார். அயர்லாந்து தேசத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி. அவர் கண்டுபிடித்த வெடிமருந்து, மலைகளைப் பிளக்கவும், பூமியில் சுரங்கங்களை உருவாக்கவும், போர்க்களத்த்தில் வெடிகுண்டாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் கிடைத்த பெரும் செல்வத்தோடு, அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் அதிகாலையில் காலைப் பத்திரிக்கையைப் படித்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அதில் ‘ஒரு மரணவியாபாரியின் மரணம்’ எனும் தலைப்பில் ஆல்பர்ட் நோபல் என்ற அவர் பெயரைக் குறிப்பிட்டு, இறந்துவிட்டதாகத் தவறான தகவல் வெளியாகி இருந்தது. அடுத்த அதிர்ச்சியோடு இந்தச் செய்தியைப் படித்த அவர் மற்றவர்கள் இச்செய்தி குறித்து என்ன நினைப்பார்கள் என அறிய விரும்பித் தம்வீட்டில் வேலை செய்த படிப்பறிவு இல்லாத வயதான வேலைக்காரக் கிழவியை அழைத்து ‘இதோ பார்த்தாயா வெடி மருந்தைக் கண்டுபிடித்த ஆல்பர்ட் நோபல் இறந்துவிட்டதாகப் பத்திரிக்கையில் போட்டிருக்கிறார்கள்’என்றாராம். இதற்கு அந்த வேலைக்காரக்கிழவி, அப்பெயர் தன் எஜமானவரின் பெயர் என்று அறியாது, ‘பலர் சாகறதுக்குக் காரணமான அவன் செத்தது நல்லதுதான்’ என்று சொல்லிவிட்டுத், தன் வேலையைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றுவிட்டாள்.               ஆல்பர்ட் நோபலுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. அப்போது அவர் சிந்தித்தார். நம் கண்டுபிடிப்பால், தேடிய செல்வத்தால் நமக்குக் கிடைத்த பெயர் இதுதானா? என வருந்தினார். பலநாட்கள் சிந்தித்த பின்னர், தம்முடைய செல்வம் முழுவதையும் உலக நன்மைக்குச் செலவிட நினைத்தார்.

               அறிவியலுக்கு, இலக்கியத்திற்கு, உலக சமாதானத்திற்கு, மக்களை வாழவைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு என மிகப்பெரிய தொகையை தம் பெயரில் பரிசாகத் தர உயில் எழுதி வைத்தார். அப்பரிசே உலகப் புகழ்பெற்ற நோபல்பரிசு. நம்நாட்டு விஞ்ஞானியான சர்.சி.வி.இராமன், நமது தேசியக்கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர், நமது நாட்டிலே பிறந்த பொருளாதாரத் துறையில் புகழ்பெற்ற நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோர் நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகளே!    

               தம் வெற்றிச் செல்வத்தைக் கொடைப் புகழாக மாற்றிக்கொண்ட ஆல்பர்ட் நோபல் இன்றும் உலக மக்களால் பேசப்படுகிறார்.

               நம்நாட்டில் இந்திய விடுதலைக்குப்பின் முதல் பிரதமராகப் பதவியேற்ற பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒருமுறை, தமிழகத்திற்குக் காரைக்குடிப் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவரைச் சந்தித்த அழகப்பச் செட்டியார் தாம் வாழ்ந்த காரைக்குடிப் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சி மையமும், அது தொடர்பான கல்விக் கூடங்களும் நிறுவவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தாராம். அதற்கு நேரு பெருமகனார் சிரித்துக்கொண்டே….

               ‘நீங்க வைக்கிற கோரிக்கை, சாதாரணமானது அல்ல. முந்நூறு ஏக்கர் நிலமும் 15லட்சம் பணமும் இந்தப் பகுதியைச் சார்ந்தவர் யாராவது கொடையாகக் கொடுத்தால், நீங்கள் சொல்லும் விஷயத்தை யோசிக்கலாம்’ என்று கூறிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லி சென்றுவிட்டார்.

