மனக்கவலை மாற்றலாம்…

‘சிரிப்பு அதன் சிறப்பைச் சீர்;தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு’
-மருதகாசி
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் டி.ஏ.மதுரத்தோடு இணைந்து சிரிப்புப் பொங்கப் பொங்கப் பாடிய பாட்டு சிரிப்புப் பாட்டு. ‘ராஜாராணி’ என்ற இந்தத் திரைப்படம் வந்து 60 ஆண்டுகள் சென்றுவிட்டாலும் நம்மை மயக்கும் அந்தக் குரல்கள், பாடல் வரிகள்.
மனிதன் மகிழ்ச்சியை அனுபவிக்கப் பிறந்தவன், அதுவும் மனத்தின்கண் தோன்றி முகத்திலே வெளிப்படுவதால் மனமகிழ்ச்சி என்றனர் நம் முன்னோர்கள்.
மனதிலே கவலையும் தோன்றுமா? தோன்றும் அதனால்தான் திருவள்ளுவர் மனக்கவலை என்றொரு சொல்லைக் குறிப்பிடுகிறார்.
‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது’
என்கிறது திருக்குறள்.
மனதிலே மகிழ்வு வந்தால் முகத்திலே சிரிப்பூ மலரும். இந்த மகிழ்வைத் தருவது எது? நகைச்சுவை உணர்வு.
மனிதனைத் தவிர ஏனைய உயிர்கள் சிரிக்குமா, நகைச்சுவை உணர்வு உண்டா? என்ற கேள்விக்கு எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை பதில் எழுதினார்.
‘நமக்கு முன்னோர்களாகிய சிம்பன்சி என்றொரு குரங்கு இனத்திற்கு நகைச்சுவை உணர்வு உண்டு என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தன் குட்டியைச் சில குரங்குத் தாய்மார்கள் ஆகாயத்தில் தலைக்குமேல் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுமாம். அப்போது அந்தக் குட்டிக்குரங்கு பயத்தோடு சிரித்துக்கொண்டே கீழே வருவதுண்டாம். இன்னும் சில சேட்டைக் குரங்குகள் (குரங்குச் சேட்டை என்று மாற்றிப் படித்தாலும் சரியே)மேல் கிளைகளிலிருந்து சிறிய பழத்தைப் பறித்துக் கீழே இருக்கும் குரங்கின் மண்டையில் எறிந்துவிட்டு, அது மேலே பார்த்தால் இதுவும் மேலே பார்க்குமாம்;’.
இதைப் படித்தபோது நாம் பள்ளியில் செய்த வேலைகள் குரங்குகளுக்கு எப்படித் தெரியும் என்று யோசித்தேன். ஆகவே குரங்குகளில் ஒருவகை இனங்களுக்குச் சிரிக்கத் தெரியும். அவை நம் முன்னோர்தானே.
அறிவியல் அறிஞர் டார்வின் இதைச் சொன்னபோது பலர் இதை நம்பவில்லை. நானே படித்தபோது நம்பவில்லை. எப்போது நம்பினேன் என்றால் எந்த மிருகம் வீதியில் சென்றாலும் பேசாமல் இருப்போம். குரங்கு செல்லட்டும். ஒரு நிமிடம் அருகே சென்று பார்ப்போம். பழைய சொந்தக்காரனைப் பார்ப்பதுபோல உறவுப் பார்வை. சிலர் அந்தக் குரங்குபோல் ‘உர்’ என்று பேசவும் முற்படுவார்.
ஒருமுறை ஒரு விஞ்ஞானி, குரங்கை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துவிட்டு அரைமணி நேரம் கழித்து அந்தக் குரங்கு என்ன செய்கிறது என்பதை கதவைத் திறக்காமல் சாவித் துவாரத்தின் வழியாக ரகசியமாய்ப் பார்த்தாராம்.
அந்தக் குரங்கு அங்கே இருந்து அதே மாதிரி சாவித் துவாரத்தின் வழியாக இவர் என்ன செய்கிறார் என்று அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்ததாம்.
பிறகு அந்த விஞ்ஞானி அறைக்குள் நுழைந்தார். ஒரு சீப்பு வாழைப்பழத்தை அறையின் மத்தியில் உத்திரத்தில் (மேல் பகுதியில்) கட்டித் தொங்கவிட்டார். இந்தக் குரங்கு இதை எப்படி எடுக்கிறது என்று பார்க்க நினைத்து, ஒரு மேசையைப் பழத்திற்கு நேரே இழுத்துப் போட்டார். ஒரு குச்சியை அருகில் வைத்தார். ஒரு கயிரையும் தொங்கவிட்டார். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை இக்குரங்கு பயன்படுத்தட்டும் என எண்ணி, அந்தக் குரங்கைப் பார்த்தார். குரங்கு சடாரென்று அவர் தலைமீது தாவி ஏறி பழத்தைப் பறித்துக்கொண்டு குதித்தது. விஞ்ஞானி அரண்டே போனார். இதை அவரே எதிர்பார்க்கவில்லை.
குரங்கிற்கும், மனிதனுக்கும் வேறுபாடு என்ன? பல உண்டாயினும் ஒன்றைப் பார்க்கலாம்.
