நகைச்சுவை என்னும் சாவி…

திரையுலகில் புதுமுகங்களை அறிமுகம் செய்த இயக்குநர்கள் என்று பார்க்கும்போது இயக்குநர் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பாரதிராஜா, இவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இதுபோல எழுத்துலகில் புதியவர்களைத், தான் பணியாற்றிய பத்திரிக்கையில் அறிமுகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பெரும் புகழையும் வாங்கித் தந்தவர் எழுத்தாளர் பத்திரிக்கையாளர் சா.விசுவநாதன் என்ற சாவி அவர்கள்தான்.
நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்களான கல்கி, புதுமைப்பித்தன், தேவன் இவர்களையடுத்துச் சாவி அவர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவரது மேடைப்பேச்சும் மிகுந்த நகைச்சுவையாய் இருக்கும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி அவர்கள் நடித்து ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ‘அன்பே வா’ படம் நூறுநாட்கள் ஓடி வெற்றிகண்டது. அந்தப் படத்தினுடைய வெற்றிவிழாவில் திரு.சாவி அவர்கள் பேசும்போது, ‘இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்தப் படத்தைத் தயாரித்த ஏ.வி.எம்.நிறுவனம்தான் என்று நினைப்பீர்கள். இல்லை’ என்றவுடன் மேடையில் இருந்தவர்களும் கூட்டமும் அரண்டுபோய்விட்டது.
சாவி தொடர்ந்தார்…. ‘கதாநாயகியாக நடித்த அபிநய சரஸ்வதி சரோஜாதேவி என்று நினைப்பீர்கள், அதுவும் இல்லை. ஏன்? இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமே நம்முடைய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.தான்னு நினைப்பீர்கள், அவரும் காரணமில்லை’ என்று சொன்னவுடன் கூட்டம் கொந்தளித்தது. எம்.ஜி.ஆரே திகைத்துப் போய்விட்டார். சாவி பேச்சைத் தொடர்ந்தார்.
அப்படியானால் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் யார் தெரியுமா? ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது…’ இந்தப் பாட்டின் இடையில் ‘எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை….’ அதில் பலர் வருவார்கள் அப்படி வந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு காட்சியில் வந்ததால்தான் இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றி கண்டது என்று அவர் சொன்னவுடன் எம்.ஜி.ஆர் உட்பட மேடையில் இருந்த அனைவரும் சந்தோசத்தோடு கைதட்டிச் சிரித்தார்கள். சபையே ஆர்ப்பரித்தது.
இதேபோல, ‘இங்கே போய்இருக்கிறீர்களா?’ என்று சென்னையில் உள்ள இடங்களைப் பற்றி அவர் எழுதும்போது மெரினா பீச்சைப் பற்றிச் சொல்லுவார். அதில் முறுக்கு விற்கும் பையன் ‘நெய் முறுக்கு சார், நெய் முறுக்கு சார் கைபடாம செய்தது’ என்று சொல்ல, அதை வாங்கித் தின்ற ஒருவர், ‘நெய்படாம செஞ்சது என்று சொல்றா தம்பி’ என்று கூறுவதாக எழுதியிருப்பார்.
இதேபோல ‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவைத் தொடரில் தமிழ்நாட்டிலிருந்து வாஷிங்டனில் திருமணம் செய்துவைக்கத் தமிழ்நாட்டு சாஸ்திரிகள் எல்லாம் செல்வார்கள். அப்போது அமெரிக்காவில் விமானம் தாழப் பறக்கும்போது, ‘இதுதான் லிங்கனின் சமாதி’ என்று ஒருவர் சொல்ல, உடனே ஒரு சாஸ்திரி எழுந்து கும்பிடுவார். ‘ஓ இங்கேயும் லிங்க வழிபாடு உண்டா!’ என்று கேட்பார்.
என்னுடைய பள்ளிக்காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் சாவியினுடைய தொடர்களைத் தொடர்ந்து படித்து வருவேன். ஒருமுறை சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோடு சேர்ந்து சாவி அவர்களைச் சென்று பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அரைமணி நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் மகிழ்ச்சியோடு ‘உங்கள் நகைச்சுவைகள் என்னை மெய்மறக்கச் செய்தன’ என்று சொன்ன வார்த்தை இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர் தனக்கு நடந்த பைபாஸ் சர்ஜரியைக் கூட, நகைச்சுவையோடு பதிவு செய்திருப்பார். இத்தகைய பெருமைமிகுந்த சாவி அவர்களைப் பற்றி மேலும் சில செய்திகள்….
‘பத்திரிக்கை உலகின் பிதாமகர்’ என்று அழைக்கப்படும் சா.விசுவநாதன், சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர், கல்கி, இராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கிப் பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
1938ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் ஆசிரியர் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி.
சாவி, தினமணி கதிரிலிருந்து விலகியபோது, நட்பின் காரணமாக சாவி சாருக்காகவே ஒரு பத்திரிக்கையைத் தொடங்கினார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். அதுதான் ‘குங்குமம்’ என்னும் இதழ்.
ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட… என்ற எழுத்துக்களையே அத்தியாய எண்களாக்கி, 11வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக ‘சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக்கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.
தேசப்பிதா மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது அவருடனே நடைப்பயணம் செய்து, அந்த அனுபவங்களை ‘நவகாளி யாத்திரை’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி.
வெள்ளிமணி, சாவி பத்திரிக்கைகள் தவிர, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் ஆகிய பத்திரிக்கைகளையும் சாவி சொந்தமாகத் தொடங்கி நடத்தியுள்ளார். இவற்றில் ‘திசைகள்’ பத்திரிக்கை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிக்கையாக விளங்கியது. சாவி தொடங்கிய விசிட்டர் லென்ஸ் பத்திரிக்கைதான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிக்கைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. இதன் ஆசிரியராக இருந்தவர்தான் பின்னர் ‘விசிட்டர் ஆனந்த்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
மூடிக்கிடக்கின்ற இதயக்கதவுகளின் பூட்டைத் தன் நகைச்சுவையால் திறந்த சாவி இவர்தான்.