என் வழி தனி வழி….

               நம் நாட்டில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எதனையும் ஆச்சரியத்தோடு பார்ப்பது. நம்புவது, அதனை மற்றவர் ஆச்சரியப்படும்படி சொல்வது. நான் சொல்வதுகூட உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

             ஒருவர் சோதிடம் பார்க்க விரும்பினார். தன் குடும்ப ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றார். சோதிடரிடம் கொடுத்துவிட்டு முன்னால் அமர்ந்தார்.

               சோதிடர் ஆரம்பித்தார். ‘உங்கள் வீட்டு எண் 7ஆம் நம்பரா?’

               வந்தவர் ஆச்சரியத்தோடு “ஆமாம் ஐயா”

               ‘கூடப்பிறந்தவர்கள் 5 பேர். பெண் 2, ஆண் 3, மூத்தவன் பெயர் மாணிக்கம். கடைசிப்பெண் பெயர் சீதாலட்சுமி….’ கடகடவென சொல்லிக்கொண்டே போனார்.

               ‘சாமி நீங்க தெய்வந்தான் எப்படி இவ்வளவு துல்லியாமாச் சொல்றீங்க?’

               ‘அப்பனே இது உங்கள் குடும்ப ஜாதகம் அல்ல, ரேசன் கார்டு, இதைப்பார்த்து வாசித்தேன். ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டாம்” என்றாராம்.

               நம் வீட்டு ரேசன் அட்டையைக்கூட சோதிடர் வாசித்தால் நமக்கு ஆச்சரியம்தான். இதனால்தான் சங்கஇலக்கியத்தில் புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் கூறும்போது, இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே,

               பெரியோரை வியத்தலும் இலமே

               சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

               எப்போதும் யாரையாவது பார்த்து வியந்து கொண்டோ அல்லது தம்மினும் குறைந்தவர்களை இகழ்ந்துகொண்டோ இருக்கவேண்டாம்.

               நமக்கெனத் தனி வழி இருக்கவேண்டும். ‘என் வழி தனி வழி’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதென்ன தனி வழி?

               எல்லோரும் சிந்திக்கும் நிலையிலிருந்து சற்றே விலகிச் சிந்தித்தல். தேர்வில் எளிய விடைகளைத் தேர்ந்தெடுத்து அனைவரும் எழுதுவார்கள். ஆனால் யாரும் தேர்ந்தெடுத்து எழுதாத வினாவை ஒரு சில மாணவர்கள் எழுதி அவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

               இந்த முயற்சிக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். தோற்றுவிட்டால் என்னாவது என்ற குழப்பமோ, அச்சமோ இருந்தால் வெல்வது கடினம்.

               வாஸ்கோடகாமா புதுநாடுகளைக் காணப் புறப்பட்டபோது அவரது முயற்சிக்குத் தடை விதித்தவர்கள் எத்தனை பேர். அவர் பிரயாணம் செய்த கப்பலில் உணவு தீர்ந்து விட்டது. குடிநீர் தீர்ந்துவிட்டது. கரை தெரியவில்லை, திசை தெரியவில்லை, கப்பலில் கலகம் ஏற்பட்டது.

               அத்தனை பிரச்சனைகளையும் அந்த மனஉறுதிகொண்ட மனிதர் தனியே நின்று சமாளித்தார்.

               தைரியம் சொன்னார். கெஞ்சினார், மிஞ்சியபோது மிரட்டினார். ஒருவழியாகக் கரை தெரிந்தது.

               நன்னம்பிக்கை முனை’ என அதற்குப் பெயரிட்டார். திரும்ப நாடு வந்து சேர்ந்தார். வரலாற்றில் இடம் பெற்றார்.

               கொலம்பஸ்’ அமெரிக்காவைக் கண்டுபிடித்துவிட்டு வந்தபோது அதனை யாரும் நம்பவில்லை.

             ஒரு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார் அந்நாட்டு அரசியார். ‘கொலம்பஸிற்காக’ ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து அது.

             அங்கு வந்த பலர் கொலம்பஸின் சாதனையைப் பாராட்ட, சிலரோ பொறாமையின் காரணமாக அவரை ஏற்றுக்கொள்ளாது மறுத்துக்கொண்டே இருந்தனர்.

       கொலம்பஸ் சட்டென்று எழுந்து அங்கிருப்பவர்களைப் பார்த்துப் பேசத்தொடங்கினார்.