ஒரு மனிதனையும், குரங்கையும் ஒரு மரத்தில் ஏறச் செய்யுங்கள். இப்போது குரங்கு ஒரு கிளையில் இருந்து மறுகிளைக்கு எவ்வாறு தாவுகிறது. மனிதன் ஒரு கிளையில் இருந்து மறுகிளைக்கு எவ்வாறு தாவுகிறான் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
குரங்கு ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்போது ஒரு கிளையை விடும், மற்றதைப் பற்றும். அதாவது “விட்டுப் பற்றும்”.
மனிதன் ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்குத்தாவும்போது, முதலில் தான் இருக்கும் கிளையில் இருந்துகொண்டு அடுத்த கிளையைச் சற்றே ஆட்டிப்பார்த்து, தன் பளுவை அந்தக் கொம்பு (கிளை) தாங்குமா என ஆராய்ச்சி செய்து, பிறகு அதைப் பற்றிக்கொண்டு இதனை விடுவான்.
அதாவது “பற்றி விடுவான்”. ஏதாவது ஒன்றைப் பற்றினால்தான் மற்றதை அவனால் விடமுடியும். அதனால்தான் வள்ளுவரும் பற்றுக்களை விட்டுவிடச் சொன்னவர் முதலில் சொன்ன வார்த்தை எது தெரியுமா? “பற்றுக”.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’
சிலர் நம்மிடத்திலே நகைச்சுவையாகப் பேசுகிறார்களா? உண்மையாகக் கேட்கிறார்களா? என்று கடைசிவரை கண்டுபிடிக்க முடியாது.
கல்லூரி தொடங்கியவுடன் எல்லோருக்கும் புது வருடக் காலண்டர் கொடுத்தார்கள். ஒரு ஆசிரியர் அதை வாங்கி அத்தனை தேதிகளும் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தார். பிறகு ஆச்சிரியத்தோடு சொன்னார் ‘சார் பார்த்தீர்களா இந்த வருஷமும் சுதந்திர தினம் ஆகஸ்டு 15இல்தான் வருது’ என்றார். இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
காந்தியடிகளைப் பற்றிக் கேள்விப்படும்போது அவர் மிகக் கண்டிப்பானவர் போலத் தோன்றும். அதே நேரத்தில் அவரிடம் இருந்து வெளிப்படும் நகைச்சுவை உணர்வு ஆச்சரியமாக இருக்கும்.
ஒருமுறை ஒரு கூட்டத்தில் காந்தியடிகள் பேசி முடித்தபிறகு நிதி வசூலித்தார். பொதுமக்கள் மிக ஆர்வமாகப் பணம், வளையல், தோடு என அள்ளிக் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் சேகரித்த தொண்டர்கள் மூட்டையாகக் கட்டி காந்தியடிகளிடத்தில் கொண்டுவந்து வைத்தார்கள்.
அப்போது கவிக்குயில் சரோஜினி நாயுடு அங்கே வந்தார். அந்தப் பண முடிப்பைப் பார்த்துவிட்டுக் காந்தியடிகளிடம் ‘இதை நானே எடுத்துக்கொண்டு தொலைந்து விட்டதாக உங்களிடம் கூறினால் என்ன செய்வீர்கள்?’ என்றார்.
‘இப்படிப்பட்ட வேலைக்கு மிகுதியும் தகுதி வாய்ந்தவர் நீங்கள் ஒருவர்தான் என முடிவு செய்வேன்?’ என்றாராம் குறுநகையோடு.
சிரிப்பால் பயன் என்ன? ஏன் சிரிக்க வேண்டும் எனக் கேட்கிறார்கள் சிலர்.
120 வயது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானிய மூதாட்டி அன்றைக்குத் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும்போது ‘என் வயது 120. இத்தனை ஆயுளுக்குக் காரணம் நான் நகைச்சுவையைப் பெரிதும் விரும்புவேன், சத்தம் போட்டுச் சிரிப்பேன்’ எனக் கூறினார்.
மரணத்தை வெல்லமுடியுமா? தெரியாது…. முடியாது.
மரணத்தைத் தள்ளிப்போடலாமா? போடலாம். நகைச்சுவையே அதற்கு மருந்து.
குழந்தைகள், இளைஞர்கள், காதல், குடும்பம், வகுப்பறை, திருமணம், பிரயாணம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என நகைச்சுவைக் களங்கள் விரிவடையும்.
“கம்ப்யூட்டர் மவுசுக்கும் வீட்டில் இருக்கும் மவுசுக்கும் என்ன வித்தியாசம்?”
“வீட்டு மவுசுக்கு வால் பின்னாடி இருக்கும், கம்ப்யூட்டர் மவுசுக்கு வால் முன்னாடி இருக்கும் சார்!”
“எலிக்கு (மவுசுக்கு) வால் எதற்காக?”
“இறந்தால் வாலைப் பிடித்துத் தூக்கி வெளியில் போட!” (மதுரையில் நகைச்சுவை மன்றத்தில் குழந்தைகள் சொல்லக் கேட்டது).
மன மகிழ்ச்சியே மன எழுச்சிக்கு அடிப்படை. மகிழ்ச்சிகொண்ட மனதில் உற்சாகம் அலைஅலையாய் வந்துகொண்டேயிருக்கும். அதுவே மனிதர்களை உயர்த்தும் ஏணி. எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள், உற்சாகமாய் இருங்கள்.