கந்தர்வ(ன்) கானம்…

நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை
- – கந்தர்வன்
தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதை எனும் புதிய காற்று ‘வானம்பாடி’ இயக்கமாகத் தமிழகத்தில் மெல்ல வீசத் தொடங்கியது. அதை தோற்றுவித்த பெருமக்கள் என்று பட்டியலிட்டால் அப்துல் ரகுமான், புவிஅரசு, ஈரோடு தமிழன்பன் கங்கை கொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா.ஜெயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ.இராஜாராம், மீரா, மு.மேத்தா, நா.காமராசன்; ஆகியோரைக் கூறலாம்.
இவர்கள் போட்ட புதுக்கவிதை என்னும் விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இப்படித் தோன்றிய புதுக்கவிதை இயக்கத்தின் ஒரு விழுதுதான் நாகலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட புதுக்கோட்டை கவிஞர் கந்தர்வன்.
கந்தர்வன் அவர்கள் அரசுத்துறையிலே பதிவாளராகப் பணியாற்றியபோதும் இடதுசாரிச் சிந்தனையாளராகவும், மிகச்சிறந்த போராளியாகவும் விளங்கினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், ஒருமுறை கவிஞர் கந்தர்வன் அவர்களைக் கல்லூரிக்குப் பேசுவதற்கு அழைத்து வந்தார். ஒருநாள் முழுவதும் கவிஞர் கந்தர்வனோடு இருக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிக எளிமையாகவும் இனிமையாகவும் எங்களிடம் பழகினார் கவிஞர் கந்தர்வன் அவர்கள்.
நான் அவரிடத்தில் ‘உங்களுடைய வேகமான கவிதைகளைப் படித்த நான், நீங்கள் பிரம்மாண்டமான மீசை வைத்துப், பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீங்களோ திரைப்படக் கதாநாயகன்போல இளமையாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள்’ என்று நான் சொன்னவுடன் அவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார். உண்மையில் அவர் மிக அழகாக சிவந்த மேனியோடும் சிரித்த முகத்தோடும் எங்களோடு எங்களில் ஒருவராக பேசிக்கொண்டு வந்ததை என்னால் இன்றைக்கும் மறக்கமுடியவில்லை.
அப்போது எங்களிடத்தில் படித்த மாணவரும் தற்போது அருப்புக்கோட்டை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியருமான திரு.அழகுச் செல்வன் (கவிஞர் அழகு பாரதி) அவர்கள் ‘கந்தர்வனின் கவிதைகளில் சமுதாயப் பார்வை’ எனும் தலைப்பில் இளநிலை ஆய்வை (எம்.ஃபில்) மேற்கொண்டு பட்டமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு மேடையில் பேசிய கந்தர்வன் அவர்கள் மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கும் மிக அருமையாகப் பதில் உரைத்தார்.
கந்தர்வன் அவர்களின் கிழிசல்கள், மீசைகள், சிறைகள், பிற்காலத்தில் வந்த கந்தர்வன் கவிதைகள் போன்ற கவிதைத் தொகுதிகள் அனைத்தும் எக்காலத்திலும்; எவரையும் ஈர்க்கும் தன்மையுடையன. சான்றாகக், கிழிசல்கள் என்னும் கவிதைத் தொகுதியில்,
‘ஆரியபட்டா ஆகாயத்தைக் கிழித்தது
அணுகுண்டுச் சோதனை பூமியைக் கிழித்தது,
உணவு இல்லையா இரைப்பையைக் கிழி
குழந்தை வேண்டாமா கர்ப்பப்பையைக் கிழி…………’
எல்லாம் கிழிந்த இந்த தேசத்தில் வாய் கிழிசல்கள் மட்டும் வகைவகையாய் இருக்கும்
என்று அவர் அங்கதச்சுவையோடு தம் கவிதை வரிகளில் சமுதாய நிலை குறித்துக் கூறும்போது படிக்கும் நாம் வியந்து போகிறோம்.
இதேபோன்று மீசைகள் தொகுதியில் ஒரு கவிதை, நேர்முகத் தேர்வுக்குப் போகும் இளைஞனைப் பார்த்து
‘ஆப்பிரிக்காவின் ஆறு,
ஆஸ்திரேலியாவின் விலங்கு,
ஏரிவந்த படிகளின் எண்ணிக்கை சொன்னாயா?
என எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னாயா?
அப்படியும் வேலை கிடைக்கவில்லையா?
அதென்ன உன் உதட்டுக்கு மேலே… ஓ மீசையா!’
