வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பணி….

தமிழ் இலக்கிய உலகில் அச்சுக்கலையின் வருகைக்குப்பிறகு, ஏடுகளைப் பதிப்பித்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், பின்னத்தூர் நாராயணசாமிஐயர் போன்றோருடைய பணி குறிப்பிடத்தக்கது. இவர்களை அடுத்த நிலையில் காண்கிறபோது பதிப்பாசிரியராகத், தமிழ், மலையாள சொற்களஞ்சியங்களை உருவாக்கியவராக இலக்கியங்களின், அது எழுதிய புலவர்களின் காலங்களைக் கணித்த பெருமை திரு.வையாபுரிப்பிள்ளை அவர்களுக்கே உண்டு.
தமிழகத்தின் தென்கோடியில் பிறந்த இவர் திருவனந்தபுரத்திலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் ஆற்றிய தமிழ்ப்பணிக்கு ஈடுஇணை இல்லை. இலக்கியங்களின் காலத்தை இவர் நிர்ணயித்ததில் முரண்பாடுகள் உண்டு என மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் மாற்றுக் கருத்தும் தெரிவித்தனர். எவ்வாறு இருப்பினும் வையாபுரிப் பிள்ளை அவர்களினுடைய கூர்த்த அறிவும், நுண்மாண் நுழைபுலத்தோடு கூடிய ஆராய்ச்சி முயற்சியும் அனைவராலும் போற்றத்தகுந்த ஒன்று. இத்தகைய பெருமைமிகுந்த தமிழுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரிவான செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதோ மேலும் வையாபுரிப்பிள்ளை அவர்களைப் பற்றிய விரிவான செய்திகள் சில….
எஸ்.வையாபுரிப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முதன்மைத் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். ஆய்வுக்கட்டுரையாளர், திறனாய்வாளர், காலமொழி ஆராய்ச்சியாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.
எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் 1891ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று “சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)” பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.
தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப்பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். திருவனந்தபுரத்தில் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும், மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர் பிறமொழி கலப்பதை வெறுப்பதும், சமஸ்கிருதத்தை வெறுப்பதும், இந்தியை இகழ்வதும், தனித் தமிழ்நாடு குறித்து கனவு காண்பதும் போன்ற விருப்பு வெறுப்புகள் ஏதுமற்ற தமிழ் அறிஞர் ஒருவர் உண்டு என்றால் அப்படிப்பட்ட ஒரு ஆச்சரியம்தான் திரு.எஸ்.வையாபுரிப்பிள்ளை.
வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில் வையாபுரிப்பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் இவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன.
ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்ததுடன், கால நிர்ணய ஆய்வுகள் மூலம், அவை இயற்றப்பட்ட காலகட்டங்களைக் கண்டறிந்தார். உ.வே.சாமிநாத ஐயருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வுசெய்து வெளியிட்ட பெருமையுடையவர் வையாபுரிப்பிள்ளை.
சென்னை பல்கலைக்கழகம் 1926இல் உருவாக்கித் தந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். திருவிதாங்கூர் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். அது பொற்காலம் எனப் போற்றப்பட்டது. அப்போது மலையாள மொழி லெக்ஸிகன் சொற்களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டது. இந்த அகராதி உருவாக்கும் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார் வையாபுரிப்பிள்ளை. இந்தக் காலகட்டத்தில்தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக விளங்கிய வ.ஐ.சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப்பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.
சிறந்த பதிப்புக்கான விதிமுறைகளை வகுத்தார். சொற்களைப் பிரிக்க சில ஒழுங்கு முறைகளைக் கட்டமைத்தார். எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தனது கற்பனையையும் எழுதி வைத்துள்ளார்.
இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலி கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர். இருட்டடிப்பு செய்யப்பட்ட பல தமிழறிஞர்களில் ஒருவர் எஸ்.வையாபுரிப்பிள்ளை. பாரதியாரிடமும், வ.உ.சி.யிடமும் நெருக்கமான அறிமுகம் இவருக்கு இருந்தது.
அனைத்து மொழிகளையும் நேசித்தவர். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
ஆங்கிலம், தமிழ் தவிர, மலையாளம், பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் பல குறிப்புகளும் ஓலைச் சுவடிகளையும் நூற்றுக்கணக்கில் சேகரித்து வைத்திருந்தார். இவை அனைத்தையும் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
களவியற்காரிகை, கம்பராமாயணம், தொல்காப்பியம், திருமந்திரம், திருமுருகாற்றுப்படை உட்பட சுமார் 40 நூல்களைப் பதிப்பித்தார். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட நூலகத்தைச் சொந்தமாகவே வைத்திருந்தார்.
மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார் வையாபுரிப்பிள்ளை. கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது ஆசை மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் கணிக்க முயன்ற பெருமகனார். இவரை எதிர்காலம் ஒருபோதும் மறக்காது.