தமிழ்வேந்தர்…துணைவேந்தர்… வ.அய்.சுப்பிரமணியம்

தஞ்சை மண்ணின் புகழுக்கு நஞ்சை வயல்கள் மட்டும் காரணமல்ல, கொஞ்சு தமிழும்தான் காரணமாக இருக்கவேண்டுமென்று அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கிய உமாமகேஸ்வரனார், வேங்கடசாமி நாட்டார் போன்றோர்களின் கனவு தமிழுக்கெனத் தனிப்பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது. அக்கனவு நனவானது. இத்தகைய பெருமைமிகுந்த பல்கலைக்கழகத்திற்குத் தகுதியும், தமிழாய்ந்த பெருமகனுமாகிய ஒருவர்தான் துணைவேந்தராய் நியமிக்கப்படவேண்டுமென்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் நினைத்தார்.

இத்தமிழ்ப் பல்லைக்கழகம் தொடங்கப்பட்டபோது புதிய வளாகத்தில் தொடங்கப்படவில்லை. சரபோஜி மன்னர்களின் அரண்மனையின் ஒரு பகுதியில்தான் பல்கலைக்கழகமும், நூலுகக் கட்டிடங்களும் இயங்கத் தொடங்கின. பல்கலைக்கழகம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டுமென எம்.ஜி.ஆர் அவர்கள் அதிகாரிகளை அழைத்துக் கேட்டபோது அவர்கள் நூறு ஏக்கர் இடம் வேண்டும் என்று கேட்டதாகவும், எம்.ஜி.ஆர் அவர்கள் எப்போதும்போலத் தம் வள்ளல் தன்மையால் ஆயிரம் ஏக்கர் இடத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காகத் தந்து உதவியதாகவும் கூறுவார்கள்.

புதிதாக அமைந்த, இப்போது இருக்கின்ற பல்கலைக்கழகத்தினுடைய கட்டிடங்களின் அமைப்பு ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது த – மி – ழ்’ என்ற எழுத்துக்களுக்கேற்ப கட்டப்பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பு. இத்தகைய பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் அடித்தளமிட்டவர்தான் தமிழறிஞர் திரு. வ.அய். சுப்பிரமணியம் அவர்கள். இவரது அயராத உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும்தான் இன்றைக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குக் காரணமாக விளங்குகின்றன.

இலக்கணப் புலமை, ஆராய்ச்சி அறிவு, திறனாய்வுத் திறன், தமிழறிஞர் வையாபுரிப்பிள்ளை அவர்களிடத்திலே பயின்று பயிற்சி பெற்ற அனுபவம், காலநிர்வாகம் இவற்றையெல்லாம் ஒருசேரக் கடைப்பிடித்தவர்தான் தஞ்சைத்  தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள். அவரைக் குறித்து விரிவான செய்திகளைக் காண்போம்….

  உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமாகிய வ.அய். சுப்பிரமணியம் நாகர்கோவில் வடசேரியில் 1926ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். 1941இல் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி இந்து உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1943இல் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி மற்றும் இளநிலைப் பட்டத்தைப் பெற்றார்.

1946இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டமும், 1957இல் அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். வ.ஐ.சுப்பிரமணியன் சிலகாலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர்.

வையாபுரிப்பிள்ளை அவர்களின் காலத்திற்குப்பிறகுக், கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.

புதுச்சேரி மொழியியல் நிறுவனம் உருவாகவும், தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர் வ.அய். சுப்பிரமணியம்.

காலஞ்சென்ற தனிநாயக அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை’ உருவாக்கி அதன்மூலம் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் காரணமாக விளங்கினார். 1967 முதல் 1980வரை அந்தக் கழகத்தின் பொதுச் செயலராகவும் பதவி வகித்தார்.

இவர் எழுதிய வ.அய். சுப்பிரமணியம்; கட்டுரைகள் தொகுதி ஒன்று – மொழியும் பண்பாடும் இரண்டு இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழிவளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

வ.அய். சுப்பிரமணியத்தைக் கதாநாயகனாகக் கொண்டு எழுத்தாளர் பிரபஞ்சன் ‘காகித மனிதர்கள்’ எனும் புதினத்தை எழுதியுள்ளார்.

புறநானூற்றுச் சொல்லடைவுகள்’ என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது ‘வ.அய். சுப்பிரமணியம்; கட்டுரைகள்’ 2 தொகுதிகளாக வந்துள்ளன. முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப்பாசிரியராக இருந்து பல ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.

இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.

வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பணியாற்றியவர். தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழை முன்னிறுத்தி பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டவர்.

சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், சென்னை உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப் பெயராய்வு நிறுவனம், தில்லியிலுள்ள ஞானபீடப் பரிசு வழங்கும் மைய அமைப்பு, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள காந்தியப் படிப்பிற்கான பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அமைத்த குழு, மத்திய  அரசின் கல்வித்துறை சார்ந்த குழு உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

இவரது தமிழ்ப்பணி மற்றும் இவர் எழுதிய நூல்களுக்கு மிக உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டன.

தஞ்சை, நஞ்சை வயல்களாலும், கொஞ்சு தமிழாலும் தரணியில் என்றென்றும் புகழோடு விளங்கக் காரணமாக இருந்த கல்வியின் வேந்தர், துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள் விதைத்த விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இதுவே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பெருமைக்குச் சான்றாதாரம்.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.