என்று கந்தர்வன் கேட்கும்போது இளைஞர்களின் இரத்தம் கொதித்துப்போகும். இவர் கவிதைத் தொகுதிகள் தவிர சாசனம், பூவிற்கும் கீழே போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சாசனம் என்கின்ற சிறுகதையை திரைப்பட இயக்குநர் திரு. மகேந்திரன் அவர்கள் படமாக்கும் முயற்சியில் இறங்கினார் என ஆய்வாளர் அழகுபாரதி அவர்கள் தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் அவசர நிலை (Emergency)அமுல்படுத்தப்பட்டபோது 19மாதங்கள் இவர் வேலையிழந்திருந்தார். பின்னர் வழக்கு மன்றத்தின் மூலம் தன் பணியை மீண்டும் பெற்றார். சமுதாயச் சிந்தனையோடு காலத்துக்கேற்ற கவிதைகளைப் படைத்த பெருமை திரு.கந்தர்வன் அவர்களையே சாரும். இவரைப் பற்றி மேலும் சில செய்திகளைக் காண்போம்….
கந்தர்வன் தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் ‘சிக்கல்’ என்னும் ஊரில் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் நாகலிங்கம். தம் 29ஆவது வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தீவிர தொழிற்சங்கவாதியாகத் திகழ்ந்தார்.
70களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் ‘இலக்கியச் சிந்தனை’ விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட இவரது ‘மைதானத்து மரங்கள்’ கதை, 12ஆம் வகுப்புத் தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. இவரின் ‘தண்ணீர்’ என்ற சிறுகதை இன்றைய ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர்.
‘லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல்’ மற்றும் ‘வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ என்ற இரண்டு கட்டுரைகளும் கந்தர்வனின் முதல் இரண்டு முக்கிய கட்டுரைகள் ஆகும். கண்ணதாசன் இதழில் வெளிவந்து பெருவாரியாகப் பேசப்பட்ட கட்டுரைகளும்கூட கண்ணதாசன் இதழின் ஆசிரியர் இராம.கண்ணப்பனின் ஆலோசனையினால், அப்பொழுது தான் வாசித்துக்கொண்டிருந்த திருலோக சீதாராமின் ‘கந்தர்வ கானம்’ நூலில் வந்த ‘கந்தர்வன்’ என்ற பெயரைத் தனது புனைபெயராக வைத்துக்கொண்டாராம்.
கண்ணதாசனால் நடத்தப்பட்ட இலக்கிய இதழான ‘கண்ணதாசனில்’ இலக்கிய விமர்சனம் எழுதியதன் மூலம் தமிழ் இலக்கிய உலகில் மெல்ல பிரவேசித்தார் கந்தர்வன் அவர்கள். பின்னர் சிறுகதைகள், கவிதைகள் எனத் தன் படைப்பாற்றலை பரவலாக்கி வெளிப்படுத்திய ஆளுமை கொண்டவர்.
தாமரை, சுபமங்களா, சிகரம், செம்மலர், விகடன் என்று எல்லாவகை இதழ்களிலும் எழுதிக் கொண்டேயிருந்தார். தீக்கதிரின் வண்ணக்கதிர் இலக்கியப்பகுதிகளிலும், ‘புதிய புத்தகம் பேசுது’ இதழிலும் இலக்கிய நூல்களைப் பற்றிய அறிமுகம் மற்றும் விமர்சனம் எழுதிவந்தார் கந்தர்வன் அவர்கள்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மரபுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். மக்கள் புழங்கும்மொழியில், நேரடிச் சொல்லாடலில் கவிதை சொன்ன கந்தர்வன், கேட்கும் சராசரி மனிதர்களைச் சிந்திக்க வைத்தார். சிரிக்கவும் வைத்தார்.
கவியரங்கங்களே கந்தர்வன் அவர்களை இலக்கிய உலகில் அவரை அழுந்த கால்பதிக்க வைத்த களம். பாதிக்கப்பட்ட மக்களின் துயரப்பட்ட பெண்களின் உணர்வுகளை உள்வாங்கிக் கவிதைகளாகவும் களத்தில் கற்ற அனுபவங்களைக் கதைகளாகவும் வடிக்கத் தெரிந்த கந்தர்வனின் ‘கயிறு’ கவிதை பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
இவர் கவிஞர் என்றே பெயர் பெற்றாலும் தேர்ந்த சிறுகதைகள் பல படைத்தவர். அவரின் கவிதைக்குள்ளும் கதைகள் ஒழிந்தே கிடந்தன. ‘சனிப்பிணம்’ எனும் சிறுகதையே அவரின் முதல் சிறுகதை. அந்தச் சிறுகதை 1970ஆம் ஆண்டு தாமரை இதழில் வந்தது.
மிக இனிய இசையை ‘கந்தர்வ கானம்’ என்று அழைப்பது நம் வழக்கம். தேவலோகத்து கந்தர்வர்கள் இசைக்கும் இசைக்கு ‘கந்தர்வ கானம்’ என்பது பெயர். இவ்வகையில் புதுக்கவிதையில் இவரது குரலும் சிந்தனைகளும் கந்தர்வ கானம் என்பது உண்மைதான்.
கந்தர்வனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள், சொல்லிப் பாருங்கள், சொல்லச் சொல்லிக் கேட்டுப் பாருங்கள். அக்கவிதைகளின் அருமை தெரியும். அவரின் பெருமை புரியும்.