               சிலநாட்கள் கழித்து இந்தியப் பிரதமராகிய நேரு அவர்களின் இல்லத்தில் அவரைச் சந்திப்பதற்கு அதிகாலை நேரத்தில், ஒருவர் வந்திருப்பதாக உதவியாளர், நேரு அவர்களிடத்திலே சொன்னார். வந்தவரை உள்ளே அழைத்த பிரதமர் அவர்கள், வந்தவரைப் பார்த்துத் திகைத்துப் போய்விட்டாராம்.

               உள்ளே வந்தவர் “ஐயா… சில நாட்களுக்கு முன்பாக நீங்கள் எங்கள் ஊராகிய காரைக்குடிக்கு வந்தபோது, நிலமும் பணமும் இருந்தால்…. அரசாங்கம் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் என்று கூறினீர்கள். இதோ முந்நூறு ஏக்கர் என் சொந்த நிலத்தை அரசாங்கத்தின் பேரில் பதிவு செய்ததற்கானப் பத்திரம், அப்பணிக்காகப் 15லட்சம் ரூபாய் பணம்” என்று அவர் முன்னேவைத்துப் பெருமிதமாக நின்றாராம்.

               உடனே நேரு அவர்கள் தம் மகளான இந்திரா பிரியதர்ஷினியை (இந்திரா காந்தி) அழைத்து மகிழ்ச்சி பொங்க,

               ‘இங்குவந்து இந்த ஆச்சரியத்தைப்பார். தமிழகத்தில் இருந்து ஒரு அதிசயமான மனிதர் வந்திருக்கிறார்’ என்று அறிமுகம் செய்தாராம். அப்படி அறிமுகம் செய்யப்பட்ட அதிசய மனிதர்தான் கொடைவிளக்கு’, ‘கல்வி வள்ளல்’ என்று அழைக்கப்படுகின்ற நம் அழகப்பச் செட்டியார். அவரது பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் காரைக்குடியில் உள்ள சிக்ரி’ ஆராய்ச்சி நிலையம். (Central Electro Chemical Research Institute – மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்) இன்றைக்கு, காரைக்குடியில் உள்ள பல்கலைக்கழகம் அவருடைய பெயரால் அழகப்பா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.

               அமெரிக்கக் கோடீசுவரரான ராக்பெல்லரும், இன்றைய கணினி மென்பொருள் உலகில் உலகக் கோடீசுவரனாகத் திகழும் பில்கேட்சும் தங்கள் முயற்சியால் கடும் உழைப்பால் பெரும் செல்வத்தைச் சேர்த்தார்கள். வாழ்க்கையில் வென்றார்கள்…. தம் செல்வத்தின் ஒரு பகுதியை உலகத்திற்குக் கொடையாகத் தந்தார்கள். சரிதான். யாருக்கும் தராதவர்கள் ‘கஞ்சர்கள்’ எனப் பெயர் பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பிறருக்குக் கொடுக்காத செல்வத்தைத் தீயவர்கள் கொள்ளையடித்துச் செல்வார்கள் என்பதை…

               ஈயர் தேட்டைத் தீயார் கொள்வர்’ என்பது நாமறிந்த ஒன்றே.

               ஒரு பெரிய பணக்காரர் தம்முடைய மிகப்பெரிய வீட்டில் வாசலில் உட்கார்ந்திருந்தார். அவர் வீட்டின் வழியாகப்போன ஒரு பிச்சைக்காரன் வாசலில் நின்று அவரைப் பார்த்து…. ‘ஐயா! பசிக்கிறது, கொஞ்சம் சோறு இருந்தால் போடுங்கள்’ என்றான்.

               ‘இல்லை போ’ என்றார் செல்வந்தர்.

               ‘ஐயா கொஞ்சம் காசாவது தாருங்கள்’

               ‘இல்லை’

               ‘ஒரு கிழிந்த வேட்டியாவது கிடைக்குமா’

               ‘இல்லவே இல்லை’

               ‘சரி. அப்ப வாங்கய்யா பிச்சை எடுப்போம்’ என்றான் அவன்.

               எனவே உலகில் வந்தவர்களைக் காட்டிலும் தந்தவர்களே வென்றார்கள். கொடுத்துப் பாருங்கள் நிலைத்து நிற்பீர்கள்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.