               ‘இதோ என் கையில் அவித்த முழுமையான கோழி முட்டை ஒன்று இருக்கிறது. இதனை இந்த மேடையின் மீது செங்குத்தாகக் கீழே விழாமல் யாரால் நிறுத்தமுடியும்’ எனக்கேட்டார்.

               பலர் அந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். முடியவில்லை. பேரரசியாரும் இதனை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். முடிவில் யாராலும் முடியவில்லை என்றபோது, ஒரு பிரபு கொலம்பஸைப் பார்த்து, ‘எங்கே எங்களால் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியுமா?’ எனக் கேட்டார்.

     உடனே கொலம்பஸ் தன் கையில் இருந்த அந்த முட்டையின் ஒரு முனைப்பகுதியைத் தன் கைவாளால் சீவினார். பின்னர் அதனைச் செங்குத்தாக நிறுத்த முட்டை செங்குத்தாக நின்றது.

               உடனே அனைவரும் ‘ஆ…. இதனை நாங்கள் செய்ய மாட்டோமா?’ என்று சத்தமிட்டார்கள். ‘நீங்கள் யாரும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அரண்மனைக்குள்ளே அமர்ந்துகொண்டு ஆயிரம் பேச்சுப் பேசலாம். தரையில் பிரயாணம் செய்வது எளிது…. ஆனால் கடலில், புயலில், இரவு நேரங்களில், திசை தெரியாத நேரங்களில், திரும்பத் தாய்நாடு வருவோமா என்ற உறுதி இல்லாத நிலையில் பிரயாணம் செய்து வெற்றியோடு திரும்பி உள்ளோமே! இதுதான் வீரம், உறுதி’ எனச் சாந்தமாகக் கூறினார்.

               கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்றோரின் தனிவழி முடிவுகள் அவர்களின் சாதனைக்கு வழிவகுத்தன.

               சிறிய துன்பங்கள், சோதனைகள் ஏற்பட்டவுடன் துவண்டுபோய் விடுபவர்களைக் காண்கின்றோம்.

               வருத்தத்தின் உச்சநிலைக்கே சென்று நான் பிறந்திருக்கவே கூடாது, இந்த உலகமே பொல்லா உலகம் எனப் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

               பெஞ்சமின் பிராங்க்ளின்’ என்ற அறிஞனின் வாழ்க்கை எத்தனை சோதனைகளைக் கண்டது தெரியுமா?

               ஏழ்மை, ஆதரவின்மை, முகம் தெரியாத அந்நிய தேசத்தில் பிழைக்கச் சென்ற நிலை. உழைப்பு, மிகக் கடும் உழைப்பு இதுதான் அவரின் இளமைக்கால வரலாறு.

               அந்த அறிஞர் ஒருமுறை கூறினார். ‘ஆஹா இன்னும் 250 ஆண்டுகள் கழித்து நான் பிறந்திருந்தால், எத்தனை விஞ்ஞான அதிசயங்களைக் கண்டிருப்பேன். ஒரு ஆச்சரியமான உலகம் வர இருக்கிறது’ எனக் கூறினாராம்.

               250ஆண்டுகளுக்கு முன்னமேயே இன்றைய உலகத்தை நினைத்துப் பார்த்த அந்த அறிவியல் மேதையின் தொலைநோக்குப் பார்வையை நினைத்துப் பாருங்கள். காரணம் அவருக்குப்பின் வந்த தாமஸ் ஆல்வா எடிசனால்தான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பெற்ற புதிய ஒளி உலகம் நமக்குக் கிடைத்தது.

               இரண்டுபேர் பேசிக்கொண்டார்கள்.

               ‘என் மகனை நினைத்தால் எனக்குக் கவலையாக இருக்கிறது. அவன் இந்த வயதில் சிகரெட் பிடிக்கிறான், தண்ணி அடிக்கிறான், எப்போதும் கிரிக்கெட், சினிமாதான். தீய நண்பர்கள் வேறு. என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்றார் ஒருவர்.

               மற்றவர் சொன்னார், ‘என் பையனிடத்தில் எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது உத்தமபுத்திரன். அவனை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது’.

          ‘அப்படியா? உங்கள் பையனின் வயதென்ன?’ என்றார் முதலாமவர் ஆச்சரியத்தோடு.

               ‘நேத்துதான் பிறந்திருக்கான்’.

Share this:

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.